
உலக நாடுகளில் மக்களிடம் இன்னும் எந்த அளவில், நேர்மை இருக்கிறது என, சோதித்து பார்க்க விரும்பியது, 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' ஆங்கில மாத இதழ்!
இதற்காக, உலகின், பல நாடுகளையும் தேர்வு செய்தது. ஒரு மணிபர்சில், கொஞ்சம் பணம் (இது நாட்டுக்கு நாடு, மாறுபட்டது!) பர்சின் சொந்தக்காரரின் முகவரி, தொலைபேசி எண், அவரின் குடும்ப போட்டோ, மளிகைக் கடையில் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியல், சில செய்தித் தாள்களின், 'கட்டிங்'குகளை வைத்து, இதை, ஜன சந்தடி மிக்க தெருக்கள், வங்கிகள், பார்க்குகள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில், நைசாக நழுவ விட்டு, மறைந்து நின்று கவனிப்பர்...
நம் இந்தியச் சகோதரர்கள் ஏழைகள் தான்... ஊழல் நிறைந்த அதிகாரிகளாலும், அரசியல்வாதிகளாலும் நாம் ஆளப்பட்டாலும், தனிப்பட்ட முறையில், இந்தியர்களிடம் உள்ள நேர்மை இன்னும் செத்து விடவில்லை; அவர்களிடம் நாணயம் இன்றும், இன்னமும் இருக்கிறது என்பது, இந்த ஆய்வில் தெளிவாகி உள்ளது.
திருவனந்தபுரத்தில், நடத்தப்பட்ட ஆய்வில், 10க்கு, 8 பேர் பர்சை, திரும்பக் கொண்டு வந்து கொடுத்துள்ளனர்.
உலகம் முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சிறிய நகரங்களிலேயே அதிக நாணயம் உள்ளதும் தெரிய வந்துள்ளது. மேற்கு நாடுகளாகட்டும், கிழக்கு நாடுகளாகட்டும் பெரிய நகரங்களை விட, சிறிய நகரங்களில் தான் நாணயத் தன்மை அதிகமுள்ளது.
திருவனந்தபுரத்தை அடுத்து, ஜப்பானில் உள்ள கமகுரா என்ற நகரத்தில், நேர்மை அதிகம் உள்ளதாம்... 10க்கு, 7 பர்ஸ், திரும்பக் கிடைத்துள்ளது.
சட்ட திட்டங்கள் கடுமையாக உள்ள, கட்டுப்பாடான, ஜனநாயக நாடான சிங்கப்பூரில், 10 பேரில், ஒருவர் மட்டுமே சபலத்திற்கு உட்பட்டு இருக்கிறார். ஒன்பது பர்சுகள் திரும்ப வந்து விட்டதாம்.
ஆசிய நாடுகளில், பாரம்பரியத்தின் கோட்பாடுகள் இன்னும் மதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒரே ஒரு நாட்டைத் தவிர! அது, பல்வேறு இன மக்கள் வாழும், ஹாங்காங். இங்கு, நேர்மை - நாணயத்திற்கு இடமில்லாமல் போய் விட்டது. 10க்கு, மூன்று பர்சுகள் மட்டுமே திரும்ப வந்துள்ளது.
பர்சை திரும்பக் கொண்டு வந்து கொடுத்த நேர்மையாளர்களுக்கு, அந்த பர்சையே அன்பளிப்பாக அளித்தபோது, ஒரே ஒரு அமெரிக்கர் மட்டும் மறுத்திருக்கிறார். ஐரோப்பிய நாடுகளில், 25 சதவீதத்தினர் மறுத்துள்ளனர்.
ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நேர்மையாளர்கள், நேர்மையை விலை பேசுவதை, விரும்புவதில்லை என்பதை, ஆய்வு கண்டறிந்துள்ளது.
நேர்மையாளர்களுக்கு அதே பர்சை அன்பளிப்பாகக் கொடுத்த போது, 72 சதவீதத்தினர், 'அன்பளிப்பு வேண்டாம். நன்றி...' எனக் கூறியுள்ளனர். தென்கொரியாவின் தலைநகர் சியோலை சேர்ந்த மாணவன் ஒருவன், 'என் கடமையைத் தான் செய்தேன்; அதற்கு அன்பளிப்பு எதற்கு?' எனக் கூறி, ஆசிய மக்களின், 'சென்டிமென்டு'களை எதிரொலித்து உள்ளான்.
