sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

மனம் திறந்தால் வழியுண்டு!

/

மனம் திறந்தால் வழியுண்டு!

மனம் திறந்தால் வழியுண்டு!

மனம் திறந்தால் வழியுண்டு!


PUBLISHED ON : செப் 20, 2015

Google News

PUBLISHED ON : செப் 20, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வரதன் சொன்னதை கேட்டதும், திகைத்துப் போனார் கோபால்.

''என்ன சொல்ற வரதா?''

''ஆமாப்பா... மாசா மாசம் நாலஞ்சு பேருக்கு வேலையில்லாம போயிடுது. கடைசியா, மூணு பேர் இருக்கோம்; அடுத்த மாசம் வேற வேலை பாக்க வேண்டியது தான்.''

''ஏண்டா அப்படி?''

''ஆபீசுல சிக்கன நடவடிக்கை எடுக்கறாங்கப்பா. சர்வீஸ் ஆளுங்க, சம்பளம் அதிகமா வாங்குறவங்க, திறமை குறைவான ஆட்கள்ன்னு மூணு விதமா பிரிச்சிருக்காங்க. முதல் அடி, திறமை குறைவானவங்களுக்கு! ரெண்டாவது, சர்வீஸ் ஆளுங்க. அடுத்து, சம்பளம் அதிகமான ஆளுங்க. இதுல, மூணாவது கட்டத்தில நானும் இன்னும் ரெண்டு பேரும் இருக்கோம்.''

''அப்ப நிறுத்தினவங்க கதி...''

''வேற எடத்துல தான் வேலை தேடணும்; அதுவும் அவ்வளவு சுலபம் இல்ல. என்னை மாதிரி ஆளுங்களுக்கு வேலை கிடைக்கும்; ஆனா, பாதி சம்பளம் தான் கொடுப்பாங்க.''

''என்னடா இது அநியாயமா இருக்கு...''

''அதுதாம்பா கார்பரேட் ஜித்து வேலைங்கிறது!''

''அப்படின்னா உன் நிலைமை...''

''ஒரு மாசம் ஓடும்; அப்புறம் வேற இடத்துக்கு அப்ளிகேஷன் போடணும்.''

''உன் கூட வேலை இழக்கப் போறவங்க என்ன செய்யப் போறாங்க?''

''ஒருத்தனுக்கு, கிராமத்துல நில புலன் இருக்கு; அதனால, அங்கே போய் அவங்க அப்பாவோட சேர்ந்து இயற்கை விவசாயம் செய்யப் போறானாம். இன்னொருத்தன், சம்பளம் குறைவானாலும் பரவாயில்லன்னு இது மாதிரி வேலைக்குத் தான் போவானாம். இதை விட்டா அவனுக்கு வேற வேலை தெரியாதுங்கிறான்.''

''நீ என்ன செய்யப் போற?''

''அதுதாம்பா யோசிச்சிக்கிட்டிருக்கேன்.''

இரு டம்ளர்களில் லெமன் ஜூஸ் கொண்டு வந்த வரதனின் அம்மா அமிர்தவல்லி, ''ரொம்ப யோசிச்சு களைச்சுப் போயிருப்பீங்க; இதைக் குடிச்சுட்டு யோசிங்க,'' என்றாள்.

''என்னம்மா கிண்டல் செய்றியா?''

''நான் ஏன்டா கிண்டல் செய்யறேன்... இன்னும் ஒரு மாசம் இருக்கும் போதே, இப்பவே குடி முழுகுனா மாதிரி தகப்பனும், பிள்ளையும் உட்கார்ந்துட்டீங்களே... பஜார்ல, ஒரு கடை நாறிப் போய் கெடக்குது. அத யாராவது யோச்சீங்களா... உங்கப்பா வெல்டிங் பட்டறை வைக்கறேன்னு வச்சாரு; போணியாகல. வெல்டரா வேலைக்குப் போறாரு.

''அந்தக் கடைய சீர் செய்து வாடகைக்காவது விட்டிருக்கலாம்; அதுவுமில்ல. சுவர் பூரா இற்றுப் போய் புதர்மண்டிக் கிடக்கு. வர்றவன் போறவனெல்லாம், அங்க தான், 'ஒண்ணுக்கு' போய் நாறடிக்கிறான். அதை பத்தி யோசிச்சீங்களா...'' என, படபடவென பொறிந்த அம்மாவை, வியப்புடன் ஏறிட்டுப் பார்த்தான் வரதன்.

