PUBLISHED ON : டிச 06, 2015

தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —
ஜெயலலிதா - ரவிச்சந்திரன் நடிக்க, மகராசி படத்தை இயக்கினார் திருமுகம். ஆனால், படம் பாதியில் நின்று விட்டது. காரணம், ரவிச்சந்திரனுக்கு, அம்மை!
அம்மை குணமாகி வந்த ரவிச்சந்திரன், அவர் ஒப்பந்தமான மற்ற படங்களை தவிர்த்து, முதலில், மகராசி படத்தில் நடித்துக் கொடுத்தார். அவரை வைத்து ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில், மூன்று சண்டை காட்சிகளை, அசுர வேகத்தில் படமெடுக்க முடிவெடுத்தார் இயக்குனர், எம்.ஏ.திருமுகம். இதனால், களைத்துப் போனார் ரவிச்சந்திரன். 'தம்பி சோர்ந்து போகாதீங்க... இன்னும் நம்ம கம்பெனியில நிறைய படங்கள் நடிப்பீங்க. நாளைக்கு காலையில பத்திரிகையை பாருங்க. 'ரவிச்சந்திரன் பூரண குணமானார்; ஒரே நாளில் மூன்று சண்டைக் காட்சியில் நடித்தார்ன்னு செய்தி வரும்; புதுசா நாலு பேர் உங்கள, 'புக்' செய்ய ஓடி வருவாங்க...' என்று உற்சாகம் ஊட்டினார் தேவர்.
கடந்த, 1967ல் தமிழ்ப் புத்தாண்டில் வெளியான, மகராசி பெரிய வெற்றி பெறவில்லை. அதே தினத்தில் வெளியான, பட்டணத்தில் பூதம் நல்ல வசூல். அதனால், அடுத்து தன் படங்களில் ஜெய்சங்கரை ஒப்பந்தம் செய்தார் தேவர். அவரை வைத்து, நேர்வழி, அக்கா தங்கை, பெண் தெய்வம், மாணவன் மற்றும் கெட்டிக்காரன் என்று, வரிசையாக படம் தயாரித்தார்.
ஓர் இடை வேளைக்குப் பின், மீண்டும் நடிக்க வந்தார் எம்.ஜி.ஆர்., உற்சாகமான தேவர், மறுபிறவி, விவசாயி, தேர்த்திருவிழா, காதல் வாகனம், மற்றும் தந்தையும் மகனும் என, பல படங்களுக்கு பூஜை போட்டார்.
இதில், மறுபிறவி படத்தில், எம்.ஜி.ஆர்., நிறைய குதிரை சவாரி செய்ய வேண்டி இருந்ததால், அவர் உடல் நிலை ஒத்துழைக்கவில்லை; கூடவே, சுடப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது. அதனால், எம்.ஜி.ஆர்., மறுபிறவியை தள்ளிப் போட்டார்.
ஏறக்குறைய, 10 ஆண்டுகளுக்கு பின், மறுபிறவி படத்துக்கு உயிர் கொடுத்தார் தேவர். அப்போது எம்.ஜி.ஆர்., தமிழக முதல்வர். அவருக்கு பதில், ரஜினி நடித்தார். படத்தின் பெயர், தாய் மீது சத்தியம்!
அப்பா மற்றும் மகன் என, இரு வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்ட நாள் ஆசை. அத்தகைய கதை என்பதால், தந்தையும் மகனும் படத்துக்கு பூஜை போடப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பத்மினி, விஜயா என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால், என்ன காரணமோ, அப்படத்தையும் தள்ளி வைத்து விட்டார் எம்.ஜி.ஆர்.,
எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை சுட்ட வழக்கில் தீர்ப்பு வெளிவந்த, நவ., 1967ல் தீபாவளியன்று, விவசாயி ரிலீசானது. ஆனால், 'பாடல்களை நீக்கி விட்டுப் பார்த்தால், படம் அக்ரிகல்சுரல் டாகுமெண்டரி...' என்று பத்திரிகைகள் விமர்சித்தன; ரசிகர்கள் படத்தை ரசிக்கவில்லை.
விவசாயி வெளியாகி மூன்று மாதங்களுக்கு பின், தேர்த் திருவிழா வந்தது; அதையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. டி.ஆர்.ராமண்ணாவிடம் பணிபுரிந்தவர், டி.என்.பாலு. பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த சம்பவங்களைக் கூறுவதில், புகழ் பெற்றிருந்தார். இவரின் கதைகளாலேயே, ராமண்ணா வெற்றி மேல் வெற்றி பெறுகிறார் என நினைத்த எம்.ஜி.ஆர்., அவரை தேவர் பிலிம்சுக்கு அழைத்து வந்து, அவருக்காக, தேவரிடம் வாதாடினார். வேறு வழியின்றி சம்மதித்தார் தேவர். ஆனால், அவரது, காதல் வாகனம் என்ற கதை, தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவிற்கும், தேவருக்கும் பிடிக்கவில்லை.
எம்.ஜி.ஆரின், 101வது படம், காதல் வாகனம். அதில் விசேஷமாக ஆங்கிலோ இந்தியப் பெண் வேடத்தில் வந்து போனார் எம்.ஜி.ஆர்., இப்படத்தின் படப்பிடிப்பின் போது மீண்டும் தேவருக்கும், எம்.ஜி.ஆருக்கும் மோதல் ஏற்பட்டது.