வயது, பால், சமூக அந்தஸ்து, இவற்றுக்கும், குணத்துக்கும் சம்பந்தமே இல்லை என்பதும் தெளிவாகியுள்ளது.
நன்கு உடுத்திய, நாகரிகப் பெண்மணி ஒருவர், மும்பையில், பர்சை நைசாக லவட்டிச் செல்ல, திருவனந்தபுரத்தை சேர்ந்த மூட்டை துாக்கும் தொழிலாளியான கிருஷ்ணன் குட்டி, பர்சை உரியவரிடம் சேர்க்குமுன், தவியாய், தவித்துப் போய் விட்டாராம்.
- இன்னும், நேர்மையானவர்கள் நடமாடிக் கொண்டிருக்கின்றனர் என்பதை நினைத்தால், சந்தோஷமாகத் தான் இருக்கிறது.
ஆணாதிக்கத்துக்கு எதிராக, இங்கே பெண்களின் குரல், கோஷ்டிகானமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும், இந்தியாவில், பெண் கொடுமைக்கு எதிராக போராடி, அவர்களை அடிமைத்தளையிலிருந்து விடுபடச் செய்ய களமிறங்கியவர்கள் ஆண்களே.
பெண்ணீயம் பற்றிய நூல் ஒன்றில்...
இந்தியா, ஆங்கிலேயே அரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலக்கட்டத்தில், அரசு அலுவல்கள் காரணமாக ஆங்கிலேயர்கள் பலர், இந்தியாவிற்கு வந்தனர். இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்ட பெண் சிசுக் கொலை, உடன்கட்டை ஏறுதல், கைம்மை வாழ்வு போன்ற பழக்க வழக்கங்கள், அவர்களுக்கு பேரதிர்ச்சியை அளித்தன.
படித்து பட்டம் பெற, மேலை நாடுகளுக்கு சென்ற இந்திய இளைஞர்களுக்கு, அங்குள்ள பெண்களின் நிலை வியப்பை அளித்தது. அந்நாட்டுப் பெண்களின் வாழ்க்கைத் தரத்தோடு இந்தியப் பெண்களின் நிலையை ஒப்பிட்டுப் பார்த்தனர். ஆங்கிலக் கல்வி, சமத்துவம், மனிதநேயம், சுதந்திரம், ஆராய்ச்சி அறிவு இவற்றை, அந்த ஆண்களுக்கு கற்பித்தது.
மேலை நாடுகளில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, பெண்களே உணர்ந்து, அவற்றை நீக்கப் போராடினர்; ஆனால், இந்தியாவில் பெண்களின் முன்னேற்றத்திற்கு ஆண்களே முன்னின்று முயற்சி எடுத்தனர்; பெண்களோ, கல்வியின்றி அறியாமையில் மூழ்கியிருந்தனர்.
ஆங்கிலக் கல்வி பெற்ற ஆண்கள், தங்கள் குடும்பப் பெண்களை, பள்ளிகளுக்குக் கல்வி பயில அனுப்பினர். இளம் வயதில், திருமணம் செய்து கொடுக்காது, சிறிது காலம் தாழ்த்தி மணம் செய்து கொடுத்தனர்; ஆயினும், பெண்களின் முன்னேற்றம் பற்றிய மேலை நாட்டுக் கருத்துகளை, இந்த ஆண்கள், முழுவதும் ஆதரிக்கவில்லை.
இந்தியக் கலாசாரத்தை உயர்வாகக் கருதி, பெண்களின் கற்பு நெறி, தாய்மை போன்ற மதிப்புகளை, போற்றி காக்கவே முற்பட்டனர்.
மேல்நாட்டினராலும், கிறிஸ்துவ மதத்தின ராலும் ஆரம்பிக்கப்பட்ட கல்விக் கூடங்கள், மேல்நாட்டுக் கலாசாரத்தை பரப்பி, இந்தியர்களை, தங்கள் மதத்திற்கு இழுக்க முயன்றபோது, இவர்கள், இந்து மத மறுமலர்ச்சிக்காக, பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், தியாசபிகல் நிறுவனம், ராமகிருஷ்ண மடம் போன்ற அமைப்புகளை உருவாக்கினர்.
- என்கிறது இந்நூல்.

