PUBLISHED ON : ஜூன் 15, 2014

ஜோதிடம் என்ற பெயரில், ஏமாற்றுவோரை என்றாவது ஒரு பிடி பிடித்து, உலுக்க வேண்டும் என்பது, என் நீண்ட நாள் ஆசை. அதற்கான வாய்ப்பு, சமீபத்தில் கிட்டியது. இம்மாதத்தின் முதல் வாரத்தில், லென்ஸ் மாமாவும், நானும் சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் ரோடில் உள்ள நண்பர் ஒருவரின் அலுவலகத்துக்கு சென்றோம்.
டிரைவர் சீட்டிலிருந்து மாமா இறங்கும் போது, ஒரு ரூபாய் நாணயம் அளவில் குங்குமப் பொட்டு வைத்து, ஒல்லியான, நல்ல நிறமுடைய, குட்டையான ஒரு இளைஞன், கையில் தடித்த பையுடன், தயங்கி தயங்கி, மாமாவை நெருங்கினான். ஏதோ முகவரி கேட்கத்தான் அணுகுகிறான் என்று, நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, மாமாவிடம், இந்தியில் பேச ஆரம்பித்தான். மாமாவுக்கு இந்தி தெரியும் என்ற போதிலும், தெரியாதது போல, முகத்தை வைத்து, விளையாட ஆரம்பித்தார்.
தொடர்ந்து, 'நோ இந்தி, நை இந்தி...' என, அவர் கூறியதும், ஆங்கிலத்துக்கு தாவினான் அந்தப் புதியவன். மாமாவை விட்டுவிட்டு, என்னிடம் ஆங்கிலத்தில், 'ஒன் பியூட்டிபுள் கேர்ள் அப்ஸ்டேர்ஸ் ஆபீஸ்; ஆல்வேஸ் திங்கிங் அபவுட் யூ...' என்றான். நாங்கள் செல்லவிருந்த நண்பரின் அலுவலகம், மாடியில் தான் இருந்தது.
உடனே, இவன் ஜோசியக்காரன் தான் என்பதை, புரிந்து கொண்டேன். மாமாவிடம் விட வேண்டிய ஸ்டேட்மென்ட்டை, என்னிடம் கூறுகிறானே என நினைத்து, பின், இவனிடம் நிஜமாகவே விளையாடிப் பார்த்து விடுவது என, முடிவு செய்தேன்.
ஜோசியக்காரன் மீது கடும் கோபம் கொண்டார் மாமா. கோபத்துடன் கிண்டலாக, 'ஆமா, இந்த மூஞ்சிக்குத் தான், பொண்ணு காத்துகிட்டு இருக்காளாக்கும். ஜோசியம் சொல்ல வந்துட்டான்; எனக்குன்னு சொன்னாக் கூடத் தேவலை...' என்று, முணுமுணுத்தபடியே, மாடி ஏற ஆரம்பித்தார்.
நான் ஜோசியக்காரனை கூட்டிக் கொண்டு மாடி ஏறும் முன், அந்த ஆபீசில் இருந்த நண்பரிடமும், அலுவலக ஊழியர்களிடமும் விவரத்தை, மாமா கூறியிருப்பார் போலும்... நானும், ஜோசியக்காரனும் உள்ளே நுழையும் போது, நண்பரும், அவரது அலுவலக ஊழியர்களும், பெண்கள் உட்பட வெளியே வந்து, ஜோசியக்காரனையும், என்னையும் வரவேற்றனர்.
அங்கிருந்த திருமணமான பெண் ஊழியர் ஒருவர், ஜோசியரிடம், 'எனக்கு எப்போங்க கல்யாணம் ஆகும்?' என்று, சிரிப்பை அடக்கியபடியே கேட்டார். இந்த கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல், கையமர்த்தினான் ஜோசியன். பிறகு என்னிடம், 'இவ்வளவு பேர் மத்தியில் ஜோசியம் சொல்ல முடியாது; தனி அறைக்கு வந்தால் தான், ஜோசியம் சொல்ல முடியும்...' என்று, கூறினான்.
