PUBLISHED ON : ஜூலை 07, 2013

ஜூலை 12 - மாணிக்கவாசகர் குருபூஜை!
மாசிமகத்தில், கும்பகோணத்தில் விழா என்றால், ஆனி மகத்தில் தமிழர்கள் வாழும் எல்லா இடங்களிலும் திருவிழா தான்! காரணம், 'திருவாசகம்' என்னும் தீந்தமிழ் இலக்கியத்தை நமக்களித்த மாணிக்கவாசகருக்கு அன்று குருபூஜை.
'திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத் திற்கும் உருகார்' இந்த பெருமை, உலகில் எந்த நூலுக்கும் கிடைக்கவில்லை. அது மட்டுமா! மகாபாரதத்தை, வியாசர் சொல்லச் சொல்ல, விநாயகப் பெருமான் எழுதியது போல, திருவாசகத்தை மாணிக்கவாசகர் பாடப்பாட, தில்லையம்பல சிவனே எழுதியதாக வரலாறு சொல்கிறது.
பதவியைத் தேடி அலைகிற காலம் இது. மாணிக்கவாசகரோ, அரசுப் பதவியை உதறிவிட்டு, இறைவன் அளித்த ஆன்மிகப் பதவியை ஏற்றுக் கொண்டவர்.
ஒருமுறை, இவர் திருவண்ணா மலைக்குச் சென்றார். அது மார்கழி மாதம். நகரத்துப் பெண்களெல்லாம், அதி காலையிலேயே, அண்ணா மலையாரின் புகழைப் பாடிய வண்ணம், தங்கள் தோழியரை வீடுவீடாகச் சென்று எழுப்புவது போல் பாவனை செய்து, பாடல்களைப் பாடினார். அது தான் உலகப் புகழ் பெற்ற திருவெம்பாவை.
மாணிக்கவாசகர், மதுரை அருகிலுள்ள திருவாதவூரில், சம்புபாதசரிதர், சிவஞானவதி தம்பதிக்கு பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் வாதவூரார். இவரது அறிவாற்றலால் கவரப் பட்ட மதுரை மன்னன் அரிமர்த்தன பாண்டியன், அமைச்சர் பதவி அளித்தான்.
ஒருசமயம், மன்னன் உத்தரவுப்படி பாண்டிய நாட்டு படைக்கு குதிரை வாங்கி வர, பெரும் பணம் மற்றும் வீரர்களுடன் புறபட்டார் வாதவூரார். வழியில், திருப்பெருந்துறை (புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில்) ஆத்மநாதர் கோவிலுக்குள், சென்று இறைவனை வணங்கிய பின், பிரகாரத்தை வலம் வந்த போது, அங்கிருந்த தலவிருட்சமான குருந்தமரத்தடியில் தட்சிணா மூர்த்தி வடிவில் அமர்ந்திருந்த ஒரு சிவத் தொண்டரைக் கண்டார். அவரைக் கண்டதும், வாதவூராரின் உடலும், உள்ளமும் உருகியது, அமர்ந்திருப்பவர் சிவன் என்பதை தன் உள்ளுணர்வின் மூலம் உணர்ந்தவர், அவர் முன் விழுந்து வணங்கினார். தன் திருவடியைத் தூக்கி< வாதவூராரின் சிரசில் பாதத்தை வைத்து தீட்சை வழங்கினார் சிவன். அவரது திருவடி பட்டதோ இல்லையோ, வாதவூரார் மெய் சிலிர்த்து, பாடல்கள் பாடத் தொடங்கினார். வாதவூராரின் பாடல்களைக் கேட்ட இறைவன், 'உன் ஒவ்வொரு வார்த்தையும் மாணிக்கத்தை போன்றுள்ளது. எனவே, நீ மாணிக்க வாசகன் என்று அழைக்கப்படுவாய்...' என்றார். அன்றுமுதல் வாதவூரார் மாணிக்கவாசகர் என்று அழைக்கப்பட்டார். தான் கொண்டு வந்த பணத்தில் கோவில் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் நடத்தினார்.
அரசுப்பணத்தை கோவில் பணிக்கு செலவிட்ட தால், மன்னனால் பல சோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டார். பின்னர், வந்தி என்னும் முதிய பக்தைக்காக பிட்டுக்கு மண் சுமக்க வந்த சிவன் மூலம் விடுதலை பெற்றார்.
உண்மையை உணர்ந்த பாண்டியன், அவரிடம் மன்னிப்பு கேட்டான். மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்க வேண்டினான். மாணிக்கவாசகர் மறுத்து விட்டு, சிவப்பணியே திருப்பணி என, தில்லையம்பலமாகிய சிதம்பரம் சென்றார். அங்கு அந்தணர் வடிவில் அமர்ந் திருந்த சிவபெருமான், மாணிக்கவாசகர் பாடப் பாட ஓலைச்சுவடியில் எழுதினார். எழுதி முடித்ததும், அந்த ஓலைச் சுவடியில், 'மணி வாசகன் சொன்ன திருவாசகத்தை எழுதியது அழகிய திருச்சிற்றம் பல முடையான்' என்று கையொப்பமிட்டு மறைந்து விட்டார்.
அப்போது தான் மாணிக்க வாசகருக்கு தெரிந்தது, தான் கூறிய திருவாசகத்தை எழுதியது சிவ பெருமான் என்பது. தமிழ் மண் அவரால் பெருமை அடைந்தது. ஆனிமகம் நட்சத்திரத்தில் மாணிக்க வாசகருக்கு குருபூஜை நடத்தப்படும். அவருக்கு சிறப்பளிக்கும் வகையில், ஆவுடையார்கோவிலில், சிவனுக்குரிய ரிஷபத்தில் அமர்த்தி, அலங்காரம் செய்து, உலா வருவர்.
மாணிக்கவாசகர் குருபூஜையன்று அவர் அருளிய திருவாசகத்தைப் பாடி உருகுவோம்.
***
தி. செல்லப்பா