
மதுரை வாசகி ஒருவர், வித்தியாசமான சிந்தனையுடன், ஒரு கடிதம் எழுதியுள்ளார். கடிதம் இதோ:
பெண் விடுதலை, பெண்ணியம், பெண்மை என்று பேசும் ஆண், பெண் பேச்சாளர், எழுத்தாளர் முயற்சிகள் எல்லாம், விரயமாக போவதற்கு காரணம், அவர்கள் செக்கு மாட்டை போல, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வளைய வருவது தான்.
முன்னோர் வழியையும் விடாது, புதுமையையும் விடாத இரு வாழ்வு தான் அதற்கு காரணம். ஏனெனில், கணவன் அல்லது சமுதாயம் தம்மை ஒதுக்கி விடுமோ என்று அஞ்சுகின்றனர்.
தற்போது, நாம் வாழும் வாழ்க்கையின் வரைமுறைகளை அமைத்தவர் யார்? ஒரு காலத்தில், முன்னேற வேண்டும் என்று உண்மையாகவே நினைத்த சிலர் தாம். அதை புரட்சி என்று கொள்வதில் அர்த்தமில்லை. அவர்கள் யோசித்து செயல்படுத்தியவற்றில், சில குறைபாடுகள் இருக்கலாம்.
உதாரணமாக, வேதங்கள் யார் சொல்லியோ அல்லது யார் மூலமாகவோ தோன்றியவை தாம். (எல்லா மத வேதங்களையும் சேர்த்து தான்) ஏவாளின் குற்றத்தாலேயே ஆதாம் பாவம் செய்து, மனித இனம் பாடுபட வேண்டியதாயிற்று என்பது, இன்றும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது தான்; ஆனால், அது உண்மையா என்று நாம் யோசிப்பது இல்லை.
ஏவாள், ஆதாமின் வலது கை போல இருந்ததால், சைத்தான் அவளை முதலில் வெற்றி பெற இவ்வாறு செய்திருப்பான் என்றோ, சிறு பிள்ளைகள் சண்டை போடும் போது, பெரியவர்களிடம், இதற்கு காரணம், அவன் தான் முதலில் அடித்தான் அல்லது இவன் தான் அடித்தான் என்றோ சொல்வதுபோல, கடவுளிடம் ஆதாம் ஏன் முறையிட்டிருக்க மாட்டான் என்றோ, நாம் யோசிக்க கூட அஞ்சுகிறோம்.
சொல்பவரையும், சாமி கண்ணை குத்தி விடும் என்ற கதை தான். வடையும், காகமும் என்ற கதை மாறியதுபோல, இதுவும் என்று மாறும்... மாறாது என்றே உறுதியாக கூற முடியும். ஏனெனில், வேதம் என்ற அடிப்படை பயம்.
ஆண் தான் மேல்; பெண் கீழ் என்றொரு பிரச்னை ஆரம்பமானதற்கு காரணமே, மேலே சொன்ன சிறு சண்டை தான். தான் கஷ்டப்படுவதற்காக, மனிதன் கவலைப் பட்டான். அதற்கு காரணம், பெண் என்று, அவனுள் ஒரு ஆதங்கம். அதன் தாக்கமே இப்போதைய நிலை. ஒரு வகையில் இது மனக்கோளாறு என்பது தான் என் வாதம். அதை நிவர்த்தி செய்ய அப்போது யாருமில்லை. விளைவு, கடவுளின் சாபத்தோடு, மனிதன் கொடுத்த தண்டனையும், ஏவாளை இரட்டிப்பு தண்டனைக்கு உள்ளாக்கி விட்டது.
இதே மனக்கட்டுப்பாட்டுக்குள் (அதாவது, மெஸ்மரிசம் என்றுகூட சொல்லலாம்) வளர்க்கப்பட்டவர்களாகவே ஆண்களும், பெண்களும் இன்றளவும் இருக்கின்றனர். சொல்லப் போனால், தாழ்வு மனப்பான்மையின் தாக்கம், ஆரம்பம் முதல் இன்று வரை, பெண்களிடம் வழிவழியாய் தொடர்கிறது. அதை பெரிதுபடுத்த நடைபெறுகிற நிகழ்ச்சிகள் பெண்களுக்கு அநேகம். தாம் குற்றம் செய்தவர் என்ற இந்த நிலை, ஆயுள், மரண தண்டனை கைதிகளின் நிலையை விட கொடியது. இதை தம் வாரிசுகளுக்கு அள்ளி அள்ளி வழங்குவதில், பெண்களுக்கு நிகர் பெண்களே!
