
ராகவனின் பேராசிரியர், வகுப்பில் சொன்னார்... “கல்லூரிகளுக்கிடையேயான குறும்படப் போட்டி ஒன்று அறிவித்திருக்கின்றனர். நம் விஸ்காம் டிபார்ட்மென்ட் சார்பாக, யாராவது, இப்போட்டியில் கலந்து கொள்வதாக இருந்தால், எல்லா உதவியும் செய்து தருவதாக, நம் முதல்வர் கூறியுள்ளார். ஆர்வம் உள்ளவர்கள், இதில் கலந்துகிட்டீங்கன்னா, உங்க எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும்.”
“குறும்படம் எதைப்பற்றி இருக்கணும் சார்,” என, மாணவன், ஒருவன் கேட்டான்.
“அதை, உங்க கற்பனைக்கே விட்டுடுறேன். ஆனால், அந்தப்படம், இந்த சமுதாயத்தில், ஒரு தாக்கத்தை ஏற்படுத்துற மாதிரி இருந்தால், நன்றாக இருக்கும். அது மட்டுமல்ல, இந்த குறும்படம், 30 நிமிடத்திற்குள், அடங்கும்படி பார்த்துக்குங்க.”
விஸ்காம் இறுதியாண்டு படிக்கும் ராகவனுக்கு, குடிப்பழக்கத்தினால் ஏற்படும் சீரழிவுகளையும், அதனால், பாதிப்படைந்து வரும் குடும்பங்களைப் பற்றி, ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்பது, நீண்ட நாள் ஆசை. பேராசிரியரின் அறிவிப்பு, அவனுக்கு, ஒரு உத்வேகத்தை கொடுத்தது.
குடியினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி ராகவன், படம் எடுக்க, காரணம் இருக்கிறது. ஏன் என்றால், அவன் குடும்பமும் குடியினால், பாதிப்படைந்து கொண்டிருப்பது தான்.
நல்ல குடும்பத்தலைவராக இருந்த அவன் அப்பா, தீய சகவாசத்தால், கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாக, மதுவுக்கு அடிமையாகி விட்டார். அவர் சம்பாதிப்பது அத்தனையும் அதற்கே செலவிடுவதால், அவன் அம்மா தான், ஒரு ரெடிமேட் கார்மென்ட் கம்பெனியில் வேலை செய்து, குடும்பத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறாள். அவனுடைய சகோதரி திருமணமே, இப்போது இருக்கும் வீட்டை, அடமானம் வைத்து தான், நடத்தினர். இதனால், தினமும், அப்பாவிற்கும், அம்மாவிற்கும் இடையே சண்டை நடப்பது, அவனுக்கு கஷ்டமாக இருந்தது.
நண்பர்களுடன் சேர்ந்து, படத்தை எடுத்து, முதல்வரிடம் சேர்த்தாகி விட்டது. படம் எடுக்கும் போது இருந்த உற்சாகம், படத்தை முடித்து கொடுத்த பின், ராகவனுக்கு முற்றிலுமாக மறைந்து போய் விட்டது. 'ஏன் அதை தயாரித்தோம்...' என்று கூட, வருத்தப்பட்டான்.
ஆனால், அவன் எடுத்த அந்தப்படம் தான், சிறந்த படமாக தேர்வாகி இருந்தது. நண்பர்களின் உற்சாகத்துக்கு அளவே இல்லை.
“ராகவா... நீ, இந்தப் படத்தை எடுத்த விதத்திலிருந்தே, கண்டிப்பாக, இது சிறந்த படமாக தேர்வாகும் என்று, எங்களுக்கு தோன்றியது. இந்த விருதை வாங்குவதற்கு, முற்றிலும் நீ தகுதியானவன் தான்,” என்றான், நண்பன் ஒருவன்.
“இல்லடா. நான் விருது வாங்குவதற்காக, அந்தப்படத்தை தயாரிக்கல. என் ஆத்ம திருப்திக்காக தான் எடுத்தேன்,” என்று சொன்னான் ராகவன்.
ராகவன், தன் அம்மாவை, அவள் வேலை செய்யும் ரெடிமேட் கார்மென்ட் கம்பெனியில் கொண்டு போய் விடுவதற்காக போயிருந்தான். வீட்டில் வைத்து விட்டு போயிருந்த, அவன் மொபைல் போன் ஒலித்துக் கொண்டே இருந்தது.
