PUBLISHED ON : ஏப் 03, 2016

வழக்கறிஞர் என்று தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்வர் சிலர். வழக்குரைஞர் என்பதை உரியவர்கள் சொல்ல, அறிஞர் என்று பிறர் தான் அழைக்க வேண்டும்.
தத்துவமேதை, மருத்துவ மேதை என்று எவரும் தங்களை அழைத்துக் கொள்வதில்லை. பிறர் இப்படி அழைக்கும் போது தான் பெருமை. சரி... விஷயத்துக்கு வருவோம்.
வழக்குரைஞர் என்பவர் கட்சிக்காரர் பக்கம் நிற்பவர்; சரியோ, தவறோ தம் கட்சிக்காரருக்காக வாதிடுவது இவரது கடமை. நீதிபதி அப்படி அல்லர்; சார்பற்றவர். வாத பிரதிவாதங்களை கேட்டு, துலாக்கோலை சீர்தூக்கி பார்த்தும், மூத்த நீதிபதிகள் அறிவித்த தீர்ப்புகளின் அடிப்படையிலும், நியாயம் வழங்குபவர்.
எல்லாவற்றையும் காது கொடுத்துக் கேட்பவர் நீதிபதி. கண்களுக்கும், அறிவிற்கும், உலக ஞானத்திற்கும், சட்ட நூல்களுக்கும் ஏற்ப முடிவிற்கு வருபவர். ஆனால், வாழ்வின் ஓட்டங்களில், சில நேரங்களில் நாம் ஒவ்வொருவரும் நம்மை நீதிபதிகளாகக் கருதி விடுகிறோம்.
சொல்லப்போனால், பெற்றோர் சண்டையில் சின்னக் குழந்தை கூட நீதிபதியாகிறது. 'அப்பா மேல தான் தப்பு; அப்பா கோபப்படும் போது, அம்மா பேசினது தவறு தான். அதுக்காக அப்பா அடிக்கலாமா?' என்று, தன் மழலையால், தீர்ப்பு வழங்கி, நீதிபதி ஸ்தானத்திற்கு உயர்ந்து விடுகிறது.
இரு தொழிற் பங்குதாரர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் போது, அந்நிறுவனத்தின் வாட்ச்மேன் கூட, நீதிபதி போல பேச ஆரம்பித்து விடுகிறார்.
இரு நண்பர்களின் அடிதடியில், இருவருக்கும் பொதுவான மூன்றாவது நண்பர், நீதிபதியாகி விடுகிறார்.
ஆனால், இக்குழந்தையோ, வாட்ச்மேனோ, நண்பரோ சரியான நீதியை வழங்கியதாக சொல்ல முடியவில்லை.
காரணம், எல்லா நீதிபதிகளுக்கும் உள்ள சிறப்பு குணமான விருப்பு, வெறுப்பு அல்லாத சிறப்புத் தன்மை இல்லை.
'அம்மா... நீ செய்தது தப்பும்மா. அப்பா குணம் தெரிஞ்சும், ஏம்மா அப்படி நடத்துக்கிட்டே?' என்கிற கேள்வியை கேட்கவல்ல சாதுர்யம், அம்மாவை பார்த்து, இங்கே ஒளிந்து கொண்டு விட்டது. காரணம் என்ன தெரியுமா...
இந்த வாட்ச்மேனும், அந்த நண்பரும் கூட இதே தவறை செய்து விடுகின்றனர். பிரிஜுடிஸ் என்று சட்டத்துறையில் ஒரு சொல் உண்டு. இதன் பொருள், முன்கூட்டிய தீர்ப்பு அல்லது முடிவு. இது, சார்புள்ளவர்களாக ஆகிப் போன தன்மையால் உண்டாவது.
முதற்பங்குதாரருக்கு வணக்கம் சொன்னால், திரும்பச் சொல்ல மாட்டார்; தலையை ஆட்டிக் கொள்வார். அடுத்த பங்குதாரர், அப்படி அல்லர். வணக்கம் சொன்னால், திரும்பச் சொல்வார். அதுமட்டுமல்ல, அவ்வப்போது கொஞ்சம் கவனிப்பார்; இதனால், வாட்ச்மேனின் தீர்ப்பு, தவறாகி விடுகிறது.
தீர்ப்பளித்த நண்பன் இப்படி அல்லர். 'முதலாம் நண்பர் எனக்கு அப்பப்ப நிறைய ஆலோசனைகளை சொல்வார். எனக்கு ஒரு ஆபத்துன்னா, என்னோட நிப்பார். இப்படிப்பட்ட முன் கூட்டிய அபிப்ராயங்கள், நியாயங்களை பேச விடுவதில்லை. நூலிழை மட்டுமே உள்ள சிறு தாம்புக் கயிறாக ஆக்கி விடுவதில், மூன்றாம் நண்பருக்கு அதிக ஆர்வம். நியாயப் போராட்டத்தில் கூட நமக்கு வேண்டியவர்கள் என்கிற பார்வைகளே தலைதூக்கி நின்று விடுகின்றன. இப்படி மதி கெட்டால், நீதி மறந்து போகிறது.
'ஏன் இந்த கோணத்தில் சிந்திக்க தவறி விட்டோம். சேச்சே... தவறு செய்து விட்டோம்...' என்கிற தாமதமான இவர்களின் உணர்தல் பயனற்றது.
இந்த நிலை இந்த தற்காலிக நீதிபதிகளுக்கு தவறாமல் வாய்க்கிறது. இதுகூடப் பரவாயில்லை. 'முன்பே ஆராயாமல் போனோமே, சரி சரி... சமாளிப்போம். இனி, பின் வாங்காமல், எடுத்த நிலைப்பாட்டில் தொடர்ந்து நின்றுவிட வேண்டியது தான்...' என்று அளித்த தீர்ப்பை, நியாயப்படுத்தப் பார்ப்பது தான், மோசமான தவறு. இது, பிறழ்ந்து விட்ட தவறை, நிரந்தரமாக்குகிற செயல்.
மீண்டும் சரி செய்யக் கிடைத்த வாய்ப்பிலாவது சமாளிக்கவும், இறங்கி வந்து, தவறை ஏற்கவும் முன்வர வேண்டும். இந்தப் பண்பு இல்லாவிட்டால், தீர்ப்பு வழங்கும் வேலைக்கே போகக் கூடாது.
சரியான நீதிபதியாக இருக்க முடியவில்லை என்கிற போது, 'ஆளை விடுங்கப்பா...' என்று ஒதுங்கிக் கொள்வதே நல்லது!
லேனா தமிழ்வாணன்

