PUBLISHED ON : ஜூலை 07, 2013

'வானமே எல்லை' படத்தில், இயக்குனர் கே.பாலசந்தரால் அறிமுகம் செய்யப்பட்டு, இதுவரை 107 படங்களில் நடித்து, தன் நகைச்சுவை நடிப்பு, தனித்துவம் பெற்ற குரல் மற்றும் மிமிக்ரி திறமையால், லட்சக்கணக்கான தமிழ் ரசிகர்களை மகிழ்வித்த நடிகர் தாமு, இப்போது புதிய களத்தில் இறங்கியுள்ளார்.
'இந்தியாவின் எதிர்காலம், இளைஞர் கைகளில் இருக்கிறது. அவர்களால் தான், 2020ம் ஆண்டுக்குள், இந்தியாவை வல்லரசாக்க முடியும்' என்று, ஆணித்தரமாக நம்பி செயல்படுபவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். இதற்காக, அவர் ஆரம்பித்த இயக்கம், 'லீட் இந்தியா 2020.' அந்த, இயக்கத்திற்கு, தமிழகத்தில் மாஸ்டர் டிரெய்னராக நியமிக்கப்பட்ட ஒரே நபர், நடிகர் தாமு தான்.
'சினிமா மூலம் கிடைத்த புகழை, எனக்கு சோறு போட்ட ரசிகர்களின் குழந்தைகளை நல்வழிப்படுத்த, பயன்படுத்துவதில், எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி...' என்கிறார் தாமு.
சில ஆண்டுகளுக்கு முன், கொடைக்கானலில், சாப்ட்வேர் இன்ஜினியர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அந் நிகழ்ச்சிக்கு, பிரதம விருந்தினராக அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் வந்திருந்தார். அங்கு தான், அவருக்கும், தாமுவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களை ஊக்கப்படுத்தவும், தாமுவின் திறமைகள் பயன்படும் என்று உணர்ந்த பொன்ராஜ். தாமுவிற்கு தனிப்பட்ட முறையில் பயிற்சி அளித்து, இளைஞர்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட வைத்தார். அப்துல் கலாமை சந்தித்து, அவருடைய ஆசியுடன், இப்பணியில் ஈடுபட ஆரம்பித்தார் தாமு.
கடந்த, 2008ல், திருநெல்வேலி சங்கரா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தான், முதன் முறையாக கல்வி விழிப்புணர்வு முகாமை ஆரம்பித்தார் தாமு. இதுவரை, 65 பள்ளிகள், கல்லூரிகளில் இளைஞர்களை ஊக்கப்படுத்தி, மேம்படுத்தும் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி, மாணவர் சமுதாயத்தை நல்வழியில் திருப்பியுள்ளார். தற்சமயம், நூறாவது நிகழ்ச்சியை நோக்கி, முன்னேறி வருகிறார்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் நிர்வாகங்களின் தேவைக்கு ஏற்ப, குறைந்த பட்சம் மூன்று மணி நேரத்திலிருந்து, அதிக பட்சமாக எட்டு மணி நேரம் வரை தாமு, இந்த கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் தாமு. சில இடங்களில், மூன்று நாட்கள் நிகழ்ச்சியாகவும் நடத்துகிறார். இது குறித்து தாமு கூறுகையில்,
'இது வரை, இரண்டு லட்சம் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரை சந்தித்து, அவர்களுடன் பழகி, அவர்களை ஊக்குவிக்கும் பாக்கியம், எனக்கு கிடைத்துள்ளது. அவர்கள் அனைவரையும் தங்கள் பெற்றோருக்கு நல்ல பிள்ளைகளாக, ஆசிரியருக்கு சிறந்த மாணாக்கர்களாக, நாட்டிற்கு சிறந்த குடிமக்களாக உருவாக்குவதில் சிறிதளவு பங்கு எனக்கு கிடைத்துள்ளதில் மனநிறைவை கொடுக்கிறது. அவர்களை, சிறந்த சாதனையாளர்களாக மாற்றும் பணியும் தொடர்கிறது...'
'பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் குறிப்பாக இளைஞர்கள், பெற்றோரிடமிருந்து மன ரீதியாக பிரிந்திருக்கின்றனர். ஒரே வீட்டில் வாழ்ந்தாலும், மன நெருக்கம் இருப்பதில்லை. இந்நிலையை மாற்றி, பெற்றோருக்கும், இளைஞர்களுக்கும் மனரீதியான பிணைப்பு ஏற்படுத்தும் பணியை இந்த கல்வி விழிப்புணர்வு முகாம் மூலம் செய்கின்றேன்.
ஞானம் கொடுத்த ஆசிரியர்களிடம் நன்றி உணர்வை வளர்ப்பது, தனி நபர் வளர்ச்சிக்கு வழிகாட்டுவது, உடலை நாசமாக்கும் தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் தடுப்பது, 'என்னால், எதையும் சாதிக்க முடியும்' என்ற எண்ணத்தை மனதில் விதைப்பது, வீட்டின் நலமே, நாட்டின் நலம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதன் மூலம் மாணவர்களை சிறந்த இளைஞர்களாக, நாட்டின் மீது அக்கறை கொண்டவராக, சிறந்த இந்தியனாக உருவாக்க முடியும்...' என்கிறார் தாமு.
தாமுவின், கல்வி விழிப்புணர்வு முகாம்களில், மனதை உ<ருக வைக்கும் Œம்பவங்களும் நடக்கின்றன. சில மாணவர்கள் புத்தகம் வாங்க, பீஸ் கட்ட, என்றெல்லாம் பெற்றோர், உறவினரிடம் பொய் சொல்லி, பணம் வாங்கி, தவறான பழக்கங்களுக்கு செலவழித்து அவர்களை ஏமாற்றியதை அனைவரின் முன், ஒப்புக் கொண்டு, 'இனி, அவ்வாறு செய்ய மாட்டோம், படிப்பில் கவனம் செலுத்துவோம்...' என்று, உறுதி எடுத்துக் கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன.
வகுப்பில், சுமாராக படிக்கும் மற்றும் பெயிலாகும் மாணவ, மாணவியருக்காக, தாமு விசேஷ கவனம் செலுத்துகிறார். முடிவில் அவர்களிடம், 'பாசிடிவ் ரெஸ்பான்ஸ்' தெரிகிறது. குறைந்த மதிப்பெண் எடுப்பவர்கள், இனி, பாடத்தில் கவனம் செலுத்தி, நல்ல மதிப்பெண் எடுப்பதாக உறுதி எடுத்துக் கொள்கின்றனர்.
FAMILY என்ற சொல்லுக்கு புதிய விளக்கம் தருகிறார் தாமு. F பாதர் A அண்டு M மதர் I இன் L லவ் வித் Y யூ. தந்தையும், தாயும் உன்னை நேசிக்கின்றனர். இதை எல்லா இளைஞர்களும், நன்றாக புரிந்து கொள்ள வேண்டும், என்று அறிவுறுத்துகிறார். தேர்வு பயத்திலிருந்து விடுபட்டு, தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை சந்திக்க, 'அச்சம் தவிர்' என்ற நிகழ்ச்சியையும் நடத்துகிறார்.
இதுவரை, தாமு நடத்திய மிமிக்ரி நிகழ்ச்சிகளிலே, ஒரே மேடையில் ஒரு லட்சம் பேர் பார்த்து ரசித்தது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க, மலேஷியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டார் - நைட் நிகழ்ச்சி தான். இதை நேரடியாக ஒரு லட்சம் பேரும், 'டிவி'யில் பல லட்சம் பேரும் பார்த்து ரசித்தனர். தாமுவின் நிகழ்ச்சி நடந்தது எட்@ட நிமிடங்கள் தான்.
டெயில் பீஸ்: தன் வாழ்க்கையின் அரிய பொக்கிஷமாக தாமு கருதுவது, தற்போது இரண்டு வயது ஆகும் கல்கி ப்ரியா, ஜீவ ப்ரியா என்கிற தன் இரட்டை குழந்தைகளைத் தான். பதிமூன்று ஆண்டுகள் கழித்து பிறந்த பொக்கிஷங்கள்.
