PUBLISHED ON : ஆக 18, 2013

பீச்சில் வழக்கமான எங்கள் மீட்டிங் நடக்கும் இடத்தின் அருகே வந்து நின்றது ஒரு கார். உள்ளேஇருந்து சிரித்துக் கொண்டே இறங்கி வந்தார் டாக்டர் நண்பர்; லென்ஸ் மாமாவின் தோழர். பாங்காக்கில் ஒரு கம்பெனியில் அதிகாரியாக இருக்கிறார்.
'இப்போது நியூயார்க்கிற்கு என்னை மாற்றியிருக்கின்றனர். போவதற்கு முன் பழைய நண்பர்களையெல்லாம் பார்த்துவிட்டு போகலாம் என்று வந்திருக்கிறேன்...' என்றார்.
'உங்கள் பாடு தேவலாம், உலகம் பூரா சுற்றி விடுகிறீர்கள்...' என்றேன்.
'என்ன, போங்கள்... எந்த உலகத்தைச் சுற்றினாலும், இங்கே அக்கடா என்று தமிழ்நாட்டில் இரண்டு இட்லி, சாம்பார் சாப்பிடுகிற மாதிரி இல்லையே!'
'அதைச் சொல்லுங்கள்... தமிழ்நாட்டின் பெருமை வெறும் இட்லி, சாம்பாரில் தான் இருக்கிறது...' என்றார் லென்ஸ் மாமா.
'என்ன, அப்படி தமிழ்நாட்டை ரொம்பக் குறைவாகச் சொல்லி விட்டீர்கள்... ஒரு காலத்தில் மலேயா, இந்தோனேஷியா, பர்மா, கம்போடியா என்று எல்லா இடத்தையும் தமிழன் ஆண்டிருக்கிறான் மாமா.
'ஒரு வருஷம் இல்லை, இரண்டு வருஷமில்லை... ஆறு, ஏழு நூற்றாண்டுகளுக்குத் தமிழ் ராஜ்ஜியம் அங்கெல்லாம் நடந்திருக்கிறது. இந்தக் கண்ணால் நேரில் பார்த்துவிட்டு வந்து சொல் றேன்...' என்று சொல்லி, ரொம்ப உணர்ச்சிவசப்பட்டார் டாக்டர் நண்பர்.
பிறகு அவரே, 'கம்போடியாவிலுள்ள அங்கோர் வாட் கோவிலைப் பார்த்தால், நமக்கு எப்படிப்பட்ட உணர்ச்சி ஏற்படுகிறது தெரியுமா... தமிழ் மன்னர்கள் கட்டிய கோவில் சார்... உலகத்திலேயே ரொம்பக் குறிப்பிடத்தக்கக் கோவிலாக இருக்கிறது. தமிழ்நாட்டில் கூட அப்படிப் பிரமாண்டமாக எந்த ஒரு கோவிலும் இல்லை...' என்றார்.
'நான் கூட கேள்விப்பட்டிருக்கிறேன். நூறு வருஷங்களுக்கு முன் தான் அந்தக் கோவிலைக் கண்டுபிடித்தனராமே... பெரிய அடர்ந்த காடுகள் அந்தக் கோவில் இருக்குமிடமே தெரியாதபடி மறைத்திருந்ததாம். இல்லையா?' என்றார் அன்வர் பாய்.
நான் உடனே, 'இப்போது நமக்கிருக்கிற நெருக்கடி நிலைமைக்கு, அந்தக் காலத்தில் தமிழ் மன்னர்கள் ஜெயித்திருந்த கடாரம், சாவகம் போன்ற நாடுகள் எல்லாவற்றையும் அப்படியே வைத்துக் கொண்டிருந்திருக்கலாம், இல்லையா?' என்றேன்.
டாக்டர் நண்பர் கூறினார்: ஒரு நாடு இன்னொரு நாட்டைப் பிடித்துக் கொள்வதற்கு, வெறும் மண்ணாசை மட்டும் காரணமில்லை. தன்னுடைய வீரத்தை நிலை நிறுத்துவதற்காகவே, பல நாடுகளை ஜெயித்திருக்கின்றனர் தமிழர்கள் என்றே நினைக்கிறேன்.
கம்போடியா நாட்டில் கதை ஒன்று கேட்டேன்... அந்த நாட்டின் வாய் துடுக்கான ராஜா ஒருத்தன், ஒரு நாள் தன் மந்திரியிடம் எகத்தாளமாக கூறினானாம்... 'இதோ, பார்த்தீரா மந்திரியாரே... இந்த வெள்ளித் தட்டில் நம் எதிரியான இந்தோனேஷிய ராஜாவின் தலையைக் கிள்ளி வைத்தால் எப்படியிருக்கும்...' என்று.
எப்படியோ இந்த செய்தி இந்தோனேஷிய ராஜாவுக்கு எட்டி விட்டது. உடனே, அவன் படையெடுத்து வந்து, கம்போடியா நாட்டை ஜெயித்து, அந்த ராஜாவின் தலையை சீவி விட்டானாம். சீவினதோடு ஒரு வெள்ளித் தட்டில் அதை வைத்தானாம்.
கம்போடிய மக்கள், 'இனி நீங்களே எங்கள் நாட்டின் தலைவன்...' என்று இந்தோனேஷிய ராஜாவிடம் மண்டியிட்டு விட்டனராம்!
அதற்கு அவன் சொன்னானாம், 'உங்கள் நாடு எனக்கு எதற்கு... உங்கள் தேசத்து அரசன் என் தலைக்கு ஆசைப்பட்டான்; ஆகவே, நானும் அவன் தலைக்கு ஆசைப்பட்டேன். அவன், என் நாட்டுக்கு ஆசைப்படவில்லை; ஆகவே, நானும், அவன் நாட்டுக்கு ஆசைப்படவில்லை...' என்றான் அந்த அரசன், என்று முடித்தார் நண்பர்.
