sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது உங்கள் இடம்!

/

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : அக் 25, 2015

Google News

PUBLISHED ON : அக் 25, 2015


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானிய சிலிண்டரை விட்டுக் கொடுக்கலாமே!

நான், தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறேன். சமீபத்தில், அனைத்து பணியாளர்களையும் அழைத்த நிர்வாக மேலாளர், 'யார் யாரெல்லாம் மானியத்துடன் சிலிண்டர் பெறுகிறீர்கள்?' என கேட்டார். அனைவரும் வாங்குவதாக கூறியதும், 'நீங்க எல்லாம் கை நிறைய சம்பளம் வாங்கி, வசதியா இருக்கிறீங்க; ஆனா, எத்தனையோ ஏழைகள், கஷ்ட ஜீவனம் நடத்துறாங்க. அவங்க, இத்திட்டத்தின் மூலம் பலனடைய நீங்க எல்லாருமே இனி, மானிய சிலிண்டர் வாங்குறத தவிருங்க. அதில் கிடைக்கும், 300 ரூபாய் பணம், உங்களுக்கு ஒண்ணும் பெரிசில்ல... இதை விட்டு கொடுப்பதும், ஒரு வகையில் ஏழைகளுக்கு உதவுவது போல் தான். விருப்பம் உள்ளவர்கள் சம்மதிக்கலாம்...' என்றார். அனைவரும் சம்மதித்தோம்; நிர்வாகமும் மகிழ்ந்தது. மற்ற நிறுவனங்களும் தன் ஊழியர்கள் மானிய சிலிண்டர் பெறுவதை தவிர்க்க, ஆவன செய்யலாமே!

— என்.வெங்கடேசன், அரசங்கண்ணி.

மாற்றி யோசி; பிரச்னை தீரும்!

பத்து தளங்களை கொண்ட பிளாட்டில், 10வது மாடியில், நடுத்தர வயதுள்ள பள்ளி ஆசிரியை ஒருவர், குடியிருக்கிறார். இங்குள்ள, 'லிப்ட்' 10 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் இல்லாமல், நன்றாகவே இயங்கி வருகிறது. இருப்பினும், தினமும் காலையில், பள்ளிக்கு கிளம்பும் இந்த ஆசிரியை, 'சுவிட்சை' அழுத்தி, 'லிப்ட்' மேலே வருவதற்குள், பொறுமையிழந்து, 'என்ன இந்த, 'லிப்ட்' மேலே வருவதற்கு இவ்வளவு நேரமாகிறது... எனக்கு நேரமாகி விட்டதே...' என்று புலம்புவார். இத்தனைக்கும், அவர் பணிபுரியும் பள்ளி, எங்க பில்டிங்க் அருகில் தான் உள்ளது.

இதுகுறித்து, அதே தளத்தில் இருக்கும் செகரட்டரியிடம், அடிக்கடி குறை கூறுவார்; இவரை தவிர வேறு யாரும், குறை கூறுவது இல்லை.

அதனால், இச்சிக்கலைத் தீர்க்க, ஒரு எளிய, மாற்று வழியை, கண்டுபிடித்த செகரட்டரி, லிப்டின் முன் பக்க சுவரில், சுவிட்சுக்கு கீழ், ஆள் உயர முகம் பார்க்கும் கண்ணாடியை பொருத்தினார். இப்போது, புலம்பல் நின்று, 'லிப்ட் வேகமாக போகிறது...' என்று சிலாகிக்கிறார் ஆசிரியை. காரணம், ஆசிரியை, சுவிட்சை அழுத்தி விட்டு, தன் ஒப்பனையை சரி பார்ப்பதற்குள், 'லிப்ட்' மேலே வந்து விடுகிறது.

செகரட்டரி மாற்றி யோசித்ததால், ஒரு பிரச்னை தீர்ந்தது. இது எப்படி இருக்கு!

— வசந்தா சுப்பிரமணியம்,சென்னை.

ஓட்டுநரின் முன் யோசனை!

