
ஒரு வாசகியின் கடிதம் இது. படிக்கப் படிக்க நெஞ்சை உறைய வைக்கிறது; படியுங்கள்:
அந்துமணி சார்... தங்களின் அறிவுரை, உதவியை நாடியிருக்கிறேன்...
என் தந்தை சில வருடங்களுக்கு முன், பிரச்னை, அவமானம் தாங்க முடியாமல் கயிற்றால் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். கிராமம் என்பதால், பேய், ஆவியாக என் தந்தை உலவுகிறார் என, சில வருடங்கள் பேசி கொண்டனர்.
இந்த வடு ஆறுமுன், என் அருமை தங்கையும் அவர் வழியை பின்பற்றி சென்று விட்டாள். ஆசிரியைப் பயிற்சி முடித்து இருந்தாள். அவள் படித்த நேரத்தில், தனியார் பள்ளியில் படித்தவர்களுக்கு சர்டிபிகேட் தராமல் நிறுத்தி வைக்கப்பட்டது. சர்டிபிகேட் இல்லை என்ற உண்மையை சொல்லச் சொல்லி தான் கல்யாணத்திற்கு சம்மதித்தோம்; ஆனால், அவர்கள், மாப்பிள்ளையிடம் கூறவில்லை என்ற உண்மை, திருமணம் முடிந்த மறுநாள் தெரிந்தது.
அன்று ஆரம்பித்தது பிரச்னை... 'ஏமாற்றி விட்டீர்கள்...' எனச் சண்டை... அவர் வக்கீலாக இருந் தும், மனைவி வருமானத்தை விரும்பினார். அப்படியும் தனியார் பள்ளியில் வேலைக்கு போனாள்; ஏதோ சண்டையும், சச்சரவோடும் வாழ்க்கைச் சக்கரம் ஓடியது.
'டைவர்ஸ் வாங்கு!' என்று, எவ்வளவோ கூறியும் மறுத்து விட்டாள். இன்னொரு திருமணம் செய்து, எப்படி வாழ்வது என்ற அருவருப்பு. 'வாழும் வரை வாழ்கிறேன்... முடியாத பட்சத்தில் உயிரை மாய்த்துக் கொள்வேன்!' என்பாள். 'வீட்டிலே இரு...' என்றால், 'நாலு பேர், நாலு விதமாக பேசுவர்...' என்பாள்.
கஷ்டம் வரும்போது எல்லாம், 'நான் இருந்து என்னத்துக்கு... ஒரு பிரயோஜனமும் இல்லை... வறுமை நிலை... அவருக்கும் கேஸ் அவ்வளவாக இல்லை... குழந்தை இல்லை. மருந்து, மாத்திரை செலவு செய்தே பாதி ஏழையாகி விட்டேன். இனி செலவு செய்ய பணமும் இல்லை; மனதில் தெம்பும் இல்லை. இருந்து எதுக்கு ஆகப் போறேன்... அப்பா மாதிரி செத்தாவது நிம்மதியா இருப்பேன்!' எனக் கடிதம் எழுதுவாள்.
பிரச்னை இவளுக்குத்தான்... பாலிசிக்ஸ் ஓவரி வேலை செய்யலே... லேப்ராஸ்கோப் பண்ணணும் என்றனர். அவ்வளவு செலவு செய்ய வசதி இல்லை. குழந்தை இல்லை என்று புகுந்த வீட்டில் சொத்தும் கொடுக்கவில்லை; அனுசரணையும் இல்லை.
இவள் மட்டும் தான், தனியாக பிறந்த வீடு வருவாள். ஜனம் கேட்கும் கேள்விகளுக்கு கூனிகுறுகி போவாள். 'உன் புருஷன் வரலயா பிள்ளை இல்லையா...' எனப் பல கேள்வி கணைகள்.
தங்கை கணவருக்கு பிடிவாதக் குணம்; எங்கள் வீட்டார் யாரையும் பிடிக்காது. அவளும் போகக் கூடாது என, சண்டை போடுவார். 45-50 நாள் கூட பேசாமல் இருப்பார். எத்தனை நாள் இப்படி மவுனமாகவே வாழ முடியும் என, அவளாக அப்பப்ப ஊருக்கு வந்து போவாள்.
நான் கூட சொல்வேன்... 'ஏன் இப்படி கெடந்து கஷ்டப்படுகிறாய்... மாமாவையே (என் கணவர்) கட்டிக்க... இருவரும் சேர்ந்தே வாழ்வோம்...' என்று. 'வேணாம்... இப்ப இருக்கிற பாசம், அப்ப இருக்காது... உனக்கும் தொந்தரவு...' என்பாள்.
இப்படி எல்லாம் இருந்த சூழ்நிலையில், சர்டிபிகேட் இல்லை என்று அவள் வேலை பார்த்த பள்ளியிலிருந்து நிறுத்தி விட்டனர். ஏதோ சொற்ப வருமானம் வந்தது... அதுவும் நின்னு போச்சு!
வெளியில் எங்கேயும் போகாமல் இருந்ததால் மனவேதனை அடைந்தாள். எல்லா விஷயத்தையும் சொல்பவள் இதை சொல்லவில்லை. கடந்த ஒன்றரை மாதமாக என்னிடம் போனில் கூட பேசலை; ஏதோ கோபத்தில் இருக்கிறாள் என, சும்மா இருந்து விட்டேன். எது என்னை கட்டி போட்டது என, தெரியல. ஒருவேளை, நான் பேசியிருந்தால் மனசு மாறியிருப்பாளோ... பாவி, நான் அதை செய்யவில்லை.