சரியான நேரத்தில், அமிர்தவல்லி வீசிய நாகாஸ்திரம், கோபாலை யோசிக்க வைத்தது.

அந்த நேரம் அங்கு வந்த வரதன் மனைவி யுவராணி, ''போன வாரம் கூட, அதை சீர் செய்து வாடகைக்கு விடலாம்ன்னு அத்தை சொன்னாங்க மாமா...'' என்றாள்.

யுவராணி தனியார் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு ஆசிரியராக, மாதம், 4,000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்கிறாள்.

அமிர்தவல்லி சாதாரணமாய் சொல்லி விட்டுப் போன ஆற்றாமைப் பேச்சுகள், கோபால் மற்றும் வரதனின் சிந்தனையை தூண்டியது.

மறுநாள், கொத்தனாரைப் பார்க்கச் சென்ற கோபால், ஒரு வாரத்தில், கடையை புதுப்பித்து, ஷட்டரும் போட்டு விட்டார்.

''வரதா... நம்ம கடை வாசல்ல, 'கடை வாடகைக்கு விடப்படும்'ன்னு ஒரு போர்டு போடணும்.''

''போட்டுட்டா போச்சு; முன்பணம், வாடகையெல்லாம் அக்கம் பக்கம் எப்படின்னு விசாரிச்சீங்களா?''

''அதெல்லாம் விசாரிச்சிட்டேன்,'' என்றவர், ''அமுதா... கொஞ்சம் தண்ணி கொண்டு வா,'' என்றார்.

தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த அமிர்தவல்லி, மகனை நோக்கி, ''வரதா... மூணாவது வீட்ல இருக்கற, லட்சுமி வீட்டுக்காரர் கடை வச்சிருக்காருல்ல...'' என்றாள்.

''ஆமாம்மா... வாடகை இடத்துல சின்னதா பேன்சி ஸ்டோர் வச்சிருக்காரு,'' என்றான்.

''வீடு கூட வாடகை தான் போல...''

''ஆமாம்; அதுக்கு என்னம்மா இப்ப...''

''இல்ல... கடையும் வாடகை; வீடும் வாடகை. இதுல ரெண்டு பசங்க. ஆனாலும் குடும்பம் நல்லாத் தானே நடக்குது,'' என்றாள்.

''என்னம்மா சொல்ல வர்ற?''

''புரியலையாடா... பெரிசா படிச்சா மட்டும் போதுமா... யோசிக்க வேணாமா... நமக்குத் தான் சொந்த வீடு; சொந்த கடை இருக்குதே... நீயும் அத மாதிரி, ஏதாவது வச்சு பாத்தா என்ன...'' என்றாள்.

அம்மாவையே பார்த்தான் வரதன்.

''கடைய செப்பனிட சொன்னப்ப, ஒரு யோசனை வந்துச்சும்மா... ஆனா, சரி வருமான்னு சின்ன சந்தேகம். எனக்குத் தான் இதெல்லாம் பழக்கமில்லயே...'' என்றான்.

''என்னடா பழக்கம் வேண்டியிருக்கு... நீ வேலைக்குப் போனப்ப பழகிட்டா போன... பொருள வாங்கிப் போட்டு வியாபாரம் செய்யப் போற. இதுக்கெல்லாம் பழக்கமா வேணும். சாமர்த்தியம் இருந்தா போதாதா...'' என்றாள் அமிர்தவல்லி.

அம்மா சொல்வது சரியென்றே பட்டது.

''வரதா... உங்க அம்மா சொல்றதும் சரியாத்தான் இருக்கு. இனி, நீ வேற வேலைக்கு போனாலும் பாதி சம்பளம் தான் கிடைக்கும். அதை ஏன் கவுரவமா, சொந்த தொழிலா செய்யக் கூடாது. கை கட்டி பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லையே...'' என்றார் கோபால்.

''அது சரிப்பா; என்ன செய்யலாம்ன்னு நீங்களே சொல்லுங்க...''

''முதல்ல சின்னதா ஒரு பெட்டிக்கடை மாதிரி வை. அதுல தினசரி பேப்பர், வார இதழ்கள் கூட விற்கலாம். நானே பேப்பர் வாங்க, 2 கி.மீ., தூரம் நடந்து போய் தான் வாங்கிட்டு வரேன். இங்கேயே போட்டால், சுற்று வட்டாரத்தில இருக்கிறவங்க வாங்குவாங்க.''