இதைக் கேட்டதும், மாமாவுக்கும், என் நண்பருக்கும் கொஞ்சம் பயம் ஏற்பட்டு விட்டது போலும்... தனி அறையில் இருக்கும்போது, மந்திரப் பொடி எதையும் ஊதி, மணிக்கு ஏதும் கேடு விளைவித்து விடுவானோ என்று, எண்ணி விட்டனர். இதற்காக, நானும், ஜோசியனும் சென்று அமர்ந்த தனி அறையின் ஜன்னலை கொஞ்சம் திறந்து வைத்து, நோட்டம் விட்டபடியே இருந்தார் மாமா. இவர் நோட்டம் விட்டது ஜோசியனுக்கு தெரியாது. காரணம், ஜோசியனுக்கு பின்புறம் இருந்தது ஜன்னல்.
முதல் டூப் அஸ்திரத்தை தூக்கிப் போட்டான் ஜோசியன்...
'உன் நண்பர் இங்கு நடப்பதை ரகசியமாக கண்காணிக்கிறார் என்பது, எனக்கு தெரியும். அது உண்மை தானே?' என்றான். நான் பதில் கூறாமல் சமாளித்தேன். காரணம், மாமா விடும் சிகரட் புகை, ஜன்னல் வழியே உள்ளே வந்து கொண்டிருந்தது. அதை அடையாளம் வைத்து, ஜோசியன், 'ரீல்' சுற்ற ஆரம்பித்து விட்டான் என்பதை, புரிந்து கொண்டேன்.
அடுத்து, என் கையில் ஒரு பேப்பரை கொடுத்து, அதில் எனக்கு பிடித்த, பூ, பழம், எண் ஆகியவற்றை எழுதச் சொன்னான். அவற்றை நான் எழுதும்போதே, ஜோசியனும் ஒரு தாளில் ஏதோ எழுதினான். நான் எழுதி முடித்ததும், 'உனக்கு பிடித்தமான எண்: 9, பழம்: மாம்பழம், பூ: ரோஜா. இதைத் தானே பேப்பரில் எழுதியுள்ளாய். இதோ பார்... நீ நினைத்ததை, நானும் எழுதியிருக்கிறேன்...' என, தான் எழுதிய காகிதத்தை என்னிடம் காட்டினான். மிகச் சரியாகவே இருந்தது. 'பேஸ் ரீடிங்கில்...' இதுவும் ஒரு அம்சம்; எனவே, ஆச்சரியப்பட்டுப் போகவில்லை நான்.
'பார்த்தாயா... உன் மனதில் உள்ளதை, அப்படியே புட்டு புட்டு வைத்து விட்டேன்...' என்று கூறினான். நான், பதில் கூறவில்லை. இவனை மடக்க ஒரே வழி தான் உள்ளது என நினைத்து, 'எனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா, இல்லையா என்பதை கூறு...' என்று, ஒரு போடு போட்டேன்.
இந்த கேள்விக்கான பதிலைத் தவிர, என்னென்னவோ அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தான். அவனது, 10 நிமிட உளறலை கேட்ட பின், மீண்டும் பழைய கேள்வியையே திரும்ப கேட்டேன். தன் ஆள்காட்டி விரலையும், நடு விரலையும், புருவத்துக்கு அருகே வைத்து, ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போல் நடித்தான். பின், 'இவ்வருடம் ஜனவரி மாதத்தில், உனக்கு திருமணம் நடந்திருக்க வேண்டும்...' என்று, ஒரு போடு போட்டானே பார்க்க வேண்டும்.
'கெட் அவுட்!' என, நான் அலறிய அலறலில், அந்த அலுவலகமே அதிர்ந்தது. எதுவுமே நடக்காதது போல, சாவகாசமாக வெளியேறினான் ஜோசியன்.
இது போன்ற ஆசாமிகள், வாலிபர்களிடம், 'உன்னை நினைத்து ஒரு பெண், ஏங்குகிறாள், வாடுகிறாள், உருகுகிறாள்...' என்பது போன்ற பாணங்களை எடுத்து விட்டு, 100 முதல், 200 ரூபாய் வரை, கறந்து விடுவதாக, பின் தெரிந்து கொண்டேன். ஜோசிய மோகம் பிடித்து அலையும் ஆசாமிகளும், அம்மணிகளும், பகுத்தறிந்து நடந்து கொள்வது நல்லது!
