தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : பிப் 07, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 07, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்களின் பிரச்னைகள், கஷ்டங்கள், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், - கொடுமைகள் ஆகியவை குறித்து தொடர்ந்து நான், 'ஸ்டடி' செய்து வருவதாலும், எழுதி வருவதாலுமோ என்னவோ, தமக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து, எனக்கு எழுதுகின்றனர் பெண்கள். அதுமட்டுமல்ல, இப்படிப்பட்ட துன்பங்களுக்கு இலக்காகும் பெண்களை, எதிர்பாராதவிதமாக அவ்வப்போது சந்திக்கும் வாய்ப்புகள் தாமாகவே அமைந்தும் விடுகிறது.

சமீபத்தில், நானும், லென்ஸ் மாமாவும் மலை வாசஸ்தலம் ஒன்றுக்கு சென்றிருந்தோம். அங்கே ஆன்மிக பெரியவர் ஒருவர் முகாமிட்டு, பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்.

ஏராளமான பக்தர்கள் கார்களில் வந்திருந்தனர். அவர்கள் வந்த கார்கள் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக நிறுத்தப்பட்டிருந்தது. இதனால், எரிச்சலானார் லென்ஸ் மாமா.

மாமா, சிறந்த பக்தர் தான்; ஆனால், கோவில், குளம், மடங்கள், சன்னியாசிகள், சாமியார்கள் என, தரிசனங்களுக்கு செல்வதை எதிர்ப்பவர். அதிலும், முக்கியமாக சித்து வேலைகளில் ஈடுபடும், குறி சொல்லும் சாமியார்களின் கடும் எதிர்ப்பாளர்.

ஒரு சாமியாரின் பெயரைக் குறிப்பிட்டு, அவரை கடுமையாக விமர்சனம் செய்தபடியே என்னுடன் நடந்து வந்தார். அவர்களது பக்தர்களையும் விட்டு வைக்கவில்லை.

'வாழ்வின் ஆதாரமே நம்பிக்கைதான் மாமா... நீங்கள் குறிப்பிடும் சாமியார் மீது, சிலருக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரது போதனைகள், அவர் மீது நம்பிக்கை கொண்டவர்களின் மனதை சாந்தப்படுத்தி, தெம்பை அளிக்கிறது; தைரியத்தை கொடுத்து, நிம்மதி அளிக்கிறது. இதே மூடத்தனமாக மாறும்போது தான் கண்டிக்கப்பட வேண்டியவைகளாகின்றன...' என, நான் ஆரம்பிக்கவும், 'மூட நம்பிக்கைன்னா இன்னா?' என, சென்னை மொழியில் குரல் எழுப்பி, சண்டைக் கோழி போல சிலுப்ப ஆரம்பித்து விட்டார்.

மாமா சரியான மூடில் இல்லை என்பது புரிந்து, விவாதத்தை பின்னர் வைத்துக் கொள்ளலாம் என எண்ணி, சட்டென, நான் மவுனமான நேரம்...

'எக்ஸ்கியூஸ் மீ...' என்ற பெண் குரல் ஒன்று, எங்களுக்கு பின்னால் இருந்து வந்தது. இருவரும் திரும்பிப் பார்த்தோம். 30 முதல், 35 வயது வரை மதிக்கத்தக்க மூன்று பெண்கள் எங்களுக்கு அருகே வந்து நின்றனர்.

'உங்களது விவாதங்களை கேட்டபடியே வந்தோம்...' என, ஆரம்பித்தார் அவர்களில் ஒரு பெண்.

பேச்சு மும்முரத்தில், எங்கள் பின்னால் மிக நெருக்கமாக இவர்கள் வந்ததைக்கூட, நாங்கள் கவனிக்காமல் இருந்தது எனக்கு வியப்பாக இருந்தது.