''சரி செஞ்சுரலாம். கடையில தாராளமா இடமும் இருக்கு; போகப் போக வேற என்ன செய்யலாம்ன்னு திட்டம் போடலாம்.''

வெளியில் பழைய பேப்பர்காரன் குரல் கேட்டது.

''என்னங்க... நிறைய பேப்பர் சேர்ந்து போச்சு; பழைய பேப்பர்காரனைக் கூப்பிட்டு போடுங்க. இன்னும் கொஞ்ச நாள் போனால் பாசிப் பூச்சிங்க அரிச்சிடப் போகுது,'' என்றாள் அமிர்தவல்லி.

''நீ போய் கூப்பிடு; நான், பேப்பர்களை எடுத்துட்டு வரேன்,'' என்றார் கோபால்.

''நீங்க இருங்கப்பா... நான் கொண்டு போறேன்,'' என எழுந்தான் வரதன்.

''இந்தாப்பா... கிலோ பேப்பர் என்ன விலைக்கு எடுப்பே?'' என்று கேட்டாள் அமிர்தவல்லி.

''பேப்பர், 10 ரூபாய்க்கும், புஸ்தகம் எட்டு ரூபாய்க்கும் எடுப்பேன்ம்மா,'' என்றான் பேப்பர்காரன்.

''நீ சீக்கிரம் பணக்காரனாகியிடுவேப்பா. நேத்து தான் ஒருத்தன், பேப்பர், 12 ரூபா, பெரிய புஸ்தகம், 10 ரூபா, சின்ன புஸ்தகம் எட்டு ரூபான்னு பக்கத்து வீட்ல இருந்து வாங்கிட்டு போனான்,''என்று அமிர்தவல்லி கூறியதும், உடனே சமாளித்து, ''அதெல்லாம் நியூஸ் பேப்பர் தான்ம்மா,''என்றான்.

''ஏன் எங்கள பாத்தா நியூஸ் பேப்பர் வாங்கி படிக்கிறவங்க மாதிரி தெரியலயா... குப்பையில கிடக்கற பேப்பரை போடவா கூப்பிட்டேன்,'' என்றதும், அவன் கொஞ்சம் மிரண்டு தான் போனான்.

வரதன் அதற்குள் இரண்டு, மூன்று நடையாக எல்லாவற்றையும் எடுத்து வந்து, ''ஏம்பா எடையெல்லாம் சரியா இருக்குமா?'' என்றான்.

''அதெல்லாம் சரியா இருக்குங்க.''

பேப்பரைப் போட்டு காசை வாங்கிக் கொண்டு வந்த அமிர்தவல்லி, ''கொஞ்சம் ஏமாந்தா பேப்பர் எடுக்கறவன் கூட மொட்டையடிப்பான் போல. ஒரு கிலோ, 10 ரூபான்னான்; அப்புறம், 12 ரூபாய்ங்கிறான். இதுலயே இப்படியடிச்சான்னா, கடையில போடறதுல எவ்வளவு லாபம் பாப்பானோ... இவனே தினம், நானூறு, ஐந்நூறு ரூபா சம்பாதிப்பான் போலிருக்கே,'' என்றாள்.

''சரி விடு அமுதா... பாவம் சைக்கிள மிதிச்சு தெருத்தெருவா சுத்திப் பொழைக்கறவங்க.''

''இருக்கட்டுங்க... அதுக்காக இப்படி அநியாயத்துக்கு ஏமாத்த கூடாது,'' என்று சப்தமிட்டபடியே உள்ளே சென்றாள் அமிர்தவல்லி.

ஒரு வழியாக வேலையிலிருந்து விடுவிக்கப்பட்ட வரதன், ஒரு நல்ல நாளில், கணபதி ஹோமம் நடத்தி, கடையை திறந்தான். விடுமுறை போட்டு, மகனுக்கு உதவியாக இருந்தார் கோபால்.

இரவு, இருவரும் கடையை மூடிவிட்டு, வீட்டுக்கு வர மணி, 9:30 ஆனது.

அவர்களுக்கு சாப்பாடு பரிமாறிய அமிர்தவல்லி, அவர்கள் சாப்பிட்டு முடித்து, ஓய்வாக வந்து அமர்ந்த பின், ''என்ன வரதா... வியாபாரம் எப்படி நடந்தது?'' என்று கேட்டாள்.

