
டீ வாங்க வெளியே வந்த போது, ஆபீஸ் கேட் ஓரமாக நின்று, வெற்றிலை, புகையிலை குதப்பலைத் துப்பிக் கொண்டிருந்த குப்பண்ணா கண்ணில் பட்டார்.
ரொம்ப, 'ரிலாக்ஸ்டு' மூடில் இருந்தவரை அழைத்து, அமர வைத்தேன். அவரிடம் சந்தேகம் கேட்டு ரொம்ப நாளாகி விட்டதே என்று, 'செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்று வள்ளுவர் சொன்னாரே... என்ன அர்த்தத்தில்?' என்று கேட்டேன்...
'எண்ணிக் கொள்...' என்று, ஆரம்பித்து விட் டார், குப்பண்ணா:
* ஐம்பொறிகளில் காதைத் தவிர, மற்ற நான்கும், அதனதன் வேலைகளை அதிகமாக செய்வதால், சோர்வடைந்து விடுகின்றன. காதுக்கு மட்டும், அந்த சோர்வே கிடையாது.
* ஒன்பது வகை பக்திகளில், முதலில் நிற்பது சிரவணம். இறைவன் புகழை, செவியால் பருகுவதே பக்தியின் முதல் நிலை.
* செவியால் அழகு பெறும் சில விலங்குகள் முயல், கங்காரு; 'நெடுஞ்செவிக் குறுமுயல்' என்று, பெரும்பாணாற்றுப் படையில் வருகிறது.
* காது ஓங்கார வடிவமுள்ளது என்றும், அதன் நிறத்தைக் கொண்டு, பிற்காலத்தில் குழந்தையின் நிறத்தை உறுதி செய்யலாம் என்றும், என் பாட்டி சொல்லி இருக்கிறாள்.
* 'காதளவோடிய கண்கள்' என்று, பெண்களின் கண் அழகை, காதோடு சம்பந்தப்படுத்தி பாடு கிறான் கவிஞன்.
* வேதத்திற்கு, 'சுருதி' என்று, பெயர். பரம்பரையாகக் காதால் கேட்கப்பட்டு வந்ததால், இப்பெயர் ஏற்பட்டது.
* காதுகளில் அணிந்த குண்டலங்களை தானமாக வழங்கிய புகழ், கர்ணனுக்கே உரியது. கர்ணத்தால் புகழ் பெற்றதால் தான், அவனுக்கு கர்ணன் என்று பெயர் வந்ததோ, என்னவோ!
* காதில்லாப் பை, காதறுந்த ஊசி, காதில்லா ஜாடி, செவிவழிச் செய்தி, கர்ண பரம்பரைக் கதை - இந்த சொல் வழக்கு எல்லாம், காதின் பெருமையை உரைப்பதாகும்.
* 'தோடுடைய செவியன்...' - இப்பாட்டு, செவிக்குப் பெருமை தரும் திருஞான சம்பந்தரின் முதல் பாட்டு. 'காதைகள் சொரிவன செவி நுகர் கனிகள்...' என்கிறார் கம்பர்.
* 'செவியிற் சுவை யுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்' என்று, கடிந்துரைக்கிறார் திருவள்ளுவர்.
* நீலக் குதம்பை, தாளுருவி, வடுகவானி, திருக்களாவம், குழை முதலியன பழங்காலக் காதணிகள். 'காதிலே அணி பூணுதல் கண்ணுக்கு ஒளி நல்கும்...' - இது, தற்கால உடல் ஆராய்ச்சியாளர்கள் கருத்து!
— என்று தன், 'விரிவுரை'யை குப்பண்ணா முடிக்கவும், நான் பெஞ்சில் இருந்து குதித்து, டீ வாங்க, குறுக்குப் பாதையில், வேகமாக ஓடினேன்.
******************
டெலிபோன் ஆன்சரிங் மிஷினில், 'தினம் ஒரு தகவல்' - முகமறியா வாசகி ஒருவர், ஒரு புதிர் போட்டிருந்தார்.
இதோ, அது:
அந்த ஊரிலேயே பிரபலமான ஒரு சோம்பேறியின் வீடு, தீப்பற்றிக் கொண்டது. அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள், 'ஆ... ஊ...' என்று, அலறியபடி வீட்டினுள்ளே ஓடுவதும், அங்கிருப்பனவற்றை எல்லாம் முடிந்தவரை வெளியே இழுத்து வந்து போடுவதுமாக இருந்தனர்.
எந்தச் செயல்பாடும் இல்லாமல், அவர்கள் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சோம்பேறி, திடீரென என்னவோ நினைத்துக் கொண்டவன் போல, வீட்டுக்குள் ஓடினான்.
சென்ற வேகத்தில் திரும்பினான்... அவன் எதை எடுத்து வந்திருப்பான் என, நினைக்கிறீர்கள்?
- இப்படி கேட்டு, தொலைபேசி இணைப்பை துண்டித்து இருந்தார்.