தொடர்ந்தார் அப்பெண்... 'பெரியவரே... (லென்ஸ் மாமாவை பார்த்து!) நாங்கள், அவரது (பெரியவரின் பெயரை குறிப்பிட்டு) தீவிர பக்தைகள்...' என்று அவர் சொல்லும்போதே, மூன்று பெண்களும் அவர்களாகவே வந்து பேச்சுக் கொடுத்த உற்சாகத்தில் ஆங்கிலத்திற்கு தாவிய லென்ஸ் மாமா, 'நாம் நடந்தபடியே பேசலாமே...' என்றார். அவர்களும், 'எங்களுக்கு ஆட்சேபனை இல்ல...' எனக் கூறி, நடக்க ஆரம்பித்தனர்.

விவாதத்தில் இனி மாமாவின் பங்கு, 'எஸ்... எஸ்... யூ ஆர் கரெக்ட்... ட்ரூ... ஐ ஆல்சோ அக்செப்ட்...' என, 'ஆமாம் சாமி' யாகத்தான் இருக்கப் போகிறது என்ற அனுபவ அறிவால், என் நடையின் வேகத்தை குறைத்து, பின்தங்க ஆரம்பித்தேன்.

இதைக் கவனித்து, விவாதத்தில் கலந்து கொள்ளாத இரு பெண்கள், என்னை அணுகி, ஆங்கிலத்தில், 'ஏன் நீங்களும் எங்களுடன் சேர்ந்து நடந்து, அவ்வப்போது உங்களது கருத்துகளையும் தெரிவிக்கலாமே...' என்றனர்.

லேசாக சிரித்து மழுப்பி, 'ஐ நோ... நோ... இங்கிலீஷ் கம்... பட் அண்டர்ஸ்டேன்ட்...' என சொன்னதும், என் ஆங்கிலத்தைக் கேட்டு, தமக்கு வந்த குபீர் சிரிப்பை உதட்டுக்குள்ளேயே அடக்கி, என்னுடனேயே சேர்ந்து நடக்க ஆரம்பித்தனர்.

நான் ஒன்றுமே பேசாமல் நடந்ததால், அவர்களே பேச ஆரம்பித்து, நான் யார், லென்ஸ் மாமா யார் என்று விசாரித்தனர். நான் எழுத்தாளர்; அவர் போட்டோகிராபர் என்பதை, என் வாயைப் பிடுங்கி தெரிந்து கொண்டனர்.

அதற்குள் பெரியவர் தரிசனம் தரும் இடம் வந்து விட்டதால், மூவரும் விடை பெற்றனர். அப்போதுதான் நினைவு வந்தவராக, 'அந்து... அவங்க யார், எங்கே தங்கி இருக்காங்க, எத்தனை நாள் இங்கே இருக்கப் போறாங்கன்னு கேக்காம விட்டுட்டேனே...' என, கையை உதறினார் மாமா.

அன்று இரவு, நாங்கள் தங்கி இருந்த ஓட்டலின், 'டைனிங் ஹாலில்' உண்ணச் சென்ற போது, மாலையில் சந்தித்த அம்மூன்று பெண்களும், அங்கு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

இதைக் கண்டதும், என்னை, 'அம்போ' என விட்டுவிட்டு, அவர்கள் அருகே இருந்த காலி நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து, அவர்களுடன் உற்சாகமாக பேச ஆரம்பித்தார் லென்ஸ் மாமா. நான் தனியே நிற்பதை கண்ட அப்பெண்கள், என்னையும் அழைத்து, தம் டேபிளிலேயே இடம் அளித்தனர்.

அப்போது தான் அவர்களும் அதே ஓட்டலில் தங்கி இருப்பதும், அவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பதும், மூவரும் ஆண் துணை இல்லாமல் வந்திருப்பவர்கள் என்பதும் தெரிந்தது.

உணவை முடித்து, அந்த ஓட்டலின் புல் வெளியில் அமர்ந்து பேச ஆரம்பித்தோம்.