''பரவாயில்லம்மா... முதல் நாளுங்கறதால அவ்வளவாக கூட்டம் இல்ல. நாளையிலர்ந்து பேப்பர், புத்தகம் போடச் சொல்லியிருக்கேன். தினசரி, வார இதழ்கள் பிரிச்சு போடுறது தான், காலைல கொஞ்சம் கஷ்டமாயிருக்கும்ன்னு நெனைக்கிறேன்,'' என்றான்.

''என்னப்பா கஷ்டம்?''

''நாளிதழ்களில் எல்லாம் இலவச இணைப்பு புத்தகமும் சேர்ந்து வருது. அதையெல்லாம் ஒன்றாக்கி, ஒவ்வொன்றாக தனித்தனியாக அடுக்கணும்.''

''அதிலென்ன கஷ்டம்?''

''அப்படியில்லம்மா... வியாபாரத்தையும் பாக்கணுமில்ல.''

''இது ஒரு விஷயமா... உங்கப்பா தினமும் காலைல பேப்பர் வாங்க அவ்வளவு தூரம் போவாருல்ல. இனி, நம்ம கடையில வந்து அதையெல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு அடுக்கி வச்சிட்டு வருவாரு. எவ்வளவு நேரம் ஆகப் போகுது,'' என்றாள்.

''நல்ல ஐடியா அமுதா... எப்படி இப்படியெல்லாம் தோணுது உனக்கு; வர வர ரொம்ப புத்திசாலியாயிட்டே...'' என்றார் கோபால்.

''இந்த புத்திசாலித்தனம் இல்லன்னா, உங்ககிட்ட விடிஞ்சிரும்.''

''சரி சரி விடு... காலைல நான் அவனோட புறப்பட்டு போறேன்.''

''சோப்பு, பேஸ்ட் இதுமாதிரி எல்லாம் வாங்கி வச்சிருக்கல்ல...''

''எல்லாம் இருக்கும்மா!''

''அமுதா... உனக்கு வேணுமின்னாலும் காசு கொடுத்துத் தான் வாங்கணும்; இல்லேன்னா அங்கே கல்லா நிரம்பாது.''

''எனக்கு எல்லாம் தெரியும்; நீங்க முதல்ல காசு கொடுத்து பேப்பர் வாங்குங்க.''

வரதன் மனைவி யுவராணி அடுக்களையை ஒழித்துவிட்டு கைகளை துடைத்தவாறே வந்தவள், ''மணி என்ன ஆகுது... போய் படுங்க; காலைல சீக்கிரம் எழுந்திருக்க வேணாமா...'' என்று அதட்டல் போட்டாள்.

''இதோ பாருடா... டீச்சர் ஆர்டர் போட்டுட்டாங்க,'' என்று சொல்லி, சிரித்துக் கொண்டே எழுந்தான் வரதன்.

அவனுக்குள் வேறு ஒரு சிந்தனையும் தோன்றியது. 'நாளைக்கு ஆரம்பித்து விட வேண்டியது தான்...' என்று நினைத்த வண்ணம் படுக்கையை நோக்கி நகர்ந்தான்.

மாலை, வேலை முடித்து வந்த கோபால், நேராக கடைக்குச் சென்றார்.

கடையருகில் சென்றதும் அவருக்கு வியப்பு.

வெளியில் ஒரு அட்டையில், 'இங்கு பழைய பேப்பர் வாங்கப்படும்...' என்று எழுதி மாட்டப்பட்டிருந்தது.

''வாங்கப்பா... வீட்டுக்குப் போகலயா... வேலை முடிந்து அப்படியே வர்றீங்க போல இருக்கே...'' என்றான் வரதன்.

''ஆமாம்... இது என்ன புதுசா...''

''பின்னாடி பாருங்க.''

எலக்ட்ரானிக் தராசு ஒரு பக்கமும், எதிர்திசையில் ஆளுயரத்தில் இரு வரிசையில் பழைய பேப்பர்களும் அடுக்கப்பட்டிருந்தது.

''இந்த ஐடியா எப்படி வந்தது...''

''அன்னக்கி, அம்மா பழைய பேப்பர் போட்டுட்டு, சத்தம் போட்டாங்களே... அப்பவே தோணிச்சு.''

