தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜூன் 01, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 01, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மரிஜா ஜிம்பட்ஸ் என்பவர், 68 வயதான அமெரிக்க பெண்மணி; கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், தொல்லியல் துறை பேராசிரியர். இதுவரை, 20 புத்தகங்களும், 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளும் எழுதியுள்ளார். தொல்லியல் துறையின், ஐந்து அகழ்வாராய்ச்சிகளுக்கு தலைமை தாங்கி உள்ளார். இந்த அம்மணிக்கு, 20க்கும் மேற்பட்ட மொழிகளில் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரியும்.

இவர் சமீபத்தில் எழுதி, 'ஹர்பர் அண்ரோ' என்ற அமெரிக்க புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள, 'தி லேங்குவேஜ் ஆப் தி காடசஸ்!' என்ற புத்தகத்தை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. (வழக்கம் போல படிப்பதற்கு உதவியவர், ஒரு உதவி ஆசிரியர்.) இந்தப் புத்தகத்தின் தலைப்பை, 'அம்மன்கள் உரைத்தது' எனக் கொள்ளலாம்!

இப்புத்தகத்தில், ஐரோப்பிய நாட்டுப் பெண்கள் எப்போது, எப்படி ஆண்களுக்கு அடிமைப்பட்டு போனார்கள் என்பதை, எடுத்துக் கூறி உள்ளார். கி.மு., 7000ம் ஆண்டு முதல், 3500ம் ஆண்டு வரை ஐரோப்பியர், பெண் கடவுளரை தெய்வமாக வழிபட்டதாகவும், பெண்களே குல, - குடும்பத் தலைவியராக, தலைமைப் பூசாரிகளாக இருந்ததாகவும், பல ஆண்களை மணக்கும் உரிமை பெற்று இருந்ததாகவும் தன் ஆராய்ச்சி மூலம், கண்டுபிடித்ததாக எழுதியுள்ளார். ஆண்களை வேலையாட்களாக, வேட்டைக்காரர்களாக, கட்டடத் தொழிலாளிகளாகவும் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் பெண்கள்.

கி.மு., 4000 முதல், 3500ம் ஆண்டுகளில், ஐரோப்பாவில் இந்தக் கலாசாரம், ரஷ்யர்களின் படை எடுப்பால், அழிந்தது. பெண்களை அடிமைப்படுத்தி, மனைவி, - மகள் என்று, தம் கட்டுப்பாட்டுக்குள் பெண்களைக் கொண்டு வந்தனர் ஆண்கள் என்றும் எழுதியுள்ளார்.

இவரது ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள், அமெரிக்காவில் உள்ள பெண் விடுதலை விரும்பிகளுக்கு, தெம்பளித்து உள்ளது.

எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்த பெண்களை, இன்று அடிமைகளாக்கி, சித்ரவதை செய்கிறது இந்த உலகம்!

அம்மணியரே... 'இந்தா சம உரிமை...' என, எந்த ஆணும் உரிமைகளை எடுத்துக் கொடுத்து விடப் போவதில்லை. இனி, நீங்களே உங்க உரிமையை எடுத்துக் கொள்ள வேண்டியது தான்!

சொந்தமாக, 'கிணிங்... கிணிங்' இரட்டைச் சக்கர வண்டி வாங்கியதிலிருந்து, பஸ்சில் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டது. உள்ளூர் சவாரிக்கு, 'கிணிங்... கிணிங்' தான்; வெளியூர்களுக்கு இரவல் கார்... பஸ்சில் செல்லும் ஆசை, இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்டது. இரண்டு ஸ்டாப்பிங் தூரம், பஸ்சில் செல்ல தீர்மானித்தேன். பஸ்சில் ஏறி அமர்ந்ததுமே, சுவாரசியம் ஆரம்பித்து விட்டது.

'பயணச் சீட்டை கேட்டு வாங்குங்கள்...'

'சற்று முன் செல்லுங்கள் ஐயா...'

'சகோதரி... இருக்கை காலியாக இருக்கிறதே... சென்று அமரக் கூடாதா?' என்று, சுத்த தமிழில் பேசிக் கொண்டிருந்தார் கண்டக்டர்.

