sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஆக 23, 2015

Google News

PUBLISHED ON : ஆக 23, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சமீபத்தில், மதுரை செல்லும் வாய்ப்பும், ஓய்வும் கிடைத்தது. ஓட்டல் ஒன்றில் தங்கினேன்.

ஓட்டலா அது... பெரிய பெரிய விசாலமான அறைகள்... இரண்டு அறையாக இருக்க வேண்டியது ஒரு அறையாக இருந்தது.

அறையில் ஓடிக் கொண்டிருந்த, 'டிவி'யை ஆப் செய்து விட்டு, எடுத்துச் சென்றிருந்த புத்தகங்களில் இருந்து, பழைய காங்கிரஸ் புள்ளியும், எழுத்தாளருமான சின்ன அண்ணாமலை எழுதிய புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.

புத்தகத்தில் இருந்து ஒரு சுவையான பகுதி:

வயசுக் கோளாறு காரணமாக, என் நண்பர் ஒருவருக்கு, ஒரு பெண் சினேகிதமானாள். நெருக்கமான உறவு ஏற்பட்டதால் நண்பருக்கு பணச்செலவும் அதிகமாயிற்று.

அவரது, பெண் மயக்கம் தெளிய, பலவாறு முயன்றேன். 'எப்படி, இதிலிருந்து விடுபடுவது...' என்று சிந்தித்துக்கொண்டே நண்பர், தன்னை அறியாமல் மீண்டும், அங்கேயே வட்டமிட்டார்.

இந்நிலையில் ஒரு நாள், நகைக்கடையிலிருந்த நண்பரின் காதலி, தொலைபேசியில் நண்பரை அழைத்து, உடனே அங்கு வரும்படி கூப்பிட்டாள். அவரும் அவசரமாகப் போனார்.

காப்பு, சங்கிலி போன்ற தங்க நகைகளை எடுத்து வைத்திருந்தாள் காதலி.

'என்ன விஷயம்?' என்று நண்பர் கேட்டார். ஊரில் தன் பெரியம்மா மகளுக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும், மணப்பெண்ணுக்குப் போட, சில நகைகள் தேவை என்று கூறி, அவள் எடுத்து வைத்திருந்த நகைகளைக் காட்டி, 'அவர்களுக்கு இந்த நகைகள் பிடித்திருந்தால், வாங்கிக் கொள்ளலாம்; நகையை எடுத்துப் போக நீங்கள் கையெழுத்துப் போட்டால், கடைக்காரர் சம்மதிப்பார்...' என்று கூறினாள் காதலி.

'ப்பூ... ஒரு கையெழுத்து தானே...' என்று, மறுபேச்சு பேசாமல் கையெழுத்து போட்டு, நகையை வாங்கி, அவளிடம் கொடுத்து விட்டார் நண்பர். அன்று முழுவதும், காதலி வீட்டில் ஒரே குதூகலம்; நண்பருக்குக் கோலாகலம்.

அவள் சொன்னபடி, தன் குடும்பத்தாருடன் பெரியம்மாவின் ஊருக்குப் புறப்பட்டுப் போனாள். அந்த ஊர் சென்னையிலிருந்து, 400 மைல் (ஐந்து மைல் எட்டு கி.மீ.,) தொலைவிலுள்ளது. ஒரு வாரம் கழித்து திரும்பி வந்தாள். ஆர்வத்துடன் காதலியைக் காணச் சென்றார் நண்பர்.

நண்பரை கண்டதும், காதலியின் குடும்பத்தினர் விம்மலும், விக்கலும், விசும்பலுமாக அழுகையுடன், நகை திருட்டு போய் விட்டது என்று பிரலாபித்தனர். எதுவும் பேசவில்லை நண்பர். இரண்டு நாட்கள் சென்றதும், அவர்கள் வீட்டில் தான் நகை இருக்கிறது என்பது, நண்பருக்கு நிச்சயமாயிற்று.

இந்நிலையில், போலீசில் புகார் கொடுத்து விட்டார் நகைக் கடைக்காரர். நகையை திருப்பிக் கொடுத்து விடும்படி காதலி குடும்பத்தாரிடம் எவ்வளவோ மன்றாடினார் நண்பர். அவர்கள், 'இல்லவே இல்லை...' என்று சாதித்து விட்டனர்.

நகைக் கடைக்காரருக்கு கொடுக்க, நண்பரிடம் பணமும் இல்லை. நேராக என்னிடம் வந்து விஷயத்தைச் சொன்னார். நான், அவரை போலீஸ் கமிஷனரிடம் அழைத்துச் சென்று, கமிஷனரிடம் விவரமாக எடுத்துக் கூறினேன்.

உடனே, ஒரு போலீஸ் அதிகாரியைக் கூப்பிட்டு, அந்தப் பெண்ணின் வீட்டை சோதனை போடும்படி உத்தரவிட்டார் கமிஷனர்.

போலீஸ் அதிகாரி, பெண்ணின் வீட்டிற்கு போனதும், அவருக்கு ஏக உபசாரம் நடந்திருக்கிறது. வந்த விஷயத்தை அதிகாரி சொல்லியிருக்கிறார். 'அதற்கென்ன... நன்றாகப் பாருங்கள்...' என்று குழைந்திருக்கின்றனர்.

