தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜூலை 20, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 20, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செஞ்சி - திருவண்ணாமலை ரோட்டில் அமைந்துள்ளது ஆலம் பூண்டி என்ற கிராமம். வருமான வரித் துறையில் பணியற்றும் நண்பர் ஒருவரின் மாமனார் ஊர் அது; அவரது மாமனார் ஒரு நிலச்சுவான்தார். அவரைப் பார்ப்பதற்கும், நகர வாழ்க்கைக்கு ஒரு நாள் ஓய்வு கொடுக்கவும் விரும்பிய நண்பர், என்னையும் அழைத்தார்.

மிகப் பெரிய ஓட்டு வீடு அது; வீட்டின் நடுவே பெரிய முற்றம். வாசலில் இருபுறமும் பெரிய திண்டுகள் இருந்தன. திண்டில் சாய்ந்தபடி, எடுத்துச் சென்ற புத்தகம் ஒன்றை எடுத்தேன்.

கே.சீனிவாசன் என்பவர், '50களில் எழுதியது... அவர், 'பழி' போடுவது பற்றி சொல்கிறார்:

மனித வாழ்வை கவனியுங்கள். மனிதரின் வாழ்வைப் படம் பிடித்து வைத்திருக்கும் கதைகளையோ, நாடகங்களையோ பாருங்கள். அபவாதப் பேயின் அட்டகாசங்கள் பொறுக்க முடியாதவை என்பது புரியும்.

'சப்தம் அடங்கும்; புயல் ஓயும்; தீ தணியும்; வெள்ளம் வடியும்; மின்சார ஓட்டம் கத்தரித்துப் போகும். ஆனால், அபவாதம் அடங்காது; ஓயாது, தணியாது, வடியாது, கத்தரித்துப் போகாது. பிராணனோடு வியாதி மறையும்; ஆனால், மரணத்திற்குப் பின்னும் மறையாது நிற்பது அபவாதம்!

ஜனங்களை, பொய் எப்படி ஏமாற்றுகிறது என்று கேட்கலாம்... பொய் ஏமாற்றுவதில்லை!

ஒவ்வொரு மனித உள்ளத்திலும் ஆழத்தில் பதிந்து கிடக்கிறது கயமை...' என்கிறார் பெட்ராண்டு ரசல். கயமையின் குணம் - அவதூறு பேசுவதும், அவதூறு கேட்பதும். அவதூறு எளிதில் விலையாகிற சரக்கு. வாங்குவதை விட, விற்பது எப்போதும் அதிகம்; - ரொக்க வியாபாரம். சேர்த்து வைக்க கிடங்கு வேண்டாம்; - கைக்குக் கை சுலபமாக மாறும்; - விலையும் ஏறும். வியாபாரம் ஓயாது நடந்து கொண்டே இருக்கும்.

வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் அவதூறு பிறக்கும். பணம் வரும் வழியில் உண்டாகும்; பதவிக்கும் அப்படியே! ஆயினும், அவதூறுக்கு முக்கிய வேலை, துர்நடத்தை கற்பித்து, ஆண், பெண் இருபாலரின் பெயரையும் கெடுப்பது தான்.

ரூபாய் நாணயத்தைக் கொடுத்தால் தட்டிப் பார்த்து வாங்குவர்; பழியைச் சொன்னால் ஆராய மாட்டார்கள். அதிலும், நல்லவர்களைப் பற்றி, எளிய மனிதர்களைப் பற்றி அவதூறு சொல்வதென்றால், சொல்கிற நாக்கிற்கு ருசி; கேட்கிற காதிற்கு குஷி. வேம்பில் விருப்பம் காக்கைக்கு; பேசுவதில், விருப்பம் கயவர்க்கு! ஒவ்வொரு உள்ளத்திலும், கயமை இருக்கிறது. திடமாக இருந்து, எடுத்து எறிந்தால் தான், அது போகும்!

பகை எதிர்த்தால் சண்டையிடலாம்; பழி எதிர்த்தால் போராட முடியாது. பழி நேர் நின்று போராடாது; மறைந்திருந்து தாக்கும். நேர் நின்று அதை உடைப்பது கோடியில் ஒருவருக்குத் தான் முடியும்...

— எவ்வளவு அருமையான தத்துவ முத்து!

மழையின் அறிகுறி தென்பட்டது... எதிரே இருந்த தோப்பில், குயில் கூவும் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. மனத்திரையில் மீண்டும் மீண்டும் அவரது கருத்தோட்டத்தை, திரையிட்டுக் கொண்டே இருந்தேன்!

பீச் மணலில், எழுத்தாளர் வட்டம் அமர்ந்திருந்தது. இலக்கிய பேச்சுகளுக்கு இடையே, உற்சாக பானமும் ஓடிக் கொண்டிருந்தது.

எழுத்தாளர் நண்பர் ஒருவர், கம்பரைப் பற்றி ஆரம்பித்தார்...

கம்பரிடம், ஒரு விறகு வெட்டி, 'அரசரிடம் எனக்கு எப்படியாவது பரிசு வாங்கித் தர வேண்டும்...' என்று, கேட்டுக் கொண்டார்.

'சரி...எதையாவது பாடிக் கொண்டு வா... பரிசு வாங்கித் தருகிறேன்...' என்று சொன்னார் கவிச்சக்கரவர்த்தி.