ஆசிரியருக்கு பயத்தோடு கூடிய மரியாதை தருவது அந்த காலம். அன்புடன் கூடிய போதனையையும், அதே அன்போடு கூடிய மரியாதையை தருவதையே இன்று மாணவர் சமுதாயம் எதிர்பார்க்கிறது. எனவே தான், அம்மாதிரியான முற்போக்கு கருத்துகளை கொண்ட பள்ளிகள் தொடங்கப்பட்டு வருகின்றன.
இதை போலவே தான், பெண் வர்க்கமும் எதிர்நோக்கியுள்ளது என்பதை, ஓரளவு நாம் புரிந்து கொண்டாலும், வழிவிட மட்டும் நம் மனம் முழு சம்மதத்தையும் வழங்குவதில்லை.
இதை போக்க கல்வியால் தான் முடியும் என்று கூறினால், அது தவறு. அது ஒரு அடிப்படை, ஒரு ஊன்றுகோல் தானே தவிர, அதுவே இதை நீக்கும் வழியாகி விடாது. ஏனெனில், கல்வி கற்றவர் எத்தனை பேர் முற்போக்குவாதிகள்? அதனால் தானே நாம், 'டிவி'யிலும், வானொலியிலும், 'உன் மனைவிக்கு உதவி செய், பெண் குழந்தையை காப்பாற்று, பெண்ணாய் பிறப்பதற்கு காரணமும் நீ தான்...' என்று ஒலி, ஒளிபரப்ப வேண்டியுள்ளது.
எனவே, மனரீதியான மாற்றத்தை இவ்வுலகில் புகுத்தினால் தவிர, சம அந்தஸ்து என்ற நிலை வராது. நீ பெரியவன், நான் பெரியவள் என்ற தர்க்க ரீதியான நிலையே தொடரும் என நினைக்கிறேன். இம்மனரீதியான மாற்றத்தை எவ்வாறு செய்யலாம் என்பதை, தங்கள் கருத்துகளின் மூலம் அறிய விரும்புகிறேன். மேற்கண்ட கருத்துகளில் தவறுகள் இருப்பின் ஒப்புக் கொள்கிறேன். தங்கள் கருத்தை அறிய ஆவலாக இருக்கிறேன்...
- என்று எழுதியுள்ளார். இவரது எண்ணம் பற்றி உங்கள் கருத்து என்னவோ!
தவறு செய்யும் அதிகாரிகள் தண்டிக்கப்படுவது வெள்ளைக்காரர் காலத்திலேயே நடந்துள்ளது.
குப்பண்ணா ஒரு புத்தகத்தை ஓசைப் படாமல் என்னிடம் நீட்டி, 'அம்பி... இதப் படிச்சுப் பாருடா...' என்றார்.
அந்த ஞாயிற்றுக்கிழமை, ஒருவர் கண்ணிலும் படாமல், எக்மோர் மியூசியம் சென்று, வாகாக ஒரு மரத்தடி நிழலில் அமர்ந்து, புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.
ஜே.ராஜா முகம்மது எழுதிய, 'புதுக்கோட்டை மாவட்ட வரலாறு' என்ற நூல் அது.
அதில், மே 31, 1798 வரை, கப்பத் தொகை, 16,550 ரூபாய் பாக்கி இருப்பதாகவும், அத்தொகையை உடனடியாக கட்டும்படி, கட்டபொம்மனுக்கு மதுரை கலெக்டராக இருந்த ஜாக்சன், எச்சரிக்கை கடிதம் அனுப்பி வைத்தார்.
ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், பாக்கியை செலுத்தவில்லை கட்டபொம்மன். இதனால், பாஞ்சாலக்குறிச்சியின் மீது படையெடுக்க விரும்பினார் ஜாக்சன். அப்போது, ஆங்கிலேய படை, திப்பு சுல்தானுடன் போரில் ஈடுபட்டிருந்ததால், இதற்கு உடன்படவில்லை. மாறாக, கட்டபொம்மனை, ராமநாதபுரத்துக்கு அழைத்து, பேசுமாறு பணித்தது.
இதன்படி, தன்னை, ஆக.,18, 1798ல் ராமநாதபுரத்தில் சந்திக்கும்படி கட்டபொம்மனுக்கு கடிதம் எழுதினார் ஜாக்சன். இந்த கட்டளையை அனுப்பிவிட்டு, திருநெல்வேலி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள, ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டார் ஜாக்சன்.
