தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன் (17)

கதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன் (17)

கதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன் (17)


PUBLISHED ON : ஜன 18, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 18, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அது, சம்பூர்ண ராமாயணம் படம் வெளியான நேரம்... நடமாடும் தெய்வம் என வணங்கப்படும் காஞ்சி பரமாச்சாரியார், நாடகத்தில், நான் பரதனாக நடித்திருக்கும் காட்சிகளை பார்த்து, என்னை சந்திக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தார். அப்பா, அம்மா மற்றும் என் மனைவியுடன் காஞ்சிபுரம் சென்றேன். நாங்கள் வந்திருக்கும் செய்தி, அவருக்கு தெரிவிக்கப்பட்டது. நாங்கள் அவர் அருகில் சென்றதும், நீண்ட நேரம் என்னையே உற்றுப் பார்த்தவர், என் அம்மாவிடம், 'இந்த குழந்தையை பெற்றதற்கு நீ ரொம்ப புண்ணியம் செய்திருக்கணும்; உனக்காக நான் பிரார்த்தனை செய்றேன்...' என்று சொல்லி ஆசிர்வாதம் செய்தார். பரமாச்சாரியர் முன், என்னால் எதுவும் பேச முடியவில்லை. என் அம்மாவின் முகத்தை பார்த்தேன். விவரிக்க முடியாத சந்தோஷத்துடன், அம்மாவின் கண்களில் ஆனந்த கண்ணீர். பரமாச்சாரியர் கூறிய பாராட்டு வார்த்தைகள், அம்மாவின் முன், எனக்கு கிடைத்த விருது.

ராஜா அண்ணாமலை மன்றத்தில், வியட்நாம் வீடு நாடக அரங்கேற்றம். நாடகத்தில் எனக்கு அம்மாவாக எஸ்.எஸ்.வாசனுடைய அம்மாவின் புகைப்படத்தை மாட்டி வைத்தனர். ஒரு காட்சியில் நான் வசனம் பேசிக் கொண்டு வரும் போது, அப்புகைப்படத்தின் முன் நின்று, 'எங்க அம்மா வீடு வீடா மாவாட்டி என்னை படிக்க வைச்சா... பிரஸ்டீஜ் பத்மநாபன் அப்படி வளர்ந்தவன்...' என்று உணர்ச்சிகரமாக நடித்துக் கொண்டிருக்கும் போது, அரங்கமே அமைதியாக இருந்தது. ஆனால், முதல் வரிசையிலிருந்து ஒரு விசும்பல் குரல் கேட்டது. நான் மேடையிலிருந்து கீழே பார்த்தேன். எஸ்.எஸ்.வாசன் அழுது கொண்டிருந்தார். அன்று என் அப்பாவும் நாடகத்திற்கு வந்திருந்து, மேடையில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார். நாடகம் முடிந்ததும் எஸ்.எஸ்.வாசன் நேராக மேடைக்கு வந்து அப்பாவை கட்டிக் கொண்டு, 'அடடா... இப்படி ஒரு புள்ளய பெத்திருக்கீங்களே...' என்று ஆனந்தக் கண்ணீர் விட்டார். இது, என் தந்தை முன், என் நடிப்பிற்கு, திரையுலக மேதையிடம் இருந்து கிடைத்த விருது.

எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில்; ஒரு பிராமண குடும்பம் இருந்தது; பனகல் குடும்பம் என்று பெயர். ஒருநாள் ஷூட்டிங்கிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது எதிர்வீட்டில் இருந்த வயதான மாமி, என்னை வழியனுப்ப வந்த என் மனைவியிடம், 'கமலாம்மா... நேத்திக்கு உன் ஆம்படையான் நடிச்ச, வியட்நாம் வீடு நாடகம் பார்த்தேன்டீ; என்னம்மா நடிச்சிருக்காரு. பிராமணனா பொறந்திருக்க வேண்டியவன். நானும் ஒரு குழந்தைய சுவீகாரம் எடுத்திருக்கேன். அவனுக்கு கூட இவ்வளவு சரியா சந்தியா வந்தனம், அபிவாதயே செய்யத் தெரியல. உன் ஆம்படையான் பிரஸ்டீஜ் பத்மநாபனாகவே வாழ்ந்து காட்டீட்டார் போ...' என்று பாராட்டு மழை பொழிந்தார். நான் கமலாவை ஏறிட்டு பார்த்தேன். அவள் முகத்தில் என்றைக்கும் இல்லாத சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிறைந்திருந்தது. இது, என் மனைவி முன், எனக்கு கிடைத்த விருது.

'செவாலியர்' விருது எனக்கு கிடைத்திருக்கிற செய்தியை அறிந்த இயக்குனர் கிருஷ்ணன் (பஞ்சு), என்னை பாராட்டுவதற்காக மாலையோடு வந்தார். அவருக்கு வயது, 85. என் இத்தனை வெற்றிக்கும் காரணியாக இருந்தவர்களில் முதலாமவர் பெருமாள் முதலியார். பராசக்தி படப்பிடிப்பின் போது என்னை திட்டியும், பேசியும், சிலர் அலட்சியப்படுத்திய போது, 'இதற்கெல்லாம் மனம் தளர்ந்து விடாதே; இதை, ஒரு காதில் வாங்கி, மறுகாதில் விட்டு விடு. நீ நிச்சயம் ஒரு நல்ல நிலைக்கு வருவாய்...' என்று என்னை உற்சாகப்படுத்தியவர். அதன்பின், 32 ஆண்டுகள் என்னுடைய வளர்ச்சியை கண்டு மகிழ்ந்தவர். அப்படத்தின் இயக்குனர் (கிருஷ்ணன் பஞ்சு) நேரில் வந்து என்னை பாராட்டுகிறார் என்றால், இதை விட எனக்கு வேறு பெரிய விருது எது?

பொன்னல்ல பொருளல்ல; புவியாளும்

மன்னர் தரும் என்னவெல்லாம் அறியாத எதுவும் அல்ல!

மின்னி வரும் மெய்க் கவியின் மெய்

அழகை காண்போர்தம் கண்ணில் வரும்

ஒருதுளியே கலைஞனுக்கு கோடி!

என்றார் கண்ணதாசன்.

கோடி கோடியா கொட்டி கொடுப்பதை விட, திறமையை உணர்ந்து, மெய்சிலிர்த்து, ஒரு சொட்டு கண்ணீர் விட்டாலே போதும். அது, ஒரு கலைஞனுக்கு கோடி ரூபாய் கொடுத்த சந்தோஷத்தை தரும்.

அடுத்த இதழில் முடியும்.

தொகுப்பு: வைரஜாதன்,

நன்றி 'பொம்மை' விஜயா பப்ளிகேஷன்ஸ்,

சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us