sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பியுங்க! - 2015ல் குற்றால டூர் சுவாரஸ்யம்!

/

மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பியுங்க! - 2015ல் குற்றால டூர் சுவாரஸ்யம்!

மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பியுங்க! - 2015ல் குற்றால டூர் சுவாரஸ்யம்!

மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பியுங்க! - 2015ல் குற்றால டூர் சுவாரஸ்யம்!


PUBLISHED ON : ஆக 02, 2015

Google News

PUBLISHED ON : ஆக 02, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இருபத்து ஏழாவது ஆண்டாக, கடந்த ஜூலை, 21, 22, 23ம் தேதிகளில் நடந்து முடிந்த டூர், நிறைவடையும் போது, டூரில் கலந்து கொண்ட வாசகர்கள் அனைவரும் ஒரே குரலில், 'பஸ்சை திருப்புங்கோ...' என்று சத்தமிட்டனர். அது, ஏன் என்பதை கட்டுரையின் நிறைவில் சொல்கிறேன்.

மதுரை ஓட்டல் பிரேம்நிவாஸில் தங்க வைக்கப்பட்ட வாசகர்களை, ஓட்டல் சார்பாக, ராமசாமி - மீனாட்சி தம்பதியினர் வரவேற்று, செட்டிநாட்டு பலகாரங்களால் விருந்து வைத்து உபசரித்தனர். 'மதுரையின் சிறப்பான பருத்திப்பாலும், ஜிகர்தண்டாவும் அடுத்து ரூர் வரும் போது ஏற்பாடு செஞ்சுருங்க...' என்று ஜெயபால், 'டிப்ஸ்' கொடுக்க, அக்கறையாக குறித்துக் கொண்டனர்.

மதுரை சமூக அறிவியல் கல்லூரியின் தலைவரும், முன்னாள் ராணுவ வீரருமான கேப்டன் டி.வி.பி. ராஜா, தன் மனைவி பாமாவுடன் வருகை தந்து, வாசகர்களுக்கு பொன்னாடை போர்த்தி, பரிசுகள் வழங்கி கவுரவித்து, வழியனுப்பி வைத்தார்.

மதுரை ஸ்ரீவேல்முருகன் டிரான்ஸ்போர்ட் பஸ் நிறுவனத்தில் இருந்து, புது பஸ் ஒன்றை வாசகர்களுக்காக அனுப்பியிருந்தார், அதன் நிர்வாகி ஓம்பிரகாஷ். இந்த பஸ்சில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால், பஸ்சிற்குள் இருக்கும் பெரிய, 'டிவி'யில் படம் பார்க்கும் போது, தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்க்கும் அனுபவம் கிடைக்கும். ஆனால், யார் படம் பார்த்தனர்... திருமங்கலம் தாண்டுவதற்குள்ளாகவே, பேராசிரியர் கண்ணன் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை துவங்க, கச்சேரி களை கட்டியது.

வாசகிகள் ஹரிப்பிரியா, பவானி, சகுந்தலா, ஜெனகா மற்றும் ரேவதி போன்றோர் அற்புதமாக பாடி அசத்தினர். இதில், சத்யப்பிரியாவும், நந்தினியும் சேர்ந்து பாடி புதுமை படைத்தனர்.

இவர்களது பாடல்களால் சந்தோஷமடைந்தது போன்று, மழையுடன் வாசகர்களை வரவேற்றது ராஜபாளையம். அந்துமணியின் நண்பர்களும் ராஜபாளையம் தொழிலதிபர்களுமான ராமசுப்பிரமணியராஜா மற்றும் பிரபாகர் ஆகியோர் வாசகர்களுக்கு சிற்றுண்டி கொடுத்து வரவேற்றதுடன், பயணத்தின் போது தேவைப்படும் பதினாறு வகையான பொருட்கள் கொண்ட, 'கிப்ட் பேக்' ஒன்றை அனைவருக்கும் கொடுத்து அசத்தினர்.

குற்றாலம் அலங்கார் ரிசார்ட்சில் தங்க வைக்கப்பட்ட வாசகர்கள், சாரலும், தூறலுமாய் குளுகுளுவென ரம்மியமாய் மாறியிருந்த சூழலை ரசித்தபடியே குளிப்பதற்கு தயாராயினர். அதிலும், ஜெயபால், திலீப்குமார், செந்தில்நாதன், சரவணகுமார் போன்றோர் ஏதோ ஜல்லிக்கட்டுக்கு தயாராவது போல தலையில் முண்டாசுடன் கிளம்பினர்.

