sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : அக் 25, 2015

Google News

PUBLISHED ON : அக் 25, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கன்னியாகுமரி நோக்கி, அதே பெயருடைய எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம்!

திரைப்பட இயக்குனர் ஒருவருக்கு, நாகர்கோவிலில் திருமணம். 'அவசியம் வரணும்...' என அழைத்திருந்தார். குப்பண்ணா, லென்ஸ் மாமா உட்பட ஏழு பேர் வண்டி ஏறினோம்.

எக்ஸ்பிரஸ் என்று தான் பெயர், நிதானமாகவே சென்றது ரயில்; படிப்பதற்கு நிறைய புத்தகங்கள் எடுத்துச் சென்று இருந்தேன்.

பெரியசாமி அண்ணாச்சி, தம் வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த வாழைப் பூ வடையை அனைவருக்கும் வினியோகித்தார். வடையை சுவைத்துக் கொண்டே, 'ரஷ்ய தேசத்தின் சிற்பி லெனின், 'மதம் ஒரு அபின்' என்று சொன்னது தானே நமக்குத் தெரியும்... ஆனால், அவர் இஸ்லாத்துடன் இணைய விரும்பினார் என்பது தெரியுமா...' என குப்பண்ணாவை நோக்கி ஒரு குண்டை வீசினேன்.

'என்னப்பா... திடுக்கிடும் சேதி எல்லாம் சொல்றே...' என, அதிர்ச்சி விலகாமல், கேட்டார்.

புத்தகப் பையில் இருந்த பழைய, 'முஸ்லீம் முரசு' என்ற இதழை எடுத்து, குப்பண்ணாவிடம் கொடுத்தேன். 50 ஆண்டுகளுக்கும் மேலாக வெளி வந்து கொண்டிருக்கும் இஸ்லாமிய இலக்கிய இதழ் அது! அவ்விதழில் தான், 'லெனின் இஸ்லாத்தில் இணைய விரும்பினார்...' என்ற பொருளில், ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.

எல்லாருக்கும் கேட்கும்படி, வாய்விட்டு கட்டுரையை படிக்க ஆரம்பித்தார் குப்பண்ணா...

ஜார் இன கொடுங்கோல் ஆட்சி அஸ்தமனமான பின், ரஷ்ய அதிபரான லெனின், கம்யூனிச ஆட்சியை பிரகடனப்படுத்தினார். அப்போது, தன் நெருங்கிய சகாக்களின் கூட்டத்தைக் கூட்டி, அவர்கள் மத்தியில் அவர் ஆற்றிய உரையின் முக்கியப் பகுதி இது...

'நாம், நம்முடைய ஆட்சியை நிறுவுவதில் வெற்றி பெற்று விட்டோம். இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமானால், மானிட இயலுக்கு ஒத்து வருகிற ஒரு வாழ்வியலைக் கடைபிடிக்க வேண்டியது மிக அவசியமாகிறது. மானிடத் தன்மைகள் பூர்த்தி அடைய, வெறும் ரொட்டி மட்டும் போதாது.

'அவன் ஆத்மாவைத் திருப்திப்படுத்த, ஒரு மதமும் தேவைப்படுகிறது. நான் எல்லா மதங்களையும் மிக ஆழமாக அலசி ஆராய்ந்து பார்த்தேன். கம்யூனிச சித்தாந்தங்களுடன் ஒத்து வருவது போல் எந்த மதமும் என் அறிவுக்கு புலப்படவில்லை ஒரே ஒரு மார்க்கத்தைத் தவிர!

'தற்சமயம் அந்த மார்க்கத்தின் பெயரை நான் வெளியிட விரும்பவில்லை. இதைப் பற்றி நீங்கள் நன்கு சிந்திக்கவும், ஆலோசிக்கவும் உங்களுக்கு கால அவகாசம் தருகிறேன். அவசரப்படாமல் ஆற, அமர நன்றாக சிந்தியுங்கள்!

'இந்தக் கேள்வி, கம்யூனிசத்திற்கு வாழ்வா, சாவா என்ற கேள்வி. எந்த அளவு நேரம் வேண்டுமோ, அந்த அளவு நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை நான் கொண்டுள்ள கருத்து, தவறாக இருக்கலாம். ஆனாலும், நாம் நிதானமாக, பொறுமையாக யோசிக்க வேண்டும்.

'கம்யூனிச கோட்பாட்டின் உலகவியல் கொள்கைக்கு ஒத்து வருகிற மார்க்கம் இஸ்லாம் ஒன்றே என, நான் நினைக்கிறேன்...' என்றார் லெனின்.

லெனினின் இந்தப் பேச்சைக் கேட்ட கூட்டத்தினர் மத்தியில் சலசலப்பு.

லெனின் குறுக்கிட்டு, 'ஓராண்டு கழித்து, இதே இடத்தில் நாம் கூடுவோம். அப்போது எந்த மதத்தை நாம் ஏற்றுக் கொள்வது என்பது பற்றி ஒரு முடிவுக்கு வருவோம்...' என்று கூட்டத்தை முடித்தார்.