அவனுக்கோ தமிழில் பயிற்சி இல்லை. அதனால், எப்படி கவிதை எழுதுவது என்று யோசித்துக் கொண்டே, நடந்து சென்றான். அப்போது, வீதியில் சிறு பிள்ளைகள் மணல் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர்.

அதில், ஓர் ஆண் பிள்ளையை உட்கார வைத்து, 'நீ தான் மாப்பிள்ளை, நான் தான் உன் மனைவி; இந்தா, இதைச் சாப்பிடு...' என்று கூறி, ஒரு சிறிய இலையில், மண்ணைப் படைத்தாள் ஒரு சிறுமி.

அதைக் கண்ட விறகு வெட்டி, 'மண்ணுண்ணி மாப்பிள்ளையே...' என்று சொல்லிக் கொண்டான்; அதையே தன் கவியின் தொடக்கமாக வைத்துக் கொண்டான்.

பிறகு ஒரு காக்கை கத்தியது... 'காவிறையே...' என்பதைச் சேர்த்து கொண்டான். குயிலின் குரல் காதில் கேட்டது... 'கூவிறையே...' என்று, பாடினான்.

பிறகு, ஒரு பெருச்சாளி அங்கிருந்த கோவிலுக்குள் ஓடுவதைக் கண்டான்... 'உங்களப்பன் கோவில் பெருச்சாளி...' என்று, பாட்டை நீட்டினான். எதிரே அவனுடைய நண்பன் ஒருவன் வந்தான். இந்தப் பாட்டை விறகு வெட்டி அவனிடம் கூறவே, 'என்னடா இது? கன்னா, பின்னாவென்று இருக்கிறது; அரசன் பெயர் வேண்டாமா?' என்று கேட்டான்.

அவன் சொன்னதையும், சோழ மன்னன் பெயரையும் சேர்த்து, 'கன்னா, பின்னா, மன்னா, தென்னா சோழங்கப் பெருமானே...' என்று, பாட்டை முடித்தான்.

'மண்ணுண்ணி மாப்பிள்ளையே... காவிறையே, கூவிறையே... உங்களப்பன் கோவில் பெருச்சாளி... கன்னா, பின்னா, மன்னா, தென்னா - சோழங்கப் பெருமானே...' என்று, கவிதையாக கம்பரிடம்

போய் சொன்னான்.

அதைக் கேட்டு புன்முறுவல் பூத்த கம்பர், அவனை அரசவைக்கு அழைத்துச் சென்றார்; அங்கே தன் பாடலைச் சொன்னான் விறகு வெட்டி. அதைக் கேட்டதும், அவையில் இருந்தோர் அனைவரும் சிரித்தனர்.

உடனே கம்பர் எழுந்து,'இந்த புலவரின் கவியைக் கேட்டு, அவையோர்கள் நகைப்பதற்கு பதில், இதற்குப் பொருள் என்ன என்பதை, ஆராய்ந்து பார்க்க வேண்டும். நம்முடைய அரசரை, 'மன்மதனே' என்று அழைத்திருக்கிறார் புலவர். மண்ணுண்ணி (மண்ணை உண்டு) உலகத்தை உண்ட திருமால்; மா - திருமகள். இந்த இருவருக்கும் பிள்ளையாகிய மன்மதனே என்று பொருள்பட, 'மண்ணுண்ணி மாப்பிள்ளையே...' என்று, தொடங்கியிருக்கிறார்.

'கா' என்பது கற்பகம்; அதற்கு இறைவன் இந்திரன். ஆதலின், காவிறையே என்பதற்கு, இந்திரனே என்று பொருள்.

'கூ' என்பது பூமி. அதற்கு இறைவன் நம் பெருமான்; அதாவது, அரசன். அதையே, 'கூவிறையே' என்கிறார்.

'உங்கள் தந்தையும் பெரும் சக்கரவர்த்தி என்பதையே, 'உங்களப்பன் கோ' என்றார். அவர் வில் வித்தையில் பெரிய ஆள்; அதையே, 'வில்லில் பெரிய ஆளி' என்று, பிரித்துச் சொல்கிறார். வில்லில் என்பது விலில் என்றும், பெரிது என்பது, பெருசு என்றும் விகாரமாயின.

'கன்னா, - கர்ணனே... பின்னா, - அவனுடைய தம்பியாகிய தர்ம புத்திரனே... மன்னா, - அரசனே, தென்னா - தென்னாட்டுத் தலைவனே, சோழங்கப் பெருமானே, - சோழ நாட்டை அங்கமாயுடைய பெரியவனே... இப்படிப் பொருள் கொள்ளும்படி பாடிய இப்புலவரின் புலமையை, நாம் பாராட்ட வேண்டும்...' என்று, விறகு வெட்டியின் கவிக்கு, உரை விரித்தார் கம்பர்.

அத்தோடு நிற்கவில்லை... 'இது இணைக் குறளாசிரியப்பா, ஏகாரத்தில் முடிந்திருக்கிறது...' என்று கூறி, சீரும் பிரித்து காட்டினார்.

— இப்படி அவர் முடிக்கவும், அங்கே, எழுத்தாளப் படையும், 'அங்கிள் ஜானி' உள்ளே போன மயக்கத்தில், கவி படைக்க ஆரம்பித்து இருந்தது. நான், 'ஜூட்' விட்டேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us