sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பசுமை நிறைந்த நினைவுகளே... (14)

/

பசுமை நிறைந்த நினைவுகளே... (14)

பசுமை நிறைந்த நினைவுகளே... (14)

பசுமை நிறைந்த நினைவுகளே... (14)


PUBLISHED ON : டிச 08, 2013

Google News

PUBLISHED ON : டிச 08, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வழக்கமாக, பா.கே.ப., பகுதியில், குற்றால டூர் பற்றி, அந்துமணி எதுவும் எழுத மாட்டார். ஆனால், 94-ம் வருடம் மட்டும், டூரில், தன்னை மகிழ்ச்சிக்கும், நெகிழ்ச்சிக்கும் உள்ளாக்கிய மூன்று பேர்களைப்பற்றி, குறிப்பிட்டு இருந்தார்.

முதலாமவர் வாசகர் காஞ்சி லட்சுமணகுப்தா. அளவு கடந்த அவரது பாசத்தை பற்றி எழுதியிருந்தார். இரண்டாவதாக, ஒருவர் அல்ல... ஒரு குழுவினர் என்றே சொல்லலாம்.

வழக்கமாக, மதுரையில் இருந்து குற்றாலம் போகும் வழியில், ராஜபாளையத்தில், ஒரு சின்ன, 'பிரேக்' விடுவது வழக்கம். அதற்காக, ஒரு இடம் தேடியபோது, நன்கொடை வாங்காமல், அந்த பகுதி ஏழை,எளிய மாணவியர் படிப்பதற்காகவே செயல்பட்டு வரும், மஞ்சம்மாள் பெண்கள் பாலிடெக்னிக் நிர்வாகத்தினர், 'எங்கள் கல்வி வளாகத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்...' என்றனர்.

'சரி' என்றோம். அங்கே போய், ஐந்து நிமிடம் உட்காரப் போகிறோம். ஒரு காபியோ, டீயோ சாப்பிட்டுவிட்டு பயணத்தை தொடரப் போகிறோம் என்று நினைத்து, மஞ்சம்மாள் கல்வி வளாகத்தினுள் நுழைந்த போது, ஆச்சர்யம் காத்திருந்தது.

அங்கு படிக்கும் மொத்த மாணவியரும், வரிசையாக நின்றிருந்தனர். அதில், சிலரது கையில், 'அந்துமணி வருக...வருக!' என்ற பதாகையுடன், வெள்ளிப்பேழையில், சந்தனம், குங்குமம் கொடுத்து வரவேற்று, ஓரு அறையில் உட்கார வைத்தனர். அந்த அறையில் இருந்த கரும்பலகையில், வாரமலர் இதழில் வரக்கூடிய அந்துமணியின் படம், அழகாக வண்ண சாக்பீசால் வரையப்பட்டு, 'வருக வருக' என்று, எழுதப்பட்டிருந்தது. படத்தை இவ்வளவு தத்ரூபமாக வரைந்தது யார் என்றதும், அனுராதா என்ற மாணவி, 'நான் தான்' என்று முன்வந்தார். அவருக்கு உடனடி பரிசு கொடுக்கப்பட்ட போது, 'பரிசு வேண்டாம். நிஜ அந்துமணியோடு, ஒரு படம் எடுக்க வேண்டும். எனக்கு அது போதும்...' என்றார்.

அப்போது, வாசகர்களுடன் வந்திருந்ததால், தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அவரால் முடியவில்லை என்று, அடுத்த வாரம், அனுராதாவின் படத்தை வெளியிட்டு, பா.கே.ப.,வில் தன் விளக்கத்தை எழுதியிருந்ததுடன், தன் எழுத்தை மதித்து, நட்சத்திர அந்தஸ்துடன் வரவேற்ற, அந்த மாணவியரின் அன்பு மறக்க முடியாதது என்றும், குறிப்பிட்டு இருந்தார்.

அதே போல, குற்றாலத்தில் மாலை நேரத்தில், சில நிகழ்ச்சிகளை நடத்துவது உண்டு.

ஏற்கனவே பிரபலமாக இருப்பவர்களை மேடையேற்றி, மேலும், பிரபலமாக்குவதற்கு பதிலாக, மேடையே கிடைக்காமல் இருக்கும் கலைஞர்களை மேடையேற்றி, அவர்களுக்கு பேரும், புகழும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதை, அந்துமணி எப்போதும் விரும்புவார்.

குற்றாலம், பராசக்தி கல்லுாரி மாணவியான சித்ரா, சிறந்த நாட்டியக் கலைஞர். இவரது நடனத்திற்கு, வாய்ப்பு கொடுக்கப்பட்டதும், அவர், 'என் முதல் பாடலே, அந்துமணியை வரவேற்று பாடுவது தான்...' என்று சொல்லி, 'தலைவா தவப்புதல்வா' என்ற பாடலுக்கு அற்புதமாக நடனமாடினார். ஒரு மாலையை கையில் வைத்துக் கொண்டு ஆடியவர், பாட்டின் முடிவில், அதை அந்துமணியின் கழுத்தில் போடப் போகிறார் என்று, வாசகர்கள் ஒருவித ஆர்வத்துடன் காத்திருக்க, அவரோ பேனரில் இருந்த அந்துமணியின் படத்திற்கு மாலையை போட்டு, 'எனக்கும் அந்துமணி யார் எனத் தெரியாது...' என்றார்.

