தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜன 18, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 18, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அலைபேசியில் முதலிரவு!

சமீபத்தில், சமூக வலைதளமொன்றில், ஒரு காணொளியை பார்த்தேன். இரண்டு நிமிடம் ஓடிய அந்தக் காணொளி, அலைபேசியில் படம் பிடிக்கப்பட்டிருந்தது. அப்படத்தில், கையில் பால் டம்ளருடன் முதலிரவுக்கு தயாராகும் மணப்பெண்ணை, அவரது தோழிகள் மற்றும் உறவினர்கள் கிண்டல் செய்தபடியே, மாடியில் இருக்கும் அறைக்கு அழைத்துச் செல்கின்றனர். பின், மாடியில் இருக்கும் படுக்கை அறையை காட்டுகின்றனர். அந்த அறை, பூ வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. புது மணமக்கள் வெட்கத்தில் நெளிகின்றனர்; அதோடு படம் முடிகிறது.

இப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது அந்த புதுமண ஜோடிக்கு தெரியுமா? அலைபேசியில் படமெடுத்தவர், இதை வெளியிட்டாரா அல்லது அவருக்கு தெரியாமல், யாராவது இதை வலை தளத்தில் வெளியிட்டிருக்கின்றனரா... அலைபேசியில் இதை படமெடுக்கும் போது, வீட்டிலுள்ள பெரியவர்கள் யாரும் ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்? எதைத்தான் படமெடுப்பது என்ற விவஸ்தை கிடையாதா? நல்லவேளை, படமெடுத்தவர் தொடர்ந்து படமெடுக்காமல், அத்துடன் நிறுத்திக் கொண்டது ஆறுதலளிக்கிறது.

எத்தனையோ நல்ல விஷயங்களுக்கு பயன்படும் இன்டர்நெட் வசதியை, வக்ர மனதுடன் பயன்படுத்தும் சில, அரைகுறை ஜென்மங்கள்

திருந்துவரா!

பெயர் குறிப்பிட விரும்பாத சென்னை வாசகர்.

பள்ளிகள் கவனத்திற்கு...

பொதுவாக, புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்வதற்கு, அரை மணி நேரம் ஆகும். ஆனால், அன்று, ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆனது. அதற்கு காரணம், நாங்கள் செல்லும் வழியில், ஒரு பெரிய தனியார் பள்ளி இருந்தது. நாங்கள் சென்ற நேரம், மதிய இடைவேளை நேரம் என்பதால், அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளை அழைத்துச் செல்லும் ஆட்டோக்கள், நடு ரோட்டில் நின்றதால் நெரிசல் ஏற்பட்டது.

இந்த பள்ளியில் மட்டுமல்ல, பெரும்பாலான தனியார் பள்ளிகளிலும் இப்படித் தான் நடக்கிறது. தனியார் பள்ளிகளில் எவ்வளவு பெரிய மைதானம் இருந்தாலும், அவர்கள் குழந்தைகளை கூப்பிட வரும் வாகனங்களை, பள்ளியின் உள்ளே அனுமதிப்பது இல்லை. இதனால், அனைத்து பள்ளிகளின் வாசலிலும், இது போன்று, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. குழந்தைகளுக்கு சமுதாய நலன் பற்றி சொல்லிக் கொடுக்கும் பள்ளிகளே, இதுபோன்று நடந்து கொண்டால், பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு, எப்படி சமுதாய நலன் பற்றி அக்கறை வரும்?

எனவே, தனியார் பள்ளிகள், குழந்தைகளை அழைத்துச் செல்லும் ஆட்டோக்களை பள்ளியின் உள்ளே அனுமதித்து, ஒவ்வொரு ஆட்டோவாக வெளியே அனுப்பினால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது; குழந்தைகளும் வீட்டிற்கு விரைவில் செல்வர்.

- ர.சவுந்தர், புதுச்சேரி.

மகளை நிம்மதியாக வாழ விடுங்கள்!

என் நண்பரின் மகளுக்கு, மூன்று மாதங்களுக்கு முன், திருமணம் நடந்தது. அனைத்து சுப சடங்குகளும் முடிந்து, பெண்ணை, மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பும் போது, நண்பர் தன் மகளிடம், 'மாப்பிள்ளை, எப்படி நடந்து கொள்கிறார்ன்னு பார்; ஒத்துப் போகலன்னா சொல்... நண்பர்களாக பிரிந்து கொள்ளலாம்....' என்று கூறி அனுப்பினார்.

ஒரு வாரம் தான் சென்றிருக்கும். அதற்குள் புகுந்த வீட்டில் நடக்கும் ஒவ்வொரு அசைவையும், தன் வீட்டுக்கு, மொபைல் போன் மூலம் சொல்லி, மாப்பிள்ளை வீட்டார் மீது வெறுப்பு ஏற்படும்படி செய்து விட்டார் நண்பரின் மகள். இவர்களும் எதையும் விசாரித்து உண்மையை அறியாமல், பெண்ணை அழைத்து வந்து விட்டனர்.