வீட்டை சோதனை போட்ட பின், 'நகைகள் ஒன்றும் இல்லை...' என்று வந்துவிட்டார் அதிகாரி.

என் நண்பரின் காதலி வீட்டில், ஒரு சமையல்காரி உண்டு. அவளுக்கு, நண்பர் நிறையச் செய்திருக்கிறார். அவள் மார்க்கெட்டுக்குப் போகும் நேரம், நானும், நண்பரும் அவளைச் சந்தித்தோம்.

அவளிடம் நூறு ரூபாய் கொடுத்து, நைசாகப் பேசி, அன்று அதிகாரி வந்தபோது, நகையை எங்கே ஒளித்து வைத்திருந்தனர் என்ற விஷயத்தை தெரிந்து கொண்டோம். மறுநாள் போலீஸ் கமிஷனரைச் சந்தித்து, 'தயவு செய்து மீண்டும் ஒரு முறை அந்த வீட்டைச் சோதனை செய்ய உத்தரவிடனும்; அதிகாரியுடன் நானும் செல்ல அனுமதிக்கனும்...' என்றேன்.

அப்படியே செய்தார் கமிஷனர். அதிகாரியும், நானும் மேற்படி பெண்ணின் வீட்டிற்குச் சென்றோம். எங்கள் இருவருக்கும் பலத்த உபசாரம் நடந்தது.

பல இடங்களில் தேடினார் அதிகாரி; நானும் கூடவே இருந்தேன். பெண்களும் ஆர்வத்துடன் பீரோ, மேஜை, பெட்டி எல்லாவற்றையும் திறந்து காட்டினர். ஒரு இடத்திலும் நகை இல்லை.

அதிகாரி என்னைப் பார்த்தார். நான், 'சமையற்கட்டில் தேடலாம்...' என்று கூறி, சட்டென்று சமையல் அறைக்குள் நுழைந்தேன்.

அங்குள்ள டப்பாக்கள், பெட்டிகள் எல்லாவற்றையும் அதிகாரி சோதனை செய்தார்; ஒன்றும் கிடைக்கவில்லை.

'இனி என்ன செய்வது?' என்றார் அதிகாரி.

'இதனுள் தான் இருக்கிறது...' என்று அடுப்பில் சோறு வெந்து கொண்டிருக்கும் தவலையைக் காட்டினேன்.

'சோறு கொதிக்கும் தவலையிலா இருக்கும்?' என்று சந்தேகமாக கேட்டார் அதிகாரி.

அதற்குள், 'சோறு வேகிறது; அதுக்குள் நகை எப்படி இருக்க முடியும்...' என்று அதிகாரியை ஒட்டி, உரசிப் பேசினர் அவ்வீட்டுப் பெண்கள்.

நான் ஒரே அடியாக, 'சோற்று தவலையை கீழே இறக்கிச் சோதனை போடுங்கள்...' என்று சப்தம் போட்டேன்.

அதிகாரியும் வேறு வழியின்றி, சோற்றுத் தவலையைக் கீழே இறக்கச் சொல்லி, சோற்றை மூங்கில் கூடை ஒன்றில் கவிழ்த்தார்; அத்தனை நகைகளும் பொல பொலவென்று கொதிக்கும் சோறுடன் சேர்ந்து கொட்டின!

அன்றே என் நண்பரின் பெண் மயக்கம் தீர்ந்தது. சோதனை போட வேண்டிய இடங்களில், இனி கொதித்துக் கொண்டிருக்கும் சோற்றுப் பானையையும் சோதனை போட வேண்டும் என்ற புதிய விஷயம், போலீசாருக்கும் புலனாயிற்று!

— பெண்ணாசை எங்கே கொண்டு போய் விட்டது பாருங்கள்!

'குப்பண்ணா... ப்ரூட் என்பது தானே மனோதத்துவ மேதையின் பெயர்... அதை புரூட் என்று தானே உச்சரிக்கணும்?' என்று கேட்டேன்.

'இல்ல... பிராய்டு என்பது தான் சரியான உச்சரிப்பு; ஏன், அட்லாஸ்ன்னு சொல்லிக்கிட்டுருக்கோமே... அதனுடைய சரியான உச்சரிப்பு ஆட்லஸ்!

'ஆட்லஸ் கிரேக்க தேவர்களில் ஒருவர்; உலகை தன் தோளில் தூக்கி வைத்திருப்பது போல் இருக்குமே ஒரு சிலை... அது தான் ஆட்லஸ் தேவதை.

'உலகிலேயே பெரிய அட்லாஸ்... இல்ல ஆட்லஸ் போட்டவன் லண்டன் டைம்ஸ் பத்திரிகைகாரன் தான்; மொத்தம் ஐந்து வால்யூம்கள்...' என்றார்.

'உலகில், முதன் முதலாக ஆட்லஸ் போட்டது யாரு?'என்று கேட்டேன்.

'அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த டாலமி என்பவர் தான், 1,800 ஆண்டுகளுக்கு முன் ஆட்லஸ் போட்டார். அப்போது அதற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை. ஆனால், அதன் அட்டையில் ஆட்லசின் படத்தைப் போட்டனர். அதிலிருந்து தான் அதற்கு ஆட்லஸ் என்று பெயர் வந்தது...' என்றார் குப்பண்ணா.






      Dinamalar
      Follow us