
அன்று, குப்பண்ணா விரதமிருந்ததால், மதியம், 12:00 மணிக்கு மேல், புல் மீல்ஸ் கட்டி விட்டு, இரவு, 'பீச்' மீட்டிங்கில் எங்களோடு கலந்து கொண்டவர், 'இப்பல்லாம் விரதமே இருக்க முடியறது இல்லே... காலையில டிபன் சாப்பிடாம மதியம், 12:00 மணி வரை வெற்று வயிற்றோடு இருந்தேனா... பசி கிள்ளி எடுத்துருச்சு; மதியம் சாப்பிட்டப்பறம் தான் நிதானத்துக்கு வர முடிஞ்சது...' என, பேச்சை ஆரம்பித்தார்.
'பசித்துப் புசி என்பது நல்ல கொள்கை தானே?' எனக் கிளறி விட்டேன்; எழுத, 'சப்ஜெக்ட்' கிடைக்குமே என்ற ஆவலில்!
நான் எதிர்பார்த்தது வீண் போகவில்லை; தன் பாணியில் துவங்கி விட்டார் குப்பண்ணா...
'தமக்குத் தேவையான உணவு எது, சாப்பிட வேண்டிய நேரம் எது என்பதை மனிதனைக் காட்டிலும், எலிகள் நன்னாத் தெரிஞ்சு வச்சுண்டு இருக்காம்... ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிச்சிருக்கா. எது ஊட்டமான சாப்பாடுங்கிறதக் கூட, எலிகள் நன்னாத் தெரிஞ்சு வச்சுண்டு இருக்காம்...' என்றார்.
'என் அபிப்ராயப்படி மசால் வடை தான் அதற்கு ரொம்ப நல்ல உணவு...' என்று முணுமுணுத்தேன். தொடர்ந்து ஒன்றும் தெரியாதவன் போல, 'டாக்டர்கள், 'டயட்' வெறும் கஞ்சி தான் என்கின்றனரே... அந்த, 'டயட்' தானே ஊட்டமான உணவு?' என்று கேட்டேன்.
'அப்படி பொதுவாக சொல்லிட முடியாது...' என்ற குப்பண்ணா தொடர்ந்தார்...
'ஒரு குறிப்பிட்ட சமயத்தில, எந்த உணவு ஏற்றதோ, அது தான் டயட்! ஒருவருக்கு, சத்தான உணவு, இன்னொருவருக்கு சத்தானதாயிருக்க முடியாது. நோயாளியாயிருந்தா, அவர் நாக்கிற்கு பிடிப்பதுடன், உடம்பும் ஏற்க வேண்டும். 'டயட்' நிபுணர்களுக்கு இப்படி பல சங்கடங்கள் உண்டு.
'இதை, இப்போது டயட்டீஷியன்கள் ஒரு கலையாகச் செய்கின்றனர். எங்கே உணவு வாங்கினால் லாபம் என்பது முதல், எப்படி பரிமாறினால் சிறப்பு என்பது வரை விவரமாக ஆராய்ச்சி செய்கின்றனர், 'டயட்' நிபுணர்கள்....' என்றார்.
'அதாவது, மார்க்கெட்டுக்குப் போய் மலிவாக கத்தரிக்காய் வாங்கி வந்தா, அவரும் ஒரு, 'டயட்' நிபுணராக்கும்?' என்றார் லென்ஸ் மாமா கிண்டலாக!
'அதுதான் இல்லை... 'டயட்' நிபுணரின் கண்ணோட்டமே வேறு. கால் கிலோ உருளைக்கிழங்கு, இரண்டு ரூபாய் என்று மலிவாய் வாங்கினால், அது லாபமில்லையாம். ஒரு ரூபாய் அதிகம் கொடுத்து வாங்கினாலும், அந்த உருளைக் கிழங்கில் அதிக வைட்டமின் சத்து இருக்க வேண்டுமாம்; அதுதான் அவர் கணக்குப்படி லாபமாம்!'
'டயட்டீஷியன் பற்றி ஒரு துணுக்குப் படித்தேன்...' என்று குப்பண்ணாவை இடைமறித்தேன்...
'உடம்பு என்னவோ போலிருக்கிறதுன்னு ஒரு டாக்டரிடம் போய் காட்டினாராம் ஒருவர். அவரைப் பார்த்து, 'உங்களுக்குக் கோளாறு ஏதுமில்லை; ஆகாரத்தில் ஊட்டம் போதாது; வைட்டமின் மாத்திரை சாப்பிட்டு வாங்க...' என்றாராம் டாக்டர் என்று கூறி சிரிக்க, 'மகா பெரிய ஹாஸ்யம்ன்னு நினைப்பு...' என்ற லென்ஸ் மாமா, 'பசி மனதில் ஏற்படுகிற உணர்ச்சியா, உடலில் ஏற்படுகிற வலியா?' என்று கேட்டார்.
