
கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்த பவித்ரா, ''லட்சுமியம்மா... 11:00 மணி போல அத்தைக்கு ஞாபகமாக சூப் வைச்சு கொடுத்திடுங்க. ஜுரம் அடிச்சதால ரெண்டு நாளா சரியாக சாப்பிடாம சோர்ந்து போயிருக்காங்க,'' என்றாள்.
''நீங்க கிளம்புங்கம்மா; நான் பாத்துக்கிறேன், '' என, சமையல்காரம்மா சொல்ல, மாமியார் இருக்கும் அறையை எட்டிப் பார்த்தாள்.
''பவித்ரா... வேலைக்கு கிளம்பிட்டியா... ஆபிஸ் வேலையா ஊருக்கு போயிருக்கிற வரதன் எப்ப வர்றான்?''என்று கேட்டார் மாமியார்.
''ரெண்டு நாள்ல உங்க பிள்ளை வந்திடுவாரு அத்தை... நான் கிளம்பறேன்,''என்று கூறி, விடைபெற்று வாசலுக்கு வந்தவள், மகள் லலிதா வருவதை ஆச்சரியமாக பார்த்தாள்.
லலிதாவிற்கு திருமணம் முடிந்து மூணு மாதம் தான் ஆகிறது. கணவனுடன் இதே சென்னையில் தான் இருக்கிறாள்.
போன் கூட செய்யாமல் மகள் வந்து நின்றது ஆச்சரியம் அளிக்க, ''வா லலிதா... என்ன வரேன்னு கூட சொல்லாம, புறப்பட்டு வந்திருக்க... மாப்பிள்ள வரலயா?''என்று கேட்டாள்.
பதில் சொல்லாமல் சோர்வுடன் உட்கார்ந்த லலிதா, ''என்கிட்ட எதுவும் கேட்காத... நீ வேலைக்கு போயிட்டு வா சாயந்திரம் பேசிக்கலாம்,'' என்றாள்.
''அது இருக்கட்டும்; உன் முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு... என்ன விஷயம்ன்னு சொல்லு...''
''அங்க இருக்க எனக்கு பிடிக்கலம்மா. என் மாமியார் என்னை அதிகாரம் செய்றதும், இதைச் செய், அதைச் செய்யின்னு ஆர்டர் போடுறதும்... நான் என்ன அவங்க வீட்டு வேலைக்காரியா... ''நான், அவங்க பிள்ளையோட மனைவிங்கிற எண்ணம் அவங்க மனசுல இருக்கிற மாதிரி தெரியல. அவர்கிட்ட இதப்பத்தி பேசலாம்ன்னா, அவங்கம்மா மேல குறை சொல்றேன்னு தப்பா எடுத்துப்பாரோன்னு தயக்கமா இருக்கு.
''அதான் மனசே சரியில்ல; அம்மாவ பாத்துட்டு வரேன்னு அவர்கிட்ட சொல்லிட்டு புறப்பட்டு வந்துட்டேன்,'' என்றாள் லலிதா.
''சரி... நீ சாப்பிட்டுட்டு, பாட்டியோடு பேசிட்டு இரு; எனக்கு காலேஜுக்கு நேரமாச்சு; சாயந்திரம் வந்து விவரமாகப் பேசலாம்.''
''ஹலோ மாப்பிள்ளை... நான் பவித்ரா பேசறேன்.''
''சொல்லுங்க அத்தை.. நல்லாயிருக்கீங்களா... லலிதா அங்க தான் வந்திருக்கா பாத்தீங்களா...''
''பாத்தேன் மாப்பிள்ள... மதியம் லஞ்ச்சுக்கு எங்க காலேஜுக்கு பக்கத்திலிருக்கிற ஓட்டலுக்கு வர்றீங்களா... உங்க கிட்ட சில விஷயங்க பேசணும்ன்னு நினைக்கிறேன்,'' என்றாள்.
''என்ன விஷயம் அத்தை... சாயந்திரம் தான் வீட்டுக்கு வர்றேனே அப்ப பேசுவோம்; அப்படியே லலிதாவையும் அழைச்சிட்டு வந்திடுவேன்,''என்றான்.
''இல்ல மாப்பிள்ள... உங்ககிட்ட பர்சனலா பேசணும்ன்னு நினைக்கிறேன்; உங்களுக்கு சிரமம்ன்னா வேணாம்.''
''அப்படியெல்லாம் இல்லத்தை; நான், 1:00 மணிக்கு அங்கு வர்றேன்.''
டேபிள் மீது வைக்கப்பட்டிருந்த சாப்பாட்டையே பார்த்தபடி மவுனமாக இருந்தாள் பவித்ரா.
''சாப்பிடுங்க அத்தை... இங்க அடிக்கடி வருவீங்களா... சாப்பாடு அருமையா இருக்கு,'' என சாப்பிட்டபடி சொன்னான் குமார்.
''மாப்பிள்ளை... நான் சொல்ல வர்றதை நீங்க சரியா புரிஞ்சுக்கணும்...''
''எதுக்கு அத்தை இந்த பீடிகை... தைரியமா சொல்லுங்க.''
''நீங்க அப்பா இல்லாம, அம்மாவோட அரவணைப்பில வளர்ந்தவரு. தனி மனுஷியா உங்கள வளத்து ஆளாக்கியிருக்காங்க உங்க அம்மா. அதனால, அவங்களுக்கு உங்க மேலே அன்பும், பாசமும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்; அதே மாதிரி உங்ககிட்டேயும் அவங்க எதிர்பாப்பாங்க...'' என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே, ''நீங்க சொல்றது ரொம்ப சரி... எங்கம்மா என் மேலே ரொம்ப அன்பு வச்சிருக்காங்க; நானும் இன்னைக்கு வரைக்கும், அவங்க மனசு கோணாம தான் நடந்துட்டு வரேன்,''என்றான் குமார்.