ராகவனின் அப்பா தான், போனை எடுத்தார். “ராகவா... நான் தான் பிரின்சிபல் பேசறேன். உன்னால நம்ம காலேஜுக்கு எவ்ளோ பெருமை தெரியுமா... ஆமா, நீ தயாரிச்ச குறும்படத்துக்கு, கவர்னர் கையால வழங்கப் போற விருதை, வாங்கப் போறதில்லைன்னு சொல்லிட்டியாமே ஏன்?” போனை எடுத்தது, ராகவனின் அப்பா என்பது தெரியாமலேயே, அவர் பேசிக் கொண்டே போனார்.
ராகவனின் அப்பாவுக்கு, அவர் பேசியது கொஞ்சமும் புரியவில்லை. “சார்... நான் ராகவனின் அப்பா பேசுறேன். ராகவன் மொபைல் போனை, வீட்டில் வச்சுட்டு, வெளியே போயிருக்கிறான். ஆமாம், என்னவோ விருதுன்னு சொன்னீங்களே, அது என்னங்க சார்.”
“ஓ... நீங்க ராகவனின் அப்பாவா... ஆமாம், ராகவன் உங்களிடம் ஒன்றும் சொல்லலையா... நீங்க அவனைப் பெற்றதற்கு பெருமைப்படணும் சார். அவன் தயாரித்த குறும்படத்துக்கு, முதல் பரிசு கிடைச்சிருக்கு. கவர்னர் கையால விருது வழங்கப் போறோம். ஆனா, உங்க மகன் என்னடான்னா, 'எனக்கு அந்த விருது வேண்டாம்'ன்னு சொல்றான். நீங்க தான், அவனுக்கு புத்திமதி சொல்லி, விழாவுல கலந்துக்க சொல்லணும்,” என்று, சொல்லி, போனை துண்டித்தார் பிரின்சிபல்.
அவர் போனை கையில் வைத்துக் கொண்டிருக்கும் போதே, ராகவன் வீட்டிற்குள் நுழைந்தான்.
“ராகவா, உன்னோட கல்லூரி முதல்வர் பேசினாரு. நீ தயாரிச்ச, ஒரு குறும்படத்துக்கு, முதல் பரிசு கிடைச்சுருக்காம். ஆனா, நீ, அந்த விருதை வேண்டாம்ன்னு சொல்றியாமே... ஏன்? நீ, விழாவுல கலந்துகிட்டு, விருத வாங்க வைக்க வேண்டியது என் பொறுப்புன்னு, நான் அவருக்கு வாக்கு கொடுத்திருக்கேன்.”
“அந்த விருதை வாங்கிக்க, என் மனசு இடம் தரலைப்பா. அதனால் தான், நான் மறுத்திட்டேன்.”
“அப்படி மனசு நோகற மாதிரி என்ன தான், அந்த படத்துல காண்பிச்சிருக்கே?”
“அந்தப்படத்தை பார்த்தீங்கன்னா, நான் மறுத்தது சரி தான்னு, நீங்களே ஒத்துப்பீங்கப்பா.”
“சரி சரி... அந்தப்படத்தை போடு. நான் பார்த்து சொல்றேன்.”
“வேண்டாம்ப்பா, உங்க மனசு புண்படும்.”
“இதோ பார் ராகவா, நான் குடிகாரன் தான். ஆனா, பெத்த மகன் மேல், அக்கறை இல்லாதவன்னு மட்டும் நினைக்காதே. அப்பா சொல்றேன், அந்தப் படத்தை போடு. நான் பார்க்கணும்.”
அவன் அப்பா, இப்படி தெளிவாக பேசி, ரொம்ப நாளாயிற்று. அவர் வார்த்தையில் இருந்த கண்டிப்பை, அவனால், மீற முடியவில்லை.
சி.டி.,யை போட்டு, 'டிவி'யை ஆன் செய்தான் ராகவன்.
படம் ஆரம்பித்ததும், கேமரா, சாரை சாரையா ஒரே திசையை நோக்கி போய் கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தை காண்பித்தது. படத்தில், காட்டப்படும் கதாபாத்திரங்கள் பேசாமல், பின்னணி குரல் மூலமே விளக்கம் அளிக்கும் வகையில், ராகவன் படத்தை எடுத்திருந்தான். பின்னணிக் குரல் ஒலிக்க ஆரம்பித்தது.
'இதோ... ஒரே திசையை நோக்கி, இவர்கள் போய் கொண்டிருக்கின்றனரே... இவர்கள் எல்லாம் எங்கே போகின்றனர்... திருவிழாவுக்கா, எதாவது திருமண மண்டபத்துக்கா அல்லது திரையரங்குக்கா.... இல்லை இல்லை... இவர்கள் தன்னையும் அழித்து, தன் குடும்பங்களையும் சீரழிப்பதற்காகவே போய் கொண்டிருக்கின்றனர்...'
