
இந்தியில், தனி ஒருவன்!
ஜெயம் ரவி நடித்த படங்கள், எதிர்பார்த்த வசூலை தராத நிலையில், அவர் நடித்து சமீபத்தில் வெளியான, தனி ஒருவன் படம் பெரிய அளவில், வசூல் சாதனை செய்து வருகிறது. அதனால், அப்படத்தை இந்தி மற்றும் தெலுங்கில், 'ரீமேக்' செய்ய, சில நிறுவனங்கள் படத்தை வாங்கியுள்ளன. ஜெயம் ரவி நடித்த வேடத்தில் இந்தியில் சல்மான் கானும், அரவிந்த்சாமி நடித்த வில்லன் வேடத்தில் அபிஷேக் பச்சனும் நடிக்கின்றனர். நயன்தாரா வேடத்தில் நடிக்க, நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது.
— சினிமா பொன்னையா
நியூயார்க்கில் சண்டை பயிற்சி பெற்ற ஆர்.கே.செல்வமணி!
புலன் விசாரணை மற்றும் கேப்டன் பிரபாகரன் உட்பட பல அதிரடி படங்களை இயக்கிய, ஆர்.கே.செல்வமணி, வைகை எக்ஸ்பிரஸ் படத்தில், வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் சண்டை காட்சிகளுக்காக, கதாநாயகன் ஆர்.கே., மற்றும் வில்லன் ஆர்.கே.செல்வமணி ஆகிய இருவரும், நியூயார்க்கில் உள்ள, 'க்ரீன் பாய்ன்ட்' மற்றும் 'ப்ரூக்ளின்' ஆகிய இடங்களில் உள்ள, 'ஸ்டன்ட் புரபஷனல்' மையங்களுக்கு சென்று, 15 நாட்கள் சிறப்பு பயிற்சி எடுத்து வந்துள்ளனர். மேலும், இப்படத்தின் சண்டை காட்சிகளுக்காக, பாண்டம் கேமரா, ஹெலிகேம்கள் தவிர, ஆறு நவீன கேமராக்களைக் கொண்டு படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ஷாஜி கைலாஷ்.
— சி.பொ.,
அக் ஷயாவின் இயக்குனர் அவதாரம்!
கலாபக்காதலன் மற்றும் உளியின் ஓசை உட்பட, பல படங்களில் நடித்த அக் ஷயா, கதை எழுதி, தயாரித்து, நடிக்கும் படம், யாளி. இப்படத்தை, ஆரம்பத்தில் இயக்கிய, நடன மாஸ்டர் காதல் கந்தாஸ், மலேசியாவில் படப்பிடிப்பு நடந்தபோது, ஒரு தயாரிப்பாளர் என்கிற முறையில், அக் ஷயாவிடம் படம் குறித்த, எந்த விஷயங்களையும் கலந்து பேசாமல் தன் இஷ்டத்துக்கு செயல்பட்டுள்ளார். அத்துடன், 'என்னிடம் ஏதாவது கேட்டால் யூனிட்டை கூட்டிக்கொண்டு போய்க்கிட்டேயிருப்பேன்...' என்று மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில், கேமராமேன் உட்பட, தன் யூனிட்டை அழைத்துக்கொண்டு சென்னைக்கே திரும்பியுள்ளார். இதனால், தன்னை நம்பியிருந்த டெக்னீஷியன்களைக் கொண்டு, தானே இயக்குனராகி படப்பிடிப்பை தொடர்ந்திருக்கிறார். இப்போது, யாளி படத்தின், 70 சதவீத படப்பிடிப்பை முடித்து விட்டவர், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக தயாராகி வருகிறார்.
— எலீசா
மம்முட்டிக்கு மனைவியான நயன்தாரா!
மம்முட்டியுடன் நயன்தாரா நடித்த, பாஸ்கர் த ராஸ்கல் படம் வெற்றி பெற்றதை அடுத்து, மீண்டும் மம்முட்டியுடன், புதிய நியமம் என்ற படத்தில், அவருக்கு மனைவியாக நடிக்கிறார் நயன்தாரா. மம்முட்டி வழக்கறிஞராக நடிக்கும் இந்த, 'க்ரைம் த்ரில்லர்' படத்தில், நயன்தாராவுக்கு, 'சஸ்பென்சான' கதாபாத்திரம். கிட்டத்தட்ட, மம்முட்டிக்கு இணையான வேடம். இதே படத்தில் ஆர்யாவும், ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
அங்காடிதெரு நடிகையின், 'மிட்நைட்' போதை ஆட்டம்பாட்டங்கள், முன்பைவிட, இப்போது ஜாஸ்தியாக இருக்கிறது. அதனால், ஒரு படத்தில் நடிக்கும் போது, ஆரம்பத்தில், 'ஸ்லிம்'மாக இருப்பவர், போகப்போக உடல் பெருத்து விடுகிறார். இதனால், அவரை வைத்து படம் இயக்குபவர்கள், படம் முடிகிற வரைக்கும், பார்ட்டிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்று அம்மணிக்கு, 'கண்டிஷன்' போட்டு வருகின்றனர்.
தல நடிகரின் மச்சினிச்சி, கன்னட சூப்பர் ஸ்டாரின் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், படத்திற்கான ஆடிஷன் நடந்தபோது, அவரை, டூபீஸ் கெட்டப்பில் புகைப்படங்களை சுட்டுத் தள்ளி விட்டார் நாட்டாமை இயக்குனர். விஷயம், தலயின் காதுக்கு வந்தபோது, டென்ஷனாகி விட்டதோடு, இதனால், தன், 'இமேஜ்' பாதிக்கும் என்று, மச்சினிச்சியை அப்படத்தில் நடிக்க தடை போட்டு விட்டார்.
தாரா நடிகையுடன் ஆரம்பத்தில் இருந்தே போட்டி போட்டு வரும் மூணுஷா நடிகை, தாரா பேய் படத்தில் நடித்ததை அடுத்து, தற்போது, தானும் பேய் படத்தில் நடிக்கிறார். அத்துடன், படத்தின் மொத்த கதையும், தன்னை சுற்றியே இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ள மூணுஷா, படம் திரைக்கு வரும் நேரத்தில், 'தாரா நடித்துள்ள படத்தை விட என் படமே அனைத்து போஸ்டர்களிலும் தூக்கலாக இருக்க வேண்டும்...' என்றும் கூறியுள்ளார்.
சினி துளிகள்!
* கார்த்திக் சுப்புராஜ் இயக்கும், இறைவி படத்தில் அஞ்சலிக்கு, 'வெயிட்'டான கதாநாயகி வேடம் கொடுக்கப்பட்டுள்ளது.
* த்ரிஷா நடித்து வரும் போகி மற்றும் நாயகி என்ற இரு படங்களும் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகிறது.
* தங்கை ஷாம்லி நடிப்பதற்காக, குடும்பப்பாங்கான கதைகளாக கேட்டு வருகிறார் ஷாலினி.
* ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிக்கும், எந்திரன்2 படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்குகிறது.
அவ்ளோதான்!