''பரவாயில்லயே... அமுதா ஐடியா கூட ஜெயிக்கிறதே...''

''அப்பா... சும்மா அம்மாவ கிண்டல் செய்யாதீங்க. அன்றைக்கு மட்டும் அம்மா சத்தம் போடலன்னா இந்தக் கடைய செப்பனிட்டிருப்பீங்களா...''

''உண்மை தான் வரதா... அவ, மனசுல எதும் வச்சிக்காம, வெளிய சொல்றதால எவ்வளவோ நன்மை.''

வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருக்கும்போது ஒருவன் வந்து, ''பான்பராக் இருக்கா?''என்று கேட்டான்.

''இல்லைங்க!'' என்று சொல்லியனுப்பியவன், ''அப்பா... நிறைய பேர் இந்தப் புகையிலையும், பாக்கையும் தான் கேக்கறாங்க. அந்தப் பக்கம் மதுக்கடை இருக்கிறதால, பார்லேயிருந்து நேர இங்க தான் வராங்க,'' என்றான்.

''அது மட்டும் வேணாம். நீ படிச்சவன்; நல்ல விஷயங்கள, நேர்மையான செயல்களை தான் செய்யணும். பணம் கிடைக்கிறதுங்கறதுக்காக இதையெல்லாம் வியாபாரம் செய்தா பாவ மூட்டையும் சேர்ந்து சுமக்கணும்,'' என்றார்.

''அதனாலதாம்பா அதை வாங்கல. வேன்ல கொண்டு வர்ற ஹோல்சேல்காரன் கேட்டான்; அதெல்லாம் வேணாம்ன்னு சொல்லிட்டேன்.''

''நல்ல வேல செஞ்ச. அது மட்டுமல்ல, அதை வாங்கிப் போட்டுட்டு இங்கேயே நின்னு அவனவன் வம்பளப்பான்; எச்சிலை துப்பி அசுத்தப்படுத்துவான். நமக்குத் தான் இடைஞ்சல்.''

வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. மெல்ல கூட்டம் வடிய ஆரம்பித்தது. இருவரும் கடையை பூட்டி, கிளம்பினர்.

''அப்பா... நான் ஒண்ணு சொல்றேன்; கோபப்பட மாட்டீங்களே...''

''என்ன சொல்லுப்பா...''

''நீங்க எதுக்கு வேலைக்கு போகணும்; நின்னுடுங்களேன்,''என்றான்.

சிரித்த கோபால்,''இதச் சொல்லவா தயங்கின... பழைய பேப்பர் கட்டுகளைப் பாத்ததும் நானே நினைச்சேன். எதுவாயிருந்தாலும் மனசு விட்டு பேசணும். அப்பத்தானே வழி பிறக்கும்.''

''நீங்க சத்தம் போடுவீங்களோன்னு...''

''நான் ஏன்டா சத்தம் போடப் போறேன். நாம குடும்பத்துக்காக உழைக்கிறோம்; எதுக்குத் தனித் தனியா கஷ்டப்படணும்,'' என்றார்.

வீட்டுக்குள் நுழைந்ததும், யுவராணி அசதியாக அமர்ந்திருந்த கோலத்தைப் பார்த்து, இருவரும் திகைத்தனர்.

''அவளுக்கு ஒண்ணுமில்லை; கொஞ்சம் அசதி. டாக்டர்கிட்ட போயிட்டு வந்துட்டோம்,''என்றாள் அமிர்தவல்லி.

''டாக்டர் என்ன சொன்னார்?''

''நான் தான் ஒண்ணுமில்லேங்கிறேன்ல. போய் சாப்பிடுங்க,'' என்றாள்.

''அமுதா... உனக்கு ஒரு குட் நியூஸ்... வேலைய விட்டுட்டு, வரதனோடு...'' அவரை முடிக்க விடாமல், ''அதை நானே சொல்லணும்ன்னு தான் இருந்தேன். அதுக்கு முன்னாடி, அதைவிட சந்தோஷமான விஷயம் ஒண்ணு...''

''என்ன அது?''

''இந்த வீட்டுக்கு ஒரு குட்டி முதலாளி வரப் போறாரு; அதாவது, நான் பாட்டியாகப் போறேன்.''

''அப்படியா!''

கோபால் மற்றும் வரதனின் முகமும் சந்தோஷத்தில் மலர்ந்தது.

ஆ.லோகநாதன்






      Dinamalar
      Follow us