
அது ஒரு சனிக்கிழமை... அன்று வேலையும் அதிகம் இல்லை... 'ஏம்ப்பா மணி... 'பிஷ்ஷர்மென்ஸ் கோவ்' (கடற்கரையை ஒட்டிய தாஜ் கோரமண்டல் குரூப் ஓட்டல்) வரை போய் வரலாமா?' எனக் கேட்டார் லென்ஸ் மாமா.
'ஓ...' என்றேன்.
அப்போது, அருகே இருந்த குப்பண்ணா, 'நானும் வர்றேனே... அப்படியே மகாபலிபுரம் வரை போய் வரலாம்...' என்றார்.
இதைக் கேட்ட லென்ஸ் மாமா முகம், விளக்கெண்ணை குடித்தது போலானது. குப்பண்ணா, 'போஞ்சி' (எலுமிச்சை ஜூஸ்) பார்ட்டி. உ.பா., சமாச்சாரங்கள் அருந்துபவர்கள் பக்கமே அமர மாட்டார். அதனால்தான் நெளிந்தார் மாமா.
'அவரும் வரட்டும்... ஓட்டலில் வேறு இடத்தில் அவரை அமர வைத்து விடலாம்... அவரும் உடன் வந்தால் எனக்கு, 'மேட்டர்' ஏதாவது கிடைக்கும்...' எனச் சொல்லி, மாமாவைச் சரிக்கட்டினேன். வண்டியை நான் செலுத்த, முதலில் மகாபலிபுரத்தை அடைந்தோம். அங்கிருந்த சிற்பக் கூடங்களைக் கண்ட குப்பண்ணா, திராவிடக் கட்சிகளை வசைபாட ஆரம்பித்தார்...
'அன்று ராஜாஜி தொடங்கி வைத்த புதுமையான கல்வித் திட்டத்தை, 'குலக்கல்வித் திட்டம்' எனக் கூறி, நாடெங்கும் கிளர்ச்சி நடத்திய தி.மு.க., பிறகு அதே திட்டத்தைச் செயல்படுத்தியதப்பா...' என்றார்.
'என்ன விவரம் அது?' என விளக்கம் கேட்டேன்.
ஆரம்பித்தார் குப்பண்ணா: ராஜாஜி, 1953 மே மாதம், ஆரம்பக் கல்வியில் மாறுதலைக் காண, புதிய திட்டமொன்றை வெளியிட்டு, 1953 - 54வது கல்வியாண்டில் நடைமுறைக்கு வரும்ன்னு அறிவிச்சார். அது, 'அரைநாள் கல்வித்திட்டம்'ன்னு பெயர் பெற்றது.
இந்தியா வறுமை மிகுந்த நாடு. தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. கிராமத் தொழில்கள் அனைத்தும் குடும்பத் தொழில்களாக, இன்னும் சொன்னால், பிறப்பு வழிபட்ட குலத்தொழில் களாக இருந்தன. பள்ளிக்கு அனுப்ப வேண்டிய குழந்தைகளை, குடும்பத் தொழிலில் பெற்றோர் ஈடுபடுத்தி வந்தனர். இது குழந்தைகளுக்கு கட்டாய இலவசக் கல்வி அளிப்பதற்குப் பெருந்தடையாக இருந்தது. எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க போதிய பள்ளிக் கட்டடங்களும் அப்போது இல்லை.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு ராஜாஜி, அரை நாள் கல்வித் திட்டத்தை பிரகடனம் செய்தார். அது:
பள்ளிக்கூட நேரம் தினமும் காலையில் அல்லது பிற்பகலில் 3 மணி நேரமாக இருக்கும். 3 மணி நேரம் போக எஞ்சிய நேரத்தில் மாணவியாக இருந்தால், தாயாரின் குடும்ப வேலையிலும், மாணவனாக இருந்தால், தகப்பனாரின் வருவாய்க்கு உரிய தொழிலிலும் ஈடுபட முடியும்.
கைத்தொழில் எதிலும் ஈடுபடாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளிக்கூடத்திலோ அல்லது கிராமத்திலோ ஏதாவது தொழில் கற்க ஏற்பாடு செய்யப்படும். பள்ளிக்கூட நேரம் குறைக்கப்பட்டாலும் மொழி, கணக்கு, வரலாறு, பூகோளம், சிவிக்ஸ் முதலிய பாடங்களுக்குரிய போதனை நேரம் குறைக்கப்பட மாட்டாது.
