PUBLISHED ON : நவ 21, 2010

நவம்பர் 23 அன்று, ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 85வது பிறந்தநாளை கொண்டாட, புட்டபர்த்தி நகரமே தயாராகி கொண்டு இருக்கிறது. ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள புட்டபர்த்தி ஒரு சின்னஞ்சிறு கிராமமே... ஆனால், அது, சாய்பாபாவின் பார்வைபடுவதற்கு முன். அவரது பார்வை பட்டபின், சர்வதேச விஷயங்களை தனக்குள் கொண்டு, பல விஷயங்களில் விஸ்வரூப வளர்ச்சி கொண்ட நகரமாக உருவெடுத்துள்ளது.
சத்யசாய் பல்கலைக்கழகம்
கல்விதான் மனிதகுல சொத்து என்பதால், இங்கு கல்விக்குத்தான் முதலிடம். சாதாரண பள்ளிப் படிப்பு படிக்கக் கூட வெளியூர் போக வேண்டிய நிலையில் இருந்த புட்ட பர்த்தியில், இப்போது பல்கலைக் கழகமே வந்துள்ளது. ஏழை, எளிய மாணவர்கள் சிறிதும் செலவில்லாமல், பல்கலைக்கழக படிப்பையே முடித்து விடலாம். இங்கே படித்த மாணவ - மாணவிகளுக்கு, படித்து முடிப்பதற்குள், சர்வதேச அளவில் வேலை காத்துக் கொண்டிருக்கும். அந்த அளவிற்கு மாணவர்கள் கல்வி, ஒழுக்கம், பண்பாடுகளில் தலைசிறந்து விளங்குகின்றனர்.
சைத்தன்ய ஜோதி அருங்காட்சியகம்
சர்வதேச அளவில் புகழ் பெற்ற அருங்காட்சியகத்தின் சிறப்புகளை எல்லாம் ஒருங்கிணைத்து உருவாக்கியதுதான் சைத்தன்ய ஜோதி அருங்காட்சியகம். உள்ளே உள்ள படங்களும், சிற்பங்களும், மற்ற பல விஷயங்களும் புதிய ஆன்மிக உலகிற்கு அழைத்துச் செல்லும்.
இசைக்கல்லூரி
இசையால் மயங்காத உலகம் எதுவுமில்லை என்பதில், யாருக்குத்தான் இரண்டாவது கருத்து இருக்க முடியும். பாரம்பரிய இசையை சொல்லித்தரும் அற்புதமான இசைக்கல்லூரி இங்கே உள்ளது. இங்கு படித்த மாணவர்களின், 'பஜன்' என்றென்றும் கேட்கக்கூடியது.
சர்வதேச விளையாட்டு அரங்கம்
விளையாட்டு என்பது உடலுக்கும், உள்ளத்திற்கும் உறுதி தரும் விஷயம். நம் மாணவ - மாணவிகளின் தேவை, பயிற்சி பெற, சர்வதேச அளவிலான பயிற்சி அரங்கம்தான் என்பதை உணர்ந்து, இங்கே மிகப்பெரும் பொருட்செலவில் சர்வதேச விளையாட்டு அரங்கம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதை ஜனாதிபதியாக இருந்த போது, அப்துல்கலாம் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விமான நிலையம்
சாதாரண பஸ்சே வந்து போகாமல் இருந்த புட்டபர்த்திக்கு, விமானமே வந்து போகக்கூடிய அளவிற்கு விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 450 ஏக்கரில், 2230 மீட்டர் ரன்வேயுடன் அமைந்துள்ள இந்த விமான நிலையம் வந்த பிறகு, வெளிநாட்டு டாக்டர்கள் பலரும் வந்து, இங்குள்ள உலகப்புகழ் பெற்ற சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து செல்கின்றனர்.
ஹில்வியூ ஸ்டேடியம்
எத்தனை லட்சம் மக்கள் வந்தாலும் அமரக்கூடிய பிரமாண்டமான, 'ஹில்வியூ ஸ்டேடியத்தில்' நடக்கும் கலைவிழாக்களும் பிரமாண்டமானவைதான். இப்படி, தான் பிறந்த புட்டபர்த்தியை செதுக்கி, செதுக்கி, இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்ற பாபாவின் பிறந்த நாளை கொண்டாட, புட்டபர்த்தியே விழாக்கோலம் பூண்டுள்ளதில் வியப்பேதுமில்லை! ***
