PUBLISHED ON : ஜூன் 09, 2013

தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, மறைந்த முன்னாள் தலைவர்கள், சரித்திரம் படைத்த அரசர்கள், காவிய நாயகர் - நாயகிகளுக்கு சிலை வடிப்பதில் ஆர்வம் அதிகம். '70களில் அவர் முதல்வர் பதவி வகித்த போது, சென்னை மெரினாவில் பலருக்கும் சிலை எடுத்தார்!
சோழ மன்னன் ராஜராஜனுக்கு, தஞ்சை பெரிய கோவிலினுள் சிலை அமைக்க, 71ம் ஆண்டு முயன்றாராம் கருணாநிதி. ஆனால், அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி, கோவிலுக்குள் சிலையை வைக்க அனுமதிக்கவில்லையாம். அதனால், கோவிலுக்கு வெளியே சாலை ஓரத்தில் சிலையை வைத்தார் கருணாநிதி என்று, முன்பு எப்போதோ நடுத்தெரு நாராயணன் சார் கூறி இருந்தார் என்னிடம்!
'திண்ணை' பகுதியின், நடுத்தெரு நாரயணன் சாரை சமீபத்தில் சந்தித்தபோது, 'ராஜராஜன் சிலை திறப்பு விழாவின் போது, கருணாநிதி ஆற்றிய உரை உங்களிடம் இருந்தால் கொடுங்களேன்...' எனக் கேட்டிருந்தேன். தேடித் தருவதாகச் சொல்லி இருந்தார்.
சமீபத்தில், வேறு எதையோ தேடும்போது, 71ம் ஆண்டு நாளிதழ் பிரதிகளை பார்க்க நேர்ந்தது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேச்சு கிடைத்தது. அது:
தஞ்சை பெரிய கோவில், மாமல்லபுரம், கங்கை கொண்ட சோழபுரம் போன்ற கோவில்களை நம்மிடம் ஒப்படைத்தால், இன்னும் சிறப்பாக நம்மால் வைத்திருக்க முடியும். அவைகளை மாநில அரசிடம் ஒப்படைத்தால், இந்திய ஒருமைப்பாடு ஒன்றும் கெட்டு விடாது!
மதுரையில் திருமலை நாயக்கரின் சிலை நிறுவப்பட்டு இருக்கிறது. அதுவும் அம்பிகை இருக்கிற கர்ப்பகிரகத்துக்கு அருகிலேயே இருக்கிறது. மதுரை கோவிலை முழுவதும் அவர் கட்டியதற்கான சரித்திரபூர்வ ஆதாரம் இல்லை.
திருப்பணி செய்தவருக்கே சிலை வைக்கப்பட்டு இருக்கும் போது, பெரிய கோவில் முழுவதையும் கட்டிய ராஜராஜசோழனுக்கு ஏன் உள்ளே சிலை வைக்கக் கூடாது?
சேதுபதிக்கு ராமேஸ்வரத்தில் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், ராஜராஜ சோழனுக்குத் தடை! ராஜராஜ சோழனுக்கு சிலை வைக்கப் போவது உறுதி; அதுவும், நாம் நினைக்கிற இடத்தில் வைப்போம்!
— இப்படிப் பேசி இருக்கிறார்; அதை ஒரு படி எடுத்துக் கொண்டேன்.
அடுத்த முறை நாராயணன் சார் ஆபிஸ் வந்த போது, இந்த காப்பியைக் கொடுத்து படிக்கச் சொன்னேன். அவர் படித்து முடித்ததும், 'இந்திரா காந்தி தான் மறுத்து விட்டார். அதன் பின், வி.பி.சிங், தேவகவுடா, வாஜ்பாய் அரசுகளில், தி.மு.க., அங்கம் வகித்தது. ஆனால், ராஜராஜன் இன்னும் முச்சந்தியில் தானே நிற்கிறான்... ஏன் சார்...' என அப்பாவியாகக் கேட்டேன்.
'போய் கேட்க வேண்டிய இடத்தில் கேளு... என்னை வம்பில் மாட்டி விடாதே!' என்றபடியே நான் கொடுத்த டீயை குடித்துவிட்டு, நடையைக் கட்டினார்!
***
உங்கள் கைகளைப் பற்றிய சில விவரங்கள்.
* பெண்களைக் காட்டிலும், ஆண்கள் தான் அதிகப்படியான இடது கைக்காரர்களாக இருக்கின்றனர்.
* தாயின் வயிற்றில் நான்காவது மாதத்திலேயே குழந்தையின் விரல் நுனி முழு வளர்ச்சி பெற்று விடுகிறது.
* வலது கை நடுவிரலில் தான், நகம் வேகமாக வளர்கிறது.
* வலது கைக்காரர்களுக்கு இடது பக்க மூளை அதிகமாக வேலை செய்யும்.
* கை ரேகைகள் எந்தக் காலத்திலும் எதனாலும் மாறாது.
