
என்.சாந்தகுமாரி, திருவொற்றியூர்: பெண்களும் வேலைக்குச் செல்ல சம வாய்ப்பு இருக்கும் இக்காலத்தில், திருமணத்திற்குப் பின் பெண்ணை வேலைக்குப் போக வேண்டாம் எனக் கூறுவது சரியா?
சரியே இல்லை. புருஷன் ஆயிரம் ஆயிரமா சம்பாதிச்சாலும், தன் பங்குக்கு மனைவியும் சம்பாதிக்கத் தான் வேண்டும்; இதனால், ஐந்து பைசாவிற்கும், பத்து பைசாவிற்கும் கணவன் கையை எதிர்பார்க்க வேண்டியது இல்லை. மேலும், நாட்டு முன்னேற்றத்துக்கு உதவக்கூடிய கரங்களை கட்டிப் போட்டால், அதனால், நாட்டிற்கு ஏற்படும் நஷ்டம் எவ்வளவு என்று எண்ணிப் பாருங்கள்!
ஜி.சுப்பிரமணியன், கோவை: என் மனைவி எழுத்து வாசனை அறியாதவள்; பெரியவர்களின் விருப்பத்திற்காக கிராமத்துப் பெண்ணான என் மனைவியை மணந்தேன். 'வாசனை' அறியாமல் இருப்பதால், சில நேரங்களில் உபத்திரவமாக உள்ளது. என்ன செய்வது?
உபத்திரவம் இல்லாமல் இருந்தாலும், எழுத்தை கற்பிப்பவனை இறைவன் என்று அல்லவா போற்றுகின்றனர். அதில் உண்மையும் இருக்கிறதே... அதனால், 'வாசனை' அளிக்க முயலுங்கள் - வாசனை இல்லாமல் இருப்பதால், சில நேரங்களில் கிடைக்கும் அரிய சந்தோஷத்தை அனுபவிக்க மனதை மாற்றுங்கள்!
வி.மாரியப்பன், கடலூர்: எனக்கும், என் சகோதரருக்கும், 15 ஆண்டுகளாக பாகப்பிரிவினை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. இருவரிடமும் பணம் காலி! பஞ்சாயத்து பேசி, சமாதானமாக போய், கேசை வாபஸ் வாங்கலாம் என்றால், இளைய சகோதரர் ஒத்து வரமாட்டேன் என்கிறார்; உங்கள் கருத்து என்ன?
கோர்ட் - கேஸ் என்றால், எளிதில் முடியும் காரியம் இல்லை. உங்கள் சகோதரரை கொஞ்சம் விட்டுக் கொடுத்து முடித்துக் கொள்ளச் சொல்லுங்கள். சொத்து விஷயங்களில் கோர்ட் படி மிதிக்காமல், சுமுகமாக முடித்துக் கொள்வது உத்தமம் என்பதை, சொத்துள்ள, தகராறு ஆரம்பிக்க தயாராக உள்ள, மற்றவர்களும் புரிந்து கொண்டால் சரி!
க.ஆரோக்கியசாமி, கன்னடிகுப்பம்: முதியோர் கல்வி பற்றி உங்கள் கருத்து என்ன?
தம்மையும் அறியாமல் அரசியல்வாதிகள் செய்த ஒரே உருப்படியான திட்டம்!
எஸ்.பாக்கியராஜ், சுருளிபட்டி: எதை அடக்காவிட்டாலும் நாக்கை காக்க வேண்டும் என்கின்றனரே... சில சமயங்களில் அதட்டல், உருட்டல், மிரட்டல் மூலமாகத் தானே காரியத்தை சாதிக்க முடிகிறது! அப்படி இருக்க, நாவடக்கம் தேவை என்பது அடிபட்டு போகிறதே... விளக்கமாய் பதில் கூறவும்...
நன்மையைச் செய்யும் போது, அதற்கு குந்தகம் விளைவிப்பவர்களை அதட்டி, உருட்டி, மிரட்டுவதற்கும் நாவடக்கத்திற்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை.
வி.ஆர்.பத்மநாபன், மயிலாப்பூர்: தினமலர் நாளிதழைப்போல் அனைத்து தினசரிகளும் புத்தக இணைப்பு தருவது ஏன்?
வெற்றி பெற்ற, முன்னணியில் இருப்பவர்களை பின்பற்றுவது உலக வழக்கம் தானே!
எம்.சி.தங்கப்பாண்டி, கொடுவிலார்பட்டி: நான் விரும்பிய பெண் தற்போது விதவை; அதிலும் ஒரு குழந்தையுடன்... நான் என்ன செய்வது?
நீர் விரும்பிய அந்தப் பெண்ணின் விருப்பம் என்னவென்பதை அறிந்து கொண்டீரா? அவர், 'ஒகே' சொன்னால், 'டும் டும்...' ஏற்பாடு செய்ய வேண்டியது தானே!
டி.ஆர்.ஜெயக்குமார், குரோம்பேட்டை: அதிகமான நண்பர்களைப் பெற்றிருப்பவன் அதிர்ஷ்டசாலியா?
அதிர்ஷ்சாலிதான்.... அந்த அதிகப்படியான நண்பர்கள் உங்கள் மணிபர்சையும், பொன்னான நேரத்தையும் பதம் பார்க்காத வரையில்!