
கடந்த வாரம் ஒரு நாள் மாலை, மத்திய அரசு பணியில் உள்ள நண்பரும், மொபைல் போன் நிறுவன ஆபிசரான நண்பரும் உடன் வர, கலங்கரை விளக்கிலிருந்து, 'விஸ்க் விஸ்க்' என, கண்ணகி சிலை நோக்கி, வாக்கிங் போய் கொண்டிருந்தோம்.
நடந்து கொண்டு இருக்கும்போது, தொடர்ந்து நாலைந்து தும்மல் போட்டார், மத்திய அரசு பணி நண்பர். 'என்ன ஜி... ஜலதோஷமா?' எனக் கேட்டேன்.
'அதை ஏம்ப்பா கேட்கறே... இந்தக் கருமம், ஆறு மாசமாவே இருக்கு. என்னோட டாக்டர், தலைமுடிக்கு, 'டை' அடிக்கிறதை விடச் சொல்றாரு... அந்த, 'டை' எனக்கு ஒத்துக்கலியாம். அலர்ஜியால தான், தும்மல் அடிக்கடி வருதுங்கிறார். 'டை' அடிக்காமப் போனா, என் சாயம் வெளுத்துடும்; ஆபீஸ் லேடி ஸ்டாப்க எல்லாம், என்னை கேவலமா பாக்க மாட்டாங்களா...' என்றார்.
'இயற்கை மூலிகைகளால் ஆன, 'டை' கிடைக்கிறதா சொல்றாங்களே... அதை பயன் படுத்தி பாக்கலாமே...' என்றேன்.
அதற்குள் நடுவே புகுந்து, 'அண்ணா... எனக்கு இப்பவே, நரைக்க ஆரம்பிச்சிடுச்சு. நான் எப்படிண்ணா, 'டை' போட்டுக்கிறது?' எனக் கேட்டார், மொபைல் போன் ஆபிசர் நண்பர்.
வேகமான நடையை நிறுத்தி, 'டிப்ஸ்' கொடுக்கலானார் அரசு பணி நண்பர். அது உங்களுக்கும் பயன்படலாம். அவை:
டை போட்டுக் கொள்ள சவுகரியமான இடம் குளியலறை; ஆனால், இதில் ஒரு அபாயம் உண்டு. நீங்க பாட்டுக்கு சுவாரசியமாக, சர் சர்ரென்று பிரஷ் மூலம் தலைக்கு, 'டை' அடிப்பீர்கள். அப்புறம் பார்த்தால், குளியல் அறையில், துவைப்பதற்காக, வாளிகளில் வைத்துள்ள துணிகளில், சாயம் ஸ்பிரே ஆகியிருக்கும். துணியிலிருந்து, கறை அவ்வளவு சாமான்யமாகப் போகாது என்பதால், குடும்பத்தில், சிறு பூசல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
'பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும்' என்னும் பழமொழி, 'டை'பூசுபவர்களுக்கென்றே ஏற்பட்டது. கன்னங்கரேலென்று முற்றிலுமாக சாயம் பூசிவிடக் கூடாது; லேசாக சில நரைத் திட்டுகளை, இங்குமங்கும் விட்டு வைக்க வேண்டும். நரை மூலம், நம் வயதைக் கணிக்கிறவர்களுக்கு திணறல் ஏற்படுத்த நல்ல உபாயம்.
தலைக்கு, 'டை' போடுவதால் ஏற்படும் இளமைத் தோற்றம், மனைவியிடம் நம் அந்தஸ்தை ஓரளவு உயர்த்தினாலும், சில மனைவியருக்கு சாயத்தின் வாடை பிடிக்காமல், கட்டிலை தள்ளிப் போட்டு விடக்கூடிய அபாயமும் உண்டு.
கடைசி சமாசாரத்தை கேள்விப்பட்டதும், மொபைல் போன் ஆபிசர் நண்பர், ஓட்டம் எடுத்தார்!
இது பொம்பளைங்க சமாசாரம்; படிக்கிறதுன்னா, ஆம்பளைங்களும் படிக்கலாம். 'பிரம் பர்னிங் த பிரா டு பிளாண்டிங் இட்!' என்ற, ஆங்கிலப் புத்தகம் ஒன்றை, சமீபத்தில் படித்தேன். (படித்துக் காட்டியவர் வழக்கம் போல் உதவி ஆசிரியர்.) புத்தகத்தை எழுதியவர், சூசி மென்கீஸ் என்ற பெண்.
இப்புத்தகத் தலைப்பின் தமிழாக்கம்: மார்பு கச்சையை எரிப்பதில் இருந்து, அதை வெளியே அணிவது வரை!
சூசி கூறுகிறார்: 1970ல், மார்பு கச்சையை நடு ரோட்டில் தீயிட்டுக் கொளுத்தினர் அமெரிக்கப் பெண்கள்.
'பெண்களை, போகப் பொருளாக சித்தரிக்க உதவுவது, 'பிரா'தான். பெண் விடுதலையின் எதிரியாக, 'பிரா'வைக் கருதுகிறோம். எனவே, இனி, இதை அணியப் போவதில்லை. தீ இட்டுக் கொளுத்துவோம்...' என, பிரகடனம் செய்தனர்.
அன்று முதல், பெண் விடுதலை விரும்பும் அம்மணியர், 'பிரா' அணிவதை நிறுத்தினர். தம் முடிவுக்கு ஆதரவாக, 'பிரா'வுக்கு எதிராக உள்ள அனைத்து விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் தேடி எடுத்துப் பேசினர், எழுதினர்.
ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறி, 'பிரா' அணிவது, அதுவும் மேலாடைக்கு வெளியே தெரியும்படி அணிவதை பெண்களின், 'செக்சுவல்' சுதந்திரத்திற்கு ஆதாரமாகக் கூற ஆரம்பித்துள்ளனர்.
நிலைமை இப்படி தலைகீழாக மாறுவதற்கு வழி வகுத்தவர், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜாய்ஸ் நட்ரோரி என்ற பெண். அமெரிக்காவில் வாழும் இவர், பெண்களின் உடைகளை, வடிவமைப்பதில் புகழ்பெற்றவர்.
பிரபல ஆங்கிலப் பாடகி மடோனாவிற்கு, 'பிரா'வுடன் கூடிய அமைப்பில், உடை வடிவமைத்துக் கொடுத்தார். அந்த உடையை அணிந்து, இசை நிகழ்ச்சிகளில் மடோனா பங்கேற்கவும், பெண் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த அம்மணியர் மீண்டும், 'பிரா' அணியத் துவங்கினர். அதன் தயாரிப்பும், விற்பனையும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் சூடு பிடிக்கத் துவங்கியது...
— இப்படி எழுதியுள்ளார்.
எது எப்படியோ, அங்குள்ள அம்மணியர் போல, 'எடுத்தேன்... கவிழ்த்தேன்' என்பது போல் அல்லாமல், நம்மூர் பெண்கள் தம் குறிக்கோளான, 'பெண் விடுதலை' நோக்கி நிதானமாக முன்னேறுவது, வரவேற்கத்தக்கது!

