sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

திண்ணை!

/

திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஆக 23, 2015

Google News

PUBLISHED ON : ஆக 23, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியோடர் பாஸ்கரன் எழுதிய, 'தமிழ் சினிமா வளர்ந்த கதை' நூலிலிருந்து: சென்னைக்கு சினிமா வந்தது, 1897ல்! அப்போது, ஆர்தர் கேவ்லக் என்பவர், மதராஸ் ராஜதானி கவர்னராக இருந்தார். ஒரு நாள் மாலை, மூர்மார்க்கெட்டை அடுத்த விக்டோரியா பப்ளிக் ஹாலில், ஒரு கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடியிருந்தது. ஹாலின் நடுவே எட்வர்ட் என்ற ஆங்கிலேயர், சிறிய நுாதன கருவி ஒன்றில் படச்சுருள் ஒன்றை நுழைத்து, 'சினிமாஸ்கோப்' என்று விளம்பரப்படுத்தியிருந்த காட்சிக்கு, தயார் செய்து கொண்டிருந்தார்.

அப்போதுதான், தமிழ் தினசரியான, 'சுதேசமித்திரன்' இதழ் (1889 முதல்) வெளிவர துவங்கியிருந்தது. சென்னை சாலைகளில், அங்கொன்றும், இங்கொன்றுமாக மிகுந்த இரைச்சலுடன் ஓடிக் கொண்டிருந்தன, மோட்டார் கார்கள். இரு ஆண்டுகளுக்கு முன் தான், டிராம் சர்வீஸ் சென்னைக்கு வந்திருந்தது. அத்துடன், டெலிபோன் வசதி சில பணக்காரர்கள் வீடுகளுக்கு வந்திருந்தது.

ஒரு கறுப்புத் தட்டில் (இசைத்தட்டு) சங்கீதத்தை அடைத்து, விரும்பும் போது ஒரு பெட்டியின் மேலிட்டு, பாட்டுப் பாட வைக்கும் அதிசயத்தை சிறுசிறு கூட்டமாக நின்று அனுபவித்துக் கொண்டிருந்தனர், சென்னைவாசிகள்.

இதன் மூலம், சமுதாயத்தின்   அடிமட்டத்தில் இருப்போருக்கும் சாஸ்த்ரீய சங்கீதம் கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இத்தனைக்கும் நடுவேதான், சலனப்படமும் வந்தது.

அன்று, விக்டோரியா ஹாலில் காட்டப்பட்டவை சில நிமிடங்கள் ஓடும் மவுனப் படங்கள்.

தொடர்ந்து இரு ஆண்டுகளில், பல மவுனப் படக் காட்சிகள், சென்னையின் வெவ்வேறு இடங்களில் காண்பிக்கப்பட்டன. ஒவ்வொரு காட்சியாளரும், தத்தம் காட்சிக்கு, 'பயாஸ்கோப், சினி மோட்டோ கிராப்ஸ் மற்றும் மோட்டோ - போட்டோ ஸ்கோப்' என்று வெவ்வேறு பெயர் வைத்துக் கொண்டாடினர். இறுதியாக நிலைத்தது, மும்பை லூமியே சகோதரர்கள் சூட்டிய, 'சினி மோட்டோ கிராப்ஸ்!' அதாவது, அசையும் படங்கள். இரு கிரேக்க சொற்களின் கூட்டுப் பெயர். இக்காட்சியாளர்கள் எல்லாருமே வெள்ளையர்கள்.

எழும்பூர், சென்ட்ரல், மற்றும் ஜார்ஜ்டவுன் முதலிய இடங்களை சுற்றியே வளர்ந்திருந்த அன்றைய சென்னையில், நிறைய திறந்த வெளிகள் இருந்தன. லைசென்ஸ் முதலிய கவலைகள் இல்லை; மின்சாரம் தேவையில்லை. ஏனென்றால், அந்த ஆரம்ப கால, 'புரொஜக்டர்'களில் மக்னிசிய விளக்குகளே ஒளிவீச்சுக்குப் பயன்படுத்தப்பட்டன. இரண்டு, மூன்று காட்சிகள் ஓரிடத்தில் காட்டப்பட்டதும், பெட்டியை மூடி, அக்குழு வேறிடம் செல்லும்.

சென்னை அண்ணா சாலையில், ஒருவர் நிரந்தர சினிமா கொட்டகை கட்டி, அதற்கு, 'எலக்ட்ரிக் தியேட்டர்' எனப் பெயர் வைத்தார். மக்னீசிய விளக்குகளுக்கு பதில், மின்சார ஒளி மூலம் திரையிடப்படும், 'புரொஜக்டரை' விளம்பரப்படுத்த, இந்தப் பெயர். முதல் எட்டு ஆண்டுகள் சென்னையில் மட்டுமே சலனப்படக் காட்சிகள் நடைபெற்று வந்தன.

'சங்கீதச் சிரிப்பு' நூலிலிருந்து: சங்கீத மேதை அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு, திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வர இசை என்றால் ரொம்ப பிடிக்கும். ஒருமுறை, ராஜரத்தினம் பிள்ளையின் கச்சேரிக்கு பின், அரியக்குடி பேசியது:

பிசிறு இல்லாமல், கற்பனா சக்தியுடன் இனிமையான ஒலியை, பிள்ளையவர்களின் நாயனத்தில் கேட்டோம்; வாசிக்கும் முறையில் வாசித்தால் தான், நாயனத்தின் ஒலியை ரசிக்க முடியும். இல்லாவிட்டால், அது, 'நாயி'னத்தின் ஒலியாகத்தான் இருக்கும்!

'புகழ் பெற்றவர்கள் வாழ்வில்' நூலிலிருந்து: ஒருமுறை லண்டன் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார் சார்லி சாப்ளின். அவரது நகைச்சுவை நிமிடத்திற்கு நிமிடம், விறுவிறுப்பாக இருந்தது. திடீரென்று, தொலைக் காட்சியிலிருந்து சத்தம் வருவது நின்றது. திரையில் அவர் பேசும் காட்சி, ஊமைப்படம் போல் தெரிந்தது.

நிலைய அதிகாரிகள் விழுந்தடித்து ஓடி, என்ன கோளாறு என்று பார்த்தனர். அது, நேரடி ஒளிபரப்பு; இரு நிமிடங்கள் சென்றதும், 'கடகட'வென சிரித்தார் சாப்ளின். தொடர்ந்து ஒலியும் கிடைத்தது. பின்தான் புரிந்தது அந்த இரு நிமிடங்களும், அவர் பேசாமல் வெறும் வாயை மட்டுமே அசைத்து, எல்லாரையும் திணற அடித்திருக்கிறார் என்பது!.

நடுத்தெரு நாராயணன்






      Dinamalar
      Follow us