தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மே 11, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 11, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆபீஸ் வேலையாக கோட்டயத்திற்கு அனுப்பி விட்டார் பொ.ஆ., குண்டு குண்டாக, சேப்பு சேப்பு கலரில், அரை வேக்காட்டு அரிசியை சாப்பிட்டு, 'எப்போடா சென்னை போவோம்...' என, ஆவலாய் இங்கே வந்ததும், லென்ஸ் மாமா என்னை காய ஆரம்பித்து விட்டார். அவரை, என்னோடு கோட்டயம் அனுப்பி வைக்காத கோபம்!

ஒரு வழியாக சமாதானமாகி, சகஜமாகப் பேச ஆரம்பித்த உடன், கடந்த இரண்டு நாட்களில், தான் படித்த ஒரு புத்தகம் பற்றி, என்னிடம் விவாதிக்க வேண்டுமென்றார்.

'சரி... சாயங்காலம் உங்க வீட்ல பேசலாம்...' என்றேன்.

'வேண்டாம்... மாமி இஸ் பிரசன்ட்... பீச் போயிடலாம்...' என்றார்.

இந்த பதிலைக் கேட்டதுமே, அவர் படித்த புத்தகமும், சொல்லப் போகும் விஷயமும், 'வில்லங்க'மானது என்பது புரிந்து, 'அவாய்ட்' செய்யப் பார்த்தேன். ம்... ஹும்... முடியவில்லை. மாலை, 7:00 மணிக்கு வந்து, கையை பிடித்து இழுக்காத குறையாக அழைத்துச் சென்று விட்டார்.

மாமா படித்த புத்தகத்தின் பெயர்: 'தி ரிசர்ச் கைடு டு பாடிலி புளுயிட்ஸ்' - உடலில் உள்ள நீர் மற்றும் காற்று பற்றியது.

இப்புத்தகத்தை எழுதியவர் பால் ஸ்பின்ராட் என்பவராம்; இவர், நூற்றுக்கணக்கானவர்ளிடம், 'சர்வே' செய்து, இப்புத்தகத்தை எழுதினாராம்.

இப்புத்தகத்தில் இருந்து, மாமா சுவாரசியமாக கூற வந்தது, வயிற்றில் இருந்து காற்று பிரிவதை பற்றி...

'மாமா... இந்த, 'சப்ஜெக்ட்' எல்லாம் எனக்கு எதற்கு? வேண்டாமே, விட்டுடுங்க...' என்றேன்; விடவில்லை. இதற்கு மேல் உங்களுக்கும் படிக்க விருப்பமில்லை என்றால் விட்டு விடுங்கள். மாமாவிடம் சிக்கி நான் அவஸ்தைப்பட்டதைப் போன்று, இனி நான் எழுதப் போவதைப் படித்து முகத்தை சுளிக்கவோ, என்னைத் திட்டவோ, நாலு சாத்து சாத்தவோ, அவஸ்தைப்படவோ வேண்டாம்.

என்ன, இவ்வளவு சொன்ன பிறகும் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்... அவஸ்தைப்பட ஆசை தான், போலிருக்கிறது.

புத்தகத்தில் படித்ததை, மாமா கூறியபடி, அப்படியே தருகிறேன்.

புத்தகத்தை எழுதிய மனுஷன், திருமணமாகாதவர்களிடம், 'உங்களுடன் பழகுபவர்கள் முன்னிலையில், (அவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும்) எவ்வளவு நாள் பழக்கத்திற்கு பின், சங்கோஜம் இல்லாமல், தைரியமாக வயிற்றில் இருந்து காற்றைப் பிரிப்பீர்கள்...' என்றும், திருமணமானவர்களிடம், 'உங்கள் ஜோடி மட்டும் உடன் இருக்கிறார்; வேறு யாரும் இல்லை எனும் பட்சத்தில், கவலை இல்லாமல் வயிற்றில் இருந்து வாயுவைப் பிரிப்பீர்களா?' என்றும் கேட்டு இருக்கிறார்.