'பேஷ்... அருமையான அரசியல்...' என்றார் லென்ஸ் மாமா!
***
டாக்டர் கிருபாநிதி —
ஒரு காலத்தில் தமிழ்நாடு பா.ஜ., தலைவராக இருந்தாரே... அந்த கிருபாநிதிதான். அவர் மாவட்ட மெடிக்கல் ஆபிசரா இருந்து ஓய்வு பெற்றவர். 'கேஸ்ட்ரோ என்டாலஜிஸ்ட்' ஆபரேஷன் ஒரு லட்சம் பேருக்கு செய்திருக்கிறாராம். அவர் பணி பற்றிய தன்னோட அனுபவத்தை, என் நண்பர் ஒருவரிடம் கூறி இருக்கிறார்.
அந்த விஷயத்தை என்னிடம் நண்பர் கூற, ஆச்சரியம் தாங்காமல், 'ஆ'ன்னு வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தேன்.
இப்படிச் சொன்னாராம் கிருபாநிதி:
சென்னையில நான் மருத்துவ அலுவலரா பணியாற்றிய காலத்தில், திடீர்ன்னு எனக்கு கிராமிய மக்களுக்கு மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. மேல் அதிகாரியிடம் என் விருப்பத்தைத் தெரிவித்தேன்... 'கிராமங்களில் பணியாற்றும் டாக்டர்கள் எல்லாம் சென்னைக்கு வரணும்ன்னு துடிக்கிறாங்க... நீங்களோ, சென்னையில் இருந்து கிராமத்திற்கு போகணுங்கறீங்களே...' என்று, என்னை வியப்போடு விழி விரியப் பார்த்தார் மேல் அதிகாரி.
ஆனாலும், நான் வற்புறுத்தினேன். இதையடுத்து எனக்கு கரூர் தாலுகாவில் மதுக்கரை என்ற மலையடிவாரத்து கிராமத்திற்கு மாற்றல் வழங்கப்பட்டது.
மதுக்கரை கிராமத்தில் நான் பணியாற்றிய போது எத்தனையோ வித்தியாசமான விஷயங்கள்... அவற்றுள் ஒன்று இதோ...
மதுக்கரை கிராமத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஐந்து கணவன்மார்கள் உண்டு. ஒவ்வொரு கணவனுக்கும் திருமண தினத்தன்று ஆளுயர கம்பு ஒன்றை பரிசாக தருவர். இவ்வாறாக ஒரே மனைவியை மணந்து கொண்ட ஐந்து கணவன்மார்களுக்கும் தலா ஒரு கம்பு இருக்கும்.
ஒருவரின் கம்பில் பித்தளை பூண், மற்றொருவரின் கம்பில் இரும்பு பூண், அடுத்தவர் கம்பில் செம்பு பூண் என்று ஒவ்வொரு கணவருக்கும் ஒரு வகையான பூண் கொண்ட கம்பு வழங்கப்பட்டிருக்கும்.
ஒரு கணவன், மனைவியை பார்க்க வீட்டிற்குச் செல்லும் போது, வாசலில் வேறு ஏதேனும் கம்பு சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறதா என்று பார்ப்பார்.... எந்த கம்பும் இல்லை என்றால், அதன்பின் தன் கம்பை வீட்டு வாயிலில் சாய்த்து வைத்து விட்டு வீட்டிற்குள் செல்வார்.
அந்த சமயத்தில் மற்றொரு கணவன் பார்க்க வந்தால், அவர் வாசலில் இருக்கிற கம்பை பார்த்து விட்டு, வீட்டிற்குள் செல்லாமல் வெளியே போய் விடுவார். இவ்வாறு கம்பை அடையாளமாக வைத்து, மனைவியோடு பழகும் பாங்கு அந்த கிராமத்தில் நடைமுறையில் இருந்து வந்தது.
ஒருநாள் இத்தகைய கணவன்மார்களில் ஒருவருடன் நான் பேசிக் கொண்டு இருந்தேன். அவரிடம், 'உங்கள் மனைவிக்கு குழந்தை பிறந்தால் அதற்கு யார் அப்பா?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'நாங்கள் ஐந்து பேருமே அந்தக் குழந்தையை எங்கள் குழந்தை தான் என்று சொல்வோம்...' என்றார்.
இவ்வாறு அவர் கூறியபோது எனக்கு பகீர் என்றது. ஐந்து கணவன்மார்களை கொண்ட ஒரு மனைவியிடம் நான் பேசிக் கொண்டு இருந்தேன். அப்போது அவரிடம், 'ஐந்து கணவன்மார்களோடு வாழ்வது நாகரிகமற்றது இல்லையா?' என்று கேட்டேன்.
உடனே, 'இதில் அநாகரிகம் என்ன இருக்கிறது. நாங்கள் பாஞ்சாலி பரம்பரையை சேர்ந்தவர்கள்...' என்று பெருமையோடு கூறினார் அந்த பெண்.
இந்த வகையான மக்கள் போதிய பண்பாட்டு வளம் இல்லாத நிலையில், மதுக்கரை என்ற மலையடிவார ஊரில் வாழும் பாங்கு என்னை அதிர வைத்தது என்று முடித்தார்.
இந்தக் கதையை அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த லென்ஸ் மாமா, 'நாமெல்லாம் பாஞ்சாலி பரம்பரை இல்லை... தப்பித்தோம்...' எனக் கூறி நடையைக் கட்டினார்!
***
