தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜூன் 22, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 22, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்ற எண்ணம் எனக்கு உண்டு. ஆனால், அவர்களுக்கும் தமாஷ், கிண்டல் உணர்வுகள் உண்டு; அதற்கு, 'செட்டு' சேர வேண்டும் என்பதை புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் அண்மையில் கிடைத்தது.

கடந்த மாதம், ஒரு நாள், மதிய நேரத்தில் லென்ஸ் மாமாவும், நானும் மாமாவின் காரில் சென்னை செயின்ட் மேரீஸ் ரோடில் சென்று கொண்டு இருந்தோம். ரோடில் கவனத்தை செலுத்தி, சீரான வேகத்தில் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தேன். ஏதோ சீரியஸ் சப்ஜெக்ட் பற்றி பேசிக் கொண்டிருந்தார் மாமா.

திடீரென பேச்சின் வேகம் குறைந்தது. தன், 'ரேபான்' குளிர் கண்ணாடியை துடைத்து, மாமா அணிந்து கொள்வதை, ஓரக் கண்ணால் பார்க்க முடிந்தது.

சர்க்கஸ் ரிங் மாஸ்டருக்கு, அவர் ஆட்டிப் படைக்கும் ஜீவன்களின் ஒவ்வொரு அசைவும் தெரியும் தானே! மாமா, 'கூலிங் கிளாஸ்' அணிந்தால், வசமான, 'கலர்' ஏதோ பார்க்கிறார் எனப் பொருள். ஓடிக் கொண்டிருந்த காரின் சுற்றும் முற்றும் கவனித்தேன்... இளம் பெண்கள் யாரும், 'மொபெட்டில்' செல்லும் அறிகுறியே இல்லை. ஆனால், எதிரே, 'செயின்ட் ஆன்ஸ்' என, பச்சையில் எழுதப்பட்ட மஞ்சள் நிற வெளியூர் காலேஜ் பஸ் ஒன்று செல்வது தெரிந்தது. நிமிர்ந்து பஸ்சின் போர்டை பார்த்தேன். 'ஜெ...அ...ம... காலேஜ்' என்று இருந்தது. அது எந்த ஊரில் உள்ள கல்லூரி என்பது தெரியவில்லை.

என்னுடன், 'கம்யூனிகேட்' செய்வதை முழுதும் நிறுத்திய லென்ஸ் மாமா, பஸ்சின் பின்புறம் கூர்ந்து நோக்கியபடி வந்தார்.

அவர்களில் ஜோவியல் டைப்பான கல்லூரி பெண் ஒருத்தி, பஸ்சின் பின் கண்ணாடி வழியே, 'சைகை' பாஷையில் மாமாவிடம்... 'பெரிய மன்மதரு... பெண்களைப் பார்த்ததும் கண்ணாடியப் போட்டுகிட்டாரு... கழட்டுய்யா கண்ணாடிய...' என்பது போல சைகை காட்டவும், உடன் இருந்த கல்லூரிக் கன்னிகள், 'கொல்' என, சிரித்தனர்.

ஆத்திரத்தை அடக்கிக் கொண்ட மாமா, 'பிளையிங் கிஸ்' ஒன்று அனுப்பினார். அதை, 'கேட்ச்' பிடித்து, பஸ்சின் ஜன்னல் வழியே தூக்கி எறிந்தாள் ஒரு பெண். என்ன செய்வது என தெரியாமல், '555' ஒன்றை, 'டக்' என, பற்ற வைத்தார் மாமா.

மூக்கைப் பிடித்து, 'சீ... சீ... எங்களுக்கு சிகெரட் வாசனை பிடிக்காது...' என்பது போல சைகை காட்டி, அருகே அமர்ந்திருந்த என்னை காட்டி, 'பாரு... அவன் நல்ல பையன்...' என்பது போல சைகை செய்தனர். போதாக் குறைக்கு என்னிடம், கழுத்தை சுற்றி கை காட்டி, (கல்யாணமாயிருச்சா உனக்கு என்பது போல) கேட்டனர்.

லென்ஸ் மாமாவுக்கு இன்னும் வெறுப்பேற்ற எண்ணி, 'இந்தாளுக்கு கல்யாணம் முடிஞ்சுடுச்சு...' என்பது போல, நான் சைகை காட்டவும், நந்தனம் சிக்னல் வரவும் சரியாக இருந்தது. நாங்கள் தி.நகர் பக்கம் போக வேண்டியதால், சிக்னலில் நிறுத்தினேன். கிண்டி பக்கமாக திரும்பியது பஸ்.

நாங்கள் தொடர்ந்து வரப் போவதில்லை என்பதை உணர்ந்த பெண்கள், 'டா...டா...டா....' என, என்னை நோக்கி, 'டாட்டா' காட்டினர். கொதித்தெழுந்த மாமா, ஜன்னல் கண்ணாடியை இறக்கி, துப்பாக்கியால் சுடுவது போல விரலை மடக்கி, 'டுமீல்... டுமீல்' என, வாயால் சத்தம் போட்டார்.

பஸ்சே அதிரும்படி, 'கொல்' என்ற சிரிப்பு சத்தம் கேட்டது. புரிந்து கொண்டேன், 'செட்' சேர வேண்டும் பெண்களுக்கு ஹியூமர் சென்ஸ் வருவதற்கு!

திருச்சியில் வசிக்கும் மீசைக்கார நண்பர், ஊர் பெரும் புள்ளிகளில் ஒருவர். சமீபத்தில், இவர் சென்னை வந்திருந்த போது, இரவு விருந்து ஒன்றுக்கு, சென்னை நண்பர்களை அழைத்திருந்தார்.

ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். மொத்தம், 15 நண்பர்கள், லென்ஸ் மாமாவும் உண்டு!

'இன்று, உற்சாக பானம் சாப்பிட மாட்டேன்னு வீட்டுக்காரியிடம் உத்தரவாதம் கொடுத்துட்டு வந்திருக்கிறேன்...' என, சவடால் அடித்துக் கொண்டார் லென்ஸ் மாமா.

பேசப்படும், 'சப்ஜெக்டின்' சுவையும், வேகமும் அதிகரிக்கும்போது, தானாகவே உற்சாக பானத்திற்கு, 'ஆர்டர்' கொடுப்பார் என்ற, லென்ஸ் மாமாவின் குணநலன்கள், நண்பர்கள் அனைவருக்கும் தெரியுமாதலால், யாரும் கண்டு கொள்ளவில்லை.

நான் உட்பட இரண்டு, மூன்று நண்பர்கள் குளிர் பானங்களுடன் நிறுத்திக் கொள்ள, 'டிஸ்கஷன்' ஆரம்பமானது.

எங்கெங்கோ பேச்சு சென்று, ஓலை ஜோசியத்தில் வந்து நின்றது. இந்த வகை ஜோசியம் பற்றி, 'விலாவாரியாக' தெரிந்து வைத்திருந்த மீசைக்கார நண்பர், அதை விவரிக்க ஆரம்பித்தார்:

அந்தக்கால முனிவர்கள் (முனிவர்களின் பெயரை குறிப்பிட்டார் நினைவில் இல்லை.) நான்கு பேர், பனை ஓலைச் சுவடிகளில் சமஸ்கிருத மொழியில் எழுதி வைத்த குறிப்புகள் இவை. இந்த ஓலைச் சுவடிகள் இன்று, தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள சில குடும்பங்கள் வசம் உள்ளன. அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் மட்டுமே, அந்த ஓலைச் சுவடியில் எழுதப்பட்டுள்ளவைகளைப் படிக்க முடியும்.

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனின் முற்பிறப்பு, இப்பிறப்பு, எதிர்காலம் பற்றி இந்த ஓலைகளில் சொல்லப்பட்டுள்ளன. எலிமினேஷன் பிராசஸ் எனப்படும் தள்ளுபடி முறையை பின்பற்றி, ஓலைச் சுவடிகளைப் படித்துக் கூறுகின்றனர்.

வடக்கே இருந்து வந்த நண்பர் ஒருவர், ஓலை எடுத்துப் பார்க்க விருப்பப்பட்டார். அவரை அழைத்துச் சென்று இருந்தேன். வட மாநில நண்பரின் பெயர், அவரது மனைவி, குழந்தைகளின் பெயர் முதற்கொண்டு, நண்பரின் தகப்பனார், தாயார் பெயர் முதல் ஓலையில் இருக்கவே ஆடிப் போய் விட்டார். அத்துடன் அவரது முற்பிறப்பு பற்றி கேட்டு அறிய விருப்பப்பட்டார்.

முற்பிறவியில் தென்னகத்தில் அவர் பிறந்திருந்ததாகவும், அப்போது அவரது பெயர் என்னவென்றும் கூறியது ஓலை சுவடி. அத்துடன், அவர், பல சிவன் கோவில்களுக்கு பொறுப்பாளராக இருந்ததாகவும், அப்போது கோவில் பணத்தை எக்கச்சக்கமாக ஒதுக்கிக் கொண்டதாகவும், அதனால், இப்பிறவியில், சில கஷ்டங்களை அவ்வப்போது அனுபவித்து வருவதாகவும் சுவடி கூறியது... என்றார்.

ஜோசியத்தில் நம்பிக்கை இல்லாததாலும், ஏற்கனவே இந்த ஓலை ஜோசியம் பற்றி கேள்விப்பட்டிருந்ததாலும், பேச்சை மற்றவர்கள் எப்படி கவனிக்கின்றனர் என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மாமாவுக்கு ஓலை ஜோசியத்தில் ஏக ஆர்வம் ஏற்பட்டு இருந்ததால், ஏற்கனவே கூறியபடி, உற்சாக பானத்தை இரண்டு டம்ளர் உள்ளே இறக்கி இருந்தார்.

மீசைக்கார நண்பருக்கு தெரிந்த தம்பதியர், ஓலை ஜோசியம் பார்க்க விருப்பப்படவே, அவர்களை அழைத்துச் சென்று இருக்கிறார். தம்பதிகளில் கணவரின் ஓலையை எடுத்துப் பார்த்த போது, 'இப்போது உனக்கு இருக்கும் குழந்தைகளில் ஒன்று உனக்குப் பிறந்தது இல்லை...' என்று ஓலையில் இருந்ததாம்.

நண்பருக்கு பெரிய ஷாக்! ஆனால், அது தான் உண்மை என்பதை, அந்த தம்பதியர் பின்னர், மீசைக்கார நண்பரிடம் கூறினராம்.

உற்சாக பானத்தில் மிதந்தபடி இதுவரை கேட்டுக் கொண்டிருந்த லென்ஸ் மாமா, தம்பதியரின் கதையைக் கேட்டதும், 'ரொம்ப நன்றிப்பா... என் வீட்டுக்காரிய விட்டுட்டு, ஓலை ஜோசியம் பார்க்க உங்களோட வர்றேன். அவளோட வந்து என் வண்டவாளங்கள் அங்கே தண்டவாளம் ஏறிட்டால், வீட்டில சோறு தண்ணி கிடைக்காமப் போயிடும்...' என, அதிரடியாக ஒரு, 'ஸ்டேட்மென்ட்' விடவும், அந்த ஓட்டலே அதிர்ந்தது; எங்கள் சிரிப்பு வெடியால்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us