'பசி தான் தெரியும்; அதன் பாலிசி தெரியாது...' என்றேன்.
குப்பண்ணாவே சொன்னார்... 'நம் இரைப்பை சுத்தமாகக் காலியாகிற போது, அதன் அடிப்பகுதியில் தசைகள் சுருங்க ஆரம்பிக்கிறது. அதனால் தான், பசி ஏற்படுகிறது. 30 வினாடி நேரம் சுருங்கிய பின், கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளும்; மறுபடி பசி. இதில், மனதுக்கும் முக்கியமான பங்கு உண்டு. பசியைக் கவனிக்க ஆரம்பித்தால் தான், ரொம்ப அதிகமாக இருப்பது போல் தோன்றுமாம்; கவனிக்காமலிருந்தால் அவ்வளவு கடுமையாக இருக்காதாம்...'
'கவனிக்கவும் ஆரம்பித்து, சாப்பாடும் கிடைக்காவிட்டால், இடுப்பில் ஈரத் துணியைச் சுற்றி கொள்ள வேண்டியது தான்...' என்றேன்.
'அது விளையாட்டல்ல; உண்மையிலேயே பயனானது தான்...' என்ற குப்பண்ணா, 'இரைப்பையின் தசைகள் கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்குவதற்கு இடங்கொடுக்காமல், இடுப்பில் இறுக்கமாய்க் கட்டிக் கொண்டால், கால் மணி நேரத்துக்கு பசி தோன்றாது என்று கணக்கே செய்திருக்கின்றனர். ஆனால், ஈரத் துணியை ஏன் முக்கியமாகச் சொல்கின்றனர் என்று விளங்கவில்லை...' என்றார்.
'உலர உலர இன்னும் இறுக்கமாய் அழுத்தும் என்பதாயிருக்கலாம். அக்காலத்தில் சித்திரவதை செய்வராமே... அந்த மாதிரி, பச்சைத் தோலை உடம்பு பூரா போர்த்தி, இறுகத் தைத்து வெயிலில் போட்டு விடுவராம். தோல் உலர்ந்து சுருங்கச் சுருங்க, உடம்பைக் கடிக்கும். வேதனை தாள முடியாது...' என்றேன்.
'உடம்பு முழுக்க ஈரத்தோடு இருக்கும் போது, தெர்மா மீட்டர் வைத்துப் பார்த்தால், 98 டிகிரி இருக்க வேண்டியதற்குப் பதிலாக, ரொம்பக் குறைவாக இருப்போமோ?' என்று சந்தடி சாக்கில், சைக்கிள், 'கேப்'பில் தன் சந்தேகத்தைக் கேட்டார் மாமா.
'எனக்கும், மெடிக்கல் சயின்சுக்கும் ரொம்ப தூரம்! கோகுலாஷ்டமி பற்றி, குலாம் காதரிடம் கேட்டது மாதிரி அல்லவா இருக்கிறது...' என்றேன்.
'இந்த மாதிரி பழமொழிகளை சட்டம் போட்டு ஒழிக்கணும். ஒரு முஸ்லிம் பெரியவர் தான், இந்துக்களின் வேதாந்தமான உபநிடதத்தை வெளி உலகத்துக்குப் பரப்பினார் என்று கூறினால் நீ நம்புவாயா?' என்று கேட்டார் குப்பண்ணா.
'நான் ஏன் நம்புகிறேன்... அருமையான கட்டுக்கதை என்று பாராட்டுவேன்...' என்றார் மாமா; நான் மவுனமாக இருந்தேன்.
'கட்டுமில்லை; கதையுமில்லை... முகலாய மன்னர் அவுரங்க சீப்புக்கு, தாராஷிகோ என்று ஒரு தமயனார் இருந்தார்; இந்து மதத்திலும் பற்று கொண்டவர் அவர். உபநிடதங்களின் சிறப்பைத் தெரிந்து, பாரசீக மொழியில் சிலவற்றை மொழி பெயர்த்தார். 'சிர் இ அக்பர்' என்று அதற்கு பெயர்.
'டு பெரான் என்ற மேலை நாட்டு அறிஞர் அந்த மொழி பெயர்ப்பை படித்து, தானும் உபநிடதத்தை ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்த்தார். இப்படித்தான் உபநிடதம் வெளிநாடுகளுக்குப் பரவிற்று...' என்றபடியே எழுந்து, வீட்டை நோக்கிக் கிளம்பினார் குப்பண்ணா.
மீதி இருந்த இரண்டு, 'குவளை'களை முடிப்பதில் மும்முரமானார் லென்ஸ் மாமா!