புன்னகையோடு மருமகனை பார்த்தவள், ''என் மாமியாரும் அப்படித்தான்; சின்ன வயசிலேயே புருஷனை பறிகொடுத்து, தனக்கு எல்லாமே பிள்ளை மட்டும் தான்னு வாழ்ந்துட்டு வர்றாங்க. எனக்கு கல்யாணமான புதுசுல என் மாமியார் என்கிட்டே சொன்னது இதுதான்:
'நீ, என் பிள்ளைக்கு மனைவியா, இந்த வீட்டிற்கு மருமகளாக வந்திருக்கே... தனி மனுஷியா என் பிள்ளையை கஷ்டப்பட்டு வளர்த்தேன்.
'என் உலகமே என் பிள்ளைதான். இதை, நீ முதல்ல புரிஞ்சுக்கணும். என் பிள்ளை கிட்ட நான் காட்டற அன்பும், பாசமும் உனக்கு மிகையாகக் கூட தோணலாம். அதான் உன்கிட்டே என் மனசிலிருக்கிறத எல்லாம் தெளிவாக பேசிடலாம்ன்னு நினைக்கிறேன். என்னை மாதிரி பிள்ளைய மட்டுமே நம்பி வாழற அம்மாக்கள், எங்கே மருமகள் தன் பிள்ளைய தன்னிடமிருந்து பிரிச்சிடுவாளோன்னு பயப்படுவாங்க.
'அதை மறைக்க, பிள்ளை மேல் தனக்கிருக்கிற உரிமைய வெளிப்படுத்த, அதிகாரத்தை மருமகள் கிட்டே காட்டுவாங்க. ஆனா, நான், என் பிள்ளை மேல் இருக்கிற உரிமைய வெளிப்படுத்த அதிகாரத்தைக் காட்ட விரும்பல; அன்பை தான் வெளிப்படுத்த நினைக்கிறேன்.
'என் பிள்ளையும், நீயும் எனக்கு ஒண்ணுதான். என் பிள்ளை மேல் வச்சிருக்கிற அன்பு, நிச்சயம் உன்கிட்டேயும் வெளிப்படும். என்னை உன் தாய் ஸ்தானத்தில் வச்சு கடைசி வரை பராமரிப்பியா பவித்ரா'ன்னு சொன்னாங்க...
''இன்னைக்கு வரைக்கும் அவங்க எனக்கு ஒரு அம்மாவாகத்தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. இதை நான் எதுக்கு உங்ககிட்ட சொல்றேன்னா, உங்கம்மாவோட மன நிலையும் இதே மாதிரி தான் இருக்கு. என் மகள், எங்கே உங்கள அவங்க கிட்டேயிருந்து பிரிச்சுடுவாளோன்னு பயப்படறாங்க. அதன் வெளிப்பாடு, அவகிட்டே கண்டிப்பையும், அதிகாரத்தை மட்டும் காட்டறாங்க. அது, அவ மனசிலே வெறுப்பை தான் வளர்க்கும்.
''காலையில லலிதா என்கிட்டே, உங்கம்மாவோட நடவடிக்கைக தன்னை கஷ்டப்படுத்தறதாவும் உங்ககிட்ட சொன்னா, நீங்க தப்பா எடுத்துப்பீங்களோன்னு பயப்படறதா சொன்னா...'' என்றாள் பவித்ரா.
''நீங்க சொல்றது எனக்கு புரியது அத்தை... அதான் கொஞ்ச நாளா முகம் வாடி, சோர்வா இருந்தாளா... எங்கம்மாவோட பயம் அர்த்தமில்லாததுன்னு அவங்களுக்கு நான் புரிய வைக்கிறேன்,''என்றான் குமார்.
''அது மட்டுமில்ல மாப்பிள்ள... அவங்க மனசு வருத்தப்படாம, நீங்க தான் நல்லபடியா அவங்களுக்கு எடுத்துச் சொல்லணும். மருமகள் கிட்ட காட்டுற அன்பும், பிரியமும் தான், மகன் அருகில் கடைசி வரை அவங்களை வச்சிருக்கும்கிறதை நீங்க தான் நல்லபடியா சொல்லணும்.
''உங்களை நம்பி வந்த உங்க மனைவியையும், சந்தோஷமா வச்சிக்கணும்; உங்க அம்மாவுக்கும் ஒரு நல்ல மகனா இருக்கணும்,'' என்றாள்.
தனக்கு புரியும்படி தெளிவாக பேசும் மாமியாரை பார்த்து, ''உங்க அணுகுமுறை எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு அத்தை. மாமியார் மேலே தப்பான அபிப்ராயத்தோடு வந்த மகளை, மேலும் அவ மனசை கெடுத்து, குடும்பத்தை பிரிக்க நினைக்காம, உள்ள நிலைமைய எனக்கு புரியும்படி அழகா எடுத்துச் சொன்னீங்க; ரொம்ப நன்றி. சாயந்திரம் நானே வீட்டுக்கு வந்து லலிதாவை கூட்டிட்டு போறேன்; இனி நிச்சயம் லலிதா இது மாதிரி புகாரோடு வர மாட்டா,'' என்றான் உறுதியுடன் குமார்.
ராஜ் பாலா