
'திரையுலக சக்கரவர்த்திகள்' நூலில் எஸ்.எம்.உமர் எழுதுகிறார்: சென்னை, ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்த டி.ஆர்.மகாலிங்கம் பங்களாவிற்கு, 'சுகுமார (மகன் பெயர்) பவனம்' என்று பெயர். எனக்குத் தெரிந்து, வேறு எந்த நடிகரும் பல கார்கள், அதுவும் விலை உயர்ந்த வெளிநாட்டுக் கார்கள் வைத்திருந்ததில்லை. அவரிடம், 12 கார்கள் இருந்தன. புகழ் பெற்ற நடிகரான இவர் படத் தயாரிப்பில் இறங்கினார். மச்சரேகை, மோகன சுந்தரம் மற்றும் சின்னதுரை ஆகிய படங்களை தயாரித்து வெளியிட்டார். தெருப்பாடகன் என்ற படத்தை இவரே இயக்கி தயாரித்தார்; படம் பாதியோடு நின்று விட்டது.
சரிவுப் படலமும் துவங்கியது. பொருளாதார வீழ்ச்சி, கடனாளி யாக்கியது. 'போதம், தனம், கல்வி ஒன்றி வரும் காலத்தே மாதர் மேல் வைப்பார் மனம்...' என்பது எத்தனை அனுபவப் பூர்வமான உண்மை!
மகாலிங்கம் வாழ்வில் தடுமாற்றம், மனமாற்றம் வந்ததை அவரே கூறக் கேட்டிருக்கிறேன்...
'மாளிகை போன்ற சுகுமார பவனமும், மனைவி மக்களும் அங்கே இருந்தனர்; நான் மட்டும் அடையாறில் வேறொருத்தி இல்லத்தில், பல காலம் கிடந்தேன். கடன்காரர்களுக்கு மறைந்து, பிள்ளைகள் முகம் மறக்கும் அளவுக்கு காலம் ஓடியது. இல்லாதவனை எவர் தான் மதிப்பர்! நானும் கேவலமாக நடத்தப்பட்டேன்.
அன்று இரவு, 2:00 மணி அளவில், 'இனி இவள் முகத்தில் விழிப்பதே பாவம்...' என அடையாறிலிருந்து கால்நடையாக மயிலாப்பூருக்கு நடந்தே வந்தேன். என் சொந்த வீட்டில் கள்ளனைப் போல் மெதுவாக நடந்து போர்டிகோ அருகில் வந்தேன். ஊரே உறங்கிக் கொண்டிருந்தது. கதவைத் தட்ட துணிவில்லாமல், போர்டிகோ திண்ணையில் கையை தலைக்கு வைத்து சுருண்டு படுத்தேன். விடியற்காலை மகள் வந்து பார்த்திருக்கிறாள். அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. 'அம்மா... இங்கே, யாரோ ஒரு மாமா படுத்திருக்கிறார்...' என்று அவள் கூறுவது என் காதில் விழுந்தது...' என்றார், கண்ணீருடன்!
முதன் முதலில், தமிழில் சுயமுன்னேற்ற நூல்களை எழுதிப் புகழ் பெற்றவர் அப்துற் ரகீம். 'வாழ்வைத் துவங்கு' நூலில் இவர் எழுதியது:
வெற்றி பெறுபவனின் மேலான குணம் எதுவென்றால், சுற்றி வளைக்காமல், நேரடியாக விஷயத்தைக் கூறுவது தான். அவன், ஒரு விஷயத்தின் மேலேயும் செல்ல மாட்டான்; கீழேயும் செல்ல மாட்டான்; சுற்றி வளைத்துக் கொண்டும் செல்ல மாட்டான். நேரடியாக அதைத் துளைத்துக் கொண்டு செல்வான்.
வியாபார மன்னரான, வானோ மேக்கர் கூறுகிறார்... 'ஒரு இளைஞனை முன்னுக்கு வரவிடாமல் தடுக்கக் கூடியதில் முக்கியமானது, அதிகமாகப் பேசுவது தான். இது, என் அனுபவ பாடம். எவன் அதிகமாக சிந்தித்து, குறைவாகப் பேசுகிறானோ, அவனே வெற்றி பெறுகிறான்...' என்கிறார்.
இதை அறியாத பலர், அதிகம் பேசினால் தன்னைக் கெட்டிக்காரர் என்று உலகோர் நினைப்பர் என எண்ணி, எப்போதும் பேசிக் கொண்டே யிருப்பர்.
நீங்கள் எழுதவோ, பேசவோ ஆரம்பித்தால், எங்கு முடிக்க விரும்புகிறீர்களோ, அதற்கு வெகு அண்மையிலிருந்தே ஆரம்பியுங்கள்! சொல்ல வேண்டியதை ஆணித்தரமாகச் சொல்லுங்கள். சொன்னதும் முடித்துக் கொள்ளுங்கள்.
கிரேக்க நாட்டில், கி.மு., 490ல் மாரத்தான் என்ற இடத்தில், நடைபெற்ற பெரும் போரில், பெர்ஷியர்களை வென்று விட்ட நற்செய்தியை, ஏதென்ஸ் நகரத்திற்கு சொல்ல கிரேக்க ராணுவ வீரன் பெடிபைட்ஸ் ஓட்டமாக ஓடினான். ஏதென்ஸ் நகர எல்லையை அடைந்ததும், குற்றுயிராய்க் கீழே விழுந்தவன், 'வெற்றி வெற்றி... நாம் வென்று விட்டோம்; கொண்டாடுங்கள்!' என்று கூறி, இறந்து விட்டான். வெற்றிச் செய்தியைக் கூற, அவன் ஓடி வந்த தூரம், 40 கி.மீ.,!
கடந்த 1896ல் முதன் முதலில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற போது, அந்த வீரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மாரத்தானிலிருந்து, ஏதென்சுக்கு ஓட்டப் பந்தயம் நடத்தப்பட்டது. இதுதான், முதல் மாரத்தான் ரேஸ்! அதன்பின் நடந்த மாரத்தான் ரேஸ், 42 கி.மீ., தூரமாக அதிகரிக்கப்பட்டது.
நடுத்தெரு நாராயணன்