அருகில் நின்றிருந்த கல்லூரி மாணவர்கள், 'சுத்த மறை கழண்ட கேஸ் போலிருக்கிறதே...' என்று, கமென்ட் அடித்தனர். அவர்களுக்கு அருகில் நின்ற நடுத்தர வயதுக்காரர், 'இந்தக் கால பசங்களுக்கு, தமிழ்னாலே இளப்பம்தான். தஸ்சு, புஸ்சுன்னு மூக்கால இங்கிலீசு பேசுறவங்களுக்கு, கை கட்டி சேவகம் பண்ணுவாங்க...' என்று, கோபத்துடன் சத்தமாக சொன்னார்.

கல்லூரி மாணவர்கள் சும்மா விடுவரா... நேரடி தாக்குதலை ஆரம்பித்தனர். 'சார்... எந்த மொழியை எடுத்துக்கிட்டாலுமே, பேச்சு நடையும், எழுத்து நடையும் மாறுபடும். பேச்சு நடை சற்று கொச்சையாத்தான் இருக்கும். அதை விட்டுட்டு, எழுத்து நடை போன்றே இலக்கண சுத்தமாப் பேசினால், கிண்டலாகத்தான் இருக்கும்...' என்றனர். இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு, இருதரப்பு சொல்வதிலுமே நியாயம் இருப்பது புரிந்தது. பஸ்சை விட்டு இறங்கினேன்.

சென்ற வேலை முடிந்ததும், அலுவலகத்துக்கு பஸ்சிலேயே திரும்பி வரும் போதும், சுவாரசியம்தான்... பிரபல நடிகர் ஒருவரைப் போன்று ஸ்டைல் செய்து, ஆங்கிலத்திலேயே பேசி அசத்தினார் கண்டக்டர். ஒரு அம்மணி டிக்கெட் வாங்க மறந்து விட்டார் போலும். அருகில் சென்று, 'பேசன்ஜர் பேசன்ஜர்... வொய் நாட் பாட் டிக்கெட்?' என்றார். அருகில் இருந்தவர்கள், 'கொல்' லென்று, சிரித்தனர். அவர் பேசியது தப்பு ஆங்கிலம் என்பதை, விசாரித்து தெரிந்து கொண்டேன். ஆங்கிலம் பேசுவதில் எனக்கு தோஸ்த் ஒருவரும், சென்னையில் இருப்பதை அறிந்த போது, மகிழ்ச்சியாக இருந்தது.

நீங்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள, கீழ்க்கண்ட கேள்விகளுக்கு உண்மையான பதில் அளியுங்கள்:

1. உங்களது குடிப்பழக்கத்தால், உங்களது குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியிழந்து விட்டதா?

2. குடிப்பதால், உங்கள் பணி நேரம் குறைந்து விட்டதா?

3.உங்களது குடிப்பழக்கம், உங்கள் பெயர், புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதா?

4.குடிப் பழக்கத்தால், பணக் கஷ்டம் ஏற்பட்டுள்ளனவா?

5.மோசமான சுற்றுச் சூழலில், உங்களைவிட தகுதி குறைந்த நபர்களோடு சேர்ந்து குடிக்குமளவிற்கு மாறி விட்டீர்களா?

6.நீங்கள் குடிப்பதால், குடும்ப நலனை கவனிக்க, பராமரிக்க முடியவில்லையா?

7.கவலைகள், பிரச்னைகளிலிருந்து தப்பிப்பதற்காக குடிக்கிறீர்களா?

8.தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குடிக்க வேண்டும் என்ற தூண்டுதல் ஏற்படுகிறதா?

9.குடிப்பழக்கம் காரணமாக, தூங்குவதில் சிரமம் உள்ளதா?

10. குடிப்பழக்கத்தால் உங்கள் திறமைகளும், லட்சியங்களும், ஆர்வங்களும் குறைந்து வருகிறதா?

இந்த, 10 கேள்விகளில், ஒரேயொரு கேள்விக்கு மட்டும், 'ஆம்' என்று, நீங்கள் பதிலளித்தால், நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கலாம் அல்லது மிக விரைவில் அடிமையாகி விடுவீர்கள். இரண்டு கேள்விக்கு, 'ஆம்' என்ற பதிலளித்தால், நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமை.

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு, 'ஆம்' என்று பதிலளித்தால், எவ்வித சந்தேகமும் இன்றி, நிச்சயமாக நீங்கள் குடிப்பழக்க அடிமை தான்.

இந்த, 10 கேள்விகளில் எந்தக் கேள்வியும் உங்களுக்குப் பொருந்தவில்லை எனில், நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையில்லை; ஆனால், அடிமையாகி விடாமல், உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள்.

புத்தகம் ஒன்றில் படித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us