PUBLISHED ON : நவ 21, 2010

'ஜாலியா ஒரு, 'ரைடு' போய் வரலாமா?' என கடந்த வாரத்தில் நண்பகல் நேரத்தில் கேட்டார் லென்ஸ் மாமா. அன்று, அவ்வளவாக வேலையும் இல்லை. பொ.ஆ., 'அவுட் ஆப் ஸ்டேஷன்' வேறு! 'ஓ... எஸ்...' என்றபடி நான் கிளம்பி படிகளில் இறங்க, உஸ்... புஸ்... என மூச்சு விட்டபடி, துண்டால் தன் நெற்றியையும், தலையையும் துடைத்துக் கொண்டே மாடிப்படிகளில் ஏறி வந்து கொண்டிருந்தார், நடுத்தெரு நாராயணன் சார்!
'ஓய் நாராயணா... வர்றீரா நீரும்?' என லென்ஸ் மாமா வினவ, 'எங்கே... எதற்கு?' எனக் கூடக் கேட்காமல், 'கொஞ்சம் இரும்... மேட்டரைக் குடுத்திட்டு வந்துடறேன்...' எனக் கூறி, இரண்டு, இரண்டு படியாகச் சின்னப் பையன்கள் போலத் தாவித் தாவி ஏறினார். உஸ்... புஸ்... போன இடம் தெரியவில்லை... மாமாவுடன் அல்லவா வெளியே போகிறார்... உற்சாகம் பிய்த்துக் கொண்டது நாராயணன் சாருக்கு... மூவரும் கிளம்பி, தேனாம்பேட்டை சிக்னலை அணுகும் போது, அங்கிருந்த பஸ் நிறுத்தத்தில் பெரியவர் ஒருவரைக் கண்டதும், 'அடடா... இந்த மனுஷன் இங்கே... எங்கே?' என்றபடியே வண்டியை ஓரங்கட்டினார் மாமா.
அடையாளம் கண்டு கொண்ட பெரியவரும் ஓடிவந்து, வண்டியில் தொற்றிக் கொண்டார். அந்தப் பெரியவர் அரசின் கல்வி இலாக்காவில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர் என்பதை லென்ஸ் மாமா கூற, அறிந்து கொண்டேன். வண்டி வேகம் எடுத்து, செங்கல்பட்டு நோக்கி ஓட ஆரம்பித்தது; வண்டலூர் தாண்டியது!
'மாமா பசிக்குது... காலையிலேயே ஒன்றும் சாப்பிடவில்லை...' என்றேன். கொஞ்சம், 'வெயிட்' பண்ணு... பச்சையம்மாள் கல்லூரி வளாகத்தில், மெயின் ரோடிலேயே ஒரு ஓட்டல் புதுசா திறந்து இருக்காங்க... அங்க சாப்பிடலாம்...' என்றார்.
அந்த ஓட்டலும் வந்தது.
உள்ளே நுழைந்தோம் நால்வரும்...
அவரவர் தேவையை ஆர்டர் செய்த பின், பெரியவரிடம் பேச்சுக் கொடுத்தேன்...
'இந்த பொறியியல் கல்லூரி நல்லபடியா நடந்து வருகிறது எனக் கேள்விப்பட்டேன்... ஆனா, புதிது, புதிதாக காளான்கள் போல பல பொறியியல் கல்லூரிகளும், பாலிடெக்னிக்குகளும் தமிழ்நாடு முழுவதும் ஆண்டுதோறும் முளைத்து வருகிறதே... அவற்றின் தரம் எப்படி இருக்கிறது? இந்தக் கல்லூரிகளின் தேவைக்கு ஏற்ப, 'டீச்சிங் ஸ்டாப்' கிடைக்கின்றனரா? இருக்காங்களா?' எனக் கேட்டேன்...
மனிதர் பேச ஆரம்பித்தால், நமக்கு ஜாமீன் கொடுக்க நாலு பேர் வந்தாலும் முடியாது என்பதை அப்போது புரிந்து கொண்டேன்... நிறுத்தாமல் மனிதர் கூறியது இதுதான்!
'தம்பி... கல்வி இப்போ நல்ல வியாபாரம் ஆயிடுச்சு... குறுகிய காலத்திலே நல்ல பணம் பார்க்க முடியுது... கோர்சுக்கு ஏத்த மாதிரி மாணவர்கள்ட்ட நன்கொடை, 50 ஆயிரத்திலிருந்து 5 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்றாங்க, காலேஜுகளை, 'பிரமோட்' பண்றவங்க... இதுவே, மெடிக்கல் சீட்டுன்னா 25 முதல் 40 லட்சம் ரூபாய் வரை கூட நன்கொடை வசூல் செய்றாங்க...
'தரம்... விரல் விட்டு எண்ணக் கூடிய தனியார் கல்லூரிகளில் மட்டுமே தரமான கல்வி, இதமான சூழ்நிலைகள் உள்ளன... மற்றவை அனைத்தும் ஓலைக் கூரைகளிலும், ஓட்டுக் கட்டடங்களிலும், முறையான பயிற்சி பெறாத, அனுபவம் இல்லாத ஆசிரியர்களைக் கொண்டு கல்லூரிகளை நடத்துகின்றனர். அவர்களின் எண்ணம் எல்லாம் பணத்தின் மீது தான்!