அச்சமயத்தில், அடிமைப் பெண் படத்தை இரண்டாவது முறையாகத் தயாரித்துக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்., இம்முறையாவது படத்தை முடித்து விட வேண்டும் என அவர் நினைத்துக் கொண்டிருக்கையில், தேவரின், காதல் வாகனம் குறுக்கிட்டு விட்டது. 1968ல், 'தீபாவளி ரிலீஸ், காதல் வாகனம்...' என்று தேவர் அறிவிக்க, எம்.ஜி.ஆரும், 'சரி...' என்றார்.
அதற்குள், அடிமைப்பெண் வெளிப்புறப் படப்பிடிப்புக்காக, எம்.ஜி.ஆர்., ராஜஸ்தான் செல்ல வேண்டியிருந்ததால், 'அண்ணே... நான் இல்லாத சீன் எல்லாத்தையும் எடுத்து முடிங்க; ராஜஸ்தான்ல இருந்து திரும்பி வந்து, என் போர்ஷனை சீக்கிரமே நடிச்சுக் கொடுத்துடறேன்...' என்றார் எம்.ஜி.ஆர்.,
சற்று எரிச்சலோடு எம்.ஜி.ஆரை வழி அனுப்பினார் தேவர். சொன்ன தேதியில் எம்.ஜி.ஆர்.,திரும்பவில்லை; மெதுவாகத் தான் சென்னை வந்தார்.
தீபாவளிக்கு சில நாட்களே இருந்த நிலையில், டென்ஷனான தேவர், 'முருகா... என் படம் கண்டிப்பா தீபாவளி ரிலீஸ்; முடிஞ்சா இப்பவே நீங்க வந்து வேலையை ஆரம்பிங்க. ரெஸ்ட் எடுக்கறேன்னு இன்னும் லேட் செய்யாதீங்க...' என்றார் சிறிது கறாராக!
ஓடோடி வந்து, இரவு பகலாக நடித்துக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்., ஆனாலும் காதல் வாகனம் ஓடவில்லை.
வடபழனி முருகன் கோவில் சன்னிதியில் நின்று, 'இத பார் முருகா... காதல் வாகனம் படம் தேவர் பிலிம்சுக்கு கரும்புள்ளி ஆகிடுச்சு. எம்.ஜி.ஆர்., கால்ஷீட்டும் இனி உடனடியாக கிடைக்காது. இதுவரை உன் தயவால, 30 படங்கள் எடுத்துட்டேன்; அதெல்லாம்
எம்.ஜி.ஆர்., ஆதரவுல ஜெயிச்சது. அடுத்து, நான் எடுக்கற படத்துக்கு, உம்மேலே நான் வெச்சுருக்கிற பக்தியும், உனக்கும், எனக்குமான உறவு மட்டுமே மூலதனம்.
'என்னைக் கைத்தூக்கி விடறதும், குப்புறத் தள்ளுறதும் உன் இஷ்டம். இது, என் முதல் பக்திப் படம். இதுல ஜெயிச்சிட்டா, தொடர்ந்து, உன் புகழைச் சொல்ற மாதிரி நெறைய சாமி படம் எடுப்பேன். இல்ல வழக்கம் போல, நாயையோ, பாம்பையோ வெச்சு தான் படம் தயாரிப்பேன். என்ன சொல்ற... எனக்கு துணை நிக்கிறியா...' என்று மானசீகமாக முருகனிடம் கேட்டவரின் மனசுக்குள், துணைவன் என்ற வார்த்தையே விதையாக விழுந்து விட்டது. அதையே தன் அடுத்த படத்துக்கு தலைப்பாக வைத்தார்.
அப்போது புராணப் படங்களாக எடுத்து கொண்டிருந்தார் ஏ.பி.நாகராஜன். தேவருக்கு புராணக் கதைகளில் ஆர்வம் கிடையாது. அவர், தன் சொந்த வாழ்வில் முருகனோடு பெற்றிருந்த நிஜ அனுபவங்களே படம் எடுக்கப் போதும்; ஆனாலும், சிறு தயக்கம். தன் சொந்தக் கதைகளை எடுத்தால் எடுபடுமா என்று!
புதிய தயாரிப்புக்கு பக்திக் கதை தேவை; அதை யாரை வைத்து எழுதி வாங்கலாம் என்று யோசித்தார். கதை இலாகாவில் உள்ளோரிடம், 'ஏம்பா... எல்லாரும் இப்படி கம்முன்னு இருந்தா எப்பிடி... என் ரசனை தான் உங்க எல்லாருக்கும் தெரியுமே... படத்துல விலங்குகள் வர்றதோட, முருகனும் இருக்கணும். முருக வேஷத்துல சின்னக் குழந்தை நடிச்சா நல்லாருக்கும்...' என சொல்லிக் கொண்டிருக்கும் போதே, இடை மறித்த திருமுகம், 'பாலமுருகன் மாதிரியா...' என்று கேட்டார்.
'நல்ல வேளை ஞாபகப்படுத்தினே... பாலமுருகன், சிவாஜிக்கு எழுதிய, எங்க ஊர் ராஜா சக்கப்போடு போடுது; போயி அவர நான் கூப்பிட்டன்னு சொல்லுங்க...' என்றார்.
கதை இலாகா குஷியானது; கதாசிரியர் பாலமுருகன் வீட்டுக்கு, கார் பறந்தது.
— தொடரும்.
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
பா. தீனதயாளன்

