தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜன 18, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 18, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த யாத்திரிகர்கள் ஆண்டிற்கு ஒருமுறை மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி என, எல்லா புனிதத்தலங்களுக்கும் வந்து செல்வர். சுமார், 3,000 - 4,000 கிலோ மீட்டர் தூரத்தை, 20 முதல், 30 நாட்களாக பயணம் செய்யும் இவர்களுடைய வாகனமோ, நம்மூர்களில் காயலான் கடைக்கு அனுப்பப்பட்ட பஸ்கள். இந்த கொடுமையான பயணத்தை தாங்கிக் கொள்ளும் பயணிகளுக்கு, மிகுந்த மன உறுதி வேண்டும்.

இந்தப் பயணிகளின் வரவு, நம்மூர் வியாபாரிகளின் நாணயத்தை முற்றிலும் மாற்றி விடுவதை, 'டூரிஸ்ட் ஸ்பாட்டுகளில் காண முடிகிறது. மதுரை, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில், ஒரு, 'சர்வே' எடுக்கும் பணி எனக்கும், லென்ஸ் மாமாவிற்கும் அலுவலகத்தில் தரப்பட்டது.

சர்வேக்கான விண்ணப்பங்கள் மற்றும் எங்களது மூட்டை, முடிச்சுக்களுடன் கிளம்பினோம். மதுரை மாவட்டம் முடிந்து, நெல்லை மாவட்டத்தில் கடைசியாக வள்ளியூர் அருகே உள்ள ஒரு கிராமத்திலும், 'சர்வே'யை முடித்து, கன்னியாகுமரி சென்றோம்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக ஓட்டலில், அறை கேட்ட போது, 'எல்லா ரூமும், 'புக்' ஆகிவிட்டது...' என, மோட்டு வளையைப் பார்த்தபடியே அலட்சியமான பதில் வந்தது.

லென்ஸ் மாமா என்னை பார்த்து கண் சிமிட்டியபடி, 100 ரூபாய் நோட்டு ஒன்றை தன் பையில் இருந்து எடுத்தார். நான், அவர் கையை பிடித்து, கண்ணாலேயே, 'இது தப்பு மாமா... லஞ்சம் கொடுத்து இடம் பிடிக்க வேண்டாம்...' எனக் கூறியதையும் பொருட்படுத்தாமல், ரிசப்ஷனில் நீட்டி, 'கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்ய முடியுமா பாருங்களேன்...' என்றார்.

ரிசப்ஷனில் இருந்தவர் வாயெல்லாம் பல்லாக, 'நெஜமாவே ரூம் இல்லே சார்... ரூம் இருந்தா கொடுத்திட்டு, நீங்க அன்பளிப்பா தர்றத மறுக்கவா செய்வோம்...' என்றார்.

ரூம் தேடி, ஒவ்வொரு லாட்ஜாக ஏறி, இறங்க, ரயில் நிலையம் அருகே ஒரு லாட்ஜில் ரூம் இருந்தது. அந்த லாட்ஜின் பணியாளர், 'சார்... இங்க உள்ள ரூம் உங்களுக்குப் பிடிக்காது. எங்க லாட்ஜ் இன்னொன்னு கடற்கரை பக்கம் இருக்கு... அங்கே போங்களேன்...' என்றார்.

அங்கே —

'டபுள் ரூம், 'நான் ஏசி' 1,500 ரூபாய்...' என, கூசாமல் வாடகை கேட்டனர்.

'வாடகைப் பட்டியல் கார்டு இருக்கிறதா எனக் கேட்டார்...' லென்ஸ் மாமா.

'அதெல்லாம் அச்சடிக்கிறது இல்லே சார்... வேணுமுன்னா ரூம் எடுத்கக்கங்க... இல்லே வாடகை பட்டியல் அச்சிட்டு வச்சிருக்கிற லாட்ஜா பாத்துக்கங்க...' என்றார்.

கோபம் குறையாமலே, 'சரி... சரி... ஒரு, 'டபுள் ரூம்' கொடுங்க...' என, லென்ஸ் மாமா அலட்சியமாக கேட்கவும், '2,000 ரூபாய் அட்வான்ஸ் கொடுங்க...' என்றனர். அதை கொடுத்தபின், 'ரசீது?' என்றார் மாமா. 'ரூமுக்கு போங்க, போட்டு அனுப்பி வைக்கிறோம்...' என, பதில் வந்தது.

மகா எரிச்சலுடன் ரூமுக்கு வந்தார் மாமா. மாலையில் கடற்கரை அருகே உலவச் சென்றபோது, வடமாநில பயணிகளை, 'ரைட் ராயலாக' சிறு வியாபாரிகள் ஏமாற்றிக் கொண்டிருப்பதை காண முடிந்தது.

முந்திரிப் பருப்பில் ஆரம்பித்து, கடல் சிப்பி மாலை வரை தரம் குறைந்த பொருட்களை யானை விலை, குதிரை விலை கூறி, விற்றுக் கொண்டிருந்தனர்.

இந்தக் கொள்ளை ஒரு பக்கம் ஜரூராக நடந்து கொண்டிருக்க,

'பிக்பாக்கெட்'டுகளும் தாராளமாக மிக உரிமையோடு செயல்படுவதை காண முடிந்தது. இந்தியாவின் கடைக்கோடியை, காண வந்துள்ள நம் வடமாநில சகோதரர்களிடம் இப்படிக் கீழ்த்தரமாக நடந்து கொள்கின்றனரே என்ற மன வருத்தம் ஏற்பட்டது.

மாலை, 7:00 மணி அளவில் லாட்ஜை காலி செய்யும்போது, 'ரூமுக்கு ரசீது அனுப்புவதாகச் சொன்னீர்கள்; வரவில்லையே...' என்றார் மாமா.