முதலில் வாசகர்கள் குளிக்க சென்றது ஐந்தருவி. 'ஹோ...' என்ற இரைச்சலோடு, ஐந்து பிரிவாக விழுந்த அருவியின் அழகையும், கம்பீரத்தையும் ரசித்த வாசகர்கள், 'நான் மாட்டேன்... நான் மாட்டேன்...' என்று அருவியில் தலைகாட்ட பயந்தனர். காரணம், வாசகர்களில் பெரும்பாலோர் இப்போது தான் முதன் முறையாக குற்றாலம் வந்துள்ளனர். ஆகவே, 'எப்படி இருக்குமோ என்ன செய்யுமோ...' என்று தயக்கம் இருந்தது. அவர்களை உற்சாகப்படுத்தி, குளிக்க அனுப்பினால், அதன்பின், 'நான் வரமாட்டேன்... நான் வரமாட்டேன்...' என்று அருவியில் இருந்து வருவதற்கு அடம்பிடித்தனர். அவர்களில் முக்கியமானோர் ஷர்மிளா, பெனாசிர் மோத்தி, சுபஸ்ரீ!

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் குளித்து முடித்து, அருவியை விட்டு வெளியே வந்தால், மதியம் சாப்பிட்ட சாப்பாடு எல்லாம் ஜீரணமாகி, மீண்டும் பசிக்க ஆரம்பித்துவிட்டது. இப்படி நடக்கும் என்பது தெரிந்தவர் போல திண்டுக்கல் கீதா மெஸ் உரிமையாளர்களான சந்திரசேகர் - விஜயலட்சுமி தம்பதி, ஒரு சரக்கு வேனையே நடமாடும் உணவகமாக மாற்றி, அருவிக்கரைக்கே கொண்டு வந்து சுடச்சுட போளி, போண்டா, தூள் பஜ்ஜி, டீ, காபி என்று சுவையாக கொடுத்தனர்.

அன்று மாலை, பட்டிமன்ற நடுவர் ஞானசம்பந்தனின் நகைச்சுவை, அருவியாக கொட்ட, வாசகர்கள் சிரித்த சிரிப்பில், குற்றாலமே அதிர்ந்தது.

இரண்டாவது நாள் காலை, 'எல்லாருக்கும் முன்பாக பழைய குற்றாலம் போய்விடுவோம்; அப்போதுதான் நெருக்கடியில் சிக்காமல் குளிக்க முடியும்...' என, நினைத்து சென்றால், எங்களுக்கு முன், பழைய குற்றால அருவியில் ஏகப்பட்ட கூட்டம்; என்னவென்று பார்த்தால் பெரும்பாலோர் வாரமலர் வாசகர்கள்.

இந்த ஆண்டு டூருக்கு தேர்வான வாரமலர் வாசகர்கள், சிவப்பு பனியனை சீருடையாக அணிந்து, ஐந்தருவியில் குளித்ததும், அடுத்து, பழைய குற்றால அருவிக்கு தான் வருவார்கள் என்ற செய்தி, 'வாட்ஸ் அப்'பில் பரவியதால், டூர் வாசகர்களையும், அந்துமணியையும் எதிர்பார்த்து பழைய குற்றாலத்தில் குவிந்திருந்தனர் வாரமலர் வாசகர்கள்.

பூத்தூவலாய் விழுந்த பழைய குற்றால அருவியில் குளித்துவிட்டு திரும்பும் போது, 'கொடுத்து வச்சவங்கய்யா நீங்க... நானும் தான் பல ஆண்டுகளாக கூப்பன் போடுறேன்; விழமாட்டேங்குதே... உங்க கையையாவது கொடுங்க...' என்று கூறி பலர், டூர் வாசகர்களின் கை பிடித்து, குலுக்கி பெருமைப்படச் செய்தனர்.

அடுத்ததாக மெயினருவி... அருவியின் பிரமாண்டத்தை பார்த்து மிரண்ட வாசகர்கள், குளிப்பதற்கு வாரமலர் செய்திருந்த ஏற்பாட்டை பார்த்து, மேலும், மிரண்டனர்.

