PUBLISHED ON : ஏப் 13, 2014

பட்ட மேற்படிப்பு படிக்கும் காலத்தில் இருந்தே, அந்துமணி வாசகி அவர்; 15 நாட்களுக்கு ஒரு கடிதம் எழுதுவார். கடிதத்தில், நூறு வரி இருந்தது என்றால், அதில், 90 வரி, பெண்கள் முன்னேற்றத்தைப் பற்றி இருக்கும்! பட்ட மேற்படிப்பை முடித்த அவர், ஆசிரியப் பயிற்சியில் சேர்ந்தார். பின்னர், மத்திய அரசின், 'சமூக நல வாரியத்தில்' வேலை கிடைத்து, பணியாற்றுகிறார். போலீஸ் துறையின் உதவியுடன் நடக்கும், 'குடும்ப ஆலோசனை மையம்' இது. இந்த மையத்தில், ஆலோசகர் (கவுன்செல்லர்) பணி வாசகியினுடையது.
இங்கு —
* கணவரால் கைவிடப்பட்ட, விவாகரத்தான பெண்கள்.
* கணவரை இழந்த, நிராதரவான பெண்கள்.
* வீட்டில், கணவன், மாமியார் மற்றும் கணவனின் குடும்பத்தாரால், கொடுமைக்கு உள்ளாகும் பெண்கள்.
* கற்பழிப்பு மற்றும் கட்டாயத்தினால் விபச்சாரத்திற்கு உள்ளான பெண்கள்.
* தனிமையை விரும்பும் பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்களின் பிரச்னைகள்.
— இதற்கெல்லாம் தீர்வு பெற ஏற்படுத்தப்பட்ட அமைப்பு தான், குடும்ப ஆலோசனை மையங்கள்!
இன்னும் பல சேவைகளை, இது போன்ற சங்கங்கள் செய்து வருகின்றன.
இந்த மையங்களில் பணியாற்றும் ஆலோசகர்களுக்கு, பயிற்சி முகாம் ஒன்று, சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொள்ள வந்த வாசகியைச் சந்தித்து பேசும், சந்தர்ப்பம் அமைந்தது.
சிறிய உருவம்; தலை நிறைய மூளை... மையத்திற்கு வரும் பிரச்னைகள் குறித்து விவாதித்தார். பிரச்னைகள் சிலவற்றுக்கு தான் வழங்கிய ஆலோசனைகள் சரியானது தானா என, என்னிடம் கேட்டுத் தெளிவு பெற்றார்.
அவர் கூறிய பிரச்னைகளில் ஒன்று...
முப்பது வயதாகியும் திருமணமாகாத பெண் ஒருவர்; திருமணமாகவில்லையே தவிர, அங்கே, இங்கே, 'தொடர்பு'கள் உண்டு. இப்படியான, 'தொடர்பு'கள் இருப்பது தெரிந்தும், அந்தப் பெண்ணை மணம் செய்து கொள்ள முன் வந்தார் ஒரு ஆட்டோ ஓட்டுனர்; திருமணமும் நடந்தது. இரண்டு, மூன்று மாத மண வாழ்விற்குப் பின், கணவனின் மனம் மாற ஆரம்பித்தது; குணம் தெரியத் தொடங்கியது.
குடித்து விட்டு வந்து, சிகரட்டால் மனைவியைக் சுட ஆரம்பித்தான். பொறுத்துப் பார்த்தாள், கெஞ்சிப் பார்த்தாள். பின்னர் பொங்கி எழுந்தாள்... 'ஐயா, இனி உன்னுடன் வாழ முடியாது...' எனக் கூறி, தாய் வீடு சென்றாள். விவாகரத்து பெற்றுத் தர குடும்ப ஆலோசனை மையத்தை அணுகினாள்.
குடும்பங்களின் சண்டை - சச்சரவுகளைத் தீர்த்து, இணைத்து வைப்பது தானே குடும்ப நல மையங்களின் முக்கிய கடமை! அப்பெண்ணை பொறுமை காக்கச் செய்துள்ளார் வாசகி. அவளின் கணவனை மையத்திற்கு அழைத்துப் பேசி, இனி, இது போல் நடவாது என்பதற்கு கணவனிடமிருந்து உறுதி வாங்கி, சேர்ந்து வாழ இருவருக்கும் ஆலோசனை வழங்கி உள்ளார். அடுத்த வாரத்திலேயே மீண்டும் பிரச்னை, 'இவனுடன் வாழவே மாட்டேன், விவாகரத்து வாங்கிக் கொடுங்கள்...' என, அப்பெண் வந்து கதற, கணவன் தலைமறைவானான்.