மனிதருக்கு கிடைத்த பதிலை கேளுங்களேன்...

ஆணுக்கும், பெண்ணுக்கும் சராசரியாக, 92.77 நாட்கள் தேவைப்பட்டு இருக்கிறது. இதில், தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கும் போது, 62.98 நாட்களில் ஆணுக்கும், 149.82 நாட்களில், பெண்ணுக்கும் துணிச்சல் வந்துள்ளது.

இவர்களில், 11 சதவீதம் பேர், 'வாழ்நாளில் மற்றவர் முன்னிலையில் இப்படிப்பட்ட செயலில் ஈடுபடவே மாட்டேன்...' என்று, கூறி இருக்கின்றனர். 6 சதவீதம் பேர், 'உறவின் ஆழத்தைப் பொறுத்தது...' என்று, பதில் கூறியுள்ளனர்.

திருமணமானவர்களில், 12 சதவீதம் பேர், தன் மனைவி முன்னிலையில், தமாசுக்காக இச்செயலைச் செய்வதுண்டு எனக் கூறியுள்ளனர்.

இப்புத்தகத்தின் எழுத்தாளர் இன்னும் ஒரு படி மேலே போய், 'அந்த வாயுவிற்கு தீ வைத்து பார்த்ததுண்டா? உண்டு என்றால், அந்த தீ சுவாலை என்ன வண்ணத்தில் இருந்தது?' என்றும் கேட்டு இருக்கிறார். இதற்கு பதிலளித்தவர்கள்... என, மாமா கூறும் போதே, இரண்டு காதையும் சுண்டு விரல்களால் அடைத்துக் கொண்டு, பீச் மணலில் இருந்து எழுந்து, ஓட்டம் பிடித்தேன்.

— வெளிநாட்டுக்காரர்களுக்கு எந்த எந்த, 'சப்ஜெக்டு'களில் தான் ஆராய்ச்சி செய்வது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது.

ஆண் - பெண் இருவரிடையே, தங்களைப் பற்றிய எண்ணம் யாருக்கு அதிகம்? இதோ, 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' சொல்கிறது:

(உ.ஆ., படித்து சொன்னது...)

உடல் சிறிது பாதிக்கப்பட்டாலும் அதை பெரிதுபடுத்துவதிலும், ஆர்ப்பாட்டம் செய்வதிலும் ஆண்களை மிஞ்சுபவர் பெண்கள். இது உண்மையா?

உண்மை... 'என் கணவருக்கு ஜலதோஷம் பிடிக்கும் போது, அவரை பார்க்க வேண்டுமே...' என்று, அங்கலாய்க்கும் பெண்களை, ஆண்கள் மிஞ்ச முடியாது.

பெண்களை விட ஆண்களுக்குத்தான் எப்போதும் தங்களைப் பற்றிய எண்ணம்...

தவறு. பெண்களுக்கு தங்களைப் பற்றிய பிரச்னைகளே பெரிதாகத் தெரியும்; வெளி விஷயங்களில் அவர்களுக்கு அதிகம் அக்கறை கிடையாது.

பெண்களைப் பற்றி ஆண்கள் பேசுவதை விட, ஆண்களைப் பற்றி பெண்கள் தான் அதிகம் பேசி விவாதிப்பர்.

உண்மை; பல்கலைக் கழக ஆராய்ச்சிகள் மூலம், தங்கள் நேரத்தில் பெருமளவு ஆண்களை பற்றிய விவாதத்தில் பெண்கள் ஈடுபடுகின்றனர் என, தெரிய வந்துள்ளது. ஆண்களைப் பற்றிய விஷயங்கள் மற்றும் மற்ற பெண்களின் வம்புப் பேச்சுக்களைத் தவிர, வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவதில்லை. ஆண்கள் பெரும்பாலும் பிசினஸ், பணம், மற்ற ஆண்கள், கடைசியில் தான் பெண்களைப் பற்றி பேசுகின்றனர்.