பிரிட்டிஷ் அரசின், உளவு பிரிவுக்கு இந்த செய்தி எட்டியது. கம்யூனிச சக்திகளும், இஸ்லாமிய சக்திகளும் ஒன்றிணைந்தால், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அதோ கதிதான் என அஞ்சியது.

இந்த ஆபத்தை தடுத்து நிறுத்த, 'கடவுள் மறுப்புக் கொள்கையான மார்க்ஸ் கொள்கை, இஸ்லாத்திற்கு ஏற்புடையது தானா...' எனக் கேள்வி எழுப்பி, எகிப்தில் உள்ள, 'அல் அஸ்ஹா' பல்கலையில் பணியாற்றிய மார்க்கப் பெரியவர்களுக்கு சேதி அனுப்பி, விளக்கம் கேட்டது பிரிட்டிஷ் அரசு!

பிரிட்டிஷ் அரசின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாத மார்க்கப் பெரியவர்கள், 'கம்யூனிசமும், இஸ்லாமும் ஒரு போதும் இணைய முடியாது...' என்ற, 'பத்வாவை' பிறப்பித்தனர். இதைத் தான் பிரிட்டிஷ் அரசு விரும்பியது.

உடனடியாக அந்த, 'பத்வாவை' லட்சக்கணக்கில் அச்சிட்டு, இஸ்லாமிய நாடுகளில் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்தது பிரிட்டிஷ் அரசு. இதை அறிந்த லெனின் அதிர்ச்சி அடைந்தார்; செய்வது அறியாமல் தவித்தார்.

கட்டுரையைப் படித்து முடித்த

குப்பண்ணா, 'இது மெய்தானா...' என்பது போல விழித்தார்; மற்றவர்களும்!

திகைப்பிலிருந்து விடுபட்ட குப்பண்ணா, 'பாரதிய ஜனதாவை மதவாதக் கட்சி என்று கூறி, காங்கிரசோடு சேர்ந்து கூத்தடித்த கம்யூனிஸ்ட் கட்சிகள், இது பற்றி என்ன சொல்கின்றன...' எனக் கேள்வி எழுப்பினார்!

நான், இன்னொரு வாழைப் பூ வடையை கேட்டுப் பெற்று, மென்றேன்!

குப்பண்ணாவும், முச்சந்தி முனுசாமியும் சுவாரசியமாக எதைப் பற்றியோ பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் அருகே சென்று அமர்ந்தேன். முனுசாமி சொன்னார்...

'மராட்டிய மாவீரன் சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன் சாம்பாஜி. சிவாஜியின் ஏழு மனைவியருள் முதல் மனைவியான சாம்பாய்க்கு பிறந்த சாம்பாஜி, சிறு வயதிலேயே சிவாஜியின் வாரிசாக நியமிக்கப்பட்டான்.

'சாம்பாஜி சிறந்த போர் வீரன்; ஆனால், யாராலும் திருத்த முடியாத குடிகாரனாக, பெண் பித்தனாக இருந்தான். 20 வயதான சாம்பாஜியை, ஒரு முறை தவறான நடத்தைக்காக பன்ஹாலாக் கோட்டையில் சிறை வைத்தார் சிவாஜி.

'அப்போது, ரைகட் நகரில், தந்தை மரணப்படுக்கையில் கிடப்பதை அறிந்த சாம்பாஜி, அவரை காண, ஒரு ஒட்டகத்தின் மீதேறி, இரவு, பகல் பாராது விரைந்தான். ஆனால், அவன் ரைகட் போய் சேர்வதற்குள், இறந்து விட்டார் சிவாஜி.

'ஏமாற்றத்தால் கடும் கோபமுற்ற சாம்பாஜி, தன் காலதாமதத்திற்கு காரணம், தன்னை ஏற்றி வந்த ஒட்டகம் தான் எனக் கருதி, தன் வாளால் ஒரே வீச்சில் அதன் தலையைத் துண்டித்தான்.

'அது மட்டுமல்ல; தலையில்லாத ஒட்டகத்தின் சிலை ஒன்றை ரைகட் கோட்டை நுழைவாயிலில் வைத்தான். எதற்காக என்று கேட்டபோது, 'இந்த சிலையைப் பார்த்தால் தான், மற்ற ஒட்டகங்களுக்கு புத்தி வரும்...' என்றான் சாம்பாஜி.

'தலையில்லாத அந்த சிலையை இன்றும் அக்கோட்டையின் வெளிப்புற வாயிலில் காணலாம்...' என்று முடித்தார்.

இனியும் அங்கே இருந்தால் பெருசுகளின் ரவுசு தாங்காது என்று தோன்ற, இயற்கையின் உந்துதலை கவனிக்கப் போவது போல ஒதுங்கி, 'ஜூட்' விட்டேன்!






      Dinamalar
      Follow us