sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 09, 2026 ,பங்குனி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : அக் 13, 2013

Google News

PUBLISHED ON : அக் 13, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றின் பெயர், எத்திராஜ் கல்லூரி. தினமும், இரு முறை, இக்கல்லூரியை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை எனக்கு. அதுவும், மதிய நேர கல்லூரி ஆரம்பமாகும் நேரமும், அது முடிந்த நேரமும் கல்லூரியைக் கடந்து செல்ல வேண்டும்.

வித, விதமான வண்ண ஆடைகளில், நெட்டையும், குட்டையும், குண்டும், ஒல்லியுமாக நூற்றுக்கணக்கான இளம் பெண்களின் படை, ரோடை கடந்தும், ரோடின் ஓரமாகவும், இருபுறமும் உள்ள பஸ் நிறுத்தங்களிலும் காணப்படும்.

கண்ணை அங்கே, இங்கே திருப்பாமல், கவனத்தை சிதற விடாமல், கல்லூரியை கடந்து செல்லும் போதெல்லாம், 'யார் இந்த எத்திராஜ்?' என நினைப்பேன்... அவர் ஒரு பிரபல வழக்கறிஞர் என, யாரோ, எப்போதோ சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

அன்று —

வழக்கறிஞரான நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. சென்னை உயர்நீதி மன்றத்தில், பிராக்டீஸ் செய்து வருகிறார்.

வழக்கு விஷயம் ஒன்று பற்றி, அவரிடம் பேசியபின், 'எத்திராஜ் என்பவர் ஒரு வழக்கறிஞராமே... அவர் பெயரில் கல்லூரி ஒன்றும் உள்ளதே... அவரைப் பற்றி தெரியுமா உங்களுக்கு?' எனக் கேட்டேன்.

'ஏன் தெரியாமே! அந்த காலத்தில், உயர்நீதி மன்றத்தில், மிகப் பிரபலமான வழக்கறிஞர். அவரின் வாதத் திறமை பற்றி, ஓகோன்னு சொல்லுவாங்க... உதாரணத்திற்கு ஒன்று, இரண்டு சொல்றேன், கேள்...' என்றவர், ஆரம்பித்தார்...

ஒரு கொலை கேசில், எட்டு பேருக்குத் தூக்கு தண்டனை வழங்கி விட்டனர். இவ்வழக்கில் ஆஜரான எத்திராஜ், கோர்ட்டில் பத்து நிமிடங்கள் தான் வாதாடினார்... 'கொலையுண்டதாக கூறப்பட்ட சடலம் மீட்கப்படவில்லை; அதை யாரும் கண்ணால் பார்க்கவில்லை. சந்தர்ப்ப சாட்சியங்களைக் கொண்டே, மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அப்படி தண்டனை வழங்கியது

சரியல்ல; குற்றம், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. கொலையுண்டவர், ஒரு வேளை, உயிரோடு திரும்பி வந்தால், எதிரி இறந்து போய் விட்டால், நீதிபதிகள் மீண்டும் அவருக்கு உயிர் கொடுக்க முடியுமா?' என்று கேட்டார். தூக்குத் தண்டனை ரத்தாகி, அனைவருக்கும் விடுதலை கிடைத்தது.

பெரிய பெரிய வழக்குகளிலெல்லாம் கூட, வாதாடப் பத்து நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ள மாட்டார் எத்திராஜ்; ஆனால், அந்த பத்து நிமிடங்களுக்கு பின்னால், அவரது அசாத்திய உழைப்பு இருக்கும் என்பர்...

கர்நாடகாவில், ஒருவர், தனக்குச் சொந்தமான நிலத்தில், சிலர் அத்துமீறி பிரவேசித்ததாக கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். அவர், அப்போதைய, கர்நாடக முதல்வரான அனுமந்தையாவின் சகோதரர். அதனால், தன் சகோதரருக்கு ஆதரவாக, தன் செல்வாக்கை, அனுமந்தையா தவறாக பயன்படுத்துவதாக, எதிரிகள் குற்றம் சாட்டினர்.

அதே சமயத்தில், 'டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகையில், ஒரு கடிதம் வெளியாகியது. அந்தக் கடிதத்தில், 'தன் செல்வாக்கை, அனுமந்தையா, தவறாக பயன்படுத்தவில்லை' என்று, எழுதியிருந்தது. அந்தக் கடிதத்தை, முதல்வர் அனுமந்தையாவே எழுதியதாகவும், அதனால், கோர்ட் நடவடிக்கைகளில் பாதிப்பு இருப்பதால், கோர்ட் அவமதிப்பு சட்டத்தின் கீழ், அனுமந்தையா மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குத் தொடுக்கப்பட்டது. பிரதம நீதிபதி மேடப்பா. கோர்ட்டில், வழக்கு விசாரணைக்கு வந்தது.

எத்திராஜ் தான், அனுமந்தையாவுக்கு ஆஜரானார். மிகவும் சாமர்த்தியமாக, கோர்ட் அவமதிப்பு வழக்குக்காக வாதாடினார் எத்திராஜ். ஒரு முதலமைச்சர் பற்றிய வழக்கு என்பதால், மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியானதாக சொல்லப்படும், கடிதத்தின் ஒரிஜினலைக் கொண்டு வந்து, கோர்ட்டில் சமர்ப்பித்தால் தான் கேஸ் நிலைக்கும். பத்திரிகைகளில் வெளியானதாகச் சொல்லப்படும், பல தகவல்களை சுட்டிக் காட்டி, கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடருவது, சட்டப்படி செல்லாது, என்று, வாதாடினார்.

