PUBLISHED ON : மே 26, 2013

வேண்டாமே, 'இன்டர் நெட்' இணைப்பு!
சமீபத்தில், என் தோழி வீட்டிற்கு சென்றிருந்தேன். தோழியின், 10ம் வகுப்பு படிக்கும் மகன், கம்ப்யூட்டரில் ஒன்றி இருந்தான். கம்ப்யூட்டரில் என்ன படிக்கிறான் என்று கேட்ட போது, படிப்பை தவிர்த்து, அனைத்தும் சொன்னான். பேஸ் புக்கில், இரண்டாயிரம் நண்பர்கள் இருப்பதாக மகனின் புராணத்தை பேசியபடி இருந்தாள் தோழி. இந்த வயதில் படிப்பைத் தவிர, இதெல்லாம் தேவையா என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே, கிளம்பி வந்துவிட்டேன்.
சில மாதங்களுக்கு பின் எதேச்சையாக, என் தோழியை வழியில் சந்தித்த போது கவலையுடன் காணப்பட்டாள், என்ன என்று விசாரித்ததில், கண்ணீர் விட்டு அழுதாள். என் தோழி அதிகம் படிக்கவில்லை; கம்ப்யூட்டர் பற்றி ஒன்றும் தெரியாது. ஒரு நாள், அவள் கணவர், அலுவலகத்திலிருந்து சீக்கிரமாக வீடு திரும்ப, மகன் ஆபாச படங்களை பார்ப்பதைப் பார்த்து அதிர்ந்து விட்டார். அதட்டி கேட்க, எதிர்த்து பேசும் அளவு துணிந்து விட்டான். இன்டர்நெட் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால், பித்து பிடித்தவன் போல் இருப்பதாக சொல்லி அழுதாள். எவ்வளவோ கவுன்சிலிங் கொடுத்தும் இன்னும் சரியானபாடில்லை என்று கூறி, அவள் அழுததைப் பார்க்க வேதனையாக இருந்தது.
பெற்றோர்களே... படிக்கும் வயதில் உள்ள குழந்தைகளுக்கு பேஸ் புக் தேவையா என்று @யாசியுங்கள். குழந்தைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கிறோம் என்ற பெயரில், குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை வீணாக்காதீர். படிப்பு சம்பந்தமாக ஏதாவது பார்க்க வேண்டுமென்றால், நீங்களும் கூடவே இருங்கள்.
— டி.இந்திரா, மீனாம்பாள்புரம்.
சுற்றுலா செல்லும் போது கவனம்!
நாங்கள் சமீபத்தில், பெங்களூரு மற்றும் மைசூரை சுற்றி பார்க்க குடும்பத்துடன் ரயிலில் சென்றிருந்தோம். முன்னதாக, நண்பர் மூலம் பெங்களூரில் நல்லதோர் ஓட்டலில், அறை முன்பதிவு செய்திருந்தோம். அந்த ஓட்டல், ரயில் நிலையம் அருகில் உள்ளது. ஆட்டோ ஓட்டுனரிடம், அந்த ஓட்டல் பெயரை சொல்லி அங்கு விடச் சொன்னோம். அப்போது அந்த ஆட்டோ ஓட்டுனர், 'சார் அந்த ஓட்டலில் தற்போது தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்; வேண்டுமானால் போன் செய்து கேட்டு கொள்ளுங்கள். அங்குமிங்கும் அலைய வேண்டாமே...' என்றார். 'அட, நல்ல யோசனை ஆயிற்றே, என்று, நாங்களும் போன் செய்தோம். யாரும் போன் எடுக்கவில்லை. ஆட்டோ ஓட்டுனர் நல்லது செய்தார். வேறு ஓட்டல் பார்க்க வேண்டியது தான் என்ற முடிவு செய்தோம்.
நல்ல வேளையாக, எங்கள் மகள், அப்பா உங்கள் நண்பரிடம் ஒரு போன் போட்டு விசாரியுங்கள் என்றாள். நண்பரிடம் போன் போட்ட போது, அவர் அப்படி ஏதும் இல்லையே; மற்றொரு நண்பரும் அங்குதான் இருக்கிறார் அப்படியிருந்தால், அவர் என்னிடம் நிச்சயம் சொல்லி யிருப்பார்...' என்றதுடன், அவரோட மொபைல் போனில், 'செக்' செய்து, 'அங்கு சென்று பாருங்கள்... அப்படியும் அறை இல்லாவிடில் சொல்லுங்கள். வேறு ஓட்டலில் ஏற்பாடு செய்து தருகிறேன்...' என்றார்.