பத்து நாட்கள் சென்றபின், மாப்பிள்ளையே போய் பெண்ணை அழைத்து வந்து குடும்பம் நடத்தினார். அப்போது கூட, 'குழந்தை பிறக்காமல் பார்த்துக் கொள்; விவாகரத்து வாங்கிக் கொள்ளலாம்...' என்று அறிவுரை கூறி அனுப்பினார் நண்பர். இத்தகைய அறிவுரைகள் தொடரவே, இப்போது கணவன், மனைவி நிரந்தரமாக பிரிந்து விட்டனர்.

பெண்ணை பெற்றவர்களே... உங்கள் மகளிடம் நல்ல விஷயங்கள் குறித்தும், குடும்பத்தில் நடக்கும் சிறு சிறு பிரச்னைகளை அனுசரித்து போக சொல்லுங்கள். அதற்குமேல் பிரச்னை ஏற்பட்டால், சுமுகமாக தீர்க்க பாருங்கள். அல்ப காரணங்களுக்காக விவாகரத்து கேட்பதும், அதற்கு துணை போவதையும் தவிர்த்து, குடும்ப நலம் பேணி, நம் கலாசாரத்தை விட்டுக் கொடுக்காமல் இருங்களேன்!

கோ.பாலாஜி, கடலூர்.

இதுவும் அத்தியாவசியமானது தான்!

கடந்த ஞாயிறு அன்று, என் நண்பரைக் காண அவரது வீட்டிற்கு சென்றிருந்தேன். அச்சமயம் அவசரமாக வெளியே கிளம்பிக் கொண்டிருந்த நண்பர், என்னையும் அவரது பைக்கில் ஏற்றிச் சென்றார். 'எங்க போறோம்?' என்று கேட்டதற்கு, 'வந்து பாரு... உன் பிள்ளைகளுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும்...' என்று புதிர் போட்டபடியே, ஒரு நீச்சல் குளத்தின் முன் பைக்கை நிறுத்தி, உள்ளே அழைத்துச் சென்றார்.

அங்கே ஏறத்தாழ, 20 சிறுவர்கள் நீச்சல் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு பிரிவுக்கும் எட்டு பேர் என்ற விகிதத்தில், போட்டி நடந்து கொண்டிருந்தது. என் நண்பரின் பத்து வயது மகனும் அப்போட்டியில் கலந்து கொண்டான். 'என்ன திடீர்ன்னு நீச்சல் பயிற்சி... உன் மகனை ஒலிம்பிக்கிற்கு தயார் செய்யப் போறீயா?' என்றேன். உடனே, அவர், 'அதெல்லாம் ஒண்ணுமில்ல; இதுவும் ஒரு தற்காப்பு கலை தானே... நானே அவனுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்தேன். அதோடு, வித்தியாசமான நீர்நிலைகளில் பயிற்சி தர, என் நண்பர்களும் உதவினர். கடந்த வாரம், 'கள்ளந்திரி கால்வாயில்' தண்ணீர் திறந்த போது, ஓடும் நீரில் பாதுகாப்பாக எப்படி நீந்துறதுன்னு அங்குள்ள ஒரு நண்பர் பயிற்சி தந்தார். அதே போல், விவசாய கிணற்றில் ஒரு பெரியவரின் உதவியோடு பயிற்சி பெறச் செய்தேன். இந்நிலையில், அவனோட படிக்கும் நண்பர்கள் மூலமாக இங்கு நீச்சல் போட்டி நடைபெறுவதாக சொன்னான். வெற்றி - தோல்வி ஒருபுறம் இருக்கட்டும்; போட்டியில் பங்கேற்று அந்த பரவசத்தையும் அனுபவிக்கட்டுமேன்னு அனுப்பி வச்சுருக்கேன்...' என்றார்.

'எல்லாருமே நீச்சல் கற்றுக் கொள்வது அவசியம்; அது, அவசரத்திற்கு நம் உயிரைக் காப்பதோடு, மற்றவரையும் காப்பாற்ற உதவும். ஆனாலும், அதை மேலோட்டமாக கற்காமல், கிணறு, குளம், ஆறு, கடல் போன்ற வேறுபட்ட நீர்நிலைகளிலும், பயிற்சி எடுப்பது நல்லது. அதுமட்டுமல்லாமல், நீருக்கடியில் சேறு, பாசி, செடி கொடி மற்றும் தண்ணீரின் வேகம், ஆழம் அறிந்து முழுமையாக பயிற்சி கொள்வதே சிறப்பு...' என்று அவர் விளக்கி முடித்தபோது, நானும் என் குழந்தைகளுக்கு நீந்தக் கற்றுத் தருவதென்று உறுதி எடுத்தேன்.

உயிர் காக்கும் உன்னதமான கலைக்கு மதிப்பளித்து, பயிற்சியளிப்பது நல்லது தானே!

பி.சதீஷ்குமார், மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us