
ஆக., 3 ஆடிப்பெருக்கு
'பெருக்கு' என்றால், பெருகுதல் என்ற பொருள் மட்டுமல்ல, 'சுத்தம் செய்தல்' என்ற பொருளும் உண்டு. ஆடி மாதத்தில் காவிரியாறு பெருக்கெடுத்து ஓடும்; அப்போது ஆற்றில் கிடக்கும் அசுத்தங்கள் எல்லாம் கடலுக்கு அடித்துச் செல்லப்படுவதால், ஆறு தூய்மையாகக் காட்சியளிக்கும்.
இதைப் போன்றே மனித மனங்களிலும் ஆசை, பொறாமை, ஆணவம் மற்றும் தீய எண்ணங்கள் உள்ளிட்ட கெட்ட குணங்கள் நிரம்பியுள்ளன. இதை, பக்தி என்னும் வெள்ளம் மூலம் அகற்ற வேண்டும். இதுவே, ஆடிப்பெருக்கு விழா உணர்த்தும் தத்துவம்.
இது, செல்வ அபிவிருத்திக்குரிய நாள்; ஆடிப்பெருக்கன்று துவங்கும் தொழில்கள், பலமடங்கு லாபம் தரும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அதுபோல், இன்று செய்கிற தானம் உள்ளிட்ட நற்செயல்களால், புண்ணியம் பலமடங்கு பெருகும்.
திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா மிகவும் பிரசித்தம். மக்கள் ஆறுகளுக்கு சென்று புனித நீராடி பாவங்களைத் தொலைப்பர். ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் திருமேனியைச் சுற்றி வரும் புண்ணியம் பெற்றது காவரி ஆறு. இது, அகத்தியர் எனும் மாமுனிவரால் உருவாக்கப்பட்டது. மேலும், காகம் வடிவில் வந்த விநாயகரின் திருவடி ஸ்பரிசம் பெற்றது. இத்தகைய புண்ணிய நதியில், சுமங்கலிகள் தங்கள் கணவருடன் நீராடி, மாங்கல்யக் கயிறு மாற்றினால் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர். கன்னிப் பெண்கள், நல்ல வாழ்க்கைத் துணை வேண்டியும், விவசாயிகள், விளைச்சல் அதிகரிக்க வேண்டும் என, காவிரியை வேண்டுவர்.
காவிரி, ரங்கநாதரின் தங்கையாகக் கருதப்படுவதால், இந்நாளில், சமயபுரம் பகுதிகளில், சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு சீர் செய்யும் நிகழ்வு நடக்கும். சகோதரர்கள் இங்குள்ள ஆதிமாரியம்மன் (சமயபுரம் மாரியம்மனின் மூத்த சகோதரி) கோவிலுக்கு, தங்கள் சகோதரிகள் மற்றும் அவர்களது கணவர்களை அழைத்துச் சென்று, மாரியம்மனை வழிபட்டு, அவர்களுக்கு சீர் கொடுப்பர்.
அதேபோன்று, தன் தங்கை காவிரிக்கு சீர் கொடுக்க, அம்மா மண்டப படித்துறைக்கு எழுந்தருள்வார் ரங்கநாதர். அப்போது, சீதனப் பொருட்களாக பட்டு, தாலிப்பொட்டு, மஞ்சள் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் ஆற்றில் மிதக்க விடப்படும்.
ஆடிப்பெருக்கன்று வீட்டில் பூஜை செய்வதுடன், அன்று மாலை விளக்கேற்றும் முன், வாசலில் பசுஞ்சாண நீர் தெளித்து, மாக்கோலம் இட வேண்டும். பின்பு, லட்சுமி தாயாரின் படத்தின் முன் பால், தேன், தாமரை, தானியம், சர்க்கரைப் பொங்கல் படைத்து பூஜை செய்ய வேண்டும். பாலை குழந்தைகளுக்கும், தேனைப் பெண்களுக்கும், தானியத்தைப் பறவைகளுக்கும், சர்க்கரைப் பொங்கலை ஏழைகளுக்கும் தானமாக வழங்கவேண்டும்.
ஆடிப்பெருக்கு நன்னாளில் சகல செல்வமும் பெற்று வாழ ரங்கநாதரையும், காவிரித் தாயையும் வேண்டுவோம்!
தி.செல்லப்பா