PUBLISHED ON : அக் 13, 2013

'கண்ணன் வந்தான்' நாடகத்திலும், கவுரவம் படத்திலும், மாதிரி கோர்ட் சீன் ஒன்று வரும். டிராமாவில், அந்த சீனில், நான் கிடையாது. ஆனால், படத்திற்கு அந்த காட்சி எடுக்கும் போது, 'மகேந்திரனும் இந்த காட்சியில் இருக்கட்டும். அவனுக்கு டிராமா முழுவதும், மனப்பாடம். நாம ஏதாவது விட்டாலும், அவன் சொல்வான்...' என்றார் சிவாஜி.
சிவாஜி, தன் வாதத்தை முடிக்கும் போது, நீண்ட ஆங்கில வாக்கியத்தை, ஸ்டைலாக பேசி, 'தட் இஸ் ஆல் யுவர் ஆனர்' என்று, முடித்தார். செட்டில் இருந்த அனைவரும், அவரது நடிப்பை, வசன உச்சரிப்பை வியந்து, மெய்மறந்து கை தட்டினர். சிவாஜி என்னை பார்த்தார். செட்டில் இருந்த நாகேஷûம், நானும் மகிழ்ச்சியை காட்ட வில்லை.
எங்கள் இருவரின் தோளிலும், கையை போட்டு, தனியாக அழைத்துச் சென்று, 'நீங்க ரசிக்க மாட்டீங்களா?' என்று கேட்டார், கேலியாக. 'நீ சொல்லு' என்றார் நாகேஷ். 'இல்ல... நீங்க சொல்லுங்க...' என்றேன் நான். சற்று தயக்கத்துடன், நாகேஷ் சொன்னார்: 'கடைசியாக நீங்க பேசின டயலாக்கிலே, ஆங்கில உச்சரிப்பு, சரியாக இல்லை யென்று, நாங்க, 'பீல்' பண்றோம்...' என்றார் நாகேஷ்.
எங்களை முறைத்துப் பார்த்தார் சிவாஜி. கவுரவம் படம் தான் எனக்கு, அவரோடு முதல் படம். இதுவே, முதலும், கடைசியுமான படம் ஆகிவிடுமோ, என்ற பயம் வந்து விட்டது.
'ஏன்டா... இதை சொல்லக் கூடாதா? நான் என்ன கான்வென்ட்டிலா படிச்சேன்! இல்ல, இவங்க அம்மா (ராஷ்மி) எனக்கு பத்மா சேஷாத்ரி, பள்ளியிலே, 'அட்மிஷன்' தந்தாங்களா? எனக்கு பழக்கத்துல வந்த, ஆங்கிலத்தை வைத்து பேசினேன்...' என்றார்.
ஒளிப்பதிவாளர் வின்சென்ட்டை கூப்பிட்டு, 'இந்த ஷாட்டை, ரீ-டேக் செய்துடுப்பா...' என்றார்.
'அண்ணே, எந்தினா... நன்னாயிட்டு இருக்கு ஷாட்டு...' என்று, மலை யாளம் கலந்த தமிழில் அவர் சொன்னார்.
'என்னுடைய மூவ் மென்ட், நான் நடந்து வந்தது, சரியாக வர வில்லை என்று நினைக் கிறேன். ஒன் மோர் டேக் ப்ளீஸ்...' மீண்டும், அந்த காட்சியை நடித்து, எங்களை நோக்கி, 'சரியா' என்கிற மாதிரி பார்த்தார்.
நாங்கள் இருவரும், 'தம்ஸ் அப்' பாணியில், கட்டை விரலை உயர்த்தி காண்பித் தோம். 150 படங்களில் நடித்து, மாபெரும் நடிகர் என்று பெயர் வாங்கிய பின்னரும், ஒரு காட்சிக்கு தானே, மீண்டும், ரீ-டேக் கேட்டு நடிக்கும் நடிகரை, உலக அளவில், விரல் விட்டு எண்ணி விடலாம்.
இப்போது சொல்லுங்க, நான் சிவாஜி பித்தனாக இருப்பதில் தவறு இருக்கிறதா... அகில இந்திய சிவாஜி மன்றம், கடந்த ஜூலை மாதம், பாசமலர் டிரெயிலர் வெளியீட்டு விழா அழைப்பிதழில், என் பெயரை, 'சிவாஜி பித்தன்' என்று போட்டிருந்தனர். நான் சிவாஜி பித்தன் தான் என்பதை, பெருமையாக சொல்லிக் கொள்கிறேன்.
கவுரவம் படத்தின், முதல் நாள் படப்பிடிப்பு. இந்த காட்சி, டிராமாவில் இல்லாதது. அவருக்கு எல்லாமாக இருந்த மகன் போன்ற கண்ணன், அவரை விட்டு பிரிந்து போய் விடுகிறான். இந்நிலையில், அவர், தனக்கு தானே பேசிக் கொள்ளும் காட்சியை, முதலில் எடுத்தனர். சிவாஜி வசனங்களை நன்றாக பேசி நடித்தாலும்,'ஏண்டா... ஒரு கட்டபொம்மன், வியட்நாம் வீடு என்றால், பல முறை நடித்த நாடகம். என் கேரக்டர் முழுமையாக தெரியும். எடுத்த எடுப்பிலே, எந்த சீன் வேண்டுமானாலும் நடிக்கலாம். இந்த நாடகத்தை, நான் ஒரே முறை தான் பார்த்திருக்கிறேன். படத்தின் கிளைமேக்சுக்கு முன் வருகிற, ஹெவியான சீனை, முதல் ஷாட்டாக எடுக்குறீங்களே... கேரக்டரின் மூடு, பாவத்திற்குள் நான் வர வேண்டாமா? சிவாஜி கணேசன் என்றால், என்ன வேண்டுமென்றாலும் செய்து விடுவான்... அவன் தலையிலே, பாரத்தை போடலாம் என்று எடுக்குறீங்களா.... எடுங்க எடுங்க. இதை சவாலா எடுத்து, செய்து காண்பிக்கிறேன்...' என்றார்.
