
செல்போனா, செக்ஸ் போனா!
நான், ஒரு தனியார் தொழிற்பயிற்சி பள்ளியின் ஆசிரியர். ஒரு நாள், நான் பாடம் நடத்தும் போது, மாணவன் ஒருவன் தன்னை மறைக்கும் விதமாக, புத்தக பையை தன் முன் பிரித்து வைத்துக்கொண்டு, பாடத்தை கவனிப்பது போல் பாவ்லா செய்து கொண்டிருந்தான். அவன் கவனம் முழுவதும் பிரித்து வைத்த பையினுள்ளேயே இருந்தது.
எதிர்பாராத தருணத்தில் அவனை மடக்கினேன். பையிலுள்ள மொபைல் போனில், நீலப்படம் ஓடிக் கொண்டிருந்தது. சத்தம் காட்டாமல் மொபைலை எடுத்துக் கொண்டு, அவனை ஓய்வறைக்கு அழைத்து சென்று கண்டித்து, 'நாளை வரும் போது, உன் தந்தையை அழைத்து வா...' என்று உத்தரவிட்டேன் எதையுமே காதில் வாங்கி கொள்ளாத அவன், 'மொபைல் வேணும்னா எடுத்துக்குங்க, மெமரிகார்டு கொடுங்க... இனிமே நான் படிக்க வரமாட்டேன், மீறி இந்த விஷயத்தை எங்க அப்பாகிட்ட கொண்டு போக நினைத்தால், கடிதம் எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொள்வேன். பின், என் சாவுக்கு நீங்கள் தான் பதில் சொல்ல நேரிடும்...' என்று, கொஞ்சமும் பயமில்லாமல் என்னையே மிரட்ட ஆரம்பித்தான்.
அவன் பேசிய தோரணை, என் வயிற்றில் அமில மழையை வரவழைத்தது. கையெடுத்து கும்பிட்டு, மொபைல் போனையும் கொடுத்து, அவனை கவுரவமாக அனுப்பி வைத்தேன்.
பெற்றோர்களே... இளைய சமுதாயம் சென்று கொண்டிருக்கும் பாதையை பார்த்தீர்களா? எதையும் பிஞ்சிலேயே கிள்ள வேண்டும். பழுத்து விட்டால் ஒன்றும் செய்ய முடியாது!
ஆசிரியப் பணியின் அவலத்தை எங்கே போய் சொல்வது!
— ஆ.மாரியப்பன், சென்னை.
இதுக்கு கொடுக்கலாம் மானியம்!
நான் சமீபத்தில், சி.எப்.எல்., பல்பு வாங்க, கடைக்குச் சென்றேன். 5 வாட்ஸ் பல்பு விலை கேட்டேன், ரூபாய் 110 என்று சொன்னார் கடைக்காரர். தூக்கி வாரிப் போட்டது. மேலும், 15 வாட்ஸ் பல்ப்பின் விலை ரூபாய் 175; 20 வாட்ஸ், ரூபய் 225; 30 வாட்ஸ், ரூபாய் 370; 40 வாட்ஸ், ரூபாய் 450 என்று, கடைக்காரர் கூறியதும் தலைசுற்றி விட்டது.
மின்சாரத்தை மிச்சப்படுத்த சி.எப்.எல்., விளக்கை பயன்படுத்த அரசு சொல்கிறது. ஆனால், அதன் விலை, ஏழை மக்கள் வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அரசு, சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க மானியம் கொடுக்கிறது. இது ஏழை மக்களை சென்றடைய பல காலம் ஆகும். ஆகவே, சி.எப்.எல்., தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி, மலிவு விலையில், மக்களுக்கு கிடைக்குமாறு அரசு செய்தால், மக்கள் குண்டு பல்பை விட்டு, சி.எப்.எல்., பல்புக்கு மாறுவர்.
ஆந்திராவில், அரசே வீட்டுக்கு வீடு குண்டு பல்பை கழட்டி விட்டு, சி.எப்.எல்., பல்பை, இலவசமாக போட்டுச் கொடுக்கின்றனர். தமிழ்நாட்டில் அப்படி செய்ய வாய்ப்பே இல்லை. அதனால், எது எதற்கோ மானியம் வழங்கும் அரசு, மின்சார சிக்கனத்திற்காக சி.எப்.எல்., பல்புக்கு, மானி யம் அளிப்பது காலத்தின் கட்டாயம்.
— வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
இவர்கள் தேவையா?
'வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் செய்துப்பார்' என, ஒரு பழமொழி உண்டு. அதுவும், இன்று மண்டபம், சாப்பாடு மற்ற செலவுகள் என, லட்சக்கணக்கில் பணம் செலவாவதால், பெற்றோர் விழிபிதுங்கிப் போகின்றனர். இந்த நிலையில், சில பண முதலைகளோ... தங்களுடைய டாம்பீகத்தை காட்ட, கல்யாண விழாவில் கலந்து கொள்ள, சினிமா நட்சத்திரங்களை அழைக்கின்றனர். இதற்கு, பல லட்ச ரூபாய் செலவு செய்கின்றனர்.
பிரபல இந்தி நடிகர் ஒருவர், கல்யாணங்களில் கலந்து கொள்ள, ஐந்து கோடி ரூபாய் கேட்கிறார். இவர்கள், ஒரு மணி நேர சிறப்பு நிகழ்ச்சி நடத்துவர் அல்லது முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு, அளவளாவுவர். இப்படி, இவர்களுக்கு கொட்டிக் கொடுக்கும் பணத்தை, ஏழை, எளிய மக்களை வாழ வைக்கும் சேவை நிறுவனங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் கொடுத்தால், அந்த உள்ளங்களாவது மகிழ்ந்து, ஆசீர்வாதம் செய்யும். நாம் செய்த, பெரிய செலவுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும்.
சமீபகாலமாக, தமிழ் சினிமா நட்சத்திரங்களையும் அழைக்கத் துவங்கியுள்ளனர். அதிர்ஷ்டம் என்ற ஏணியின் மூலம், புகழின் உச்சியை தொட்ட இவர்களை அழைத்து, காசை வீணாக்குவதை விட, நல்ல செயல்களுக்கு உதவி செய்து, மனத்திருப்தி அடையலாமே!
— பட்டு, பெங்களூரு.