பின்னணிக் குரல், இப்படி ஒலிக்கும் போதே, கேமரா, அந்த மொத்த கூட்டமும், மதுக்கடை முன், நின்று கொண்டிருப்பதை காட்டியது.
மீண்டும் பின்னணி குரல் ஒலித்தது. 'இப்போது கூட்டத்தை உற்று நோக்குங்கள். இவர்களில், பள்ளிச் சீருடையில் இருக்கும் மாணவர்கள் கூட இருப்பதை பார்ப்பீர்கள். படிக்கும் போதே, இவர்களுக்கு குடிப்பழக்கம் எப்படி வந்தது...
'மதுக்கடைக்கு நடக்க சோம்பல் பட்டு, தினமும், தன் மகனிடம் பணம் கொடுத்து, மதுவை வாங்கி வர சொல்லியிருக்கிறார் ஒருவர். அப்படி அந்த மதுவில் என்ன தான், தன் தந்தை சுகம் காண்கிறார் என்று அறிய, ஒருநாள், அவன், அதில் கொஞ்சம் சுவைத்திருக்கிறான். இப்போது, தன் அப்பாவுக்கு வாங்கும் போது, தனக்கும் தனியே வாங்கிக் கொள்கிறான்...
'இதோ... இங்கு கையேந்தியபடி நின்று கொண்டிருக்கும் முதியவரை பாருங்கள். அது முதியவர் இல்லை. குடித்தே உடல் நலம் கெட்டு, முதியவரை போல் காட்சியளிக்கும் இளைஞர் தான் அவர். இங்கு, யார், இவருக்கு பிச்சை போடுவர் என்கிறீர்களா... அவர், காசு பணத்திற்கு கையேந்தவில்லை. இவரைப் பற்றி கொஞ்சம் பார்ப்போமே...' என்று, பின்னணிக் குரல் கூறிக் கொண்டிருக்கும் போது, கேமரா, அந்த இளைஞர், அங்கு வருவோரிடம், ஏதோ கெஞ்சி கேட்டுக் கொண்டிருந்ததை காண்பித்தது.
'இப்போது, உங்களை வேறொரு இடத்துக்கு அழைத்துப் போகிறோம்...' என்று, பின்னணி குரல் ஒலித்துக் கொண்டிருக்கும் போது, கேமரா, ஒரு அனாதை இல்லத்தையும், அங்கே இருந்த, இரண்டு குழந்தைகளையும் காண்பித்தது. பின்னணிக் குரல் தொடர்ந்து ஒலித்தது. 'இவர்களின் தாய், தந்தையார் விபத்தில் இறந்து விட்டனரா என்றால் இல்லை. இவர்கள், இங்கு வந்ததற்கு, மது தான் காரணம். இவர்களின் தந்தைக்கு குடிப்பழக்கம் உண்டு. கொஞ்சம் கொஞ்சமாக தன் மனைவிக்கும், அப்பழக்கத்தை ஏற்படுத்த, தினமும் இருவரும் குடிக்க ஆரம்பித்தனர். கூடவே, பக்கத்து வீட்டுக்காரனும், இவர்களுடன் சேர்ந்து கொண்டான். நாளடைவில், பக்கத்து வீட்டுக்காரனுக்கும், இவர் மனைவிக்கும் தகாத உறவு ஏற்பட, அதை, நேரில் கண்ட இவர்களின் தந்தை, தன் மனைவியையும், பக்கத்து வீட்டுக்காரனையும் கொலை செய்து விட்டு, தற்போது, சிறையில் இருக்கிறார். குழந்தைகள், இதோ, இங்கே, அனாதை ஆசிரமத்தில்...'
படத்தை கவனமாக பார்த்துக் கொண்டிருந்த, தன் அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தான் ராகவன். எந்த நேரத்திலும், அவர் கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டம் செய்வார் என, எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால், அவரோ, அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார். பாலியல் பலாத்காரம், தகாத உறவுகள், சாலை விபத்துகள் போன்றவைகள் பெரும்பாலும், மது மயக்கத்தில் தான் நிகழ்கின்றன. மதுவினால், விளைந்த சீர்கேடுகள், ஊடகங்களில் இடம் பெறுவது கொஞ்சம் தான். ஊடகங்களில், இடம் பெறாதவைகள் அன்றாடம் நிறைய நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
'மிருகங்களிடமிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுவது ஆறாவது அறிவு. மதுவினால் மதியிழந்து, மிருகங்களோடு மிருகமாக மாறிப்போன ஒருவரை நாம் பார்க்கலாம் வாருங்கள்...'என்று, பின்னணி குரல் ஒலித்த போது, கேமரா மீண்டும் மதுக்கடையை காண்பித்தது.