'அதற்கென்ன சார்... இப்போ தான் ரூமை காலி செய்யப் போறீங்களே... இந்தாங்க பேலன்ஸ்...' என்றபடி துண்டுச் சீட்டு ஒன்றில் அட்வான்ஸ், ரூம் வாடகை, மீதி என எழுதித் தந்தார்.

'பில் கிடையாதா?' என மாமா கேட்க, 'பில் போட்டா டாக்ஸ் வரும் சார்... போடவா?' என்றார்.

'வரி கொடுக்கப் போறது நான்... உங்களுக்கு ஏன் கசக்குது?' என்றார் மாமா.

பெரிய வாக்குவாதம் ஆரம்பித்து விட்டது. கடைசி வரையில் பில்லே தரவில்லை அந்த லாட்ஜ்காரர்கள். தமிழ் பேசத் தெரிந்த நமக்கே இந்த கதி என்றால், இந்தி மட்டுமே தெரிந்த வடமாநில சகோதரர்களின் நிலை எப்படிப்பட்டதாக இருக்கும்.

லோக்கல் போலீஸ்தான், இந்த அட்டகாசங்களை பல்வேறு காரணங்களுக்காக கண்டுகொள்ளவில்லை என்றாலும், மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி, மாவட்ட உயர் போலீஸ் அதிகாரி, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் காதுகளுக்கு இந்த அடாவடிகள், ஏமாற்றுகள் இதுவரை எட்டாமலா உள்ளது என எண்ணும்போது, வியக்காமல் இருக்க முடியவில்லை!

ஸ்டார், 'டிவி' நிகழ்ச்சிகள், 'போர்' எனவும், பல நிகழ்ச்சிகள் புரியவே இல்லை என்றும் பரவலாக பேசிக் கொள்கின்றனர். இது, ஓரளவு உண்மை என்றாலும், பயனுள்ள நிகழ்ச்சிகள் பல இடம் பெறத்தான் செய்கின்றன. சமீபத்தில் ஸ்டாரில் கண்ட நிகழ்ச்சி, பால் பண்ணை நடத்துவது பற்றியது!

சவுதி அரேபியாவில், அல்சபா என்ற ஊரில் உள்ள பால் பண்ணையைப் பற்றிய, நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பினர்.

நம்மூரில் கடுங்கோடையில், 40 முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும். அல்சபாவிலோ எப்போதும், 55 டிகிரி செல்சியஸ் வெப்பம்தான்! 55 டிகிரி வெப்பம் என்றால், தண்ணீர் வசதி எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள்.

அரேபிய ஷேக் ஒருவருக்கு இங்கு பால் பண்ணை வைக்க ஆசை வந்தது.

'விபரீத ஆசை... ஐந்து லிட்டர் பால் கூட கிடைக்காதே...' என நீங்களும், 'அட போப்பா... பசு உயிரோடு இருக்கிறதே சந்தேகம்...' என, உங்களது நண்பரும் பேசிக் கொண்டால் அது தவறு. 'ஷேக்'கின் பண்ணையில் வளரும் பசுக்கள் ஒரு நாளுக்கு, 40 முதல் 45 லிட்டர் பால் கறக்கின்றன!

இந்த ஸ்டேட்மென்டைக் கேட்டு, 'கப்சா...' என, நீங்கள் நினைக்கத் தோன்றும் அல்லது 'பசுக்களை, 'ஏசி' ரூம்களில் ஷேக் வளர்க்கிறார் போல இருக்கு...' என்ற முடிவுக்கு வரத் தோன்றும்.

இரண்டுமே இல்லை!

அந்தப் பாலைவனத்தில் பல அடி ஆழத்தில், 'போர்' போட்டு, தண்ணீர் எடுக்கிறார். இந்தத் தண்ணீரை, உயர் அழுத்தத்தில், குழாய்கள் மூலம் மாடுகள் கட்டப்பட்டுள்ள கொட்டகைகளுக்கு எடுத்துச் செல்கிறார். குழாய்கள், மேல் கூரையை ஒட்டி, கூரையின் உட்புறமாகச் செல்கின்றன. கொட்டகைகளின் நான்கு புறமும் சுவர்கள் கூட இல்லை; மேல் கூரை மட்டும்தான் உள்ளது.

உயர் அழுத்தத்தில் வரும் தண்ணீர், கூரையை ஒட்டி, ஆங்கிளாக வைத்திருக்கும் பிரமாண்டமான காற்றாடிகளின் மீது பீச்சப்படுகிறது. பீச்சப்படும் தண்ணீர் காற்றாடியின் வேகத்தில் பூ மழை போல பசுக்களின் மீது தொடர்ச்சியாக விழுகிறது.

இதனால், கொட்டகையின் உட்புறம் சூடு குறைந்து கொடைக்கானல், ஊட்டி போன்ற தட்ப வெப்பம் ஏற்படுகிறது.

பாலைவனத்தில், குறைந்த செலவில் அதிக பால் பெறும், 'ஷேக்'கின் திறமையைப் பாராட்டத்தான் வேண்டும்.

நம்மூரை போன்ற தட்ப வெப்ப நிலை உள்ள நாடு தான் இஸ்ரேலும். இங்கு, 40 அல்லது 50 லிட்டர் பால் கொடுக்கிறது பசுக்கள்.

நம் பால் வளத்துறை அதிகாரிகள், குளிர்நாடுகளுக்கு மாடு பிடிக்க உல்லாசப் பயணம் மேற்கொள்வதை நிறுத்தி, இஸ்ரேலுக்கும், சவுதிக்கும் சென்று தொழில் நுட்பம் கற்று, இங்குள்ள விவசாயிகளுக்கு உதவுவது நலம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us