அந்த ஆட்டோ ஓட்டுனரிடம், அதே ஓட்டலுக்கு விடச் சொன்னபோது, அவர் வேறு சவாரி பார்க்கிறேன் என்று சென்று விட்டார். மற்றோர் ஆட்டோ பிடித்து சென்றபோது, ஓட்டலில் வேலை நிறுத்தம் எதுவும் இல்லை. ஆனால், போன் லைன் முழுவதும் பழுதாகியிருப்பது தெரிந்தது. இப்படியெல்லாம் ஏமாற்ற, ரூம் போட்டு யோசிப்பார்களோ என்று நானும் ரூமில் யோசித்த போது, தூர சவாரி மற்றும் ஆட்டோ ஓட்டுனர் மூலம் ரூம் போட்டால், அவருக்கு கிடைக் கும் கமிஷனும் தான் காரணம் என்பது, எனக்கு சற்று தாம தமாகவே புரிந்தது. வாசகர்களே கவனம்!
— த.அசோக், மதுரை.
'ஏசி'யால் நேர்ந்த அவலம்!
என் தோழியின் ஆறு வயது குழந்தைக்கு, தோலில் அடிக்கடி அரிப்பு பிரச்னை இருந்தது. தோழியும், குழந்தையின் பள்ளிக்கு சென்று பார்த்தும், அவளால் காரணத்தை கண்டறிய முடியவில்லை. எத்தனையோ மருத்துவர்களிடம் சென்றும், தொடர்கதையாக இருந்தது. கோவில்களில் பரிகாரங்கள் கூட செய்து பார்த்தாள். இப்போது, குழந்தை கோடை விடுமுறையில், வீட்டில் இருந்த போது அரிப்பு நின்றிருந்தது. தோழிக்கு, அப்போது தான் குழந்தையின் பிரச்னை புரிந்தது.
குழந்தை படிக்கும் பள்ளியின் வகுப்பில் தினமும், தொடர்ந்து சில மணி நேரம், 'ஏசி' போடப்படுவது வழக்கம், அந்த, 'ஏசி' குளிர்ச்சிதான் குழந்தையின் அரிப்புக்கு காரணமாகியுள்ளது. வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளின் தோலில், வியர்வை துளைகள் அடைபட்டு, கழிவுகள் வெளியேற முடியாமல், அரிப்பு ஏற்பட்டு இருக்கிறது. சில பள்ளிகள், அட்மிஷனை அதிகரிக்கும் நோக்கில், 'ஏசி' வகுப்பறையை சிறப்பம்சங்களாக விளம்பரப்படுத்தி வருகின்றன. குழந்தைகளுக்கு ஆடம்பர வசதிகள் வேண்டாம்; ஆரோக்கிய உடல்நலம் தான் வேண்டும்.
— எஸ்.துர்காதேவி ராதாகிருஷ்ணன், சிதம்பரம்.
கல்வி கற்க வயது தடையில்லை!
வெகு நாட்களுக்குப் பின், என் தோழியை சந்தித்தேன். தற்போது, எம்.பி.ஏ., படித்துக் கொண்டிருப்பதாக சொன்னாள். 'பிள்ளைகள், காலேஜில் படிக்கிற இந்த வயதில், உனக்கு படிப்பு தேவையா...' என்றேன்.
அதற்கு அவள், 'நானும் நாள் முழுவதும், 'டிவி' பார்த்து பொழுதை கழித்தவள் தான். என் மகன் பத்தாவது வகுப்பு துவங்கியவுடன் கேபிள் இணைப்பை துண்டிக்க வேண்டிய கட்டாயம். எப்படி பொழுதை கழிப்பது என்று யோசித்தபோது, என் மகன், 'ஏனம்மா... நீயும் ஏதாவது ஒரு கோர்ஸ் சேர்ந்துவிடு. இருவரும் சேர்ந்து படிக்கலாம்...' என்றான். எனக்கும் அது சரியாகப்பட்டது.
'தொலைதூர கல்வியில், எம்.ஏ., சேர்ந்தேன். அதற்காக நூலகம் செல்ல வேண்டி வந்தபோது, பல நல்ல நூல்களின் அறிமுகம் கிடைக்க, பல விஷயங்களை கற்க முடிந்தது. 'பஸ்சில், போய் வர சிரமமானபோது, இருசக்கர வாகனம் ஓட்டவும் கற்றுக்கொண்டேன். படிப்பில், என் மகனுக்கு தேவையான உதவிகளைச் செய்ததால், அவன் பள்ளியில் முதல் மாணவனாக வந்து, இப்போது கல்லூரியிலும் சேர்ந்து விட்டான். நானும் மேலே படிக்கிறேன்...' என்றாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
பிள்ளைகள் பெரியவர்களானவுடன், வயதாகிவிட்டது போல் உணர்ந்து கொண்டிருக்காமல், எந்த வயதானாலும் ஏதேனும் ஒன்றை கற்றுக் கொண்டிருந்தால்... மனமும், உடலும் எந்த வயதிலும் இளமையாக இருக்குமல்லவா!
இந்த வயதில் வகுப்புக்குப் போவதா என்று தயங்காமல், உங்களுக்கு பிடித்த பாட்டு, கைவேலை என்று, ஏதேனும் புதிதாக கற்றுக் கொள்ளுங்கள். நம் வாழ்க்கையை முழுமையாக வாழுவோம்!
— ஐஸ்வர்யா, கோமதிபுரம்.