'சார்... நீங்க ஒரு எழுத்தாளர்ன்னு கூறியதால், உங்க கிட்ட எங்களப் பற்றி கூறணும்ன்னு, மாலையில உங்கள சந்திச்ச பின் எங்களுக்குள் பேசிக்கிட்டோம். ஆனா, மீண்டும் எப்படி சந்திக்கிறதுன்னு யோசித்துட்டு இருக்கும் போது, நீங்களே வந்துட்டீங்க... எங்களப் பற்றி நீங்க தெரிந்து கொண்டால், உங்க எழுத்துகளின் மூலம் எவ்வகையிலாவது பெண் இனத்திற்கு பலன் கிடைக்கும் என நம்புகிறோம்...' என பீடிகையுடன் ஆரம்பித்து, தங்களைப் பற்றி கூறினர்:

அதில், 32 வயது பெண்ணிற்கு, 13 வயதில் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். அப்போது, இவரது கணவரின் வயது, 27! தன், 15வது வயதிலும், உடனே அடுத்த, 16வது வயதிலும், இரு குழந்தைகளை பெற்று, குழந்தைகளுடன், குழந்தையாக வளர்ந்து இருக்கிறார். சிறு பெண் என்பதால், தாம்பத்ய உறவு கண்டு அஞ்சி, வெறுத்து ஒதுங்கி இருக்கிறார். இதனால், இவரது கணவர், 'ஓட்டல் சாப்பாடு'களை தேடி அலைய ஆரம்பித்தவர், இன்னும் அதை நிறுத்தவில்லையாம். அது மட்டுமல்ல, வீட்டிலேயே சமையல் அறையில், வீட்டு வேலைக்காரியுடன் இணைவதைக் கண்டு, செய்வதறியாது தவித்திருக்கிறார்.

'மனைவிக்குத் தான் விஷயம் தெரிந்து விட்டதே, இனி என்ன பயம்...' என்ற தைரியத்தில், இச்செய்கை தொடர்ந்துள்ளது. அத்துடன் தீராத குடி! இது மட்டுமல்ல, தாய் வீட்டில் இவருக்கு சீதனமாகக் கொடுத்த, 200 பவுன் நகையையும், இப்பெண்மணிக்கு, 20 வயதாவதற்குள், விற்று, அடகு வைத்து அதை மீட்க முடியாமல் காலி செய்து விட்டார்.

அந்த நேரத்தில் தான், இப்பெண்ணிற்கு, தன் நிலை புரிய ஆரம்பித்துள்ளது. அடிப்படை கல்வி இல்லை... எந்தத் தொழிலும் தெரியாது. கல்வி இல்லாததால், கவுரவமான வேலைக்கு செல்ல இயலாத நிலை!

இந்நிலையில் படிக்க ஆரம்பித்துள்ளார் அப்பெண். இன்று, வெள்ளைக்காரர்கள் போன்று இங்கிலீஷில் வெளுத்துக் கட்டுகிறார். அக்கம், பக்கம், தெரிந்தவர், உறவினரிடம் கடன் வாங்கி, மிகச் சிறிய அளவில் தொழில் துவங்கியிருக்கிறார். இன்று இவரிடம், 10 பெண்கள் வேலை செய்கின்றனர்; செலவு போக மாதம், 30 ஆயிரம் ரூபாய் முதல், 50 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார். கணவரை ஒதுக்கி வைத்து விட்டார்.

இன்னொரு பெண் வயது, 34; இவருக்கு, 18 வயதில் திருமணமாகி இருக்கிறது. 19 வயதில் ஒரு மகனும், 20 வயதில் ஒரு மகளும் பிறந்திருக்கின்றனர். இவர் வட மாநிலத்தில் பிறந்து, வளர்ந்த தமிழ்ப் பெண். சென்னையைச் சேர்ந்தவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். நன்கு படித்தவர் தான் இவர் கணவர். ஆனால், இவர்களது பிரச்னை வினோதமானது. தன்னை விட மனைவி அழகு என்பதால் தாழ்வு மனப்பான்மை இவர் கணவருக்கு! இதனால், திருமணம் முடிந்த நாளில் இருந்து மனைவியுடன் சரியாகப் பேசுவது கிடையாது. 'ம்... சரி... இல்லை...' போன்ற ஓரிரு வார்த்தைகள் தான்.