* கால்சியம் குறைவாக உள்ளவர்களுக்கு நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் தோன்றும்; கவலையில் எப்போதும் ஆழ்ந்துள்ளவர்களின் நகங்களிலும் வெள்ளைப் புள்ளிகள் விழும்.
— மருத்துவ இதழ் ஒன்றில் படித்தது!
***
அன்று நண்பர் ஒருவர் வந்திருந்தார். நிறைய படிப்பவர்; படித்ததை எல்லாரிடமும் கொட்டித் தீர்ப்பார். வந்து அமர்ந்ததும், 'ஒரு டீ சொல்லுப்பா...' என உரிமையாக ஆர்டர் செய்து விட்டு, 'டூ பிளாண்ட்ஸ் ஹேவ் பீலிங்க்?' - தாவரங்களுக்கு உணர்ச்சி உண்டான்னு ஒரு கட்டுரை படிச்சேன்பா. அதுல என்ன சொல்லி இருக்கு தெரியுமா?
'மனிதன் பொய் சொன்னாலும் கூட, மரம், செடிகள் கண்டுபிடித்து விடுமாம், தாவரங்களுக்கு அவ்வளவு நுண்ணறிவு உண்டு என்று நிரூபித்திருக்கிறார் பாக்ஸ்டர் என்பவர்.
'தன் மீது பிரியமுள்ளவர்களிடம் செடிகளும், மரங்களும் அளவுக்கு மீறிய பாசத்துடன் இருக்கின்றன. தன்னை வளர்க்கும் எஜமானருக்கு ஏதேனும் ஆபத்து வரும் போலிருந்தால் அவை படபடக்கின்றனவாம்.
'பாக்ஸ்டர் செய்த இன்னொரு சோதனை, சிந்தனையைத் தூண்டக் கூடியது. ஒரு அறையில் இரண்டு செடிகளை வைத்தார். பிறகு அறைக்குள் ஒருவரை அனுப்பி, ஒரு செடியை வேரோடு கிள்ளி எறிந்து, பிய்த்துப் போடும்படியாக சொன்னார். அந்த நபர் அவ்வாறே செடியை பிய்த்துப் போட்டு விட்டு வெளியே வந்து விட்டார்.
'யார் செடியைக் கொலை செய்தது என்பது, அறையிலிருந்த இன்னொரு செடியைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
'பாக்ஸ்டர் மிஞ்சியிருந்த செடியுடன், 'போலிகிராப்' என்ற கருவியை இணைத்தார். பிறகு, ஐந்து பேரை ஒவ்வொருத்தராக அந்த அறைக்குள் வரச் செய்தார். கிள்ளி எறிந்த ஆள் வந்த சமயம், செடியின் உணர்வுகள் துடிதுடிப்பதை, 'போலிகிராப்' பதிவு செய்தது. கொலைகாரனை செடி அடையாளம் கண்டுகொண்டு விட்டது...' என்றார்!
மனிதனிடம் அகன்று வரும் நேயம், மரங்களிடமாவது எஞ்சி உள்ளதே என நினைத்துக் கொண்டேன்.
***
அரசியல்வாதிகளிடம், 'நேர்மை அன்றும் - இன்றும்' என்ற ரீதியில் அன்றைய விவாதத்தை நடத்திக் கொண்டிருந்தார் சுப்பண்ணா.
அவர் கூறிய அந்தக் கால சம்பவம் ஒன்று நெஞ்சைத் தொட்டது. இதோ அது:
அந்தக் காலத்தில் பொதுக் கூட்டம் ஒன்றுக்கு ராஜாஜியுடன் காங்கிரஸ் பிரமுகர், காலஞ்சென்ற செங்கல்வராயனும் காரில் சென்றார். போகிற வழியில் ஒரு ஓட்டல் வாசலில் காரை நிறுத்தச் சொல்லி, சூடான காபி கேட்டிருக்கிறார் ராஜாஜி.
செங்கல்வராயன் உள்ளே சென்று, ஒன்றரை அணா கொடுத்து, ஒரு கப் காபி வாங்கி வந்து ராஜாஜிக்குக் கொடுத்திருக்கிறார்.
கூட்டம் முடிந்து ராஜாஜியோடு வீடு திரும்பிய தும், சட்டைக்குள்ளிருந்து பர்ஸை எடுத்து செங்கல்வராயனிடம் ஒன்றரை அணாவைக் கொடுத்தார் ராஜாஜி.
மறுத்த செங்கல்வராயனின் கையில் காசை திணித்துவிட்டு, ராஜாஜி சொன்னார்: பொது வாழ்வில் இருப்பவர்கள் ஒரு பைசா கூட அனாவசியமாக செலவழிக்கவும் கூடாது; ஒரு காசு அடுத்தவர்கள் கணக்கில் அனுபவிக்கவும் கூடாது!
— ஊரை அடித்து உலையில் போட்டு, ஏப்பம் விடும் பலர் என் கண் முன் வந்து மறைந்தனர்.
***