வெறும் குளியல் மட்டுமின்றி, குற்றாலத்தின் சிறப்புகளான சித்ரசபை மற்றும் குற்றாலநாதர் கோவில் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். திருமணம் தள்ளிப்போகும் வாசகியருக்கு, குற்றாலநாதர் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு, 'அடுத்துவரும் போது மணமாலையுடன் வாருங்கள்...' என்று வாழ்த்தி, மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

இரண்டாவது நாள் மாலை, வாசகர்களை உற்சாகப்படுத்த பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. வாசகர்கள், 'ஜோக்' சொல்லி பாட்டுப் பாடியதுடன், ஆரோக்கியமான கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

மூன்றாவது நாள், புலியருவி... 'ஹேய்...சூப்பரா இருக்கே...' என்றபடி திரும்பத் திரும்ப குளித்து மகிழ்ந்தனர். புலியருவியில் தண்ணீர், சிறு ஆறு போல ஓட, அதில், வாசகர்கள் அனைவரின் செல்லமாக மாறிப்போன சிறுமி ஜனனி நீச்சலடித்து மகிழ்ந்தார். வாசகிகள் பரிதா பேகம், ராஜேஸ்வரி, கலாவதி மற்றும் சரளா போன்றோர் நடு ஆற்றில் காலை நீட்டி அமர்ந்து, கதை பேசி சிரித்து மகிழ்ந்தனர்.

குளியல் முடிந்து, பின், ஷாப்பிங் மற்றும் பேக்கிங் முடித்து குற்றாலத்தை விட்டு திரும்பும் போது, அலங்கார் ரிசார்ட்ஸ் அதிபர் ஈஸ்வர்ராஜ், 'குற்றால டூர் வாசகர்கள் எப்போது வந்தாலும், பாதிக்கட்டணத்தில் தங்கலாம்...' என்று சொல்லி, அதற்கான கூப்பனையும், கூடவே, ரிசார்ட்சில் வளர்த்துவரும் பல்வேறு மூலிகை செடிகளையும் பரிசாக வழங்கினார்.

டூரை நிறைவு செய்து, பஸ் மதுரை திரும்பும் போது, மதுரை சுப்புராம், 'சித்தாடை கட்டிக்கிட்டு...' என்று பாட்டு பாட, அதற்கு ஆஸ்திரேலியா அழகர்ராஜா, அற்புதமாய் நடனமாட, ஆட்டோ கண்ணன் உற்சாகப்படுத்த, சிறிது நேரத்தில், பஸ்சில் உட்கார்ந்திருந்தவர்களை விட, நடனமாடியவர்கள் தான் அதிகமாகிப் போனார்கள்.

காதல் திருமணம் செய்து கொண்ட திலீப்குமார் - சங்கீதா, சரவணகுமார் - லோகநாயகி, செந்தில்நாதன் - கவுரி ஜோடியினரின் நடனம் அற்புதமாக இருந்தது. பார்த்துக்கொண்டிருந்த முத்துக்குமாரி, சுமதி, வினோதினி, சுதா மற்றும் அந்துமணியின் அமெரிக்க நண்பி மகாலட்சுமி குடும்பத்தினர் மற்றும் சென்னை வாழ் டாக்டர் நண்பர் ஏ.பிரபுராஜ் ஆகியோரும் நடனமாடி, மகிழ்ந்தனர்; மற்றவர்களையும் மகிழ்வித்தனர்.

இத்தகைய சந்தோஷமான சூழலில், மதுரை திருநகரை கடந்துவிட்டது பஸ். 'இன்னும், 20 நிமிடத்தில் ரயில் நிலையம் அடைய இருக்கிறோம்; இத்துடன், இந்த ஆண்டு டூர் நிறைவு பெறுகிறது...' என்று அறிவித்ததும், 'என்னாது... டூர் முடியப்போகுதா... இப்பத்தான் நாங்க ஒரே குடும்பமாயிருக்கிறோம்; பிரிச்சுடாதீங்க. பஸ்சை திருப்புங்க இல்லன்னா ஓட்டல் பிரேம் நிவாஸ்க்கு விடுங்க; மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிப்போம்...' என்றனர்.