அந்த மதுக்கடையை ஒட்டி இருந்த சாக்கடை கால்வாயில், சேறும், சகதியும் நிரம்பி கண்ணங் கரேலென சாக்கடை தண்ணீர், விளிம்பு வரை ஓடிக் கொண்டிருந்தது. அந்த கால்வாயில், பன்றிகள், படுத்து, புரண்டு கொண்டிருந்தன. அளவுக்கு அதிகமாக குடித்து விட்ட, ஒரு குடிமகன், சாக்கடை ஓரம் விழுந்து கிடந்தார். அவனுடைய, ஒரு கை, சாக்கடை தண்ணீரை அளைந்து கொண்டிருந்தது. கன்னங்களில், அவர் எடுத்த வாந்தி வழிந்திருந்தது.
எங்கிருந்தோ வந்த நாய் ஒன்று, அந்த குடிமகனின் காலிலிருந்து, மோப்பம் பிடித்தபடியே அந்த குடிமகனின் முகத்தருகே வருவதைப் பார்த்த பன்றி, தன்னைத் தான் நாய் கடிக்க வருகிறது என்ற பயத்தில், எழுந்து ஒட ஆரம்பித்தது. அது ஓடும் போது, வாலை ஆட்டிக் கொண்டே சென்றதால், வாலில் இருந்த சாக்கடை கழிவுகள், அந்த குடிமகனின் உடை முழுவதும் தெரித்தன. அந்த நாய், ஒரு காலை தூக்கி, அந்த குடிமகன் மேல், சிறுநீர் கழித்து விட்டு ஓடி மறைந்தது.
இப்போது, பின்னணி குரல், மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தது... 'பார்த்தீர்களா... இந்த மனிதன் இருக்கும் கோலத்தை. அவருடைய உற்றார் உறவினர் இதைப் பார்க்க நேர்ந்தால், அவர்கள் மனம் என்ன பாடுபடும் என்பதை, இவர் அறிவாரா?
'மதுவினால் விளையும் கேடுகள் ஏராளம், நாங்கள் காண்பித்தது, ஒரு துளி தான்.
'இந்தப்படத்தை பார்த்து, ஒரு குடிமகன் திருந்தினால் கூட, நாங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்று விட்டதாக கொண்டாடுவோம்...' என்று, பின்னணி குரல் சொல்லி முடித்தவுடன், படம் முடிந்தது.
சிறிது நேரம் மவுனம் காத்த ராகவனின் தந்தை, “ராகவா, அந்த கடைசி காட்சியை, ரீவைண்ட் செய்,” என்றார்.
ராகவன் பயந்தது நடந்து விட்டது. தன் தந்தை, அந்த காட்சியை பார்த்து, பிரச்னை செய்யப் போகிறார் என்று எண்ணியவன், அதை தவிர்க்க நினைத்தான்.
“அந்தக் காட்சி, எனக்கு சரியாக தெரியவில்லை. தண்ணியடிச்சி, அடிச்சி கண்வேறு சரியாக தெரிய மாட்டேங்குது,” என்று கூறி, நாற்காலியை, 'டிவி'யை அருகில், போட்டுக் கொண்டார்.
தயங்கியவாறு ராகவன், அந்தக் காட்சியை, மீண்டும் ஓட விட்டான்.
“ராகவா, அந்த சாக்கடை ஓரம் விழுந்து கிடக்கிறது நான்... நான் தானே!” அவர் குரலில், பதற்றம் தெரிந்தது.
சமாளித்தான் ராகவன். “இல்லைப்பா அது வேற யாரோ!”
“இல்ல...நீ பொய் சொல்ற. அது நான் தான்,” என்றவர், தலையில் அடித்துக் கொண்டு, 'ஓ' வென்று, அழ ஆரம்பித்தார். “ராகவா... நாய் என்னை அசிங்கப்படுத்தி விட்டு போறதை கூட உணராம, குடிபோதையில் விழுந்து கிடந்திருக்கேனே... ஒரு தந்தையை, எந்தக் கோலத்தில், மகன் பார்க்க கூடாதோ, அந்த கோலத்தில் உன்னை பார்க்க வைத்து விட்ட பாவி நான். உன் நண்பர்கள், உன்னை எப்படியெல்லாம் கேவலமாக பேசியிருப்பர் என்று நினைக்கும் போது, என் நெஞ்சே வெடித்து விடும் போல் இருக்கிறது. நான் உயிரோட இருக்கிறதை விட, இறப்பதே மேல்,” என்று, அழுகையினிடையில், அரற்றினார்.
