PUBLISHED ON : மே 26, 2013

மே 27 - குமரகுருபரர் குருபூஜை
கடவுளின் அருள் இருந்தால் நடக்காததும் நடக்கும். இதற்கு குமரகுருபரரின் வாழ்க்கை வரலாறு உதாரணம். திருநெல்வேலி அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டம் பிரசித்தி பெற்ற ஆன்மிகத்தலம். இங்கு சண்முகசிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி தம்பதியர் வசித்தனர். இவர்கள் தங்கள் குலதெய்வமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு வந்தனர். இவர்களுக்கு பிறந்த மகனுக்கு, முருகனின் ஒரு பெயரான குமரகுருபரன் என்ற பெயரைச் சூட்டினர். குமரன் எனறால் இளைஞன். அவர் தந்தைக்கே குரு. பரன் என்றால் தெய்வம். இளைஞனும், குருவுமாக இருக்கும் அந்த முருகப் பெருமானின் அருளால் குமரகுருபரன் சிறப்புடன் வளர்க்கப் பட்டான்.
ஆனால், பெற்றோருக்கு அதிர்ச்சி. ஐந்து வயதாகியும் குழந்தை பேசவில்லை. 'பேசும் திறனற்ற குழந்தையைக் கொடுத்து விட்டாயே...' என அவர்கள் முருகனிடம் முறையிட்டனர். திருச்செந்தூர் சென்று அங்கேயே தங்கி விரதமிருந்தனர். ஒருநாள், குழந்தையுடன் கோவிலுக்குள் சென்று 'குழந்தையை பேச வைத்தால் தான் வெளியேறுவோம். எங்கள் பக்திக்கு மதிப்பு கொடு...' என்று வாதாடினர்.
செந்தூர் முருகனின் கடைக்கண் பார்வை மட்டும், ஒருவர் மீது பட்டாலே போதுமே... நடக்காதது என நினைத்த காரியம் எல்லாம் நடந்து விடும். அதற்கேற்ப, குழந்தை ஏதோ பேசியது போல் அவர்கள் காதில் விழுந்தது. அடுத்து, மடை திறந்த வெள்ளமாய் குமரகுருபரன் வாயில் இருந்து கவிமழை பொழிந்தது. முருகனைக் குறித்த இந்த பாடல்களை தான் 'கந்தர் கலிவெண்பா' என்ற நூலாகத் தொகுத்தனர். ஊரே ஆச்சரியப் பட்டது. பெற்றோர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
முருகனால் பேச வைக்கப்பட்ட அந்த சிறுவனை, மக்கள் 'குமரகுருபர சுவாமி' என்று மரியாதையுடன் அழைத்தனர். அவர் மதுரை வந்து அன்னை மீனாட்சியை வழிபட்ட போது, அம்பாள் மீது அவர் பாடிய பாடல்கள் தான் 'மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்' என்ற நூல்.
அப்போது, மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கரின் கனவில் தோன்றிய மீனாட்சி, 'என் குழந்தை குமரகுருபரன் மதுரைக்கு வந்திருக் கிறான். அவன் இயற்றிய பாடலை நான் கேட்க வேண்டும், ஏற்பாடு செய்...' என்று கூறி மறைந்தாள். அதன்படியே நாயக்கரும், கோவில் மண்டபத்தில் நூல் அரங்கேற்றத்துக்கு ஏற்பாடு செய்தார். குமரகுருபரர் பாடிக் கொண்டிருந்த போது, கோவில் அர்ச்சகரின் மகளான சிறுமி உள்ளே வந்தாள். நாயக்கரின் மடியில் அமர்ந்தாள். அரங்கேற்றம் முடிந்ததும், மன்னர் கழுத்தில் கிடந்த மணிமாலையை கழற்றி, குமர குருபரனுக்கு அணிவித்தாள். கர்ப்பகிரகத்தில் சென்று மறைந்து விட்டாள். அதன்பிறகே, அர்ச்சகர் மகள் வடிவில் வந்தது மீனாட்சி என்பது தெரிய வந்தது.
காசியில் சுல்தான் ஆட்சி நடந்த வேளையில், சுல்தானை சந்தித்து, அவர் மொழியில் பேசினார் குமரகுரு. இது கண்டு வியந்த சுல்தான், மடம் கட்ட இடம் கொடுத்தான் என்பது வரலாறு. எவ்வளவு சோதனை வந்தாலும், கடவுளை நிஜமான பக்தியுடன் அணுகுங்கள்; நடக்காது என்று கைவிட்டது கூட நடந்து விடும்.
***
தி. செல்லப்பா
