sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : நவ 10, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 10, 2013


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவர் ஒரு மத்திய அரசு ஊழியர்; சிற்றிதழ்களின் சகவாசம் அதிகம் கொண்டவர்; எழுத்தாளர். அவர் எழுதுவது யாருக்கும் புரியாது (கையெழுத்தை சொல்லவில்லை) எதிலுமே, மற்றவரில் இருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும் என எண்ணுபவர்.

கடந்த வாரத்தில், நண்பர் ஒருவர் வீட்டில், அவரை சந்தித்தேன். 'டேய், கண்ணா... அந்த கண்றாவி இருந்தா, கொண்டா...' என, நண்பரிடம் கூறினார்.

ஆச்சரியம் கலந்த பார்வையை, அவர் மீது வீசிக் கொண்டிருந்த போது...

'எங்க ஆபிசுல ஒரு லேடிப்பா... ரொம்ப, 'வெல் பிஹேவ்ட்' லேடி. அப்பப்ப பாத்து சிரிக்கும்; என் எழுத்துக்கள விமர்சனம் செய்யும். டீ குடிக்க கூட வரும்.

'லவ் மேரேஜ் செஞ்சுக்கிட்ட லேடி... ஒண்ணோ, ரெண்டோ கொழந்தைங்க இருக்கு. வயசென்ன... இன்னிக் கெல்லாம் மிஞ்சிப் போனா 30-32 தான் இருக்கும்...' என்று, இவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, இவர் கேட்ட, 'கண்றாவி' வந்தது. உ.பா., தான்!

'என்னங்க சார்... நீங்களே இத கண்றாவின்றீங்க... அப்புறம், அத ஏன் சாப்பிடுறீங்க?' எனக் கேட்டேன்.

'உனக்கு இதப்பத்தி எல்லாம் தெரியாது. விஷயத்தைக் கேளு...' என்றவர், 'சரக்கை' பக்குவமாகக் கலந்து கொண்டே தொடர்ந்தார்...

'லவ் மேரேஜுன்னு தான் பேரு... லவ்வே இல்லைன்னு, புலம்பறாங்க அந்த லேடி. அவங்க ஹஸ்பண்டும் நல்ல பதவியில தான் இருக்காரு... நல்லா சம்பாதிக்கிறாரு. 'வொய்ப்'பை மிஷின் மாதிரி தான் நினைக்கிறாராம். ஆறுதலா, அன்பா, காதலா ஒரு வார்த்தை கூட பேசுறது இல்லியாம்...

'நானும் ஆபிஸ் போயி மாடா ஒழச்சு, பஸ்சில் இடிபட்டு, மிதிபட்டுத் தானே வீடு வந்து சேருகிறேன்... 'என்ன, கண்ணா... டயர்டா இருக்கா...'ன்னு ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை கூட கேக்க மாட்டேங்கிறாரு...' என, புலம்புகிறார் அந்த லேடி. கண்ணே, மணியே என்று கொஞ்சியது எல்லாம், காதலிச்சுகிட்டு இருந்த காலத்தோட போச்சு போல...

'சரி, போகட்டும். வேலை முடிஞ்சு, நேரத்தோட வீடு வந்து சேர்ந்தா என்னவாம்? ராத்திரி 10:00 மணி, 11:00 மணி வரை நண்பர்களோட ஆட்டம் போட்டுட்டு வர்றாரு... இங்கே, நானும், குழந்தைகளும் அவரை எதிர்பார்த்து காத்துக் கிடக்கோம்ன்னு ஏன் அவருக்கு புரிய மாட்டேங்குதுன்'னு கேக்றாங்கப்பா அந்த லேடி...' என்றவர், தன் ஜோல்னாபையைத் திறந்து, அதிலிருந்த மிக்சர் பொட்டலத்தைப் பிரித்து, வாய் கொள்ளாத அளவு உள்ளே தள்ளி கரக், முறுக் என சத்தமாக அரைத்தார்.

இதனிடையே, நண்பர் வீட்டு சமையல் காரம்மா, 'எக்ஸ்கிரம்பிள்' சுட சுட, எடுத்து வந்தார். அதையும், ஸ்பூனால் அள்ளி, இரண்டு, மூன்று வாய் போட்டு, பூப்போட்ட கண்ணாடி கிளாசில் இருந்ததை, அப்படியே உள்ளே தள்ளினார்.