உயர் போலீஸ் அதிகாரிகளின் உதவியுடனும், ஆலோசனையுடனும் விவாகரத்திற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து, இரண்டு மாதங்களுக்குப் பின், அப்பெண்ணைத் தேடி, ஆள் அனுப்பியுள்ளனர். அப்பெண்ணின் தாயார், 'அவ புருஷன் ஓடிப் போனதுல இருந்து, பைத்தியம் பிடிச்சது போல ஆயிட்டா... 'என் ராஜா எங்கே போயிட்டே...' என்று ஒரேயடியாகப் புலம்பினாள். அவர்கள், குடும்பம் நடத்திய குடிசைக்கு தினமும் சென்று, மார்பில் அடித்து, கணவனை நினைத்து அழுவாள். அவளுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று, மந்திரிக்க நாகூர் கூட்டிச் சென்றோம்... இந்தத் தகவலை அறிந்த அவள் புருஷனும் நாகூர் வந்து விட்டான். பின்னர் எங்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இருவரும் எங்கோ மறைந்து விட்டனர். எம்பொண்ணை கண்டுபிடிச்சுக் குடுங்க...' எனக் கூறி இருக்கிறார்.
இந்தக் கேசை கூறி முடித்த வாசகி, கூறினார்: எங்க மையத்தின் நோக்கம், குடும்பச் சிக்கல்களைத் தீர்த்து வைப்பது தான். அதன்படி பார்க்கும் போது, இந்தக் கேஸ் சுமூகமாக முடிந்ததில் மகிழ்ச்சி. ஆனாலும், அக்கணவனின் கொடுமைகள் தொடரத்தான் போகின்றன; இப்பெண்ணும் அவஸ்தை படத்தான் போகிறாள். இருந்தாலும், இப்பெண்கள், கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும், கணவனைத் தேடிப் போகக் காரணம் உண்டு...
அது - ஊர் வாய்!
நாளை, ஊரார் இவர்களை, 'வாழா வெட்டி' என்று சொல்வராம்! ஊர் ஏதும் பேசவில்லை எனில், இவர்கள் விவாகரத்திற்கும், மறுமணத்திற்கும் ரெடி!
உன்னுடைய சமாசாரங்கள் உன்னுடையவை; ஊரைப் பற்றிக் கவலைப்படாதே. நாக்கைப் புரட்டி புரட்டிப் பேசும் ஊர், உன் சுக, துக்கங்களில் பங்கெடுக்க உடன் வராது என்பதை, இவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதில், உறுதி கொண்டுள்ளேன்... என்றவர், 'என்ன... ரொம்ப பிளேடு போட்டு விட்டேனோ?' என்றார்.
இந்தச் சின்ன உருவத்தின் மூளை இவ்வளவு தெளிவு பெற்றதா... இவ்வளவு சிந்திக்கத் தெரிந்ததா என்ற மலைப்பில் இருந்து விடுபட்டு, லேசாகச் சிரித்து, 'இல்லை... இல்லை...' என்றேன்.
கடைசியாக இன்னும் ஒரு விஷயம், என்று தொடர்ந்தார்...
திருமணமான ஆண்களில் பலருக்கு, தம் மனைவியை விட, நண்பர்கள் இன்னும் நெருக்கமாக, உயர்வாகத் தெரிகின்றனர். 'என் நண்பனுக்காக உயிரையும் கொடுப்பேன்...' என, மார் தட்டுகின்றனர்; அவ்வாறே நடக்கவும் செய்கின்றனர். அதே போல, தம் உடன் பிறந்தோரிடம், பாசமும் - நேசமும் கொள்கின்றனர். ஆனால், மனைவி என்று வரும் போது, அவளுக்காக, உயிரைக் கொடுப்பேன் என்றோ, எவரெஸ்டில் ஏறுவேன் என்றோ, தீ மிதிப்பேன் என்றோ, சொல்லக் கூட வேண்டாம். அவளை ஒரு மனுஷியாகக் கூட மதிக்கத் தெரியாமல், இந்த ஆண்கள் நடந்து கொள்வது ஏன் எனக் கேட்டார்.
'அவகாசம் கொடுங்க; ஆராயக் காலம் தேவை. அப்புறம் பதில் சொல்கிறேன்...' எனக் கூறி, இப்போது ஆராய்ச்சியில் இறங்கி உள்ளேன்.
வாசகி கூறுவது போல நடந்து கொள்ளும் திருமணமான வாசகர்கள், என் ஆராய்ச்சிக்கு உதவலாம்!
