
வி.சியாமளன், மதுரை: எடுத்த காரியத்தை நிறைவேற்ற, என்னென்ன செய்ய வேண்டும்?
ஊசியின் துளைக்குள், நூலை நுழைத்த அனுபவம் உண்டா? நூலின் நுனி பிரிந்திருந்தால், ஊசியில் கோர்க்க முடியாது அல்லவா? அதுபோல, காரியத்திலேயே கவனமாக இருங்கள்; நிறைவேறும்!
கே.ஜெகஜீவன், ஆலங்குளம்: போயிங் விமானங்கள் ஒரு மணி நேரம் பறக்க, எவ்வளவு எரிபொருள் செலவாகும்?
மயக்கம் போட்டு விழுந்து விடாதீர்கள்... 14,200 லிட்டர் பெட்ரோல் செலவாகும்! ஆனாலும், 920 கி.மீ., சென்று விடும். ஒரு கொசுறு தகவல்... தன் வாழ்நாளில் ஒருமுறை கூட, காந்தி விமானத்தில் பயணம் செய்தது இல்லை. தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு, கப்பல் மூலமே சென்று வந்தார்!
எம்.கிரிஷ், திருமங்கலம்: அந்திம காலத்தில், பெற்றோரை கண்கலங்காமல் காப்பாற்றுபவர் மகனா, மகளா?
இருவருமே அல்ல, பணம் தான்! கடைசி காலம் வரை, வாழ தேவையான பணத்தை சேர்த்து வைத்துக் கொள்ளாவிட்டால், மகளாவது, மகனாவது!
சு.குமரேசன், பெசன்ட்நகர்: கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என்பதெல்லாம் சீடை, முறுக்கு, கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரைப் பொங்கல் தின்பதற்காக வந்த விழாக்கள் தானே?
அப்படி இல்லை என்கிறார் நான் விசாரித்த பெரியவர் ஒருவர். குளிர் மற்றும் கோடை காலம் என, ஒவ்வொரு பருவ நிலைக்கும், ஒவ்வொரு விதமான உணவு நம் உடலுக்குத் தேவை. அவற்றை சாதாரணமாக சொன்னால் நம் மக்கள் உண்ண மாட்டார்கள் என்பதால், கடவுளுடன் இணைத்து சொல்லப்பட்டது என்கிறார். சரியாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது!
தி.ரஞ்சித்குமார், கம்பம்: அமைதி இழந்து தவிக்கிறது என் மனம்... யாரிடம் ஆலோசனை கேட்டால், மன அமைதி திரும்பும்?
அவரவர் மன அமைதி வேண்டி, அவரவரே தவித்துக் கொண்டிருக்கும் காலமிது! எனவே, யாரிடம் சென்று ஆலோசனை கேட்டாலும் பயன் இல்லை. உங்களைத் தவிர, உங்களுக்கு மன அமைதியைத் தேடித் தர ஆள் கிடையாது. நிதானமாக யோசியுங்கள்... மன அமைதி இழந்ததற்கான காரணம் புலப்படும். அவற்றை களையுங்கள்; ஓடி வரும் மன அமைதி!
எஸ்.நட்சத்திரா, கடலூர்: யாரை நம்புவது என்றே தெரியவில்லையே...
அனைவரையும் இகழ்ந்து பேசுகிறவனையும், உங்களைப் புகழ்ந்து பேசுகிறவனையும் நம்பக் கூடாது. இந்த இரு வகையினரிடமும் பழகினால், அறிவு கெடுவதுடன், நாமும் கெட்டுப் போவோம்!
ஜி.நமச்சிவாயம், திருப்பூர்: 'அன்லீடட் பெட்ரோல்' என்கின்றனரே... அப்படி என்றால் என்ன?
அமெரிக்க விஞ்ஞானி ஒருவர், 1921ல் ஒருவகை ஈயத்தை கண்டுபிடித்து, பெட்ரோலில் கலந்தார். இதனால், வாகன ஓட்டம் எளிதானது. ஆனால், இந்த ஈயம் கலந்த பெட்ரோலால், சுற்றுச்சூழல் கெட்டு, மனித உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதால், ஈயம் கலக்காத பெட்ரோலை, நம் நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தினர். அதையே, 'அன்லீடட் பெட்ரோல்' என்கின்றனர் ஆங்கிலத்தில்!
எம்.அதிரதன், கோவில்பட்டி: படிப்பதை, எளிதில் மனதில் பதிய வைத்துக் கொள்வது எப்படி?
பள்ளிப் பாடங்களைத் தானே கேட்கிறீர்கள்? புரிந்து படிக்க வேண்டும். கடனே என்று மனப்பாடம் செய்ய முயலக் கூடாது. புரியாவிட்டால், ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவு பெற வேண்டும். அப்படி செய்தால், படித்தது மறக்கவே மறக்காது!
எஸ்.துளசிராமன், மடிப்பாக்கம்: ரூபாய் நோட்டுகள் அச்சிடும் காகிதம் இப்போதெல்லாம் தரமானதாக உள்ளதே... அவை, இந்தியாவில் தயார் செய்யப்படுபவையா?
இல்லை; வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பிரான்ஸ், ஸ்வீடன், இங்கிலாந்து, நெதர்லாந்து, உக்ரைன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகிறது!