அவரே தொடர்ந்தார்... 'இதுக்கெல்லாம் மேலே ஒரு விஷயம்ப்பா... லேடீசை பூ போல, 'ஹாண்டில்' பண்ணணும்ப்பா... ஆனா, இந்த ஆளு முரடனாம்... அதையும் சொல்லி வருத்தப்படுதுப்பா...' என்றார்.

'சரி... நீங்க என்ன ஆறுதல் குடுத்தீங்க...' என்றேன்.

அதை விவரித்தார்.

பின், இது பற்றி, தனிமையில் ஒரே யோசனை... காதலித்து கல்யாணம் செஞ்சு கிட்டவங்க கூட, ஏன் இப்படி நடந்துக்கிறாங்க என்று!

'எதிலும் தடபுடலும், ஆரவாரமும் இருந்தால், அதற்கென்று ஒரு தனிப் பலன் உண்டு. நான் சொல்வதைக் கேட்டு, உண்டா, இல்லையான்னு சொல்லு...' என்ற குறிப்போடு அன்று ஆரம்பித்தார் குப்பண்ணா.

'நம்ம கொள்கைக்கு எதிராக இருக்கிறதே... மனிதர் என்ன சொல்ல வருகிறார், கேட் போம்...' என, காதைத் தீட்டினேன்.

'ஒரு இல்லத்தரசி சொன்னதை அப்படியே, அவர் கூறுவது போலவே சொல்கிறேன்...' என்றவர், சொல்ல ஆரம்பித்தார்:

எங்கள் வீட்டுச் சின்னப் பையன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, ஊறுகாய் பாட்டிலை கீழே தள்ளி உடைத்து விட்டான். அடுப்பங்கரை முழுவதும் ஊறுகாய் சிதறியது. உடைந்த கண்ணாடித் துண்டுகள் அங்கும், இங்குமாக இறைந்து கிடந்தன. ஒரே களேபரம். 'ஜாடி தானே உடைந்து விட்டது... பையனுக்கு ஒன்றும் நேரவில்லையே போனால் போகட்டும். நாம் பொறுமையாக இருப்போம் என்று, பையனைக் கடிந்து கொள்ளாமல், மெதுவாக எழுந்து, பையனை அப்புறப்படுத்தப் போனேன்.

என் நிதானத்தைக் கண்டு, என் கணவர், மிகுந்த ஆத்திரத்துடன், 'என்ன... ஒன்றுமே நடக்காதது போல நடந்து கொள்கிறாயே...' என்று, எரிந்து விழுந்தார்.

எத்தனையோ முறை, நான் பொறுமையாக நடந்து கொண்டு மிகவும் அவதிப்பட்டிருக்கிறேன். அதன்பின், இப்பொழுதெல்லாம், எதிலும், பொறுமையாக நடக்க வேண்டும் என்று சொல்பவரைக் கண்டால், எனக்குக் கட்டோடு பிடிப்பதில்லை.

எந்தச் சிறு காயத்துக்கும், ஒரு நாடகமாடி விடுவது அல்லது அழுது தீர்த்து விடுவது என்று தீர்மானித்து விட்டேன்.

ஒரு முறை என்னுடைய கைப்பையை எங்கோ தொலைத்து விட்டேன். அது, விலை உயர்ந்த சரக்கு அல்ல. மிஞ்சிப் போனால், 50 ரூபாய் பெறும். இருந்தாலும் என் கணவரிடம் அழுது தீர்த்து விட்டேன். 'நம் லலிதா கல்யாணத்தின் போது (லலிதா அவர் தங்கை) நீங்கள், எனக்கு வாங்கித் தந்தீர்கள். மூன்று வருஷமாகப் பத்திரமாக வைத்திருந்தேன். எவ்வளவுப் பணம் கொடுத்தாலும், அந்தப் பை மாதிரி வருமா...' என்றெல்லாம் முகத்தை சுளித்து, கண்ணீரை வரவழைத்து அழுதேன்.

உடனே அவர், 'ஏன் வீணாக அழுகிறாய்? சாதாரண கைப்பை தானே... இன்னொன்று வாங்கினால் போச்சு...' என்று, என்னை சமாதானம் செய்ய ஆரம்பித்து விட்டார். இருந்தும் நான் விடவில்லை. இன்னம் இரண்டு கேவுக் கேவி, மெதுவாகத் தான் அழுகையை நிறுத்தினேன்.