முதலமைச்சர் எழுதியதாகச் சொல்லப்படும் ஒரிஜினல் கடிதத்தை, இரண்டு வாரக் காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று, எத்திராஜின் வாதத்திற்குப் பின், கோர்ட் உத்தரவிட்டது. ஒரிஜினல் லெட்டர் கிடைக்கவே இல்லை. அனுமந்தையா பேரில் தொடுத்த அவமதிப்பு வழக்கு, தள்ளுபடியானது. இந்த வழக்கில், மூன்று நிமிடங்களே வாதாடினார் எத்திராஜ்.

முதலமைச்சராக ராஜாஜி இருந்தபோது, ஒரு கேசுக்காக வாதாட, எத்திராஜை அமர்த்தினார். எத்திராஜ் பப்ளிக் பிராசிகியூட்டர் அல்ல; தனியாக பிராக்டிஸ் செய்து வந்த அட்வகேட். ஆந்திர மாநிலம் தனியாகப் பிரிந்திராத காலம் அது. கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பல் ஒன்றை, துரத்திக் கொண்டு போனார் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர். நாங்குலி என்ற இடம்; ஆந்திர மாநிலம் சித்தூர் தாண்டி இருந்தது.

கள்ளச் சாராயக் கோஷ்டியை நோக்கி, துப்பாக்கிச் சூடு நடத்தினார் சென்னை மாநில சப் - இன்ஸ்பெக்டர். சுட்ட இடம், ஆந்திர எல்லையையும் தாண்டி, கர்நாடக மாநிலத்தில் இருந்தது. தன் கடமையை சப் - இன்ஸ்பெக்டர் செய்தாலும், அவரை கைது செய்து விட்டது கர்நாடக மாநில போலீஸ்.

சப்-இன்ஸ்பெக்டர், நியாயம் தவறாமல், கடமையை செய்ததை அறிந்து, அந்த சப்-இன்ஸ்பெக்டரை, ஜாமினில் எடுக்க, எத்திராஜை வழக்கறிஞராக அமர்த்தினார் ராஜாஜி. அன்றைய தேதியில், வி.கே.திருவேங்கடாச்சாரியார் அட்வகேட் ஜெனரல், வி.டி.ரங்கசாமி பப்ளிக் பிராசிகியூட்டர். அரசு தரப்பில் இருந்த, இந்த இரண்டு பேருமே பெரிய வக்கீல்கள். இருந்தாலும், தனிப்பட்ட வக்கீலான, எத்திராஜையே அனுப்பினார் ராஜாஜி.

இரண்டே நிமிடம் பேசி, அந்த சப்-இன்ஸ்பெக்டரை, ஜாமினில் விடுவித்துக் கொண்டு வந்து விட்டார் எத்திராஜ். சப்-இன்ஸ்பெக்டர், தன் கடமையை செய்ய, தற்காப்புக்காக சுட்டதாக வாதாடினார் எத்திராஜ். அவர் மேலும் சொல்லும் போது, 'தற்காப்புக்காகச் சுட்டது நியாயம். அது அவசியம் என்று நிரூபிக்க வேண்டியது, எதிரியின் கடமை; அதாவது, குற்றம் சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரின் பொறுப்பு. அரசு தரப்பு பிராசிக்யூஷனின் வேலை அல்ல அது. ஜாமினில் வெளியே சப்-இன்ஸ்பெக்டர் வந்தால், அரசு தரப்பு சாட்சிகளைக் கலைத்து விடக்கூடும் என்ற நிலமை இந்த வழக்கில் எழாது... சித்தூர் வெப்பமான இடம்; பெங்களூர் குளுகுளு! குற்றம் சாட்டப்பட்டவர், பெங்களூரை விட்டு வெளியே போகாமல், கோர்ட் உத்தரவு போடலாம்...' என்று, சிரித்துக் கொண்டே எத்திராஜ் சொன்னபோது, அரசு வக்கீலால், மறுப்பு சொல்ல முடியவில்லை.

நீதிபதியும் சிரித்துக் கொண்டே, சப்-இன்ஸ்பெக்டருக்கு ஓய்வு தேவை என்றும், கர்நாடக போலீசார் மேற்பார்வையில், பெங்களூரிலேயே தங்கலாம் என்று, உத்தரவு போட்டார்.

சப்-இன்ஸ்பெக்டரை வெளியே கொண்டு வந்ததற்காக, எத்திராஜுக்கு நன்றி தெரிவித்த ராஜாஜி, 'உங்கள் பீஸை கொடுக்க சென்னை அரசாங்கத்திற்கு சக்தி உள்ளது; பில் அனுப்புங்கள்...' என்று கூறினார்.

பணம் வாங்க மறுத்து விட்டார் எத்திராஜ். ஒரு போலீஸ் அதிகாரி, தன் கடமையைச் செய்ததற்காக, குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், ஒரு முதலமைச்சரே முன் வந்து, தன்னை நியமித்த நல்லெண்ணமே, தன்னுடைய பீஸ் என்று கூறினார் எத்திராஜ்...

— இப்படிக் கூறி முடித்தார் நண்பர்.

அக்கல்லூரியை, இனி கடக்கும் போதெல்லாம், மேற்கூறியவை, நினைவலைகளில் மோதும்!

***






      Dinamalar
      Follow us