சமீபத்தில், அவசர வேலையாக குடும்பத்தோடு வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், பஸ் மற்றும் ரயிலில் இடம் கிடைக்கவில்லை என்பதால், வாடகைக் காரில் செல்ல முடிவு செய்து, வாடகைக் கார் நிறுவனத்திடம் பேசி, உறுதி செய்தோம். சிறிது நேரத்தில், அந்நிறுவனம் அனுப்பிய வண்டி, வீட்டிற்கு வந்தது. ஓட்டுனர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பின், ஒரு படிவத்தைக் கொடுத்து, பூர்த்தி செய்யுமாறு கூறினார்.

அப்படிவத்தில், பயணிப்போர் பெயர், முகவரி, புறப்படும் இடம் மற்றும் சேரும் இடம், அங்கு தங்கப் போகும் இடம், ரத்த வகை இவற்றோடு, அவசர தொடர்புக்காக அணுக வேண்டியவர் பற்றிய விவரங்களும் கேட்கப்பட்டு, படிவத்தின் கடைசியில், ஓட்டுனரின் பெயர் மற்றும் முகவரியும் இருந்தது.

பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை பெற்றுக் கொண்ட ஓட்டுனர், 'என்னுடைய காரில் நெடுந்தூரம் பயணம் செய்வோரிடமிருந்து, இந்த விவரங்களை வாங்கி வைத்துக் கொள்வேன்; இதனால், பயணத்தின் போது திடீர் உடல் நலக் குறைவோ, விபத்தோ ஏற்பட்டால், யாரிடம் தெரிவிப்பதுன்னு தடுமாறாம, உரிய நபரிடம் தெரிவித்தால், உடனடி உதவி கிடைக்கும். அதுபோல், எனக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டாலும், என் குடும்பத்தாருக்கு தெரிவிக்க, என் முகவரியையும் தந்துள்ளேன்...' என்றார்.

அவரின் முன் யோசனையை, வெகுவாகப் பாராட்டினோம். பிற வாடகைக்கார் ஓட்டுனர்களும், இம்முறையைப் பின்பற்றி, ஆபத்துக் காலங்களில் உதவலாமே!

எஸ்.அரிகரன், சென்னை.

வியாபார தந்திரம்!

சிதம்பரத்திலிருந்து, புதுச்சேரிக்கு பஸ்சில் பயணித்தேன். கடலூர் பஸ் நிலையத்திற்குள் பஸ் வந்ததும், வியாபாரிகள் பஸ்சில் ஏறி, அவரவர் பொருட்களை கூவி விற்றனர். அப்போது, 30 வயதுள்ள இளைஞர் ஒருவரின் கையில், சிறுவர் புத்தகங்கள், சமையல், யோகா மற்றும் பொது அறிவு என, பலவகையான புத்தகங்களை வைத்திருந்தார்.

அவர் தன் விற்பனையை ஆரம்பிக்கும் முன், பயணிகளை நோக்கி, 'எல்லாரும் கவனமா இருங்க... லக்கேஜ் மற்றும் குழந்தைகள் பத்திரம்; நகை போட்டுள்ள பெண்கள், ஜாக்கிரதையாக இருங்க. உங்க, 'லக்கேஜை' வேற யாராவது இறங்கும் போது எடுத்துட்டு போகாம, கவனமாக பாத்துக்கோங்க. தூக்க கலக்கத்துல எதையும் தொலைச்சுடாதீங்க...' என்று பயணிகளை எச்சரிக்கும் விதமாக பேசவும், அதுவரை ஏனோ தானோவென்று இருந்த பயணிகள், தம் லக்கேஜையும், குழந்தைகளையும் கவனிக்க துவங்கினர்.

அதன்பின், அந்த இளைஞர் புத்தகங்களை பற்றியும், பயணிகளின் பாதுகாப்பு விஷயங்களை பற்றியும் மாறி மாறி பேசினார். விற்பனை விஷயமாக பேசியதை விட, பயணிகள் கவனமாக இருக்க வேண்டியது பற்றி பேசியது தான் அதிகம்.

விளைவு, அவர் கொண்டு வந்த அத்தனை புத்தகங்களும் விற்று முடிந்தன. அவரது வியாபார தந்திரத்தை நினைத்து வியந்தேன்.

வே.விநாயகமூர்த்தி, வெட்டுவான்கேணி.






      Dinamalar
      Follow us