'ஆமாங்கய்யா... புள்ளைகள் சொல்றது நிஜம்தான்; பஸ்சை திருப்புங்கய்யா...' என்று, 70 வயதை தாண்டிய வாசகி ராமாயம்மாள் சொன்ன போது, அவரது கண்களில் நிஜமும், கூடவே கொஞ்சம் கண்ணீரும் இருந்தது.

அந்துமணியை நீங்களாவது காட்டக் கூடாதா?

டூர் ஆரம்பித்ததுமே, அந்துமணி எங்கே என்ற கேள்வியும் ஆரம்பித்து விட்டது. 'கண்டுபிடிப்போருக்கு, 500 ரூபாய் ரொக்க பரிசு...' என்று பேராசிரியர் கண்ணன் சொல்ல, அந்துமணிக்கான தேடல், வேகம் பிடித்தது. முதல் நாள் மாலை, வாசகர்களுக்கு வழங்கப்பட்ட பரிசில் அந்துமணியின் கையெழுத்து இருக்க, 'அப்ப நிச்சயம் நம்ம கூடவே தான் இருக்கிறார்...' என்று சுவாரசியம் கூடியது.

இரண்டு நாட்களாகியும் கண்டுபிடிக்க முடியாமல் திணறிப்போயினர். இரண்டாவது நாளன்று, 'தொப்பி அணிந்து நம்ம கூடவே இருக்காரே... அவர்தான் அந்துமணி...' என்றார் வாசகி சுமதி. அவரது பேச்சை கேட்டு, அனைவரும் ஆவலுடன் அரங்கின் பின் இருக்கைகளை திரும்பிப் பார்த்தால், அங்கே, 10 பேர் தொப்பி அணிந்து உட்கார்ந்திருக்கவே, ரொம்பவே நொந்து விட்டனர்.

'ஐயா அந்துமணி அவர்களே... எங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான வாசகர்களை, வாழ்க்கையில் மறக்க முடியாத அளவிற்கு சந்தோஷப்படுத்திய, சந்தோஷப்படுத்திக் கொண்டிருக்கிற, இன்னும் வரக்கூடிய காலத்தில் சந்தோஷப்படுத்த இருக்கிற நீங்கள் நீடுழி வாழ, குற்றாலநாதர் கோவிலில் உங்கள் பெயரில் அர்ச்சனை செய்தோம்; அங்கே கொடுத்த மாலையையும், பிரசாதத்தையும் ஏற்றுக்கொள்ளவாவது, எங்கள் முன் வரக்கூடதா...' என்றனர். இதையெல்லாம் கேட்ட அந்துமணி, அப்போது அந்த வேண்டுகோளை சபையில் ஏற்காவிட்டாலும், அதன்பின், மாலை மற்றும் பிரசாதத்தை ஏற்றுக் கொண்டார்.

அது மட்டுமல்ல, வயதான ராமாயம்மாள் தடுமாறிய போதெல்லாம், அவர் கைப்பிடித்து அழைத்துச் சென்றார்; 'வெட்னரி படிப்பு முடித்ததும் உங்களுக்கு வேலை காத்திருக்கிறது...' என்று வாசகி ஹரிப்பிரியாவுக்கு உறுதி கொடுத்தார்; பஸ்சில் நடனமாடியவர்களை கைத்தட்டி உற்சாகப்படுத்தினார்; வாசகர்களுக்கு உணவு பரிமாறினார்.

சாப்பிடும் போது, ஒவ்வொருவரையும் அவர்களின் ஊர் மற்றும் பெயர் சொல்லி அழைத்து, வேண்டியதை கேட்டு பரிமாறிய போது, மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் கொண்ட வாசகர்கள், 'எப்படி உங்களுக்கு எங்களைப் பற்றி இவ்வளவு விவரம் தெரிந்திருக்கிறது...' என்று ஆச்சரியப்பட்டவர்கள், 'நீங்கள் தானே அந்துமணி...' என்று அவரிடம் கேட்காமல், 'நீங்களாவது அந்துமணியை காட்டக்கூடாதா...' என்று தான் கேட்டனர்; அவரும் சிரித்துக் கொண்டார்.

எல். முருகராஜ்






      Dinamalar
      Follow us