தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்


PUBLISHED ON : அக் 13, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 13, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தான் திருடி, பிறரை நம்பான்!

இருபுறமும் சம்மதம் ஆகி, நிச்சயம் ஆகப்போகும் நிலையில், மாப்பிள்ளை பையன், பெண்ணை வேவு பார்க்க, அவள் பணிபுரியும் அலுவலகத்தில், ஒற்றனை ஏற்பாடு செய்திருக்கிறான். இந்தத் தகவல் கசிந்து, பெண் வீட்டாரை எட்ட, அவர்கள், அவனை வேவு பார்க்க, ஏற்பாடு செய்து விட்டனர். ரிசல்ட், அவனது நடவடிக்கை மோசம் என்று காட்ட, பெண்ணின் பெற்றோர், அவனுக்கு, 'நோ' சொல்லி விட்டனர்.

'தான் திருடி, பிறரை நம்பான்' என்பது போல, கயவனான அவன், தன்னைப் போலவே, பெண்ணும் இருக்குமோ என்று சந்தேகப்பட்டதால், நல்ல வாய்ப்பை இழந்தான். பெண் வீட்டாரும் வருத்தப்படாமல், தப்பித்து விட்ட சந்தோஷத்துடன், வேறு மாப்பிள்ளை தேடுகின்றனர்.

பெயர்,ஊர் வெளியிட விரும்பாத வாசகர்.

'ஜொள்' ரசிகர்களும்,பொல்லாத கமென்ட்களும்!

'நானொரு கபடி வீராங்கனை. போட்டியின் போது, ஆப் - டிராயரும், பனியனும் அணிந்து விளையாடுவது வழக்கம். போட்டி நடக்கும் இடத்திற்கு, ஆண் ரசிகர்களே அதிகம் வருகின்றனர். அவர்கள், எங்கள் விளையாட்டை மட்டும் ரசித்தால் பரவாயில்லை. மாறாக, விளையாட்டின் போது, எங்கள் மார்பு குலுங்குவதையும், உடை விலகுவதையும், அதிகம் ரசிக்கின்றனர். சிலர், அதை வீடியோ எடுப்பதும், கொச்சையாக கமென்ட் அடிப்பதும், எங்களை கூச செய்கிறது. இதனால், விளையாட்டின் மீது, எங்களுக்கிருக்கும் ஆர்வம் குறைகிறது.

ஆண் ரசிகர்களே... நாங்கள் ஒன்றும், சினிமா கவர்ச்சி நடிகைகள் அல்ல. பல லட்சங்கள் பெற்று, விட்டு, தொடையையும், தொப்புளையும் காட்டி போக. எங்கள் பரிசுத் தொகை ஆயிரமோ, ரெண்டாயிரமோ தான். விளையாட்டின் மீதுள்ள, தீராத காதலினால் விளையாடுகிறோம். எங்கள் உணர்வுகளை புண்படுத்தாதீர்கள்.

பெயர்,ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

இப்படியும் செய்யலாமே!

எங்களது கம்பெனிக்கு, சர்வீஸ் செய்ய வந்த, ஒரு வாகனத்தின் பின்புறம், எழுதப்பட்டிருந்த ஒரு வாசகம், என்னைப் பெரிதும் ஈர்த்தது. 'இந்த வாகனம், சாலை விதிகளை மீறுவதைக் கண்டால், உடனே, எங்களுக்கு தெரிவியுங்கள்!' என்று, ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அந்த வாசகத்தை சுமந்து வரும் வண்டியும், சாலை விதிகளை மதிப்பதோடு, அதன் பின்னால் வரும் வாகனங்களுக்கும், சாலையில் பாடம் நடத்துவது போல, எனக்கு தோன்றியது. இந்த விஷயத்தை, என் முதலாளியிடம் எடுத்துக் கூறியதோடு, எங்கள் நிறுவனத்தில் உள்ள அனைத்து வாகனங்களிலும், அந்த வசனத்தை இடம் பெறச் செய்தேன். தலைவிதியை நிர்ணயிக்கும் சாலை விதிகளை மதிக்க, இது போல் நிறைய செய்யலாமே.

வி.எம்.ராஜன், மதுரை.

லாபமும், கொள்ளையும்!

பூ வியாபாரிகள் முதல், தங்க வியாபாரிகள் வரை யாரும், லாபம் இல்லாமல் பொருட்களை விற்க மாட்டார்கள். சமீபத்தில், நகரிலுள்ள ஒரு பிரபல நகைக் கடையில், நகை வாங்கினேன். செய்கூலி, சேதாரம் போன்று எதுவுமே இல்லாமல், நகையின் எடைக்குரிய மார்க்கெட் விலையை மட்டுமே வாங்கிக் கொண்டு, நகையைக் கொடுத்தனர். ஆச்சர்யமாகவும், திகைப்பாகவும் இருந்தது. ஒன்று முதல் 15 சதவீதம் வரை சேதாரம் என்றும், 500 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை செய்கூலி என்றும், கிராமுக்கு 50 முதல், 100 வரை தள்ளுபடி என்றும், விளம்பரப்படுத்தி வியாபாரம் செய்பவர்களால், எப்படி இது எதுவுமே இல்லாமல், வெறும் மார்க்கெட் விலைக்கு விற்க முடிகிறது என்ற என் பிரமிப்பை, நண்பர் ஒருவரிடம் கேட்டேன். தங்க நகை வியாபாரத்தில் உள்ள நண்பர், 'மார்க்கெட் ரேட்டுக்கு நகை விற்கும்போது கிடைப்பது லாபம். தள்ளுபடி, செய்கூலி, சேதாரம் எல்லாம் போட்டு, விற்பது கொள்ளை...' என்றார். தங்கம் வாங்குவோர் புரிந்து கொண்டால் சரி.

எஸ்.ஆர்.சுப்ரமணியம், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us