sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

எம்.ஆர். ராதா - கலகக்காரரின் கதை (14)

/

எம்.ஆர். ராதா - கலகக்காரரின் கதை (14)

எம்.ஆர். ராதா - கலகக்காரரின் கதை (14)

எம்.ஆர். ராதா - கலகக்காரரின் கதை (14)


PUBLISHED ON : மே 17, 2015

Google News

PUBLISHED ON : மே 17, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ரத்தக்கண்ணீர் படத்தில், நான் ஒத்துழைத்தது பெரிய விஷயம். கொஞ்ச நேரம் எங்கேயாவது போய் வேலை செய்தால், உப்பு, புளிக்கு எதாவது கிடைக்கும் என்று சொல்வரே... அதைப்போல தான் எனக்கு சினிமா வேலை...' என்பார் ராதா.

ரத்தக்கண்ணீர் படத்துக்கு பின், அதில் நடித்த சந்திரபாபுவுக்கும், எம்.என்.ராஜத்துக்கும் நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், ராதாவுக்கு?

தயாரிப்பாளர்கள் அவரை நெருங்க பயந்தனர். அவரை பற்றி அப்படி ஒரு இமேஜ் உருவாகியிருந்தது. அத்துடன், அவருக்கு கதாநாயகன் மற்றும் வில்லன் வேடங்களில் எதைக் கொடுப்பது என்ற குழப்பமும், ரத்த கண்ணீர் படத்திற்காக அவர் வாங்கிய சம்பளமும், தயாரிப்பாளர்களை பின்வாங்க வைத்தது.

ராதாவும் அச்சமயத்தில் பட வாய்ப்புகளை பெரிதாக எதிர்பார்க்கவுமில்லை; வாய்ப்பு தேடி பட கம்பெனிகளின் கதவை தட்டவும் இல்லை. நாடக மேடைகளில் ராதாவின் ராஜாங்கம் தொடர்ந்தது.

கடந்த, 1876ல், முதன்முதலாக நாடகச் சட்டம் இயற்றப்பட்டது. அதன்பின், இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்துவிட்டது. இடைப்பட்ட காலத்தில், நாட்டில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டன. அதன் காரணமாக, அச்சட்டத்தின் பல பகுதிகள் திருப்தியளிக்கக் கூடியதாக இல்லை. எனவே, புதிய நாடகச் சட்டத்தைக் கொண்டு வர இருப்பதாக அந்த அறிக்கை கூறியது.

ஒரு நாடகமோ, நடிப்போ ஆட்சேபகரமானவை என்று சர்க்கார் கருதினால், அதை அரசு தடை செய்யலாம். தடை விதிக்கப்பட்ட பின்னும், ஒருவர் நாடகத்தையோ, நடிப்பையோ தொடர்ந்து நடத்தினாலும், நடத்த அனுமதித்தாலும், அதற்கு ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.

ஒருமுறை, லட்சுமி காந்தன் நாடகம் போடப் போவதாகச் சொல்லி, தடை செய்யப்பட்ட ராமாயண நாடகத்தை ஆரம்பித்தார் ராதா. சிறிது நேரத்திலேயே போலீசார் வந்து விட்டனர். 'இது தடை செய்யப்பட்ட நாடகம்; நீங்க வேற பேர்ல போடுறீங்களே...' என்றார் இன்ஸ்பெக்டர்.

'அதை அப்புறம் பேசலாம்; என் நாடகத்தைப் பாக்க உள்ள வரணும்ன்னா மந்திரியா இருந்தாக் கூட டிக்கெட் வாங்கித்தான் வரணும். நீங்க வாங்கிட்டீங்களா?' என்று கேட்டார் ராதா.

விழித்தார் இன்ஸ்பெக்டர்.

'வாங்கலயா... சரி பரவாயில்ல உட்காருங்க. நாடகம் முடிஞ்ச பின் பேசிக்கலாம்...' என்று நாடகத்தைத் தொடர ஆரம்பித்தார். செய்வதறியாமல் தவித்த இன்ஸ்பெக்டர், நாடகம் முடியும் வரை காத்திருந்து, பின்னர் ராதாவைக் கைது செய்தார்.

மறுநாள் நீதிமன்றத்துக்கு ராமர் வேடத்திலேயே தான் சென்றார் ராதா. அவருக்கு ஒருவார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இப்படி எத்தனை தடைகள் வந்தாலும், விடுவதாக இல்லை ராதா. ஒரு கை பார்த்துவிடலாம் என்று எதற்கும் துணிந்து களமிறங்கினார்.

அரசு, 144 தடை உத்தரவு போடுவதும், அதை ராதா மீறுவதும், கைதாகி விடுதலையாவதும் வாடிக்கையாகிப் போனது.