***
* நடிகர் தாமு, 2005ம் ஆண்டு முதல், 'லாரிங்ஸ்' என்ற பெயரில், மிமிக்ரி இன்ஸ்டிடியூட் நடத்தி வருகிறார். இவரது மிமிக்ரி பள்ளியில் 300 பேர் படிக்கின்றனர். 250 பேர் ஆண்கள், 50 பேர் பெண்கள். பயிற்சி பெற்று, பல இடங்களில் மிமிக்ரி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.
* நடிகர் தாமுவிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் உள்ளது. அது, காரில் பயணம் செய்யும் போது, தன்னுடன் சில ஹெல்மெட்டுகளை வைத்திருப்பார். ஹெல்மெட் அணியாமல், இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞரை கண்டால் வண்டியை நிறுத்தி, ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை சொல்லி, தன்னிடமிருக்கும் ஹெல்மெட்டை தருகிறார். தங்கள் மீதுள்ள, அக்கறையில் தாமு சொல்வதை உணர்ந்து, ஹெல்மெட்டை வாங்கிக் கொள்வதுடன், சிலர் அதற்கான பணத்தை கொடுக்கின்றனர். அந்தப் பணத்தில் மீண்டும் ஹெல்மெட் வாங்கி, மற்றவருக்கு கொடுக்கிறார். இளைஞர்கள் மீது, இவர் கொண்டுள்ள விசேஷ அக்கறை இது.
* வெளியில் செல்லும் போது, தெருவில் சிகரட் பிடிக்கும் இளைஞரை சந்திக்க நேர்ந்தால், அவரிடம் நுரையீரல் பாதிப்பு குறித்து கூறுவதுடன், 'சிகரட் பிடிப்பது, சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது போன்றது. நான் சொல்வது நியாயம் என்றால், இனி சிகரட் பிடிக்காதீங்க. இல்லை என்றால் என்னை நீங்கள் அடிக்கலாம்...' என்று கூறுகிறார். பல இளைஞர்கள் தங்கள் தவறை உணர்ந்து, சிகரட்டை கீழே போட்டு விடுகின்றனர்.
* இன்று வரை, 8,613 நிகழ்ச்சிகள். தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், அமெரிக்கா, ஐரோப்பா, ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகள், கனடா, நியூசிலாந்து என, முப்பத்து முன்று நாடுகளில், தன் மிமிக்ரி நிகழ்ச்சிகளை நடத்தி, உலகத் தமிழர்களை மகிழ்வித்திருக்கிறார்.
* விழிப்புணர்வு முகாம்களிலும் சரி, மிமிக்ரி நிகழ்ச்சிகளிலும் சரி ஒவ்வொரு இடத்திலும், நடிகர் விஜய்க்கு நன்றி கூறி வருகிறார் தாமு. அதற்கு காரணம், ஜுராசிக் பார்க் படம் வெளியான போது, அப்படத்தின் ட்ரெய்லரின் சவுண்டு ட்ராக்கை தாமுவிடம் தந்து, 'இதைக் கேட்டு, இதே போல மிமிக்ரி செய்யுங்கள். நல்ல வரவேற்பு கிடைக்கும். இது, உங்களால் மட்டும் தான் முடியும்...' என்று உற்சாகப்படுத்தியுள்ளார் விஜ#. சர்வதேச விழாவில், ஜெனீவா நகரில் நடந்த போட்டியில், ஜுராசிக் பார்க் படத்தின் ட்ரெய்லரை, பல்வேறு விதமான சவுண்டுகளை தாமு கலந்து, மிமிக்ரி செய்து சர்வதேச போட்டியில் முதல் பரிசு பெற்றார். தொடர்ந்து, இருபத்தி இரண்டு நாடுகளிலும், ஜுராசிக் பார்க் ட்ரெயிலரை, மிமிக்ரி செய்து பாராட்டுகள் பெற்றுள்ளார்.
***
ரஜத்