அவரையும், அவரது நடனத்தையும் பாராட்டி, தன் பா.கே.ப.,வில் எழுதிய பிறகு, அந்த மாணவி, உள்ளூரில் மட்டுமின்றி, வெளியூர், வெளிநாடுகளில் எல்லாம் நடனத்தில் கலக்கினார். 'என் வாழ்க்கையில், மறக்க முடியாத மேடை, குற்றால டூரில் கிடைத்த மேடை. அதே போல, என் நடனத்தை முதன் முதலாக பாராட்டி எழுதி, படத்தையும் வெளியிட்ட அந்துமணி தான் நான் மறக்க முடியாத, மறக்க கூடாத மனிதர்...' என்று பல மேடைகளில் குறிப்பிட்டார்.

இந்த காலகட்டத்தில், குற்றால சீசன் டூர் ரொம்பவும் பிரபலமாகிவிடவே, 'வாசகர்களை, எங்களது விடுதிகளில் தங்குவதற்கு அழைத்து வாருங்கள்...' என்று, குற்றாலத்தில் தங்கும் விடுதி கட்டியுள்ள பலரும் விரும்பி அழைத்தனர். அவர்களில், தென்காசி ஆனந்த கிளாசிக் அதிபர் விவேகானந்தனும் ஒருவர்.

'வெளிநாடுகள் பலவற்றுக்கு போய் பார்த்து வந்து என் ஓட்டலை வடிவமைத்து கட்டியிருக்கிறேன். 'நீங்களும் உங்கள் வாசகர்களும் வந்து ஒரு முறை தங்கினீர்கள் என்றால், எனக்கு பெருமையாக இருக்கும்...' என்று எழுதியிருந்தார். அதன்படி அந்த ஓட்டலில் வாசகர்கள் தங்குவதற்கு முன், அந்துமணி தங்கிப்பார்த்த போது, அவருக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவம் ஏற்பட்டது. அது, என்ன அனுபவம் என்று, அடுத்த வாரம் சொல்கிறேன்.

குற்றாலமும்,சிற்றருவியும்...

குற்றால அருவிகளில் குளிக்க ஆசையிருந்தாலும், பலரும் பார்க்க, பொதுவான இடத்தில் குளிக்க, பலருக்கு சங்கோஜமாக இருக்கும். இவர்களுக்காக உண்டானதுதான் சிற்றருவி.

மெயினருவிக்கு போகும் பாதையை தாண்டி, ஐந்தருவி ரோட்டில் செல்லும் போது, ஒரு சின்ன மலைமேடு வரும். அந்த மலைமேட்டில் மூச்சு வாங்கிக்கொண்டு படிகள் வழியாக ஏறிச் சென்றதும் வருவதுதான் சிற்றருவி. இந்த சிற்றருவி பாதையை தாண்டித்தான் செண்பகா அருவி, தேனருவி, செண்பக தேவி அம்மன் கோவில் போன்ற இடங்களுக்கு செல்ல முடியும்.

குற்றாலத்தில் எந்த அருவிகளிலும் குளிப்பதற்கு கட்டணம் கிடையாது. முற்றிலும் இலவசம்தான். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும், எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்கியிருந்து குளிக்கலாம்; யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.

இதில், சிற்றருவியில் மட்டும் விதிவிலக்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு நபருக்கு, முன்பு பத்து பைசா வசூலித்துக்கொண்டு இருந்தனர் இப்போது இரண்டு ரூபாய் வாங்குகின்றனர்.

இந்த சிற்றருவியில் என்ன விசேஷம் என்றால், மெயினருவி தண்ணீர்தான் சிறு கிளையாக பிரிந்து, இங்கு வந்து, இரு பிரிவாக விழுகிறது.விழும் இடத்தை சுற்றி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என, தனி தனியாக பாத்ரூம் போல சுவர் கட்டி வைத்துள்ளனர். நான்கு பக்கமும் சுவர் சூழ்ந்து இருக்க, தலைக்கு மேல் மிக அருகில் இருந்து, கிராமத்து மோட்டார் பம்ப் செட்டில் இருந்து விழுவது போல தண்ணீர் கொட்டும்.

இங்கு விளக்கு வெளிச்சம் கிடையாது என்பதால், மாலை 6:00 மணிக்கு மேல் குளிக்க அனுமதிப்பது கிடையாது. குளித்து விட்டு படியில் இறங்கிவரும் போது, உப்பு, மிளகாய்தூள் கலந்து போட்ட அரைநெல்லியும், கீற்று மாங்காயும் வாங்கி சாப்பிட்டபடி வரலாம்.

-- அருவி கொட்டும்.

-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us