கவுரவம் பட ஷூட்டிங்கின் போது, சில நாட்கள், காலையில், பாரிஸ்டர் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுப்பர். மதியம், ஜூனியர் அட்வகேட் கண்ணன் வரும் காட்சிகளை எடுப்பர். காலையில்,
மேக் - அப் போட போகும் போதே, சிவாஜி கம்பீரமாக, மிடுக்காக போவார். அப்போதிலிருந்தே, அந்த கேரக்டருக்குள் நுழைந்து விடுவார். அதே போல மதியம், மேக்-அப் போட போகும் போது அடக்கமாக, சாந்தமாக இருப்பார். இதை நாகேஷ் கவனித்து, என்னிடம் சொல்வார். நானும், அதை கவனித்து வியந்திருக்கிறேன்.
கவுரவம் படத்தில் வரும், 'நீயும், நானுமா' பாடல் காட்சியில், இரு சிவாஜிகளும், அரச உடையில் வருவர்.
இங்கிலாந்து அரசர், ஐந்தாம் ஜார்ஜ் போன்ற தோற்றத்தில், சிவாஜி கம்பீரமாக இருப்பார். அந்த காஸ்ட்யூம் அவருக்கு மிகவும் பிடிக்கும். கவுரவம் படத்தின் விளம்பரங்களில், அந்த தோற்றம் நிறைய உபயோகிக்கப்பட்டது. 'அன்னை இல்லம்' வீட்டில், மாடிப்படி ஏறுமிடத்தில், ஜார்ஜ் மன்னன் தோற்றத்திலுள்ள, அவரது, பெரிய படம் மாட்டப்பட்டிருக்கும். பாரிஸ்டர் ரஜினிகாந்த் கேரக்டரை எடுக்கும் போது மட்டும், சிவாஜியிடம், ஒரு தனி ஸ்டைல் இருக்கும். இடது கையால் ஒரு சொடுக்கு போட்டு, கேஸ் கட்டை எடுப்பார். பல பக்க வசனங்கள் சொல்ல முடியாத அர்த்தங்களை, அந்த, ஒரு சொடுக்கு, எடுத்துக் காட்டும்.
*சென்ற நூற்றாண்டின், மிகச் சிறந்த அறிவாளி என்று, கருதப்படும் ராஜாஜி, சினிமா பார்ப்பதில், விருப்பம் இல்லாதவர். ஆனாலும், சம்பூர்ண ராமாயணம் படத்தை, அவரை பார்க்க வைத்தனர். அப்படத்தில், ஒரு சில காட்சியில், கவுரவ நடிகராக, பரதன் வேடத்தில், சிவாஜி நடித்திருப்பார். ராமன் காட்டுக்கு சென்றதும், வெறிச்சோடியிருக்கும் அயோத்தி நகரத்தின் காட்சி, தன் தாய் கைகேயியை, கோபித்துக் கொள்ளும் காட்சி, ராமரை கூப்பிட, காட்டுக்கு செல்லும் காட்சி என, சில காட்சிகளிலேயே வந்திருந்தாலும், படத்தில் சிவாஜியின், பரதன் பாத்திரம் தான் நிற்கும். படம் பார்த்த பின், ராஜாஜியிடம், படத்தை பற்றிய விமர்சனம் கேட்டனர்.
'பரதனுக்கு என் பாராட்டுகள்' என்று, ஒரே வரியில் கூறினார் ராஜாஜி. அவர், படத்தில், சிவாஜியை பார்க்கவில்லை. பரதனை மட்டும் தான் பார்த்திருக்கிறார்.
*சென்னை கமலா தியேட்டர் அதிபர், காலம் சென்ற, வி.என் சிதம்பரம், சிவாஜியின் நெருங்கிய நண்பரும், ரசிகரும் ஆவார். நாங்கள் நடத்தும், சிவாஜி நினைவு நிகழ்ச்சிகளுக்கு, டிக்கெட் வாங்கி வந்து, பார்த்து, ரசிப்பார். அவர், சிவாஜியை, புட்டபர்த்தி அழைத்துச் சென்றார். புட்டபர்த்தி சென்ற போது, பொது நுழைவு வாசல் அருகே, சிறிது நேரம், அவர்களை உட்கார வைத்து, பின், அழைத்து சென்றனர். நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது. பிரத்யேக வழி வழியாக, உள்ளே செல்ல அனுமதிப்பர் என்று தான், சிதம்பரம் நினைத்திருந்தார். ஆனால், அது நடக்கவில்லை.
புட்டபர்த்தி சாய்பாபாவிடம், இருவரும் சென்ற போது, பாபா தெலுங்கில், 'மெயின் நுழைவு வாயிலிலிருந்து, நடக்க வைத்து விட்டேனே என்று, கோபம் தானே உனக்கு... சிவாஜியின் நடிப்பில், ரொம்ப ரசிக்கத் தக்கது, அவருடைய நடை தான் என்று, எல்லாரும் சொன்னாங்க. எனக்கு உன் நடையை பார்க்கணும்ன்னு ஆசை. அதனாலதான், உன்னை இவ்வளவு தூரம் நடக்க வைத்தேன்...' என்றார். சிவாஜிக்கு, தெலுங்கு நன்றாக புரியும். பாபா சொன்னதைக் கேட்டு, நெகிழ்ந்து விட்டார்.
***
— தொடரும்.
எஸ். ரஜத்