இது சம்பந்தமாக ராஜாஜி வெளியிட்ட அறிக்கையில், 'இத்திட்டத்தை நகரங்களில் அமல்படுத்தாதது பற்றி குறை கூறப்படுகிறது. கிராம மக்கள் நகரங்களுக்கு ஓடி வந்து கொண்டிருக்கின்றனர். ஆகவே, அங்கு முதலில் சீர்திருத்தம் செய்து விட்டால், அப்புறம் நகரங்களிலுள்ள பள்ளிகளை சீர்திருத்துவது எளிதாகும். ஐந்து முதல் எட்டு வயது வரையுள்ள குழந்தைகள் எல்லா வேலைகளையும் கற்றுக் கொண்டு, அவற்றைச் செய்து தொழிலாளிகளாகி விட வேண்டுமென்று நான் விரும்பவில்லை. கிராமாந்திர தொழில்களுடன் பிள்ளைகளுக்கு நெருங்கிய தொடர்பிருக்க வேண்டுமென்பதுதான் என் எண்ணம்.
பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பும்படி செய்வதற்காக இதுவரை எடுத்துக் கொண்ட முயற்சிகள் தோல்வியுற்றன. புதிய திட்டத்தால் அதிகமான குழந்தைகள் பள்ளிகளுக்கு வருவர். இப்புதிய கல்வித் திட்டம் 31 ஆயிரத்து 784 பள்ளிகளில் அமல்படுத்தப்படும். இதில் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 30 லட்சம்...' என்று குறிப்பிட்டிருந்தார்.
ராஜாஜியின் இந்த புதிய கல்வித் திட்டத்திற்கு, 'குலக்கல்வித் திட்டம்' என்று தவறான பெயர் கொடுத்து, அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்ப்பு காட்டியது; திராவிடர் கழகமும் போர்க்கொடி உயர்த்தியது.
காங்கிரஸ் கட்சியின் முதல் அமைச்சராகத்தான் ராஜாஜி இருந்தார். ஆனால், கட்சியில் கோஷ்டி பூசல். காமராஜர் பிரிவு, தனி கோஷ்டியாக ராஜாஜிக்கு எதிராக இருந்தது. எனவே, ராஜாஜிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வேண்டிய காங்கிரஸ் கட்சியும் தன் கடமையைச் செய்யவில்லை.
ராஜாஜியோ, 'முதல்வர் பதவியை விட சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள எல்லாருக்கும் கல்வி அளிப்பது என்ற, என் புதிய திட்டம் தான் எனக்கு பெரியது. அதை நான் கைவிடுவதற்கில்லை...' என்று பகிரங்கமாக அறிவித்தார். காங்கிரசிலும் தனக்கு முழு ஆதரவு இல்லை என்பதைக் கண்டு 1954 மார்ச் மாதம் தாமாகவே முதல்வர் பதவியைத் துறந்தார்.
குலக்கல்வித் திட்டம் என்று கூறி, அன்று நாடெங்கும் கிளர்ச்சி நடத்திய பின், தி.மு.க., ஆட்சியில், அமர்ந்தபோது, சில கைத்தொழில் பயிற்சி பள்ளிகளுக்கு மாணவர்களை சேர்க்கும்போது, அறிவிப்புகளில், 'மேற்படி கைத்தொழில் செய்யும் குடும்பப் பிள்ளைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்' என்று அறிவித்தது, என்றார் குப்பண்ணா.
'எனக்கு மேட்டர் கிடைச்சுது பாத்தீங்களா?' என அர்த்த புஷ்டியுடன் லென்ஸ் மாமாவைப் பார்த்தேன்.
***
பாரதியாரைப் பற்றி பிறர் எழுதிய நூல்களைப் படிக்கலாம் என, அலுவலக நூலகத்தைக் குடைந்தேன்.
வெ.சாமிநாத சர்மா எழுதிய புத்தகம் ஒன்று கிடைத்தது. அதில்: பாரதியார், சுதேசமித்திரன் பத்திரிகையில் அலுவல்கள் முடித்தவுடன் கடற்கரைக் கூட்டங்களுக்கு வந்து விடுவார்; கால்நடையாகத்தான். அப்போதெல்லாம் வாகன வசதிகள் அதிகமில்லை அல்லவா?
