
மொபைல் போனால் புதுவகை பிரச்னை!
என் தோழியின் மொபைல் போனுக்கு, ஒரு மர்ம நபர் போன் செய்து, 'உங்க புருஷன் உங்கள நல்லா பாத்துக்கலன்னா கவலைப்படாதீங்க; நான் உங்கள நல்லா பாத்துக்கிறேன்...' என்றதுடன், தோழியின் வீட்டில் நடந்த சில விஷயங்களை கூறி உள்ளான். தன் வீட்டு விஷயம், தன்னையும், தன் பெற்றோரையும் தவிர, வேறு எவருக்கும் தெரியாத நிலையில், குழம்பிப் போனாள் தோழி. ஒரு கட்டத்தில், மர்ம நபரிடம் இருந்து டார்ச்சர் அதிகமாகவே, வீட்டில் கூறி, போலீசாரிடம் புகார் கொடுத்து, விசாரித்த போதுதான் விஷயம் தெரிந்தது.
அந்த மர்ம நபர், தோழியின் அப்பாவுடன் வேலை பார்க்கும் சக ஊழியரின் மகன் என்பது!
ஒரு நாள், தோழி, தன் கணவர் வீட்டில் நடந்த பிரச்னையை, தன் அப்பாவிடம் மொபைல் போனில் கூறி கொண்டு இருந்த போது, அவள் அப்பாவின் மொபைலில், பணம் தீர்த்து விட்டதால், அவசரத்திற்கு சக ஊழியரின் மொபைல் போனிலிருந்து தோழியுடன் பேசி இருக்கிறார்.
அந்த மொபைலில், பேசுபவர்களின் குரல் பதிவாகும் வசதி இருந்திருக்கிறது. அந்த வசதி, தன் மொபைலில் இருப்பது, அந்த அலுவலக நண்பருக்கும் தெரியவில்லை. அவருடைய மகன், அவர் இல்லாத சமயங்களில் மொபைலில், டவுன்லோடு செய்து, அவர் பேசியவற்றை, 'கால் ரிக்கார்டிங்கில்' போட்டு கேட்டுள்ளான். அப்படி கேட்கும் போது தான், தோழியின் அப்பா மற்றும் தோழி பேசியதை கேட்டு, தோழிக்கு, போன் செய்து, 'டார்ச்சர்' கொடுத்துள்ளான்.
இப்படியெல்லாம் கூட, வீட்டு விஷயம் வெளியில் பரவுமா என்று, அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம்.
மொபைல் போனில் வீட்டு பிரச்னையோ, அந்தரங்க விஷயங்களோ, உங்கள் வங்கி கணக்கு எண் மற்றும் கிரடிட் கார்ட் எண் போன்றவற்றை சொல்லும் போது, கொஞ்சம் கவனம் தேவை. அதுவும் எக்காரணம் கொண்டும், மற்றவர் மொபைலில் சொந்த விஷயங்கள் பேச வேண்டாம்.
அடுத்தவரின் அந்தரங்கங்களை அறிய ஆவலோடு இருக்கும் இந்த மாதிரி ஜென்மங்கள் இருக்கும் வரை, நாமும் எச்சரிகையோடு இருப்பது நல்லது!
— ஜெனோவா மனோகர்,
சென்னை.
இரவு நேர மின் விபத்தை தவிர்க்க!
சமீபத்தில், வெளியூர் செல்வதற்காக எங்கள் ஊர் பஸ் நிலையத்தில் காத்திருந்த போது, ஒரு கடையை மூடி, மெயின் ஸ்விட்சை அணைப்பதை கவனித்தேன். இது, நல்ல யோசனையாகத் தோன்றியது. ஏனெனில், மின் கசிவின் காரணமாக, கடைகளில் இரவில் தீ விபத்து ஏற்படுகிறது என்று கேள்விப்பட்டுள்ளோம். அதனால், இந்த யோசனையை, கடை வைத்திருப்போர் மட்டுமின்றி, வீடுகளிலும், வெளியூர் செல்லும் போது பின்பற்றினால், மின் கசிவால் ஏற்படும் மின் விபத்தை ஒட்டு மொத்தமாக தவிர்க்கலாம்.
— ஆர்.சாந்தி, ராமநாதபுரம்.
ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டவர்!
நண்பர் ஒருவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அவர் மனைவி மறுபடியும் கர்ப்பம் அடைந்ததால், மனைவியை, டாக்டரிடம் அழைத்துச் சென்று, 'கர்ப்பத்தில் இருப்பது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா...' என்று கேட்டுள்ளார்.
பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர், 'ஆண் குழந்தை' என்று சொல்லி, 200 ரூபாய், பீஸ் வாங்கி, அனுப்பி விட்டார். 10 மாதம் கழித்து, மறுபடியும் பெண் குழந்தையே பிறந்து விட்டது. டாக்டரிடம் சென்ற நண்பர், 'என் மனைவிக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று சொன்னீர்களே... ஆனால், பெண் குழந்தை பிறந்துள்ளதே...' என்றார் கோபமாக!
அதற்கு டாக்டர், 'பெண் குழந்தை என்று சொன்னால், கர்ப்பத்தை கலைக்கும்படி சொல்வீங்க; அந்த வேலைய நான் செய்ய மாட்டேன்; அதனால, நீங்க வேறு டாக்டரிடம் சென்று கர்ப்பத்தை கலைப்பதற்கு முயற்சி செய்வீங்க. சட்டப்படி கர்ப்பத்தை கலைப்பது குற்றம் என்றாலும், கர்ப்பத்தை கலைப்பதற்கான காலத்தை உங்க மனைவி தாண்டியிருந்தார். அந்நிலையில், கர்ப்பத்தை கலைத்தால், உங்க மனைவியின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்பதால், பொய் சொல்ல வேண்டியதாகி விட்டது. இப்போதாவது உங்க மனைவியோட உடல் நிலையை கவனத்தில் கொண்டு, அவருக்கு, குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துடுங்க...' என்று அறிவுறுத்தினார்.
மறுபேச்சில்லாமல் ஆண் குழந்தை கனவை கலைத்து, மனைவிக்கு கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்ய இசைந்தார் நண்பர். அந்த மருத்துவரின் சரியான அணுகுமுறையை, மனதிற்குள் பாராட்டினேன்.
— என். நடராஜன், வெள்ளனூர்.