
ஸ்ரீ ரமண மகரிஷி, தன் வாழ்க்கை அனுபவம் பற்றி எழுதுகிறார்: என் உடலுக்கு, எந்த அசவுகரியமும் இல்லை; ஆனால், மரணம், சர்வ நிச்சயம் என்று தோன்றியது. சரி... மரணம் வந்து விட்டது; யாரையும் துணைக்கு கூப்பிட முடியாது. இதை, நாமே தான் சந்தித்தாக வேண்டும். எனவே, மரணம் உற்றவன் போல் படுத்து கொண்டேன்; மூச்சையும் அடக்கி, இவ்வனுபவத்தை மேலும் உண்மையாக்கினேன்.
என்னுள் ஆழ்ந்து, மிக தீவிரமாக கூர்ந்து கவனித்தேன். இந்த உடல் இறந்து விட்டது; இதை, சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று எரித்து விடுவர்.
அத்துடன் நான் இறந்து, இல்லாமல் போய் விடுவேனா... இல்லை; 'நான் நான்' என்று என்னுள் பொங்கியெழும் ஆவேச பூரிப்பு இறவாதது; எரிக்கவோ அல்லது வேறு விதங்களில் அழிக்கப்படவோ இயலாதது.
இந்த, 'நான்' எனும் பேருணர்வே, நிலையற்ற உடலையும், மனதையும் தாங்கி நிற்கும் ஆதார சக்தி. இதுவே, உண்மையான நான்; இதுவே அழியாப் பொருள்! இது, ஒவ்வொரு ஜீவராசிக்குள்ளும் உள்ளது. (இதையே, 'ஆன்மா' என்று பிற்காலத்தில் அறிந்தார் ரமணர்.)
ஏழு ஸ்வரங்களுக்கும் ஆதாரமாக, ஒரு ஆதார ஸ்ருதி உள்ளதை போல், மனிதனின் எல்லா நடவடிக்கைகளுக்கும், இந்த நானே ஆதாரமாக உள்ளது. என் கவனம் முழுவதும், இந்த, 'நான்' எனும் பேருணர்வையே நாடி நின்றது. மற்ற நினைவுகள், எண்ணங்கள், செயல்கள் அனைத்தும், என் மீது ஆதிக்கமற்று போயின.
ஆர்.வி.பதி எழுதிய, 'உலகம் போற்றும் தமிழறிஞர்கள்' நூலிலிருந்து: தமிழறிஞர் ஒருவர், தெருவில் சென்று கொண்டிருந்தார். சைக்கிளில் வந்த ஒருவன், கவனிக்காமல் அவர் மீது மோதி விட்டான். அதனால், 'ஐயா.. மன்னித்துக் கொள்ளுங்கள்; தெரியாமல் மோதி விட்டேன்...' என்றான்.
இதைக் கேட்ட தமிழறிஞர், கோபமாக, 'மன்னிப்பு என்பது உருது சொல்; பொறுத்துக் கொள்ளுங்கள் என்பதே சரி...' என்றார்.
மோதியவனும் அவ்வாறே கூறி, போய் விட்டான். அந்த தமிழறிஞர், தேவநேய பாவாணர்!
நாடக மேடை சங்கரதாஸ் சுவாமிகள், தாம் எழுதிய, 'கோவலன் சரித்திரம்' நாடகத்தை, அச்சிட்டு வெளியிட்டார். அதன் முன்னுரையில், அவர் எழுதியிருப்பது: சிலப்பதிகாரத்திலுள்ள கோவலன் கதையை, நாலாவிதமான வர்ண மெட்டுகளில் பாட்டுகள் அமைத்து, ராகம், தாளம் இவைகளை சுட்டிக்காட்டி, முதன் முதலில் நாடகமாக நடத்திக் காண்பிக்கப் பெற்றது அனைவரும் அறிந்த விஷயம்.
என்னால் இயற்றப் பெற்ற பாடல்களை சிலர் திருடி, தாங்கள் எழுதியது என்று அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். இப்போலிகள் செய்த பெரும் பாதகத்திற்கு, தகுந்த தண்டனையை அவர்கள் அடைவர் என்பது நிச்சயம்.
பாட்டை திருடி பகட்டுவதைப் பார்க்கிலும் ஓட்டைத் திருடி ஊர் வழி செல்லலாம் பாட்டை திருடும் பாதகர்கள் பெருத்து, நாட்டிலுள்ள நாடகங்களை கெடுத்து விட்டனர். தன் பெயருக்கே அர்த்தம் தெரியாமலிருப்பவர் கூட, நாடக ஆசிரியரென்று தம் பாட்டை கட்டிக் கொண்டு, முன் வந்து விட்டனர்.
பவுதிகத்திற்காக (இயற்பியல்) 1930ல் நோபல் பரிசு பெற்ற, சர்.சி.வி.ராமன், தேசப்பற்றிலும் சிறந்தவர். நோபல் பரிசு பெற்ற பின், நன்றி தெரிவிக்க எழுந்தவர், 'இப்பரிசினை என் சார்பிலும், என் நாட்டின் சார்பிலும், தற்போது சிறையில் இருக்கும் என் நண்பர்கள் (தேச பக்தர்கள்) சார்பிலும் பெற்றுக் கொள்கிறேன்...' என்று அஞ்சாது குறிப்பிட்டார்.
அவையில் இருந்த பிரிட்டிஷாரின் வெறுப்பை பெறுவது உறுதி என்பதை, நன்கு உணர்ந்தும் இவ்வாறு கூறினார் ராமன்.
ராமனை பற்றிய வரலாற்று நூல்கள் கூட, அவரின் இந்த தேசப்பற்றை, தைரியத்தை குறிப்பிட மறந்து விட்டன. ஆனால், நோபல் பரிசு பற்றி, 'தி ப்ரைஸ்' எனும் நாவல் எழுதிய, இர்விங் வாலஸ் இதைக் குறிப்பிட்டுள்ளார்.
நடுத்தெரு நாராயணன்