ராகவனின் கண்களிலும், கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. தன் தந்தையின் கரத்தை, ஆதரவுடன் பற்றிக் கொண்டான்.
“அப்பா... என்னை மன்னிச்சிடுங்கப்பா. முதலில், அது நீங்கதான்னு எனக்கு தெரியாதுப்பா. ஒருக்களிச்சுப் படுத்திருந்ததாலே, மூஞ்சியை கவனிக்க முடியலை. கூட வந்த நண்பர்கள், இந்த காட்சி தத்ரூபமாக இருக்கு, ஷூட் பண்ணுன்னு அவசரப்படுத்தினதால பண்ணிட்டேம்பா. அது நீங்க தான், என் அப்பான்னு, என் நண்பர்களுக்கு தெரியாது. அப்புறம் தான், ஆட்டோவிலே ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைச்சேன். அப்பா, உங்களை அந்தக் கோலத்தில் பார்த்தப்ப, நான் அடைஞ்ச வேதனை சொல்லிமாளாதுப்பா,” என்ற ராகவனின் குரல், தழுதழுத்தது.
“அந்த காட்சியை நீக்கிடலாம்ன்னு, நான் சொன்னேன்ப்பா. எங்க புரபசர் ஏத்துக்கலை. இப்போ சொல்லுங்கப்பா. இப்படி உங்களை காண்பிச்சதுக்கு, நான் விருது வாங்கணுமா. அதனால் தான், மறுத்துட்டேன்.”
ராகவனின் தந்தை, இப்போது,முன்பை விட தெளிவாக இருந்தார். “ராகவா, இந்த விருதை நீ கண்டிப்பா வாங்கித் தான் ஆகணும்.”
“என்னப்பா சொல்றீங்க?”
“ஆமாம்ப்பா... இந்த படத்தை பார்த்து, ஒரு குடிகாரன் திருந்தினால் கூட, எங்களுக்கு பெரிய வெற்றின்னு, உன் படத்தில் சொல்லியிருக்கல்ல. அப்படி திருந்தின, முதல் ஆள் நான்தாம்ப்பா. ஆமாம் ராகவா... உங்கம்மாகிட்டே எத்தனையோ முறை, இனிமே குடிக்க மாட்டேன்னு சத்தியம் செய்திருக்கேன். ஆனா, அத்தனை முறையும் மீறி இருக்கேன். உன் படம், என் கண்ணை திறந்திடுச்சி. இப்போ நான் சத்தியம் செய்யப் போறதில்லை. ஆனா, இனிமேல் நிச்சயம் குடிக்க மாட்டேன். என் மேல் நம்பிக்கையிருந்தா, நீ போய், அந்த விருதை வாங்கு.”
“நீங்க இனிமே குடிக்க மாட்டீங்கன்ற நம்பிக்கை எனக்கு வந்திருச்சுப்பா. அந்த விருதை வாங்குவதற்கு முன், அதை விட பெரிய விருத நீங்க எனக்கு கொடுத்திட்டீங்கப்பா. ஆமாம்பா... இனிமே குடிக்க மாட்டேன்னு எப்ப சொன்னீங்களோ, அப்பவே என் பழைய அப்பா கிடைச்சிட்டார். அந்த பாசம், அக்கறை உள்ள பழைய அப்பா கிடைச்சது, என் படத்துக்கு கிடைத்த விருதை விட, பெரிய விருதா நினைக்கிறேன்ப்பா,”என்றவனை கட்டியணைத்து உச்சி முகர்ந்தார், அவன் தந்தை.
ரா.சந்திரன்
கல்வித் தகுதி: பி.காம்., தமிழ்நாடு மின்வாரியத்தில், மதிப்பீட்டு அலுவலராக பணிபுரிந்து, ஓய்வு பெற்றுள்ளார். 'வேரில்லா மரங்கள்' என்ற, இவர் எழுதிய முதல் சிறுகதை, பல ஆண்டுகளுக்கு முன், வாரமலர் இதழில் வெளியானது. இதுவே, இவரது, எழுத்துப் பணிக்கு படிக்கல்லாக அமைந்தது என்று குறிப்பிடுகிறார். இவர் எழுதிய பல சிறுகதைகள், பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன.
மொபைல் எண் : 94456 62462.