நேரே பூக்கடைக்குச் செல்வார். ஒரு கட்டு மல்லிகைப்பூ வாங்குவார். அதை மூன்று துண்டுகளாக்கி, பெரிய துண்டை கழுத்தில் மாலையாகப் போட்டுக் கொள்வார். மற்ற இரண்டு துண்டுகளை இரண்டு காதுகளில் அணிந்து கொள்வார். பூக்கடையிலிருந்து நேரே கடற்கரைக் கூட்டத்திற்கு வருவார்.
ஒரு சமயம், சென்னை திலகர் கட்டடத்தில் பொதுக்கூட்டமொன்று நடந்து கொண்டிருந்தது. சத்தியாக்கிரக இயக்க சம்பந்தமான கூட்டந்தான். 'இந்து' பத்திரிகையின் ஆசிரியர் கஸ்தூரிரங்க ஐயங்கார் கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசிக் கொண்டிருந்தார்.
வழக்கம் போல், கழுத்திலும், இரு காதுகளிலும் மல்லிகை மலர் அணிந்து வந்தார் பாரதியார்.
சாதாரணமாக கடற்கரைக் கூட்டங்களுக்கு வரும் முக்கியஸ்தர்கள், கூட்டம் ஆரம்பித்தபின், வரும்படி நேரிட்டால், கூட்டத்தைச் சுற்றி மேடைக்குப் பின்புறமாக வந்து மேடையின் மீதோ, மேடைக்குப் பக்கத்திலோ அமர்வர். இவர்கள் வந்து அமர்வது, கூட்டத்திலுள்ளவர்களுடைய கவனத்தை அதிகமாக ஈர்க்காது.
இந்த மாதிரி வரவில்லை பாரதியார். மேடைக்கு முன்னால் இருக்கும் ஜனக் கூட்டத்தைக் கிழித்து, அதாவது, உட்கார்ந்திருந்தவர்களை தள்ளி, தள்ளி விட்டு வந்தார். தலைவருடைய பேச்சை அமைதியுடன் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இது சிறிது சங்கடமாகவே இருந்தது; ஆனாலும், யாரும் வாய்திறக்கவில்லை.
நான் அப்போது தேசபக்தன் பத்திரிகையின் பிரதிநிதியாகச் சென்று கூட்டத்தின் நடவடிக்கைகளை குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன். மேடையாக இணைக்கப்பட்டிருந்த பெஞ்சுகளில் ஒன்றே என் மேஜையாக இருந்தது. கீழே மணல் தரையில் அமர்ந்திருந்தேன். இப்படித்தான் எல்லா பத்திரிகை பிரதிநிதி களும் அமர்ந்து குறிப்பெடுப் பது வழக்கம்.
அன்று, கூட்ட மிகுதியால், பத்திரிகைப் பிரதிநிதிகள் அனைவரும் நெருக்கமாக, ஒருவரையொருவர் இடித்து உட்கார்ந்து, தங்கள் கடமையை செய்து கொண்டிருந்தனர்.
கூட்டத்தைக் கிழித்து வந்த பாரதியார், என்னையும், என் பக்கத்தில், என்னோடு உராய்ந்தாற்போல் உட்கார்ந்திருந்த இந்து பத்திரிகையின் பிரதிநிதியாக வந்திருந்த வாசுதேவய்யர் என்பவரையும் சிறிது தள்ளிவிட்டு நடுவில் உட்கார்ந்தார். எனக்கு சிறிது ஆத்திரம் வந்தது. அவரை முறைத்துப் பார்த்தேன். 'என்ன முறைத்துப் பார்க்கிறீர்?' எனறு கேட்டார். 'ஒன்றுமில்லை. கூட்டத்தைக் கிழித்து இப்படி குறுக்காக வந்தீர்களே... சுற்றிக் கொண்டு வரக் கூடாதா?' என்று சொன்னேன்.
'நாம் சுற்று வழி செல்ல மாட்டோம்; நேர்வழிதான் செல்வோம்!' என்று உரக்கச் சொல்லி, என் தொடை மீது ஓங்கி ஓர் அறை அறைந்தார். அன்பாலும், பரிச்சயத்தாலும் கொடுத்த அறைதான். அறைந்து விட்டு, 'ஹா...ஹா...' என்று சிரிக்கவும் செய்தார்.
நான் வாய் திறக்கவில்லை. ஏதாவது பேச முடியுமா அப்போது? ஜாலியான மனிதராக இருந்திருக்கிறார் பாரதியார்!
***