ராதா தெருவில் நடந்தால், மேடையில் நடித்தால், நாடகம் முடிந்து வீட்டுக்குப் போனால் என, எங்கும் பிரச்னைகள் காத்திருந்தன. காங்கிரஸ்காரர்கள் தன்னைக் கொல்லத் திட்டமிடுவதாகக் கருதிய அவர், யாராவது எதிரே வந்து மறித்தால், அவர்கள் மீது காரை ஏற்றிவிடலாம் என்று முடிவெடுத்து, எங்கு போனாலும் தானே காரை ஓட்ட ஆரம்பித்தார் ராதா.

ராமாயணத்துக்கு மட்டுமல்ல, போர்வாள் போன்ற பிற நாடகங்களுக்கும், தடை உத்தரவு வர ஆரம்பித்தது. இன்று, பக்தன் நாடகம் நடைபெறும் என்று அறிவிப்பார். ஆனால் நடப்பது, போர்வாள் நாடகமாக இருக்கும். பெயர் மாறியதால் அரசாங்க ஆர்டர் செல்லாததாகிவிடும்.

ராதாவின் நாடகங்களை கண்காணித்து ரிப்போர்ட் அளிக்குமாறு சி.ஐ.டி.க்களை அரசு, அனுப்பியது. அவர்களும் நாடகம் ஆரம்பிக்கும் முன்னரே முதல் வரிசையில் வந்து அமர்ந்தனர்.

முதல் இரு காட்சிகள், லட்சுமி காந்தன் நாடகத்தில் இருந்து நடிக்கப்பட்டது. மூன்றாவது காட்சியில், இழந்த காதலில் இருந்து ஒரு காட்சியும், நான்காவது காட்சியில், மயில் ராவணனாகத் தோன்றி நடித்தார் ராதா. எல்லாவற்றையும் மக்கள் ரசித்தனர். ஆனால், வந்த சி.ஐ.டி.க்களோ குழம்பினர்.

மறுநாள் கமிஷனர் அருள், ராதாவைக் கூப்பிட்டனுப்பினார். அவர் மிகவும் கண்டிப்பானவர். டிபார்ட்மென்டே அவரைப் பார்த்து நடுங்கிய காலம் அது.

'நாடகத்துக்கு வந்த சி.ஐ.டி.களை, 15 ரூபா கொடுத்து டிக்கெட் வாங்கிட்டு வரச் சொன்னீங்களா?' என்று கேட்டார்.

'அய்யா... நீங்க தப்பா நினைச்சுக்கக் கூடாது. சர்க்காருக்கே இது புரியணும். நாங்க கலைஞர்கள்; நாங்க செய்றது வியாபாரம். அந்த இடத்திலே யார் வந்து உட்கார்ந்தாலும், காசு கொடுத்துத்தான் ஆகணும், சி.ஐ.டி.களாகவே இருந்தாலும், டிக்கெட் வாங்கித் தான் நாடகம் பாக்கணும்ங்கிறத ஒரு நாடகக்காரனான ராதா, சர்க்காருக்குச் சொல்லித் தர்றான்னு எனக்குப் பேரு கிடைக்கும்...' என்றார்.

கமிஷனருக்கு ராதாவின் வாதம் நியாயமாகப்பட்டது. அன்றும் நாடகம் நடந்தது. இரண்டு சி.ஐ.டி.கள் வந்தனர். முன்வரிசை டிக்கெட்டை, 100 ரூபாயாக உயர்த்தினார்; ஆனால், 200 ரூபாய் கொடுத்த பின்பே அவர்களை அரங்கிற்குள் நுழைய அனுமதித்தார் ராதா.

புதிய நாடகத் தடைச் சட்டத்தை நிறைவேற்றுவது குறித்து சென்னை சட்டமன்றத்தில் விவாதம் நடந்துகொண்டிருந்தது. டி.கே.சண்முகம், நாராயணசாமி பிள்ளை மற்றும் ராஜமாணிக்கம் உட்பட பலர் அங்கு பேசுவதற்காக வந்திருந்தனர். யாரும் எதிர்பாராத நேரத்தில், ராதாவும் சட்டசபைக்குள் நுழைந்தார்.

'இங்க எனக்கு மரியாதை கிடைக்காது; இருந்தாலும் என்னதான் பேசுறீங்கன்னு பார்ப்போம்ன்னு தெரிஞ்சுக்கத்தான் உள்ளே வந்தேன். இந்த டிராமாடிக் ஆக்டைக் கொண்டு வர்றது ரொம்பவும் கேவலம். எனக்காகத்தான் போடுறீங்கன்னு நல்லாத் தெரியுது. ஆனா, நீங்க எதைப் போட்டாலும் நான் மீறுவேன். உங்களுக்கு கெட்ட பேரு வராமப் பாத்துக்கோங்க...' என்று அதிரடியாகப் பேச ஆரம்பித்தார்.