பெண்களை விட ஆண்கள் நேர்மையானவர்கள்; உண்மையா?

தத்துவ ஆராய்ச்சியின்படி, விஷயங்களை மறைத்துப் பேசுவதில், ஆண்களை விட பெண்கள் தேர்ந்தவர்கள்; ஆனால், பச்சையாக, அப்பட்டமான பொய்களைச் சொல்லும் சாமர்த்தியத்தில், ஆண்களே வல்லவர்.

ஆண்களை விட நேரத்தைக் கழிக்க சிரமப்படுவர் பெண்கள். அலுப்பு சீக்கிரமே தோன்றி விடும்; இது சரியா?

ஆண்களுக்குத் தான் வெகு எளிதில் போரடிக்கத் தொடங்கும்; தொடர்ந்து ஒரு வேலை செய்தால், அசதி அதிகம் ஏற்படும். ஒரே வேலையை, அலுக்காமல் பெண்கள் தொடர்ந்து செய்ய முடிவதன் காரணம், பகற்கனவு காண்பதும், வாய்ப் பேச்சும் தான்!

ஆண்களை விட அதிகம் மகிழும் சுபாவமும், தன்னம்பிக்கையும் பெண்களுக்கு உண்டு.

தவறு. மனத்தளர்ச்சியோ, மனச்சோர்வோ, எதுவானாலும் பெண்களுக்கு சீக்கிரமே ஏற்படும். வாழ்க்கையின் மேடு, பள்ளங்களைத் தாங்கும் சக்தி குறைவு.

மனைவியை, கணவன் புரிந்து கொள்வதை விட, கணவனை, மனைவி நன்கு புரிந்து கொள்வாள். இது சரியா?

தவறு; சில தத்துவ நிபுணர்கள் ஒரு ஆராய்ச்சி நடத்தினர். திருமணமான பல ஜோடிகளை அழைத்தனர். முதலில், கணவன்மார்களைத் தனியே கூப்பிட்டு, அவரவர் மனைவியைப் பற்றிய அபிப்ராயங்களைச் சொல்லச் செய்தனர். முடிவில் தெரிந்தது... கணவனே, தன் மனைவியை நன்கு புரிந்து கொண்டிருக்கிறான் என்று! எந்தெந்த நேரத்தில் எப்படி எப்படி மனம் மாறுவாள் என்பதை, கணவனால் நன்கு யூகிக்க முடிகிறது என்பதை கண்டறிந்தனர்.

துன்பங்களும், இடையூறுகளும் வரும்போது, பெண்கள் அதிகம் மனம் உடைந்து போவர். இது சரியா?

தவறு; சிறு தொல்லைகள் வரும் போது கலங்கினாலும், பெரிய இடையூறுகள் நெருங்கும் போது, சராசரி ஆண்களை விட பெண்களே உறுதியுடன் இருப்பர். இது, மனோத்தத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த உண்மை.

ஆபத்து வரும் சமயத்தில், பெண்களை காட்டிலும் ஆண்கள் உஷாரானவர்கள்; இது சரியா?

சரி; ஆபத்து எதிர்நோக்கி வருவதை குறிப்பால் உணர்ந்து கொள்வதிலும், அதற்காக தன்னைத் தயார்படுத்திக் கொள்வதிலும், பெண்களை மிஞ்சியவர்கள் ஆண்கள். இது, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த உண்மை.

பேச்சுத் திறனில் பெண்களே வல்லவர்கள்; உண்மையா?

பால பருவம் தாண்டியதுமே, ஆண்களின் பேசும் சக்தியை விட, அதிக சக்தியைப் பெற்று, விரைவில் சுலபமாகவும், வேகமாகவும் நீண்ட நேரமும் பேசும் தனித் தன்மையை பெண்கள் பெற்று விடுகின்றனர். ஆனாலும், மற்றவர்கள் பேசுவதை கிரகிக்கும் தன்மை, ஆண்களைவிட பெண்களுக்குச் சற்று குறைவு தான்.

— உண்மை தானா பெண்களே?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us