அடுத்த நாள் விடை கூறி இருந்தார்.
நான் நினைத்த பொருளே அது! எதை எடுத்து வந்திருப்பான் என, நான் கணித்தது போலவே, நீங்களும் கணித்தீர்களா என சரி பார்க்க, பக்கத்தை தலை கீழாக திருப்பி பாருங்களேன்!
வெள்ளாட்டை ஆங்கிலத்தில் எப்படி சொல்வோம்... இரண்டாம் கிளாஸ் குழந்தை கூட, 'கோட்' என்று சொல்லும். செம்மறி ஆட்டை ஆங்கிலத்தில், 'ஷீப்' என்று சொல்வோம்.
ஆனால், நம் ஜனங்கள் குறிப்பாக, தென்னாற்காடுகாரர்கள் ஆட்டை ஆங்கிலத்தில் எப்படி நினைத்து வைத்துள்ளனர் என்பதைக் கூற, இந்த பீஸை எழுதுகிறேன்...
இங்கே இடைச் செருகல் ஒன்று. தென்னாற்காடு ஆசாமிகள் வேர்க்கடலையை, மல்லாட்டை என்று அழைப்பர். முதன் முறையாக இச்சொல்லை கேட்ட போது, அரண்டு விட்டேன். விவரம் தெரிந்தவர்களிடம் கேட்ட போது, மணிலா கொட்டையை தான், இப்படிக் கூறுகின்றனர் என்பது புரிந்தது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநர் மணிலாவில் இருந்து, அந்த குறிப்பிட்ட ரக வேர்க்கடலை வந்ததால் இப்பெயர்.
இதைப் போல, மரவள்ளிக் கிழங்கை கப்பா என்பர் மலையாளிகள். இதுவும், காரணப் பெயர். சேர நாடு, ஏதோ ஒரு மகாராஜாவின் ஆட்சியில் இருந்த போது, உணவு தானிய பஞ்சம் ஏற்பட்டதாம். அப்போது, மரவள்ளிக் கிழங்கை, ஏதோ ஒரு கிழக்கு ஆசிய நாட்டில் இருந்து, கப்பல் மூலம் இறக்குமதி செய்தாராம் அரசர்.
கப்பலில் வந்த கிழங்கு என்பதால், மரவள்ளிக் கிழங்கு, கப்பா ஆயிற்று.
கம்மிங் பேக் டு த பாயின்ட். புதுச்சேரிக்கு அருகே உள்ள ஆரோவில் கிராமத்தைப் பற்றி டாக்குமென்ட்ரி படம் எடுக்க, புதுச்சேரி வந்திருக்கிறார் வெள்ளைக்காரர் ஒருவர். அங்கே ஒரு மெட்டடார் வேனை வாடகைக்கு அமர்த்தி டிரைவரிடம், 'விலை மதிப்புமிக்க படப்பிடிப்பு கேமராக்கள் உள்ளன. அவற்றை பிடித்துக் கொள்ள உதவியாளர் யாரும் இல்லை. எனவே, அலுங்காமல், குலுங்காமல் சடன் பிரேக் போடாமல் வண்டியை செலுத்த வேண்டும்...' என்று, ஆங்கிலத்தில் கூறியுள்ளார்.
பலமாக தலையாட்டி, 'எஸ் சார்... எஸ் சார்...' என்று கூறி, வண்டியை சீரான வேகத்திலே செலுத்தி இருக்கிறார் டிரைவர்.
வண்டி, 20 கி.மீ., சென்று இருக்கும்... சடன் பிரேக் போட்டார் டிரைவர். அதிர்ச்சி அடைந்த வெள்ளைக்காரர், 'வாட் ஹேப்பண்ட்... வாட் ஹேப்பண்ட்...' என, பதறி இருக்கிறார்.
அதிர்ந்து போன குரலில் நம் டிரைவர், 'மட்டன் ஜம்பிங் சார்... மட்டன் ஜம்பிங் சார்...' எனக் கூவவும், வெளியே எட்டிப் பார்த்திருக்கிறார் வெள்ளைக்காரர்.
அங்கே எது துள்ளி குதித்து ஓடியிருக்கும் என, நீங்கள் அனுமானித்து விட்டீர்கள் தானே!
இந்த ஜோக்கை நண்பர் ஒருவர் சொல்ல, அடக்க முடியாமல் சிரித்து விட்டேன்.
ஆட்டுக்கு ஆங்கிலம், 'மட்டன்' என, தென்னாற்காடுக்காரர் நினைத்ததால், நடந்த விபரீதம் இது. ஆட்டைக் கொன்ற பிறகு தான், அதற்கு அந்த பெயர் என்பது தெரிந்திருக்கவில்லை.
விடை; சென்ற வேகத்தில் அவன் திரும்பி வந்த போது, அவன் கையில், பாயும், தலையணையும் இருந்தது!