'அது உங்க இஷ்டம்; இப்போ பேசாதீங்க...' என்றனர் சபையில் உள்ளவர்கள்.

'நீங்க பேசறப்போ, நான் பேசக்கூடாதா என்ன? நான் நாடகம் போடறவன். நீங்க நிறுத்தறவங்க. அவ்வளவு தான்... பேசாதேன்னு சொல்லாதீங்க...' என்று வாதாடினார் ராதா.

'நாடகங்களிலே கடவுள் இருக்குன்னு சொல்ல எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதேபோல கடவுள் இல்லன்னு சொல்லவும் உரிமை இருக்கு. அதனால், இங்கே பேச ராதாவுக்கு உரிமை இருக்கு...' என்று, ராதாவுக்கு ஆதரவாகப் பேசினார் டி.கே.சண்முகம்.

மந்திரி கோபால் ரெட்டி எழுந்தார். 'கலை இங்கே டி.கே.எஸ். பிரதர்ஸ்கிட்டே இருக்கு; நாங்க பார்த்திருக்கிறோம். மீதியெல்லாம் மூர் மார்க்கெட் கலை...' என்றார் ராதாவைப் பார்த்தவாறு!

'கனம் மந்திரியாரே! தாழ்த்தப்பட்டவர்களை விடக் கேவலமானவர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த எங்களை, கலைஞர்கள் என்று சொல்ல ஆரம்பிச்சுருக்கீங்க. இது, எங்களை சோப் போடுவதற்காக சொல்லுறதுங்கிறது நிறைய நடிகர்களுக்குத் தெரியாது. நாங்கள் உயர்ந்து வருகிறோம். அதை யாரும் தடுக்க முடியாது. மூர் மார்க்கெட் கலைஞர்கள் இருப்பதாகச் சொன்னீர்கள்; பொய்யில்ல. எப்படி நாட்டில் நல்ல மந்திரிகளும், 'செங்காங்கடை' மந்திரிகளும் இருக்கின்றனரோ அப்படித்தான் இதுவும்!' என்றார் ராதா.

செங்காங்கடை என்றால் பொறுக்கி என்று அர்த்தம். கோபால் ரெட்டியின் முகம் தொங்கிப்போனது. சட்டசபைக்குச் சென்று தன் எதிர்ப்பை வெளிப்படுத்தியதில் ராதாவுக்கு மகிழ்ச்சி.

புதிய நாடகத் தடை சட்டம் தொடர்பாக பிரச்னை எழுந்த சமயம், பர்மா, மலேஷியா நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்

ஈ.வெ.ரா.,

'ஈ.வெ.ரா., வந்த பின் அடுத்து என்ன செய்யலாம்ன்னு முடிவெடுக்கலாம். அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருங்க...' என்று திராவிட கழகத்தினர் ராதாவைக் கேட்டுக் கொண்டனர்.

'நடிகர் ஒருவருக்காகவே தனிச்சட்டம் இயற்றப்படுவது இந்திய வரலாற்றிலேயே இதுவே முதல் முறை. சென்னை சட்ட சபையிலே கொண்டு வரப்பட்டிருக்கின்ற புதிய நாடகத் தடை மசோதாவின் நோக்கத்தைத் பற்றி யார் என்ன சொன்ன போதிலும், இதன் அவசரத்தையும், நீதி இலாகா, அமைச்சரின் பேச்சையும் கூர்ந்து கவனிப்போருக்கு, இம்மசோதா, தோழர் ராதாவுக்காகவே வருகிறது என்ற உண்மை விளங்கும்.

'உணவு, உடை, கல்வி, வேலையில்லாமை போன்ற எத்தனையோ அடிப்படைப் பிரச்னைகள் இருக்கும்போது, வைதீக நாடகங்களை காப்பாற்றுவதற்காக, ஒரு சட்டம் இயற்றுவதற்கு, நீதி இலாகா அமைச்சர் துடியாய்த் துடிப்பது வருந்துதற்குரியதே...' என்று விடுதலை நாளிதழில் கண்டனத் தலையங்கங்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

அப்போது...

— தொடரும்.

தேனாம்பேட்டை நாடக நடிகர்கள் மீது, தனி பிரியம் வைத்திருந்தார் ராதா. அவர்கள், ராதாவை, 'நைனா' என்று தான் அழைப்பர். அவர்கள் தன்னை தேடி வரும் போதெல்லாம் சாப்பிடச் சொல்வார் ராதா. நினைத்த நேரத்தில் எல்லாம் அவர் வீட்டிற்கு போய் சாப்பிட்ட நலிந்த கலைஞர்களும் உண்டு.

நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,

சென்னை.

- முகில்







      Dinamalar
      Follow us