'பாரு தம்பி... நா வேலைல இருக்கும் போது, அதாவது, '82–'83, 'அகடமிக் இயர்'ல 13 இன்ஜினியரிங் காலேஜ் தான் இருந்தது. சுமார் மூவாயிரம் மாணவர்கள் தான் படித்தனர். இப்போ எத்தனை இன்ஜினியரிங் காலேஜ்கள்... '82–'83ல 59 பாலிடெக்னிகுகள் தான் இருந்தன. 8 ஆயிரத்து 500 மாணவர்கள் இதில் படித்தனர் அப்போது! இப்போதோ பாலிடெக்னிக்குகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது... 'இதே நிலை தான், டி.பார்ம்., பி.பார்ம்., எம்.சி.ஏ., பி.ஆர்க்., எம்.பி.ஏ., ஆகிய படிப்புகளிலும் நிலவுகிறது... 'திடுமென இத்தனை பேர் அதிகமாகி விட்டதால், ஒவ்வொரு வருஷமும் ஏகப்பட்ட பட்டதாரிகள் தரமில்லாத கல்வி நிலையங்களில் இருந்து வெளி வருகின்றனர். தரமில்லாத கல்வி நிலையங்களில் இருந்து வெளிவரும் இவர்களை நம்பி வேலை கொடுக்கவும் தனியார் நிறுவனங்கள் அஞ்சுகின்றன. வேலை வாய்ப்புத் தேவைக்கு அதிகமாக பட்டதாரிகள் உருவாகி வரும் நிலை ரொம்ப ஆபத்தானது...' எனக் கூறி எங்களைப் பார்த்தார்.
'யாவ்' என ஏப்பம் விட்டபடியே, 'பிங்கர் பவுலில்' கையை கழுவிக் கொண்டார் லென்ஸ் மாமா!
***
'மேல் ஜாதியினர் எல்லாம் பணக்காரர் அல்ல, மற்ற ஜாதியினர் எல்லாம் ஏழைகள் அல்ல...' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை... அதில் —
தாழ்த்தப்பட்ட மக்கள் – பிற்படுத்தப்பட்ட மக்கள் – இந்த பின் தங்கிய மக்களை முன்னுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்து இருக்க முடியாது. மனிதாபிமானமுள்ள – தேசபக்தி – தெய்வ பக்தியுள்ள ஒவ்வொரு மனிதனும் இதை விரும்புவான். இதைச் செய்ய வேண்டும் என்பான்...
முன்னேறிவிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் கல்வி வாய்ப்பு – வேலை வாய்ப்புகளைப் பறித்து – அபகரித்து – பின் தங்கிய சமுதாயத்திற்கு அளிக்கிறேன் என்பது புத்திசாலித்தனமாகாது. தொண்ணூறு மார்க் வாங்கிய மாணவனுக்கு மேல் படிப்புக்கு இடமில்லை. தகுதியும், திறமையும் இருந்தும் தள்ளப்படுகிறான் வெளியே! ஏன்? அவன் மேல் ஜாதியாம்! அறிவாளிக்கு அங்கீகாரம் இல்லை என்றால், இந்த நாட்டில் விஞ்ஞானி எப்படித் தோன்றுவான்? கெட்டிக்காரத் தொழில் வல்லுநர்கள் எப்படி உருவாவர்? ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பரீட்சையில் தமிழ் நாட்டான் எப்படி தேறுவான்?
நம் கேள்விக்கு அரசியல்வாதிகளும், அரசாங்கமும் பதில் அளிக்காது. ஏனெனில், அவர்களுக்கு வெகு ஜன ஓட்டுகள் வேண்டும். அறுபத்து ஒன்பது சதவீதம் என்பது அரசு கஜானாவிலிருந்து செலவு செய்யும் பணம் அல்ல – அரசியல் கட்சிகளின் பொக்கிஷங்களிலிருந்து வாரி வழங்கும் நிதி உதவி அல்ல... அரசும், அரசு நீதியும் இந்தியன் அனைவரும் ஓர் நிறை என்று தானே சொல்கிறது? பெரும்பாலான மக்களைக் கொண்ட ஜாதிகள் மட்டுமே சுதந்திர இந்தியாவில் சலுகைகள்... உதவிகள்... உபகாரங்கள்.... குறைந்த எண்ணிக்கையுள்ள மக்களைக் கொண்ட ஜாதியினருக்கு உபத்திரவங்கள்... உதாசீனங்கள் அலட்சியங்கள்...
— எதேச்சையாக என் கையில் கிடைத்த ஒரு இதழில் படித்த கட்டுரை ஒன்றின் சுருக்கமே, இதுவரை நீங்கள் படித்தது! புத்தக முகப்பு, கம்யூனிஸ்ட் சிகப்பிலும், புத்தகப் பெயர், பெரிய எழுத்தில், 'புரட்சி' என்றும் சிறிய எழுத்தில், 'ஓங்குக' என்றும் இருந்ததால், ஏதோ கம்யூனிஸ்ட் இதழ் என்ற எண்ணத்துடனேயே புரட்டி, பின் மீண்டும் அட்டையைப் பார்த்த போது, தலைப்பின் மீது ஆங்கிலத்தில், முற்படுத்தப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடும் ஒரே இதழ் என அச்சிட்டு இருந்தது! ***