ஒரு காலக்கட்டத்தில், மனைவியின் மீது சந்தேகம் தோன்ற ஆரம்பித்து, அடி, உதைகள் விழுவதுடன், முகம் என்று கூட பாராமல் பெல்ட்டால் அடித்துள்ளார். அது மாறா வடுவாக முகத்தில் இன்றும் தெரிவதைக் காண முடிந்தது. தாம்பத்திய உறவிலும் மனைவிக்கு பூரணத்துவம் கொடுக்க இயலாதவராக இருந்திருக்கிறார். அவ்வுறவும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறையோ, மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ தானாம்!

இப்படிப்பட்டவர், கடைசியாக ஏழு, எட்டு மாதங்களுக்கு முன், மயக்கம் வரும் அளவுக்கு, மனைவியை தெருவில் இழுத்துப் போட்டு அடித்துள்ளார். காயம் பட்ட மனைவியை மருத்துவமனைக்குக் கூட அழைத்துச் செல்லாமல், அலுவலகம் சென்றிருக்கிறார். உடனே, பக்கத்து வீட்டு பெண்மணி உதவியுடன், வீட்டை காலி செய்து, தன் இரு குழந்தைகளுடன் உறவினர் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

பின், பிறந்த வீட்டினர் உதவியுடன் தனி வீடு பிடித்து இப்போது வாழ்கிறார். இவ்வளவுக்குப் பிறகும், மனைவி இருக்கிறாளா, இறந்தாளா என்பது பற்றி கவலைப்படாமல் இருக்கிறாராம் இவர் கணவர்! அத்துடன் இவருக்கு பெற்றோர் அளித்த, 150 பவுன் தங்க நகையையும் அவரே வைத்துக் கொண்டுள்ளாராம்! 'நகை போனாப் போகுது; இப்போது அடி-உதை மற்றும் வசவு சொல் கேட்காமல், நிம்மதியுடன் வாழ்கிறேன்...' என்கிறார்.

மூன்றாமவருக்கு, 35 வயது இருக்கலாம். அரசு உயர் அதிகாரி ஒருவரை இரண்டாம் தாரமாக திருமணம் செய்துள்ளார். இப்பெண்மணியின் பெயருக்கு பின் பட்டங்கள் ஏராளம். தனி வீடு ஒன்றில் வசிக்கிறார். கல்லூரிகளில் தற்காலிக வேலைகள் செய்கிறார். அதன் மூலம் கிடைத்த வருமானத்தை வட்டிக்கு விட்டு, தன் பிழைப்பை தானே பார்த்துக் கொள்கிறார்.

இவரை மணந்த அதிகாரி, மாதம் ஒரு நாள், அதுவும் மதிய வேளைகளில் இரண்டு, மூன்று மணி நேரம் இப்பெண்மணியுடன் தங்கினாலே பெரிய விஷயமாம். அத்துடன், 'குழந்தை பெற்று கொள்ளாதே!' என, சுயநலத்துடன், மூன்று முறை கருக்கலைப்பும் செய்ய வைத்துள்ளார். கணவனின் அன்புக்கும், அரவணைப்புக்கும், பாசத்திற்கும் ஏங்கித் தவிக்கும் ஜீவனாக தெரிந்தார்.

- மூன்று பெண்களின் வாழ்க்கை சம்பவங்களை கேட்ட லென்ஸ் மாமாவே ஆடிப் போய் விட்டார் என்றால், என் நிலை பற்றி கேட்க வேண்டுமா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us