தம்பி, அம்மாவை பார்க்க நாலைந்து முறை வந்து சென்று இருக்கிறாள். மாமியார் வீட்டில் சண்டை போட்டு வந்து இருக்கிறாள். அப்போது எல்லாம் மனசு மாறலயா...
சமீபத்தில் நடந்த ஒரு பண்டிகையின் போது, பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு, பக்கத்து வீடுகளுக்கு குடுத்து இருக்கிறாள், அதற்கு முதல் நாள், என் தம்பி 30 ஆயிரம் பணம் குடுத்து வந்துள்ளான். நன்றாகவே பேசியுள்ளாள்.
பின்னர், ஊருக்கு வந்து, எங்கள் தோட்டத்திற்குச் சென்று வாழ்வை முடித்துக் கொண்டாள். என் தம்பியுடன் பேசிவிட்டு, 'போ, வரேன்...' எனச் சென்றவள், திரும்பி வரல!
உலகம் என்னென்ன பேசும் என தெரியும். தெரிந்து அவள் அந்த முடிவுக்கு போக காரணம் விதியா...
நம்மால் முடியாத, கையாலாகாத காரணத்தால் தான் நாம் விதியின் மீது பழி போடுகிறோமோ... என்ன தான் அறிவாக, விஞ்ஞானபூர்வமாக பேசினாலும் விதியை வெல்ல முடியாதா... சரியான கணவனை தேர்ந்தெடுத்து, மண முடித்து வைக்காதது எங்கள் முட்டாள்தனமோ! அவள் வாழ்வின் பாதி கஷ்டங்களுக்கு நான் காரணமோ எனத் தோணுது.
நாம என்னதான் நினைத்தாலும், இப்படி, இவனுக்குத்தான் முடியணும்; இப்படித்தான் நம் வாழ்க்கை முடியும் என்பது முதலிலே எழுதி வைத்த விதியா! ஆயுசு முடிவதால் தான் சாவு வருகிறதா! அவளுக்கு இன்னும் ஆயுள் இருக்கிறதா! அப்படி இருந்தால் அவள் ஆவியா அலைவாளா... எனக்கு விளக்கம் தேவை.
'இது பரம்பரையா வரும் நோய்...' என்று டாக்டர் சொல்கிறார். என் பெரியப்பாவும் வயிற்றுவலி காரணமாக தற்கொலை செய்து கொண்டாராம்; இது ஒரு நோயா? அவருக்கு ஆறுதல் கூறி தனியாக கடிதம் அனுப்பி உள்ளேன்.
***
மனோதத்துவ ஆராய்ச்சிகளின் முடிவுகள்' என்றொரு நூல். இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்களின் முடிவுகள் - கண்டுபிடிப்புகள் அடங்கியது.
எப்படி, எப்படி தூங்குபவர்கள், எப்படிப்பட்டவர் என நூலில் கூறப்பட்டுள்ளது...
குப்புறப்படுத்து தூங்குவோர், சோம்பேறித்தனம் மிகுதியாக உள்ளவர்கள்; உழைப்பில் ஆர்வமில்லாதவர்களாக இருப்பர்; தங்கள் வேலையின் மீது பற்று இன்றி இருப்பர்.
சுருண்டு படுத்து உறங்குவோர், கோழைகள்; எப்போதும், எதற்கும், எதிலும் பிறர் ஆதரவை நாடி நிற்பவர்கள்.
மல்லாந்து படுத்து உறங்குவோர், தன்னம்பிக்கை மிக்கவர்கள்; பொதுநலனில் அக்கறை கொண்டவர்கள்; பிறரை எளிதில் கவரும் ஆற்றலும் கொண்டவர்கள்.
— இப்படிக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் இதில் எந்த ரகம்? சோதித்துக் கொள்ளுங்கள்!
அடுத்து, ஒருவர் பேசும் போது செய்யும் சேஷ்டைகளிலிருந்து அவரது குணத்தைக் கணிக்க முடியும் என்கின்றனர்...
நின்று கொண்டு பேசும்போது, தலையை விரல்களால் சொரிந்தபடி நிற்பவர்கள் ஞாபகமறதிக்காரர்கள்!
விரல் நகத்தைக் கடித்துக் கொண்டே பேசுபவர்கள், எந்தக் காரியத்தையும் அதிக நேரம் எடுத்துக் கொண்டு செய்யும் சுறுசுறுப்பில்லாதவர்கள்!
சட்டைப் பொத்தானைத் திருகிக் கொண்டே பேசுபவர்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்கள்.
அருகில் உள்ள மேஜை மீதோ, நாற்காலி மீதோ விரலால் தட்டிக் கொண்டே பேசுபவர்கள் அலட்சிய மனோபாவம் கொண்டவர்கள்!
விரலை மடக்கி, உள்ளங்கையில் தேய்த்துக் கொண்டே பேசுபவர்கள் பயந்த சுபாவம் உடையவர்கள்.
— இவற்றில் நான் எந்த ரகம் என, கண்டுபிடித்துச் சொல்ல லென்ஸ் மாமாவிடம் கேட்டுள்ளேன்!
***