ஆனால், பையை எங்கோ தவறி வைத்து விட்டேன் என்று கொஞ்சம் நிதானமாக அவரிடம் சொல்லியிருந்தால், பதில் வேறுவிதமாக இருந்திருக்கும். 'நீ எப்போதுமே இப்படித்தான். உனக்குத் துட்டுக் கஷ்டம் கொஞ்சங்கூடத் தெரிவதில்லை. நான் சம்பாதிக்கும் பணமெல்லாம், உன் கைப்பை வாங்கத் தான் காணும்...' என்றெல்லாம், வசைமாரி, பொழிந்திருப்பார். ஆகவே தான், எதிலும் நிதானமாக இருக்க வேண்டாம் என்று சொல்கிறேன்.

ஒரு முறை, அவர் எனக்கு, ஒரு அழகான பிளவுஸ் துணி வாங்கி வந்தார். எப்போதும் தான் இப்படி பிளவுஸ் துணி வாங்கி வருகிறாரே என்று, 'நல்ல துணியாகத் தான் இருக்கிறது...' என்று சொல்லிவிட்டு, என் வேலைகளை பார்க்க போய் விட்டேன்.

அவர் என்ன நினைத்துக் கொண்டாரோ... கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது, 'ஏகப்பட்ட காசு போட்டு, அழகான வெல்வெட் துணி வாங்கி வந்திருக்கிறேன். நல்ல துணியாகத்தான் இருக்கிறது என்று பேசாமல் போகிறாயே... அவ்வளவுதானா...' என்று அங்கலாய்த்துக் கொண்டார்.

ஆனால் நான் மட்டும், 'ஆஹா, எவ்வளவு நல்ல துணி. எங்கே வாங்கினீர்கள்? அழகாக இருக்கிறதே... இவ்வளவு விலை உயர்ந்த துணியை, பணமில்லாத இந்த நாளில் ஏன் வாங்கினீர்கள்... சாதாரண துணி வாங்கியிருந்தால் போதாதா...' என்று, முச்சு விடாமல் அடுக்கிக் கொண்டு ஒரு குதி, ஒரு ஆட்டம், ஒரு நாடகம் ஆடியிருந்தால் சரியாக இருந்திருக்கும் அல்லவா?

அதிலிருந்து, எதற்கும் ஒரு நாடகமாடி விடுவது என்று தீர்மானித்து விட்டேன். இந்த ரகசியத்தை, நான் எப்போதும் என்னுடன் வைத்திருப்பேன்.

உங்கள் பக்கத்து வீட்டுக் குழந்தை, கட்டிலிலிருந்து கீழே விழுந்து விட்டது என்று சொல்கின்றனர். உடனே, நீங்கள், 'பரவாயில்லை; நெற்றியில் சற்று வீங்கியிருக்கிறது. வெந்நீர் ஒத்தடம் கொடுங்கள்; சரியாகி விடும்...' என்று சாதாரணமாகச் சொல்லுங்கள். சில சமயம், இது விபரீதத்தை விளைவித்து விடும். 'உங்களுக்கென்ன நஷ்டம்... குழந்தை எங்களுடையது தானே...' என்று முகத்தை முறிப்பது போல், பேசி விடுவர். நீங்கள் வருந்த நேரிடும்.

இதற்கு மாறாக, 'ஐயையோ... அடி மிகவும் பலமாகப் பட்டிருக்கிறதோ... ரொம்ப உயரத்தில் இருந்தல்லவா விழுந்திருக்கிறான் குழந்தை... நீங்கள் அவசியம் டாக்டரிடம் எடுத்துக் போங்கள். மண்டையில் அடிபட்டால் ஆபத்து. உடனே, 'ஸ்கேன்' எடுத்துப் பாருங்கள். எதற்கும் கொஞ்சம் ஒத்தடம் கொடுத்து விட்டு, நேராக டாக்டரிடம் போகலாம்... வாருங்கள்...' என்று படபடவென்று உப்பு, புளி, மிளகுடன் நீங்கள் சொல்லியிருந்தால், அவர்களுக்கு மிக ஆறுதலாக இருந்திருக்கும்.

உடனே, அவர்கள், 'பரவாயில்லை. உட்காருங்கள். ஒத்தடம் கொடுத்தால் எல்லாம் சரியாகி விடும்...' என்று நம்மைச் சமாதானப்படுத்த ஆரம்பித்து விடுவர். இம்மாதிரி மிகைப்படுத்தி கூறுவதை, எல்லாரும் விரும்புகின்றனர். இதை விட்டு சாந்தமாகவும், நிதானமாகவும் நடந்து கொண்டால், நீங்கள் தோல்வியடைய வேண்டியது தான்!

'இப்படி அந்த மாமி சொல்கிறார். நீ என்ன சொல்றே?' என்ற கேள்வியுடன் முடித்தார்.

நீங்க என்ன சொல்றீங்க?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us