
க.மனோரஞ்சிதம்: சின்னமனூர்: நம் கலாசாரத்தில் வெகுவாக ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே மேம்போக்கான நட்புநிலை இருக்கிறது. ஆனால், இந்த அம்சம் வெளிப்படையில், 'நட்பென'அங்கீகரிக்கப்பட்டாலும், பெரும்பாலான ஆண், பெண் மனங்கள் இந்த, 'காதல்' என்ற நிலையிலிருந்து மீள்வதில்லை. இந்த தவறு யார் மீது?
'காஞ்ச மாடு கம்பங் கொல்லையிலே மேஞ்சது மாதிரி' எனச் சொல்வதை - கேட்டிருக்கிறீர்களா? அதே நிலையில் தான் நம் சமுதாய அமைப்பு உள்ளது. ஆண்களைக் கண்டால், ஓடி ஒளியும் நிலை இப்போது நகரங்களில் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக நம் சமுதாயம் மாறி வருகிறது. காலப்போக்கில், இந்த சமுதாய மறுமலர்ச்சி, கலாசாரத்தையும் மாற்றும். அப்போது, நட்பை, - காதலென நினைக்கும் எண்ணங்கள் மறைந்து விடும்!
ஜா.ரகுமான்கான், கடலூர்: சிறிய பெட்டிக் கடை வைத்துள்ளேன். எந்த நேரமும் கடையைச் சுற்றி, என் நண்பர்கள் நின்று கொண்டு தொண தொணப்பதால், வியாபாரம் பாதிக்கிறது. இந்தத் தொல்லையிலிருந்து விடுபட என்ன செய்வது?
தொல்லை தரும் ஒவ்வொரு நண்பரையும் தனித்தனியே அழைத்து, நீங்கள் பணச் சிக்கலில் இருப்பதாகவும், அவர்கள் தகுதிக்கேற்ப கடனுதவி செய்யவும் என, கேளுங்கள். அடுத்தநாள் முதல் சுறுசுறுப்படையும் உங்கள் வியாபாரம்! அத்துடன், யார் உண்மையான நண்பன் என்பதையும் புரிந்து கொள்ள, உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிட்டும்!
பி.ஐஸ்வர்யா, கோவை: இது உங்கள் இடம் பகுதியில், பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி என, சிலரை குறிப்பிட்டுள்ளீர்கள். அப்படியானால் அவர்களுக்கு எப்படி பரிசுத் தொகை அனுப்புவீர்கள்?
படிப்போருக்கு மட்டும் தன் பெயர், ஊர் தெரிய வேண்டாம் என விரும்புகின்றனர் இப்படிப்பட்டவர்கள். நாமும், அவர்களுடைய உணர்வுகளை மதித்து, பெயர் மற்றும் ஊரை வெளியிடுவது இல்லை. அதே நேரத்தில், தம் கடிதத்தில், முழு முகவரி எழுதி இருப்பர். பரிசுப் பணம், 'டாண்' எனச் சென்று விடும்.
என்.வேணுகோபால், மானாமதுரை: என் பக்கத்து வீட்டு பெண்கள் அடிக்கடி என்னை கிண்டல் செய்து கொண்டே இருக்கின்றனர்.என்ன செய்யலாம்?
'பிரண்ட்ஷிப்' ஏற்படுத்திக் கொள்ள, பெண்கள் கையாளும்,'டிரிக்'குகளில் இதுவும் ஒன்று என்கிறார் அனுபவப்பட்ட உதவி ஆசிரியர் ஒருவர். எனவே, கிண்டலை, 'கிரீன் சிக்ன'லாகக் கொள்ளலாம்!
மு.டேவிட், நெய்வேலி: இரண்டாவது குழந்தை பெற்றவர்களுக்கு, அபராதம் போடும் சட்டம் இயற்றினால், நம் மக்கள் தொகை குறையுமா?
படித்தவர்கள், பணக்காரர்கள் அனேகர் அது ஆணோ, பெண்ணோ, ஒன்று இரண்டுடன் நிறுத்தி விடுகின்றனர். தினமும், இரண்டு வேளை கஞ்சிக்கே தத்தளிப்பவர்கள் தான், அதிகம் பெற்றுப் போடுகின்றனர். இவர்களிடம் என்ன அபராதத்தை வசூலித்து விட முடியும்? கைது செய்து சிறையில் அடைத்தால், 'வேளா வேளைக்கு மணி அடித்துச் சோறு போடுவார்களே...' என்று, மாமியார் வீட்டையும் நிரப்பி விடுவர்!
பெ.கண்ணன், சீப்பாலக்கோட்டை: அனுபவம் இல்லாமல் செய்யும் தொழில் எது?
அரசியல். இந்த தொழிலுக்குத் தான் அனுபவம் வேண்டாம். ஆனால், லாபம் உண்டு.