அப்போதே ஜாக்சனை சந்திக்க, கட்டபொம்மன் தன் பரிவாரங்களுடன் சென்றார். குற்றாலத்தை ஜாக்சன் அடைந்தபோது, கட்ட பொம்மனும், அவரது பரிவாரங்களும், ஜாக்சனுக்காக காத்திருந்தனர். கட்டபொம்மனை அங்கு சந்திக்க மறுத்து விட்டார் ஜாக்சன்.
பின், சொக்கம்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற இடங்களிலும் சந்திக்க முயன்று, தோற்று, பயணம் தொடங்கி, 23 நாட்கள் கழித்து, 640 கி.மீ., அலைந்து, செப்.,19, 1798ல் ராமநாதபுரத்தில், ஜாக்சனை சந்தித்தார் கட்டபொம்மன்.
கிஸ்தி கணக்கை சரி பார்த்தபோது, 5,000 (1080 பகோடா) ரூபாய் மட்டுமே பாக்கி இருப்பதை கண்டு கொண்டார் ஜாக்சன். ஆகவே, மே 31, 1798க்கும் செப்., 31, 1798க்கும் இடைபட்ட மூன்று மாத காலத்தில் கட்டபொம்மன், 11,000 ரூபாய் கிஸ்தி பண பாக்கியை கட்டிவிட்டதாக அறிகிறோம்.
அகந்தை கொண்ட ஜாக்சன், மேற்படி சந்திப்பின் போது, கட்டபொம்மனையும், அவரது அமைச்சர்களையும் மூன்று மணி நேரம் நிற்க வைத்தே விசாரணை செய்தார். சந்திப்பின் இறுதியில், ராமநாதபுரம் கோட்டையிலேயே அவர்கள் தங்கியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில், கட்டபொம்மன் தப்பிக்கும் முயற்சியில், லெப்டினன்ட் கிளார்க் என்பவர் கொல்லப் பட்டார். கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்ரமணிய பிள்ளை கைது செய்யப்பட்டார். கட்டபொம்மன் தப்பித்தார்.
இந்நிகழ்ச்சிக்குப் பின், கட்டபொம்மன், சென்னை கவர்னருக்கு, மேல் முறையீட்டுக் கடிதம் ஒன்று அனுப்பினார்...
இதைப் படிக்கும் போது, 'சொத்' என்ற சத்தத்துடன், காகத்தின் எச்சம் அருகே விழுந்து, கவனத்தை திசை திருப்பியது.
அப்போது, சற்றுத் தொலைவில் மரத்தடியில், ஒரு காதல் ஜோடி, முகத்துக்கு முகம் நெருங்கி, மீன் வாயைத் திறந்து, மூடுவது போல உதடுகளை துருத்தி, 'உம்மா' கொடுப்பது போல் பேசியபடி இருந்தனர்.
'இது என்னடா தலைவலி...' என்று நினைத்து, மீண்டும் புத்தகத்தில் கண்ணை பதித்தேன்.
கவர்னருக்கு அனுப்பிய கடிதத்தில், தான் கலெக்டரின் கட்டளைக்கு மதிப்பளித்து, அவரைச் சந்திக்க, பாக்கி இருந்த முழு கிஸ்தி பணத்தையும், ராமநாதபுரத்துக்கு எடுத்துச் சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட கைகலப்பிற்கு, ஜாக்சனின் நடவடிக்கைகளே காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
கடிதத்தை கண்ட கவர்னர் கிளைவ், தற்காலிகமாக ஜாக்சனை பதவி நீக்கம் செய்தும், சிவசுப்ரமணியப் பிள்ளையை விடுதலை செய்யவும் ஆணை பிறப்பித்தார். அத்துடன், ராமநாதபுரம் நிகழ்ச்சிகளை குறித்து விசாரிக்க, வில்லியம் பிரவுன், வில்லியம் ஆரம் மற்றும் ஜான் காசாமேஜர் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவையும் நியமித்தார்.
இக்குழுவின் விசாரணையில், (டிச.,15, 1798) ராமநாதபுரத்தில், கட்டபொம்மனை, ஜாக்சன் நடத்திய விதம், ஏளனத்திற்குரியது என்று தெரிய வந்தது. விசாரணைக் குழுவின் முடிவு ஏற்கப்பட்டு, பதவியில் இருந்து ஜாக்சன் நீக்கப்பட்டார். அவரது இடத்தில், லூசிங்டன் என்பவர், கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
- இப்படி குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிகழ்வுகளுடன் இதையும் ஒப்பிட்டுப் பார்த்தபடி எழுந்தேன். தூரத்தில் இருந்த காதல் ஜோடியை, அருங்காட்சியக காவலர் ஒருவர், விரட்டிக் கொண்டிருந்தார்.

